இலாப வெறியை நோக்கமாகக் கொண்ட ஏகாதிபத்திய முதலாளித்துவத்தின்
கோரத்தாண்டவமே கொரோனா ! – பகுதி 4

பகுதி 1 :  உருமாறி வரும் கொரோனா : பெருந்தொற்றுகளின் வரலாறு !
பகுதி 2 : வைரஸ்கள் எப்படி உருமாறுகின்றன ? || ஓர் அறிவியல் விளக்கம் !
பகுதி 3 : பெருந்தொற்று வைரஸ்களின் விளைநிலமாகும் பெரும் பண்ணைகள்!

1990-களுக்குப் பின்னர் புதிய தாராளவாதக் கொள்கைகள் அமல்படுத்தப் பட்டதோடு உலகின் பெரும்பாலான நாடுகளும் காட் ஒப்பந்தத்தில் கையெடுத்திட்டு உலக வர்த்தகநிறுவனத்தின் உறுப்பினர்களாயினர்.

இந்த ஒப்பந்தத்தின் விளைவாகவும், 21-ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் ஏகாதிபத்திய நாடுகளின் உற்பத்தி வடிவமாகக் கருதப்பட்ட’”பழைய, இலாபங்குறைந்த, ஆபத்தான, சுற்றுச்சூழல் மாசை ஏற்படுத்தும், தொழிலாளர்கள் செறிவாகத் தேவைப்பட்ட உற்பத்தித்துறைகளையும், தண்ணீர் அதிகமாகத் தேவைப்படும் இறைச்சிக்கான மிருகங்களை உற்பத்தி செய்யும் விவசாயத் தொழிற்துறையையும் வளரும் மூன்றாம் உலக நாடுகளுக்கு மடைமாற்றும்” ஏகாதிபத்திய நாடுகளின் உத்தியால், நாடுகள் மற்றும் கண்டங்களுக்கு இடையேயான வர்த்தக உறவு மேலும் சிக்கலானதாக மாறியுள்ளது.

வர்த்தகப் பாதைகளும், சரக்குப்போக்குவரத்தும், மனிதர்களின் நகர்வும் தேச எல்லைகளைத் தாண்டி வரலாறுகாணாத அளவு வேகத்தில் முன்னும் பின்னுமாக மிகச்சிக்கலான வடிவில் நடக்கிறது. சீனாவின் ஒரு பெல்ட் ஒரு ரோடு திட்டம் இத்தகையதொரு வலைபின்னலின் நவீன வடிவமாகும். இந்த சிக்கலான அதிவிரைவு வர்த்தகத் தடங்கள், பொருட்களையும், மனிதர்களையும், விலங்குகளையும் மட்டுமன்றி இவற்றை ஓம்புயிரிகளாகக் கொண்ட நோய்க்கிருமிகளின் உலகளாவிய பரவலுக்கும் தோதான தடமாக செயல்படுகின்றன.

முன்னெப்போதும் இந்நோய்கிருமிகளுக்கு இயலாததாக இருந்த இத்தகையதொரு பரவும் வீரியம் தற்போது சாத்தியமாகி உலகளாவிய கொள்ளைநோயாக மாறுவதில் உலகெங்கும் தேச எல்லைகளைத்தாண்டி குறுக்கும் நெடுக்கும் முன்னும்பின்னுமாக ஓடும் இச்சிக்கலான வர்த்தகத் தடங்கள் முக்கிய பங்காற்றுகின்றன.

பன்றிகளின் எண்ணிக்கை குறித்த புள்ளிவிவரம் :

கண்டங்கள்

உயிருள்ள பன்றிகளின் எண்ணிக்கை

1980

1990

2017

ஏற்றுமதி

இறக்குமதி

ஏற்றுமதி

இறக்குமதி

ஏற்றுமதி

இறக்குமதி

ஐரோப்பா

57,11,996

56,81,639

78,74,867

86,54,832

3,69,22,652

3,41,61,228

ஆசியா

45,66,473

45,56,678

40,58,058

36,23,814

22,75,617

24,25,408

. அமெரிக்கா

2,53,881

2,48,688

9,48,442

8,90,980

56,77,370

56,00,220

தெ.அமெரிக்கா

53

6,022

13,854

15,014

5,663

9,413

ஆப்ரிக்கா

1,001

11,642

786

24,035

3,478

9,906


உயிருள்ள கோழிகள் குறித்த புள்ளிவிவரம் :

கண்டங்கள்

உயிருள்ள கோழிகளின் எண்ணிக்கை ×1000

1980

1990

2017

ஏற்றுமதி

இறக்குமதி

ஏற்றுமதி

இறக்குமதி

ஏற்றுமதி

இறக்குமதி

ஐரோப்பா

2,14,885

88,071

2,68,624

1,31,083

15,14,680

14,09,545

ஆசியா

66,434

94,367

93,169

1,75,278

1,53,174

1,99,757

.அமெரிக்கா

40,598

20,870

50,476

30,889

76,017

61,716

தெ.அமெரிக்கா

1,182

5,498

8,614

7,506

18,733

17,072

ஆப்ரிக்கா

4,261

54,748

8,212

39,535

11,896

52,176

ஆதாரம்: ஐநா உணவு மற்றும் வேளாண் நிறுவனம் புள்ளிவிவரம்

 

மேலே கொடுக்கப்பட்ட அட்டவணை 1980, 1990, 2017 ஆகிய ஆண்டுகளில் ஐந்து கண்டங்களிலும் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி செய்யப்பட்ட உயிருள்ள இறைச்சிக் கோழிகள் மற்றும் பன்றிகளின் எண்ணிக்கையைத் தருகிறது. ஐரோப்பா, ஆசியா மற்றும் வட அமெரிக்கா கண்டங்களில் 1980, 1990 ஆகிய ஆண்டுகளை விட 2017-இல் உயிருள்ள பன்றி மற்றும் கோழிகளின் ஏற்றுமதி/இறக்குமதி எண்ணிக்கை பன்மடங்கு அதிகரித்துள்ளதைக் காணலாம்.

மரபணுவியலின் முன்னேற்றத்தாலும் உற்பத்தியின் வெவ்வேறு நிலைகளுக்கேற்ப தீவனம் கொடுப்பதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தாலும் இறைச்சிக்கான கால்நடை உற்பத்தித் தொழிற்துறையின் உற்பத்தித் திறன் அதிகரித்துள்ளது. எடுத்துக்காட்டாக, இறைச்சிக் கோழி மற்றும் பன்றி வளர்ப்புத் துறையில் மரபணுவியலின் உதவியால் குஞ்சு/குட்டிகளை உருவாக்குவதல், பெருக்குதல், அக்குஞ்சு/குட்டிகளை இறைச்சிக்காக வளர்த்தல் (பெரும்பாலும் ஒப்பந்தத் விவசாயிகளால் வளர்க்கப்படுகிறது) ஆகிய பல கட்டங்களில் நடைபெறுகிறது.

இந்த உற்பத்தியின் ஒவ்வொரு கட்டமும் வெவ்வேறு இடங்களில் அல்லது நாடுகளில் நடப்பதால் உயிருள்ள விலங்குகள் அவ்விடங்களுக்கு கொண்டுசெல்ல வேண்டியிருக்கிறது. எடுத்துக்காட்டாக 2005-இல் மட்டும் 2.5 கோடிகளுக்கும் மேற்பட்ட உயிருள்ள பன்றிகள் சர்வதேசரீதியில் வர்த்தகம் செய்யப்பட்டன. அமெரிக்காவில் இது போன்ற உயிருள்ள பண்ணை விலங்குகளின் வர்த்தகம் அதிகமாக நடைபெறுகிறது. 2001-இல் மட்டும் 27% பண்ணைப் பன்றிகள் அமெரிக்காவின் ஒரு மாகாணத்திலிருந்து இன்னொரு மாகாணத்திற்கு அல்லது ஒன்றுக்கும் மேற்பட்ட மாகாணத்திற்கு கொண்டுசெல்லப்பட்டன.

கடந்த 2005-ம் ஆண்டு இங்கிலாந்தில் ஏற்பட்ட பறவைக்காய்ச்சல் பற்றிய விசாரணையில் உற்பத்தியின் வெவ்வேறு கட்டங்களை நிறைவேற்றுவதற்காக இறைச்சிக் கோழிகள் இங்கிலாந்திற்கும் ஹங்கேரிக்கும் நான்கு முறை கொண்டுசெல்லப்பட்டது தெரிய வந்தது.

சீனா 2018-இல் ஏற்பட்ட ஆப்ரிக்க பன்றிக்காய்ச்சலால், பன்றி உற்பத்தியில் பின்னடைந்தது. (ஆப்ரிக்க பன்றிக்காய்ச்சல் வைரஸ் வீரியமிக்க தொற்றுத்தன்மை வாய்ந்தது. பதப்படுத்தப்பட்ட இறைச்சியிலும் கூட உயிர்வாழும் சக்திவாய்ந்தவை.) எனவே சீனா பன்றி இறைச்சியை இறக்குமதி செய்ய ஆரம்பித்தது. 2018 மே மாதம் மட்டும் பன்றி இறக்குமதி 63% அதிகரித்தது 1,87,000 டன்னாகியது.

படிக்க :
♦ ஜேம்ஸ் பாண்ட் முதல் ஃபேமிலி மேன் 2 வரை || கலையரசன்
♦ நிழல் இராணுவங்கள் : தமிழாக்கம் செய்யத் தூண்டியது எது ? || இ.பா.சிந்தன்

ஏற்கனவே சீனஅமெரிக்க வர்த்தகப் போரால் அமெரிக்க பன்றிகளுக்கான இறக்குமதி வரியை 62% ஆக ஆக்கிய நிலையில் தன் உள்நாட்டுத் தேவைகளுக்காக பிரேசிலையும் ஐரோப்பாவையும் மட்டுமே சார்ந்திருக்கும் நிலைக்குத் சீனா தள்ளப்பட்டது.

கனடா நாட்டிலிருந்து பன்றி இறைச்சி இறக்குமதிக்கு தடை விதித்திருந்தது. சீனாவின் உள்நாட்டுத் பன்றி இறைச்சித் தேவை 24 மில்லியன் டன் பற்றாக்குறை ஏற்பட்ட நிலையில் அதை ஈடுகட்ட அமெரிக்க பன்றி இறைச்சிக்கான இறக்குமதி வரியைக் குறைக்கும் நிலைக்கு சீனா தள்ளப்பட்டது.19 கனடாவுடனான இறக்குமதித் தடையையும் நீக்கியது. உலகளாவிய கால்நடை தொழிற்துறை வர்த்தகத் தடங்கள் எவ்வளவு சிக்கலான முறையில் பிணைக்கப்பட்டுள்ளன என்பதை இதிலிருந்து தெரிந்து கொள்ளலாம்.

ஆசியாவை அடிப்படையாக கொண்ட ச்ரோயன் போக்பெந்த் (Chaoren Pokphand, CP), உலகிலேயே நான்காவது பெரிய இறைச்சிக்கோழி உற்பத்தி நிறுவனமாகும். இதன் இறைச்சிக்கோழி தொழிற்சாலைகள் துருக்கி, சீன, மலேசியா, இந்தோனேசியா, அமெரிக்கா ஆகிய நாடுகளில் வைத்துள்ளது. இதன் வணிக வலைப்பின்னல் இந்தியா, சீனா, இந்தோனேசியா வியத்னாம் ஆகிய நாடுகளையும் உள்ளடக்கியது. தென்கிழக்கு ஆசியாவில் துரித உணவக வலைப்பின்னலையும் சொந்தமாக கொண்டுள்ளது.

2003ல், சீனாவில் உள்ள CP குழுமத்தின் இறைச்சிக்கோழி பண்ணையில் பறவைக் காயச்சல் தாக்கிய உடன் ஜப்பான் சீனாவில் இருந்து இறைச்சிக்கோழி இறக்குமதியை தடைச் செய்தது. உடனே, தாய்லாந்தில் உள்ள CP குழுமம் ஜப்பானுக்கு ஏற்றுமதி செய்து சந்தை இடைவெளியை பூர்த்தி செய்தது. வெவ்வேறு நாடுகளில் இப்படிப்பட்ட வழங்கல் சங்கிலியை கொண்டிருப்பது வைரஸ் பரவலுக்கான வாய்ப்பை அதிகப்படுத்துகிறது. மேலும், இது போன்ற நிறூவனங்கள் உலகளாவிய உற்பத்தி மற்றும் வழங்கல் சங்கிலியை கொண்டிருப்பதால் அதன் எல்லா வணிக வலைப்பின்னலுக்கும் வைரஸ் பரவுவதற்கு ஏற்ற நிலைமைகளை உண்டாக்கிவிடுகிறது.

ஏனென்றால், இவ்வர்த்தகத் தடங்கள் வழி வைரஸ் செல்லுமிடமெல்லாம் பூகோளரீதியான மறுசீரமைப்புக்கு (geographical reassortment of antigen) உள்ளாகி் ஒவ்வொரு நாட்டின் சுற்றுச்சூழலுக்கேற்ப தனது பண்புகளான நிறம், வடிவம், அளவு, நடத்தை, உயிர்வேதியியல் பண்புகள் ஆகியவற்றில் ஏற்படும் பீனோடைப் (phenotype – ஒரு வகை சடுதிமாற்றம்) மாற்றத்தை அடைகின்றன. எடுத்துக்காட்டாக 2003-இல் ஹாங்காங்கில் தோன்றிய H5N1 முதலில் பறவையிலிருந்து மட்டுமே மனிதனுக்குப் பரவியது. ஆனால் மனிதமனிதத் தொற்று ஏற்படுத்துவதற்கு ஏற்ற வீரியத்தைப் பெற்ற H5N1 வைரஸ் ஹாங்காங், தாய்லாந்து, வியட்நாம், இந்தோனேஷியா, எகிபது, சீனா, துருக்கி, ஈராக், இந்தியா, பாகிஸ்தான் எனப் பல இடங்களுக்கு பயணித்ததன் மூலமே சாத்தியமானது.

இந்நாடுகளிலெல்லாம் புதிய தாராள வர்த்தகக் கொள்கைகளையும், பன்னாட்டு நிதிமூலதனத்தின் ஏற்றத்தாழ்வான ஒப்பந்தங்களையும் ஏற்றுக்கொண்டு, தங்கள் நாடுகளின் தொழிற்துறையையும் விவசாயத்துறையையும் ஏகாதிபத்தியங்களும், தனியார் முதலாளிகளும் தங்கு தடையற்ற வர்த்தகத்தை செய்யும் விதமாக மறுகட்டமைப்புகளை நடைமுறைப்படுத்தியவை. இக்காரணத்தால் ஏழை நாடுகளின் பல கிராமப்புற நிலப்பரப்புகள் ஒழுங்குமுறைபடுத்தப்படாத புறநகர் வேளாண் வணிகச் சேரிகளாக மாற்றப்பட்டுள்ளன. பல கண்டங்களில் பரவுவதால் இத்தகு சூழல்களிலிருந்து மரபணு மாறுபாட்டைப் பெறும் வைரஸ்கள் மனிதனை ஓம்புயிரியாக்கத் தேவையான குறிப்பிட்ட பண்புகளை அடைந்து கொள்ளை நோயாக மாறுகிறது; இதே உலகளாவிய வணிக வலைப்பின்னலில் வேகமாக பரவவும் செய்கிறது.

பெய்ஜிங்கில் உள்ள ஒரு மொத்த விலை இறைச்சியகம்

நவீன கால்நடைத்தொழிற்துறை கூட்டுகளில் (livestock-industrial complex) உற்பத்தி ஒழுங்கமைக்கப்பட்டிருக்கும் முறையால் மட்டும் இவ்வைரஸ்கள் உருவாவதில்லை. அதாவது தொழிற்சாலைப் பண்ணைகள் மட்டுமே இத்தகைய புது வைரஸ்களை உற்பத்தி செய்வதாக எளிமைப்படுத்தி புரிந்து கொள்ளக்கூடாது. இதோடு கூடவே பரந்துபட்ட அளவில் காடுகள் அழிக்கப்படுவது, சுற்றுச்சூழல் சீர்குலைக்கப்படுவது, பல்லுயிர் தன்மை சிதைக்கப்படுவது, காலநிலை மாற்றம் போன்றவையும் காரணிகளாக உள்ளன20. இதன் விளைவாக வனவிலங்குகளுக்கும் வீட்டுவிலங்குகளுக்கும் பண்ணை விலங்குகளுக்குமிடையிலான இடைவெளி அழிக்கப்படுவது, பல்வேறு இனத்தைச் சேர்ந்த மக்களையும் விலங்குகளையும் ஒரே உலகளாவிய மதிப்புச் சங்கிலியில் பிணைத்தது ஆகியவற்றின் மூலம் புதிய நோய்க்கிருமிகளின் சுழற்சிக்கு வழிவகுத்துள்ளது. இதற்குக் காரணம் மூலதனத்தின் உள்ளியல்பே ஆகும்.

முன்னர் காட்டுயிர்களில் தனிமைப்படுத்தப்பட்டதாக அல்லது மனிதர்களுக்கு பாதிப்பில்லாததாக இருந்து வந்த வைரஸ் வகையினங்கள் கொள்ளைத் தொற்றுநோய்க்கான பண்புகளை அடைய சாதகமான உயர்போட்டிச் சூழல்களை (hypercompetitive environment) மூலதனத்தின் இவ்வுள்ளியல்பு உருவாக்கியுள்ளது. கொள்ளைத் தொற்றுநோய்க்கான இப்பண்புகளாவன: விரைவான வைரஸ் வாழ்க்கைச் சுழற்சிகள், சூனாடிக் தாவு திறன் மற்றும் புதிய பரிமாற்ற திசையன்களை (transmission vectors) விரைவாக உருவாக்கும் திறன் போன்றவையாகும். 21

இன்னொரு உதாரணத்தையும் பார்ப்போம். தெற்காசியாவில் 1990-களின் இறுதியில் நிப்பா வைரஸ் உருவானது. இங்கு பன்றிப்பண்ணைகள் அபரிமிதமான வளர்ச்சிகண்ட காலமிது. பண்ணைகளுக்குகாக காடுகள் அழிக்கப்பட்டது மற்றும் வறட்சி போன்ற காரணங்களால் வாழ்விடங்களை இழந்த வௌவால்களாலிருந்து (வௌவால் எச்சத்திலிருந்து) இப்பன்றிகளுக்கு நோய்த்தொற்று ஏற்பட்டது.

கடந்த 2013-இல் மேற்காப்பிரிக்காவில் பரவிய கொள்ளைநோயான எபோலா, சமகாலத்தில் மிக முக்கியத்துவம் வாய்ந்த ஓர் எடுத்துக்காட்டாகும், நோய்த்தொற்று ஏற்பட்ட 90% மக்களை இவ்வைரஸ் கொன்றது. இந்த வைரஸும் வௌவால்களால் காடுகளுக்குள் மட்டுமே கட்டுப்படுத்தப்பட்டிருந்தது. அமெரிக்க, ஐரோப்பிய, சீன ஏகபோகங்களால் கினியப் புல்வெளி கையகப்படுத்தப்பட்டு எண்ணெய்ப்பனை விவசாயம் தொடங்கப்பட்டபோது இவ்வௌவால்கள் தங்கள் உணவிற்காக வாழிடத்தை எண்ணெய்ப்பனைப் பண்ணைகளுக்கு மாற்றிக் கொண்டதால் இவ்வைரஸ் வௌவால்களிலிருந்து மனிதருக்கு தொற்றும் சூழல் உருவானது.

கடந்த சில பத்தாண்டுகளாக கார்ப்பரேட் விவசாயத்தின் கட்டுப்பாடற்ற விரிவாக்கத்தால் இந்த போக்குகள் மேலும் அதிகரித்துள்ளன. தொழிற்துறை வேளாண் உற்பத்தியின் விரிவாக்கத்தோடு கூடவே உலகமயமாக்கல் மற்றும் தாராளமயமாக்கத்தால் உலகெங்கிலும் உள்ள கன்னிவனப்பகுதியையும் சிறுஉடைமை விவசாய நிலங்களையும் மூலதனம் பறிக்கிறது.

படிக்க :
♦ பெருந்தொற்று வைரஸ்களின் விளைநிலமாகும் பெரும் பண்ணைகள்!
♦ தனியார்மயக் கொள்கையால் புழுத்து நாறும் இந்திய மருத்துவக் கட்டமைப்பு!!

இம்முதலீடுகள், நோய் வெளிப்படுவதற்கு வழிவகுக்கும் காடழிப்பு, சுற்றுச்சூழல் சீர்குலைகேடு, பல்லுயிர் தன்மை சிதைதல் ஆகிய உபவிளைவுகளை உண்டாக்கிறது. மேலும், மூலதனத்தால் கையகப்படுத்தப்பட்டிருக்கும் இப்பெரும் நிலப்பரப்புகள் ஏற்படுத்தியிருக்கும் செயற்பாட்டு பன்முகத்தன்மையும் கடுஞ்சிக்கல் நிலையும் (functional diversity and complexity)22 தான், முன்பு பெட்டிக்குள் (காட்டுயிர்களில்) அடைக்கப்பட்டிருந்த நோய்க்கிருமிகள் உள்ளூர் கால்நடைகள் மற்றும் மனித சமூகங்களுக்குள் பரவ ஏதுவாகியுள்ளன.

முதலாளித்துவ அமைப்பின் இதயத்திலிருந்து ஓடும் மூலதனத்தால் இந்நிகழ்ச்சிப்போக்கு நடக்கிறது. இதனாலேயே மூலதனத்தின் மையங்களாகத் திகழும் இலண்டன், நியூயார்க், ஹாங்காங் போன்றவற்றை நமது கொள்ளைநோய்களின் ஊற்றுக்கண்களாகக் கருதவேண்டும் என்கிறார் ராப் வாலஸ். நில பயன்பாட்டில் ஏற்படும் மாற்றங்களைப் போலவே, காலநிலை மாற்றத்தால் ஏற்படும் பரந்துபட்ட சுற்றுச்சூழல் சீர்குலைவும் மேலும் சூனாசிஸ் ஏற்பட ஏதுவாகும்.

இப்படியாக, முதலாளித்துவ பெருவீத இறைச்சிப் பண்ணை உற்பத்தியின் நிகழ்முறைகளில் (குறிப்பாக தற்கால வடிவத்தில்) சூனாசிஸ் தாவல் வேகமாக நடப்பதற்கு எப்படி வாய்ப்பேற்படுகிறது; சூனாசிஸ் தாவல் மூலம் ஒட்டுண்ணிகள் எப்படி மனிதர்களை வந்தடைகிறது; மேலும் அது கொள்ளை நோயாக அல்லது உலகளாவிய கொள்ளை நோயாக உருவெடுக்க எப்படி வாய்ப்பேற்படுகிறது என்பது பற்றி நமக்கு தெளிவேற்படுத்த நவீன அறிவியல் உதவுகிறது.

தொழிலாளர்கள் பெருந்திரளாக நெருக்கமாக வசிக்கின்ற ஏழ்மையான வட்டாரங்கள் என்று கூறப்படுகின்ற பகுதிகள் நம்முடைய நகரங்களில் அடிக்கடி ஏற்படுகின்ற எல்லாவிதமான கொள்ளை நோய்களும் உற்பத்தியாகின்ற இடங்களாக இருக்கின்றன என்று நவீன இயற்கை விஞ்ஞானம் நிரூபித்திருக்கிறது”23, என்று எங்கெல்ஸ் அவர் காலத்தில் கூறினார்.

தற்கால கொள்ளை நோய்களில் ஒரு வகையான புளுக் காய்ச்சல்களை ஏற்படுத்தும் வைரஸ்கள் உருவாகும் இடங்களாக நவீன பெருவீத பண்ணைவிலங்கு மற்று இறைச்சிக்கோழி வளர்ப்பு துறை உற்பத்தி மையங்கள் இருப்பதாக தற்கால நவீன அறிவியல் நிரூபித்துள்ளதாக நாம் கூடுதலாகக் கூறுலாம்24.

மேலும், சுற்றுசூழல் பற்றிக் கருதிபார்க்காமல் காடுகளை அழித்து செய்யப்படும் பெருவீத முதலாளித்துவ விவசாயமும் முதலாளித்துவத்தின் விரிவாக்கத்திற்காக அழிக்கப்படும் பல்லுயிர்தன்மை மற்றும் காலநிலை மாற்றங்கள் போன்றவையும் இவ்வைரஸ்கள் உருவாகக் காரணமாக இருப்பதையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். இதை முதலாளித்துவ விஞ்ஞானிகள் ஆராய்ந்து இக்கொள்ளை நோய்களை தடுக்க பல கட்டுப்பாடுகளை விதிக்க பரிந்துரைக்கின்றனர்; அரசு சில கட்டுப்பாடுகளை கொண்டும் வருகின்றன. ஆனால், இந்த புதிய தாரளவாதக் காலத்தில் மற்ற உற்பத்தி நிறுவனங்கள் செய்வதை போல நவீன பெருவீத பண்ணைவிலங்கு மற்று இறைச்சிக்கோழி நிறுவனங்களும் கட்டுப்பாடுகள் குறைவாக இருக்கும் (இன்னும் பல சாதக அம்சங்களை கொண்டிருக்கும்) இடங்களுக்கு, குறிப்பாக இந்தோனிசியா, மெக்சிக்கோ, சீனா, லத்தீன் அமெரிக்க நாடுகள் மற்றும் பல ஆசிய, ஆப்பிரிக்க நாடுகளுக்கு தங்களது உற்பத்தி மையங்களை மாற்றிக் கொள்வதை பிரதானமாக செய்கின்றன.

முதலாளித்துவ நிறுவனங்கள் இப்படி தங்களது உற்பத்தி மையங்களை மூன்றாம் உலக நாடுகளுக்கு மாற்றுவது லாபத்தை நோக்கமாக கொண்டுதான் என்பதை விளக்கி கூற வேண்டியதில்லை. அம்மையங்களில், ஒரு முறை இவ்வைரஸ்கள் சூனாசிஸ் தாவல் மூலம் பரிணாமம் அடைந்தால் பல நாடுகளுக்கு பரவும் கொள்ளைநோய்களாக உருவெடுக்க வாய்ப்புள்ளன. இங்ஙனம் “முதலாளித்துவ சமூக அமைப்பு அகற்றப்படவேண்டிய தீமைகளை மீண்டும் மீண்டும் மறு உற்பத்திச் செய்கிறது”25. ஏனென்றால், முதலாளித்தும் லாபத்திற்காக இயங்கும் பொருளாதாரமாகும்.

(தொடரும்)

தொடரின் பிற பகுதிகள் :

பகுதி 1 :  உருமாறி வரும் கொரோனா : பெருந்தொற்றுகளின் வரலாறு !
பகுதி 2 : வைரஸ்கள் எப்படி உருமாறுகின்றன ? || ஓர் அறிவியல் விளக்கம் !
பகுதி 3 : பெருந்தொற்று வைரஸ்களின் விளைநிலமாகும் பெரும் பண்ணைகள்!
பகுதி 5 (இறுதி): கொள்ளை நோய் மரணங்களுக்கு முதலாளித்துவம் எப்படி காரணமாக முடியும் ?

அடிக்குறிப்புகள் :
19. ‘Not enough pork in the world’ to deal with China’s demand for meat

20. Why deforestation and extinctions make pandemics more likely, Nature, Aug 13, 2020

21. Chuang, 2020, Social Contagion : Microbiological Class War in China (February)
22. செயல்பாட்டு பன்முகத்தன்மை (functional diversity) என்பது பல்லுயிர் பெருக்கத்தின் (biodiversity) ஒரு அங்கமாகும். இது பொதுவாக சமூகங்கள் மற்றும் சுற்றுச்சூழல் அமைப்புகளில் உயிரினங்கள் ஏற்படுத்தும் தாக்கத்தின் வரம்பைப் பற்றியது. Complexity பெரும்பாலும் நோய்த்தொற்று ஏற்பட்ட உயிரி மற்றும் நோய்க்கிருமிகளின் இணை பரிணாம வளர்ச்சியில் எழுகிறது. நோயெதிர்ப்பு அமைப்பு மற்றும் நோய்க்கிருமிகள் அதைத் தவிர்ப்பதற்கு உருவாக்கிய பல நுட்பங்கள் போன்ற அதிநவீன தழுவல்கள் காரணமாக இக்கடுஞ்சிக்கல் நிலை உருவாகுகின்றது.
23. மார்க்ஸ் எங்கெல்ஸ் தேர்வு நூல்கள் பன்னிரண்டு பகுதிகளில், தொகுதி 8, பக். 62-63
24. மார்க்ஸின் பார்வைபடி இயற்கை என்பது மனிதனின் அங்கக உடல் (inorganic body); எப்படி கை, கால், மூளை போன்ற மனித உடல்பகுதிகளின் ஒருங்கிணைப்புடன்தான் மனிதனால் உழைக்க முடியுமோ அதேபோல் இந்த அங்கக உடலுக்கும் மனிதனுக்குமான ஒருங்கிணைப்பு என்பது உற்பத்தி செயல்பாடுக்கு ஓர் முன்நிபந்தனை. இயற்கைக்கும் மனிதனுக்குமான இந்த இடைத்தொடர்பை இயற்கைக்கும் மனிதனுக்குமான வளர்சிதைமாற்ற செயல்பாடு (metabolic interaction between man and nature) என்று கூறலாம். இந்த ஒருங்கிணைப்பை முதலாளித்துவ உற்பத்திமுறை சிதைக்கிறது; இந்த சிதைவு வளர்சிதைமாற்ற பிளவு (metabolic rift) எனப்படுகிறது. நாம் பேசிக்கொண்டிருக்கும் வைரஸ்களின் சூனாசிஸ் தாவலும் முதலாளித்துவ உற்பத்தியால் ஏற்படும் வளர்சிதைமாற்ற பிளவுக்கான ஒரு உதாரணமாகும். இந்த வளர்சிதைமாற்ற பிளவு பற்றிய மார்க்சின் கருத்துக்களாஇ கோட்பாட்டுரீதியாக ஜான் பெல்லாமி பாஸ்டர் (மன்த்லி ரிவியூ பத்திரிக்கையின் ஆசிரியர்), பால் பர்கெட் போன்றோர் 20 ஆண்டுகளாக ஆய்வு செய்து எழுதியுள்ளனர்.
25.
மார்க்ஸ் எங்கெல்ஸ் தேர்வு நூல்கள் பன்னிரண்டு பகுதிகளில், தொகுதி 8, பக். 64

தங்கம்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க