Friday, February 7, 2025
முகப்புதலைப்புச் செய்திநிபா வைரஸ் - இந்தச் சாவுகளைத் தவிர்க்க முடியாதா ?

நிபா வைரஸ் – இந்தச் சாவுகளைத் தவிர்க்க முடியாதா ?

நிபா வைரஸ் இதுவரை 14 உயிர்களைப் பலிவாங்கியிருக்கிறது. இந்நோய்க் கிருமிகளிடம் இருந்து தப்பிக்கும் பொறுப்பை வழக்கம் போல் மக்களின் மீதே சுமத்தியுள்ளது அரசு.

-

கேரளாவின் கோழிக்கோடு மாவட்டத்தைச் சேர்ந்தவர் முகமது சாலிஹ். 26 வயதான முகமது சாலிஹ், கடந்த 17ம் தேதி (2018, மே 17) கோழிக்கோட்டில் உள்ள பேபி நினைவு மருத்துவமனையில் (Baby Memorial Hospital) அனுமதிக்கப்படுகிறார்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சமயத்தில் காய்ச்சல், உயர் ரத்த அழுத்தத்துடன் ஒருவிதமான குழப்பமான மனநிலையில் இருந்துள்ளார் சாலிஹ்.
சாலிஹ் அனுமதிக்கப்பட்டதற்கு சரியாக 12 நாட்கள் முன்பு 23 வயதே நிரம்பிய அவரது இளைய சகோதரர் இதே போன்ற அறிகுறிகளுடன் பாதிக்கப்பட்டு இறந்துள்ளார்.

கேரள மாநிலம் கோழிக்கேட்டில் நிபா வைரஸ் பாதிப்பால் மரணமடைந்தவரின் உடலை அடக்கம் செய்யும் மருத்துவர்கள் மற்றும் உறவினர்கள்.

முதலில் இவர்கள் ஏதோவொரு வகையான விசத்தை அருந்தியிருக்க வேண்டுமென மருத்துவர்கள் சந்தேகித்துள்ளனர். ஆனால், அதே குடும்பத்திற்கு உறவினரான மரியம் என்கிற பெண்ணும் மூசா என்கிற முதியவர் ஒருவரும் இதே போன்ற அறிகுறிகளோடு பாதிக்கப்பட்டு இறந்து போனதைக் கேள்விப்படும் மருத்துவர்கள், விரிவான பரிசோதனைகள் மேற்கொள்கின்றனர். எனினும், அனுமதிக்கப்பட்ட 24 நான்கு மணி நேரத்திற்குள் சாலிஹ் மாரடைப்பால் இறந்து போகிறார்.

இதற்கிடையே சாலிஹின் உடலில் இருந்து சேகரிக்கப்பட்ட ரத்த மாதிரிகளை பெங்களூருவில் உள்ள மனிபால் மருத்துவமனையிலும், பூனேவில் உள்ள வைரஸ் பரிசோதனைக் கூடங்களுக்கு அனுப்பப்படுகிறது. சாலிஹ் இறந்து இரண்டு நாட்கள் கழித்து அவர் நிபா வைரஸ் தாக்குதலுக்கு உள்ளாகியிருந்தார் என்பது கண்டறியப்படுகிறது. அடுத்த பத்தே நாட்களில் கேரள மாநிலத்தில் மட்டும் 14 பேர் இந்த வைரஸ் தாக்கி மரணமடைந்துள்ளனர்.

*****

முதன்முதலில் மலேசியாவில் 1998-ல் கண்டறியப்பட்டது நிபா வைரஸ். பன்றிப் பண்ணைகள் நடத்திய விவசாயிகளிடையே பரவிய நிபா வைரஸ், சுமார் 300 பேரைத் தாக்கி 100-க்கும் அதிகமானவர்களை பலி வாங்கியது. இந்தியாவைப் பொருத்தவரை மேற்கு வங்க மாநிலம் சிலிகுரியில் முதல் முதலாக 2001-ம் ஆண்டு நிபா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டது. சுமார் அறுபத்தாறு பேர் நோய் பாதிப்புக்கு ஆளாகி 45 பேர் பலியானார்கள்.

மீண்டும் 2007-ம் ஆண்டு அதே சிலிகுரி மாவட்டத்தில் ஐந்து பேரை நிபா வைரஸ் தாக்கியது. இம்முறை நோய் பாதிப்புக்கு உள்ளானவர்கள் ஐவரும் மாண்டனர்.
மலேசியாவைப் பொருத்தவரை 1999-க்குப் பின் நிபா வைரஸ் தாக்குதல் நிகழவில்லை. ஆனால், இந்தியா மற்றும் வங்கதேசத்தை சில வருட இடைவெளிக்கு ஒரு முறை தாக்கி வருகிறது.

ஐ.நா.-வின் உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள அபாயகரமான தொற்றுநோய்  பட்டியலில் ஜிகா மற்றும் எபோலா வைரஸ்களுடன் நிபா வைரசும் இடம் பிடித்துள்ளது. நோய்த் தாக்குதலுக்கு உள்ளானவர்களில் 70 சதவீதம் பேருக்கு மரணத்தை அளிக்கும் அளவுக்கு நிபா வைரஸ் வீரியம் மிக்கது என உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது.

நிபா வைரஸ் எவ்வாறு பரவுகிறது?

மலேசியா, சிங்கப்பூர் மற்றும் பிலிபைன்ஸ் போன்ற நாடுகளில் பன்றிகள் மற்றும் குதிரைகளிடம் இருந்து மனிதர்களுக்குப் பரவியது நிபா வைரஸ். மலேசியாவில் இருந்து இந்தியத் துணைக்கண்டத்திற்கு வவ்வால்களின் மூலம் பரவியுள்ளது. பறக்கும் நரிகள் அல்ல்து டெரோபஸ் வவ்வால்கள் (Pteropus Bats) என்று அழைக்கப்படும் ஒரு வகையான பழந்தின்னி வவ்வால்களின் மூலம் இந்தியத் துணைக்கண்டத்தில் நிபா வைரஸ் பரவியுள்ளது.

கேரளாவில் சாலிஹ் குடும்பத்தினர் தமக்குச் சொந்தமான கினறு ஒன்றைத் தூர்வாரியதற்குப் பின்னரே அவர்களுக்கு நோய்த் தொற்று ஏற்பட்டுள்ளது. குறிப்பிட்ட அந்தக் கிணற்றினுள் வவ்வால்கள் வசித்து வந்துள்ளன.

நிபா வைரஸ் தாக்குதல் வேகமாக பரவி வருவதை அடுத்து சமூக வலைத்தளங்களில் வவ்வால்களை மொத்தமாக ஒழித்து விட்டால் இந்நோயைக் கட்டுக்குள் கொண்டு வர முடியும் என்பது போன்ற சதிக்கோட்பாடுகள் பரவத் துவங்கியது.

இதற்கு பதிலளித்துள்ள விஞ்ஞானிகள் சிலர், பொதுவாக எபோலா, மார்பர்க், சார்ஸ் மற்றும் நிபா வைரஸ்கள் வவ்வால் மூலம் பரவுகின்றன என்றாலும், வவ்வால்கள் மட்டுமே வைரஸ் கடத்திகளாக இருப்பதில்லை. பன்றி, குதிரை உள்ளிட்ட கால்நடைகள் மற்றும் இதர பறவையினங்களின் மூலமும் வைரஸ்கள் பரவுகின்றன. இதற்காக ஒரு குறிப்பிட்ட மிருக இனத்தை மொத்தமாக அழித்து விடுவது தீர்வல்ல என்கின்றனர் விஞ்ஞானிகள்.

கேரள மாநிலம் கோழிக்கேட்டில் நிபா வைரஸ் பாதிப்பால் மரணமடைந்தவரின் இறுதி சடங்கில் உறவினர்கள்.

குறிப்பாக வவ்வால்கள் மகரந்தச் சேர்க்கைக்கு துணைபுரிவதோடு இயற்கையின் பல்லுயிர்ச் சூழலில் (Biodiversity) ஒரு முக்கியமான இடத்தையும் வகிக்கின்றன. பொதுவாக கால்நடைகளைச் சரியாக பராமரிக்காமல் விடுவது மற்றும் விலங்கினங்களின் இயற்கையான வசிப்பிடங்கள் அருகி வருவதால் மனிதர்களின் வசிப்பிடங்களுக்குள் அவை அத்துமீறுவது போன்ற காரணங்களாலேயே விலங்குகளிடமிருந்து வைரஸ்கள் தொற்றுவதாக விஞ்ஞானிகள் குறிப்பிடுகின்றனர்.

கேரளத்திலும் கூட, சாலிஹ் குடும்பத்திற்கு சொந்தமான கிணற்றில் டெரோபஸ் வவ்வால்கள் வசித்தது விதிவிலக்கானது எனக் குறிப்பிடுகின்றனர். பொதுவாக மரங்களிலேயே வாழும் இந்த இனத்தைச் சேர்ந்த வவ்வால்கள் கிணற்றில் வசிப்பது மிக அரிதானது என்கின்றனர்.

*****

பாரமைக்சியோவைரிடே (Paramyxoviridae)என்கிற வைரஸ் குடும்பத்தைச் சேர்ந்த நிபா வைரஸ், பொதுவாக விலங்குகளைக் கடத்தியாக (Carrier) பயன்படுத்த வல்லது. ஆனால், இதே குடும்பத்தைச் சேர்ந்த மற்ற வைரஸ்களை விட அதிகளவிலான விலங்குகளைக் கடத்தியாக பயன்படுத்திக்கொள்ளும் அளவுக்கு இதன் மரபணு சமீப காலங்களில் மேம்பட்டுள்ளதாக விஞ்ஞானிகள் குறிப்பிடுகின்றனர்.

ஆடு, மாடு, பன்றி, குதிரை உள்ளிட்ட கால்நடைகளில் இருந்து நாய்கள், பூனைகள் போன்ற வளர்ப்புப் பிராணிகள் வரை நிபா வைரசின் கடத்தியாகச் செயல்படும். பொதுவாக நிபா வைரஸ் தனக்கு கடத்தியாகச் செயல்படும் விலங்குகளைப் பெரிதும் பாதிப்பதில்லை.

பல லட்சம் வருடங்களாக இருந்து வரும் நிபா வைரஸ், சமீபத்திய ஆண்டுகளில் நோய் எதிர்ப்பு மருந்துகளைத் தாக்குப்பிடித்துப் பரவும் திறனைப் பெற்றுள்ளது; அதன் மரபணுக் கட்டுமானத்திலும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. வைரஸ் தாக்குதலுக்கு உள்ளானவர்களுக்கு முதலில் காய்ச்சல் தோன்றும்; அதைத் தொடர்ந்து அதிகளவு தலைவலியும் ஒருவிதமான குழம்பிய மனநிலையும் உருவாகும். உடனடியாக மருத்துவ சிகிச்சை எடுத்துக் கொள்ளாவிட்டால் சரியாக ஒரே வாரத்தில் இரத்த அழுத்தம் அதிகரிக்கும். மனித உடலில் புகுந்த உடன் வெகுவிரைவில் தனது எண்ணிக்கையைப் பெருக்கிக் கொள்ளும் நிபா வைரஸ், இரத்த நாளங்களில் அழற்சியை உண்டாக்கும்.

அடுத்து நரம்பு மண்டலத்தில் படர்ந்துள்ள எஃப்ரின் – பி2 மற்றும் எஃப்ரின் – பி3 என்கிற புரோட்டீன் திரவங்களை பாதிப்படையச் செய்வதன் மூலம் நோயாளியின் மூளை, நுரையீரல், இதயம் மற்றும் சிறுநீரகங்களைப் பாதித்து மரணத்தை விளைவிக்கும். மலேசியாவில் முதன்முதலாக மனிதர்களைத் தாக்கிய நிபா வைரஸ், 30 சதவீத மரணங்களை உண்டாக்கியது. அடுத்த சில ஆண்டுகளிலேயே இந்தியத் துணைக்கண்டத்தில் பரவிய போது 70 சதவீதம் அளவுக்கு மரணம் ஏற்படுத்தும் ஆற்றலை நிபா வைரஸ் அடைந்திருந்தது.

இந்த வைரசுக்கான தடுப்பு மருந்து இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் செயல்பட்டு வரும் தொற்றுநோய்த் தடுப்பு மற்றும் ஆராய்ச்சிகளுக்கான கூட்டமைப்பு (Coalition for Epidemic Preparedness Innovations (CEPI)) என்கிற ஆராய்ச்சி நிறுவனம் நிபா வைரசுக்குத் தடுப்பு மருந்துளைக் கண்டுபிடிக்க அமெரிக்காவைச் சேர்ந்த இரண்டு மருந்துக் கம்பெனிகளுக்கு 25 மில்லியன் டாலர்களை வழங்கியுள்ளது.

எனினும், இந்நோய் மேற்குலத்திற்கு இதுவரை பெரும் அச்சுறுத்தலாக வளராத காரணத்தாலும், பெரும் எண்ணிக்கையிலான நோயாளிகள் இல்லாததால் சந்தை வாய்ப்புகள் குறைவு என்பதாலும் ஆராய்ச்சிப் பணிகள் மந்தகதியிலேயே நடந்து வருகின்றன.

உலகில் பரவும் ஆட்கொல்லி வைரஸ் கிருமிகளில் நான்கில் மூன்று பங்கு எண்ணிக்கையிலானவை விலங்குகளிடம் இருந்து மனிதர்களுக்குப் பரவக் கூடியவைகளாகவே உள்ளன. இரண்டாயிரங்களின் துவக்கத்தில் அமெரிக்காவைச் சேர்ந்த மூன்று விஞ்ஞானிகள் கொண்ட குழு ஒன்று, ஆட்கொல்லித் தொற்று நோய்கள் பரவாமல் தடுக்க “ஒருங்கிணைந்த சுகாதார” (One Health) நடவடிக்கை ஒன்றைப் பரிந்துரை செய்துள்ளனர்.

இதன்படி மனிதர்கள் மற்றும் விலங்குகளின் சுகாதாரமும், விவசாயம் மற்றும் சூழலியல் சுகாதாரமும் முறையாகப் பேணப்பட வேண்டும் என்பதை முன்வைத்துள்ளனர். தற்போது மேற்குலக அரசாங்கங்கள் இந்த அணுகுமுறையை மேற்கொள்ளத் துவங்கியுள்ளனர்.

எனினும், இந்தியா போன்ற நாடுகளில் ஆட்கொல்லி நோய்கள் பரவிய பின்னரே அரசு நடவடிக்கையில் இறங்குகின்றது. நோய் பாதிப்புக்கு உள்ளானவர்களைத் தனிமைப்படுத்துவது, நோய் எதிர்ப்பு மற்றும் முன்னெச்சரிகைத் தடுப்பு மருந்துகள் கொடுப்பது என்கிற வழமையான பாணியே பின்பற்றப்படுகின்றது.

அரசே முன்னின்று நோய்கள் பரவுவதைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளாத சூழலில் தனிப்பட்ட முறையிலான சுகாதாரத்தைப் பேணுவது, வவ்வால் அல்லது பறவைகள் கடித்த பழங்களைத் தின்னாமல் தவிர்ப்பது போன்ற தனித்தீர்வுகள் மட்டுமே இந்தியா போன்ற மூன்றாம் உலக நாட்டு மக்களுக்கு இருக்கும் ஒரே வாய்ப்பு.

தூய்மை இந்தியா போன்ற ஓட்டை வாளிகளைக் கொண்டு கடல் நீரை வாரி இறைக்கும் முட்டாள்தனமான திட்டங்களுக்கு அரசு கோடிகளை வாரியிறைக்கும் வரை நமது மக்கள் ஆட்கொல்லி நோய்களுக்கு பலியாவதைத் தவிர்க்க முடியாது.

சாக்கியன்.

மேலும் :

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க