வர்க்க ஒற்றுமையே அவநம்பிக்கையின் மருந்து !

து ஒரு அகால மரணம். தோழர் ராமசாமியைப் போன்ற போராளிகள் 60 வயதுக்குள் இறக்க வேண்டுமா? 1947 முந்தைய காலத்தை ஒப்பிடுகையில் இன்று வாழ்நாள் அதிகரித்திருக்கிறது. வளர்ந்துவரும் அறிவியல் நூற்று ஐம்பது வயது வரை மனிதர்கள் உயிர் வாழ்வதைச் சாத்தியமாக்கப் போகிறது.

அதே நேரத்தில், சிறு குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை சமூகத்தில் தற்கொலைகள் அதிகரித்து வருவதையும் காண்கிறோம். 12-ம் வகுப்பில் தோல்வியால் தற்கொலை, நீட்டில் தோல்வி-தற்கொலை, கல்விக் கடன் கட்டமுடியாத மாணவன் தற்கொலை, கடன் கட்ட முடியாத விவசாயி தற்கொலை, பணமதிப்பிழப்பு நடவடிக்கையினால் சிறு, குறு தொழில் உரிமையாளர்கள் தற்கொலை. இந்தத் தற்கொலைகளுக்கு எல்லாம் என்ன பொருள்? எதிர்காலம் குறித்த அவர்களது கனவு அழிந்துவிட்டது.

comrade vilavai ramasamy
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் மாநிலத் துணைத் தலைவர் விளவை ராமசாமி. (கோப்புப் படம்)

தோற்றுவிட்ட கனவுகள் தற்கொலைகளில் முடிகின்றன. இருப்பினும் கனவு காண்பதை இளையதலைமுறை நிறுத்தவில்லை. இன்று கனவு என்பது ஒரு கிராமத்து இளைஞனின் கையில் உள்ள தொடுதிரை கைபேசியில் இருக்கிறது. அவன் வாழ்ந்து கொண்டிருக்கும் வாழ்க்கைக்கும், அவனது கையிலேயே இருக்கும் வாழ்க்கைக்கும் மிகப்பெரிய தொலைவு இருக்கிறது. தொடுதிரையில் தொட முடிந்ததை வாழ்க்கையில் தொடமுடிவதில்லை. இதுதான் எதார்த்தம்.

பேருந்திலும், ரயில்களிலும் எல்லோரும் குனிந்து கைபேசியை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். “நாணும் குலமாதர் முகம் பார்த்ததில்லை, வீரர் விழி சாய்ந்து நிலம் பார்த்ததில்லை” என்பது ஒரு திரைப்படப் பாடல். இப்போது வீரர் சூரர் யாரும் குலமாதர் போலவே குனிந்த தலை நிமிர்வதில்லை. நிமிர்ந்து சமூகத்தை பார்க்க அவர்கள் விரும்பவில்லை. உங்கள் கனவு உங்கள் கையில்!

இந்த முகநூல், வாட்ஸ்அப் என எதுவாகினும், அவை ஏற்படுத்துகின்ற தனிநபர் வாதம், கண்ணோட்டம், ஆசை, விருப்பங்கள், ரசனை இவையெல்லாம் நான், எனது, என்னுடைய மகிழ்ச்சி என்று அதை நோக்கி மட்டுமே சிந்திக்க வைக்கின்றன. ராமசாமியைப் போன்ற தோழர்கள் தோற்றுப்போகும் இடம் இதுதான். வெளியே பல மாற்றங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. அந்த மாற்றங்களை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

நாம் பஞ்சாலைகள் நிறைந்த இந்த கோவை மாநகரில் நின்று பேசுகிறோம். ஆலைத் தொழிலாளி என்றால் ஒரு கூரையின் கீழே பல்லாயிரக்கணக்கான தொழிலாளிகள். அவர்களை இணைத்துக் கட்டக்கூடிய சங்கங்கள். அந்தச் சங்கங்களின் போராட்டங்கள் வாயிலாக அவர்களது பொருளாதாரத்தை, உரிமைகளை நிலைநாட்டிக்கொள்ளக் கூடிய காலம் என்று ஒன்று இருந்தது.

comrade vilavai ramasamy remembrance meeting maruthaiyan Speech (3)
விளவை ராமசாமியின் நினைவேந்தல் கூட்டத்தில் உரையாற்றும் தோழர் மருதையன்.

இன்று நடப்பது என்ன? சங்கம் வைக்க முதலாளி அனுமதிக்கவில்லை என்பது ஒரு பிரச்சினை. சங்கத்தில் சேர தொழிலாளி விரும்புகிறாரா என்பது முக்கியமான பிரச்சினை. தொழிலாளிகள் காரியவாதிகள் ஆகிவிட்டார்களா, கெட்டுச் சீரழிந்துவிட்டார்களா? இல்லை. இன்று நிலைமை எப்படி மாறிக்கொண்டிருக்கிறது?
இங்கே பேசினார்கள். ஒரு தொழிலாளி முருகன் மில்லில் வேலைக்குச் சேர்ந்தார், 30 ஆண்டுகளுக்குப் பின்பு பணிஒய்வு பெற்றார் என்று சொன்னார்கள். அந்தக் கதை இனி கிடையாது. மில் தொழிலாளிகள் மட்டுமல்ல, பி.எஸ்.என்.எல்.-லில் பணிபுரிந்தார், பணிக்கொடைகளைப் பெற்று ஒய்வு பெற்றார் என்ற நிலைமையும் இனி இல்லை.

***

பர் ஆட்டோ, கேப், ஊபர் ஈட்ஸ், சொமாட்டோ இதில் பணிபுரிபவர்கள் யார்? அவர்களை நிறுத்தி கேட்டுப் பாருங்கள். அவர்களில் 60 சதவீதத்தினர் இன்ஜினியரிங் படித்தவர்கள். ஏற்கெனவே ஐ.டி. அல்லது கட்டுமான நிறுவனங்களில் பணியாற்றியவர்கள் பலர். முனைவர் பட்டம் பெற்றவர்களெல்லாம் அண்ணா பல்கலைக்கழகத்தில் 15 ஆயிரம் சம்பளத்தில் தற்காலிக விரிவுரையாளர்களாகப் பணிபுரிகின்றனர்.

வாழ்க்கை எப்படி மாறுகிறது? குழந்தைப் பருவம், பள்ளிப் பருவம், அதன்பிறகு கல்லூரிப் பருவம், அரசு வேலைவாய்ப்பு, திருமணம், பிறகு முதுமை, ஓய்வூதியம், மரணம். நாம் பார்த்திருந்த நவீன நகர்ப்புற வாழ்க்கை இப்படி இருந்தது. ஆனால், இன்றைக்கு 3 வயதில் குழந்தைகளைப் பள்ளியில் சேர்க்கும்போதே வேலைக்குத் தயார்படுத்துகிறார்கள். இந்தப் படிப்பு சாகும் வரையில் முடிவதில்லை.

தனியார்மயம் உருவாக்கியிருக்கும் நவீன உதிரித் தொழிலாளர்கள் : இந்திய நகரங்களில் குறுக்கும் நெடுக்குமாகப் பயணிக்கும் சொமாட்டோ பணியாளர்கள்.
தனியார்மயம் உருவாக்கியிருக்கும் நவீன உதிரித் தொழிலாளர்கள் : இந்திய நகரங்களில் குறுக்கும் நெடுக்குமாகப் பயணிக்கும் சொமாட்டோ பணியாளர்கள்.

நான் சில ஆண்டுகளுக்கு முன் மேற்கு ஜெர்மனியிலிருந்து வந்த நண்பர் ஒருவரிடம் பேசிக்கொண்டிருந்தேன். அவர் பணிபுரிந்த ஐ.டி. நிறுவனத்தில் அவருக்கு பிளம்பர் வேலையும் டாக்சி ஓட்டும் பணியும் கற்றுத் தருவதாக அவர் கூறினார். ஏன் இந்தப் பயிற்சியை அந்த நிறுவனம் இவர்களுக்கு அளிக்கிறது என்றால், இவர்களுக்குப் பணி உத்தரவாதம் கிடையாதாம். மாற்றுத் தொழிலை, அந்தந்த முதலாளிகளைக் கொண்டு கற்றுத்தர அரசு உதவி புரிகிறதாம்.

ஒரு பொறியாளர் பிளம்பர் வேலை செய்வாரா என நாம் சிந்தித்திருப்போமா? ஆனால், இன்று நாம் அதை கண்கூடாகப் பார்க்கிறோம். அமெரிக்காவில் 20 முதல் 60 வயது வரை உள்ளவர்கள் அவர்களுடைய வாழ்நாளில் சுமார் 20% நேரத்தை ஏதாவது புதிய தொழிலைக் கற்றுக்கொள்ள செலவழிக்கிறார்களாம்.

சங்கத்தில் ஏன் தொழிலாளர்கள் சேர்வதில்லை? தொழிலாளர்கள் ஒப்பந்தத் தொழிலாளர்களாக மாற்றப்பட்டு விட்டார்கள். சங்கம் வைத்தால் வேலையை விட்டு நீக்கிவிடுவார்கள் போன்ற அடக்குமுறைகள் ஒரு காரணம். இவை ஒருபுறம் இருந்தாலும், தான் இன்ன தொழில் செய்பவன் என்று அடையாளப்படுத்திக் கொள்ள இயலாத நிலையில், ஒன்றிலிருந்து மற்றொரு தொழில் என எல்லோரும் மிதந்து கொண்டிருக்கிறார்கள். காற்றடிக்கும் திசையெல்லாம் இழுத்துக்கொண்டு போகப்படும் குப்பையைப் போன்ற நிலை. இப்படி இருப்பவர்களுக்கு தன்னுடைய சக தொழிலாளியின் மீது, அவன் துன்பங்களின் மீது எப்படி அனுதாபம் ஏற்படும்?

படிக்க:
நவம்பர் புரட்சி 100 ஆண்டு நிறைவு : கம்யூனிசம் வெல்லும் !
எதை இழந்தாலும் போராடும் துணிவு மட்டும் நம்முடன் இருக்கும் !

ஐ.டி. நிறுவனங்களைக் கூட நாம் எடுத்துக்கொள்ளலாம். ஐ.டி. நிறுவனங்களில் விப்ரோ, இன்ஃபோசிஸ், டி.சி.எஸ். என எதை எடுத்துக்கொண்டாலும் அங்கு இரண்டு விதிகள் உண்டு. ஒன்று உன்னுடைய சம்பளம், சம்பள உயர்வு என்ன என்பதை நீ பக்கத்தில் உள்ளவனுக்குச் சொல்லக்கூடாது. அடுத்து உன் சக ஊழியர் பணியை விட்டுத் துரத்தப்பட்டால், ஏன் அனுப்பினீர்கள் என்று கேட்கக்கூடாது. ஏன் இப்படி தீங்கு இழைத்தார்கள் என்று நான் கேட்டது நிர்வாகத்திற்குத் தெரிந்தால், எனக்கும் பணிப் பாதுகாப்பில்லாமல் ஆகிவிடும்.

பணியை இழந்தவர் தனக்குத் தகுதியில்லை என நினைப்பதற்கும், சக ஊழியர்கள் அவர் தன்னைத் தகுதிப்படுத்திக் கொள்ளவில்லை என்று கருதுவதற்கும் பயிற்றுவிக்கப்பட்டிருக்கிறார்கள். ஒரு படிப்பறிவற்ற தொழிலாளிக்கு இருக்கக்கூடிய அறிவும் உணர்வும், படித்த ஐ.டி. தொழிலாளிக்கு இல்லை. விலங்குகளைப் போலத் தன்னை மட்டும் தற்காத்துக்கொள்ளப் பயிற்றுவிக்கப்படுகிறார்கள். இந்த ஆட்டத்தின் நீதி இதுதான் எனப் பயிற்றுவிக்கப்படுகிறார்கள்.

சாலையோரத் தள்ளுவண்டி உணவகங்கள்.

ஏழெட்டு வருடங்களுக்கு முன்பு ஜெர்மனியில் நடைபெற்ற சம்பவம் இது. ஹேம்பர்க் என்றொரு நகரத்தில் உள்ள பிரம்மாண்ட மால் ஒன்றிற்குள் தொழிலாளர்கள் நுழைகிறார்கள். தேவையான உணவுப் பொருட்களையெல்லாம் அள்ளி வண்டியில் போட்டுக்கொண்டு பில் போடும் இடத்துக்கு வருகிறார்கள். காசாளரான பெண்ணிடம் ஒரு சீட்டைக் கொடுக்கிறார்கள். அந்தச் சீட்டில், “நாங்கள் இந்த நகரத்தின் தொழிலாளர்கள். இந்த நகரத்தை உருவாக்கியவர்கள். இன்று நாங்கள் எங்களது தேவைகளை நிறைவு செய்துகொள்ள முடியாத நிலையில் வைக்கப்பட்டிருக்கிறோம். அதனால் நாங்கள் உருவாக்கிய செல்வத்தை நாங்களே எடுத்துக்கொண்டு போகிறோம்” என எழுதப்பட்டிருந்தது.

போலீசு வருவதற்குள் இவர்கள் அந்த உணவுப் பண்டங்களை இவர்கள் வசிக்கும் ஹேம்பர்க் நகரத்தின் சேரிக்குச் சென்று விநியோகித்து விடுகிறார்கள். அதை வீடியோ எடுத்துப் பதிவேற்றியும் விடுகிறார்கள்.

உலகமயமாக்கலுக்குப் பின் திடீரென்று 150 கோடி தொழிலாளிகள் உலகின் உழைப்புச் சந்தைக்கு வருகிறார்கள். ஒரு அமெரிக்கத் தொழிலாளி வாங்கக்கூடிய ஊதியத்தில் 30-இல் ஒரு பங்கை வாங்கிக் கொண்டு, அந்தப் பணியை முடிக்க ஒரு இந்தியத் தொழிலாளி அல்லது சீனத் தொழிலாளி உலகச் சந்தையில் தயாராக உள்ளார். இது அங்கே ஒரு நிலைகுலைவை, வேலையின்மையை ஏற்படுத்துகிறது.

இத்தாலியில் பிராக்டோ என்றொரு நகரம். நெசவுத் தொழிலுக்கும் கைவினைத் தொழிலுக்கும் பெயர் போன நகரம். ஏற்றுமதி செய்துகொண்டிருந்த நகரம். 1990-இல் உலகமயமாக்கல் வந்த போது, சீனர்கள் கணிசமானோர் அங்கே தொழிலாளிகளாகக் குடியேறிக் குறைந்த கூலிக்கு வேலை செய்தனர். சிறிது காலத்திற்குள் நெசவுத்தொழில் சீனர்கள் கைக்கு மாறுகிறது. 1990 வரை பிராக்டோ நகர மக்கள் கம்யூனிஸ்ட்களுக்கே வாக்களித்து வந்தார்கள். அவர்கள் 90-களுக்குப் பிறகு பாசிஸ்டுகளைத் தேர்ந்தெடுக்கிறார்கள்.

“வெளிநாட்டிலிருந்து வந்த சீனத் தொழிலாளர்கள் என்ற புல்லுருவிகளை ஒழித்துக்கட்டுவேன்” என்று முழங்கிய பெர்லுஸ்கோனி என்ற பாசிஸ்டைத் தெரிவு செய்கிறார்கள். இப்படித்தான் ட்ரம்ப் வெற்றிபெற்றார், அமெரிக்காவில். வங்க தேசத்திலிருந்து வரும் கரையான்களை ஒழித்துக்கட்டுவேன் என அமித் ஷா பேசுவதை இங்கே நாம் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும்.

ola uber workers strike
பயணக் கட்டண விகிதத்தை மாற்றியமைக்கக் கோரி ஓலா மற்றும் ஊபர் ஓட்டுநர்கள் சென்னையில் நடத்திய ஆர்ப்பாட்டம்.

வறுமை, வேலையின்மை பெருகும்போது சக உழைக்கும் மக்களை எதிரிகளாகக் காட்டி வன்முறையைத் தூண்டுகிறார்கள். நான் ஓட்டுநரா, பிளம்பரா, வியாபாரியா என்று எந்தக் குறிப்பான தொழிலோ அடையாளமோ இல்லாமல் தத்தளிப்பவர்களுக்கு, நீ ஒரு இந்து என்ற அடையாளத்தை வழங்குகிறார்கள். முஸ்லீம்களை ஒழித்தால்தான் தீர்வு என்கிறார்கள். நீ ஒரு தமிழன், டீக்கடையில் வேலைபார்க்கும் வட நாட்டுக்காரனை விரட்டினால்தான் உனக்கு வேலை என்பார்கள். இப்படித்தான் பாசிஸ்ட் இயக்கங்கள் மூளைச்சலவை செய்கின்றன.

இந்த மக்கள் மதவெறிக்கு ஆளாகி விட்டார்கள் என்று மட்டும் இதனைப்புரிந்து கொள்ளக் கூடாது. குஜராத்திலும், மும்பயிலும் வீதியில் இறங்கிக் கலகம் செய்பவர்கள் பார்ப்பன பனியாக்களா? இல்லை. இத்தகைய மக்களைத்தான் சக உழைக்கும் மக்களுக்கு எதிராக ஏவி விடுகிறார்கள். தொழிலாளி வர்க்கம், தன்னை விடுவிக்கக்கூடிய சங்கத்தில் சேராவிட்டால், தங்களுக்கு எதிரான பாசிஸ்டுகளால் தவிர்க்கவியலாமல் ஈர்க்கப்படுவர்.

தொழிலாளி வர்க்கத்தை விட முதலாளி வர்க்கம் என்றைக்கும் எண்ணிக்கையில் பெரியது அல்ல. ஆனால், அவர்களால் பெருவாரியான மக்களை எப்படி அடக்கியாள முடிகிறது? ஆங்கிலத்தில் ஒரு கூற்று உண்டு. “We have never been out numbered – we are out organised” எதிரிகள் ஒருபோதும் எண்ணிக்கையில் நம்மைத் தோற்கடித்ததில்லை. அமைப்பு ரீதியாகத் திரண்டு நிற்பதில்தான் நம்மைத் தோற்கடித்திருக்கிறார்கள்.

படிக்க:
இந்து ராஷ்டிரம் : நம் கண்முன்னேயே நெருங்கிக் கொண்டிருக்கிறது !
♦ பீகார் : குழந்தைகள் சோறின்றி மருந்தின்றி சாகிறார்கள் !

உலக முதலாளி வர்க்கம் அமைப்பாய்த் திரண்டு நின்று நம்மை முறியடிக்கிறான். ஆனால், நாம்? கூட்டுப் பேரம் பேசும் தொழிற்சங்க உரிமையையும் ஒழித்துத் தனித்தனியாகப் பிரித்து, நம் உழைப்பை விலை பேசவேண்டும் என்பதுதான் மோடி அரசு கூறும் லேபர் மார்க்கெட் டீ ரெகுலேஷன். 44 சட்டங்களை 4 வழிகாட்டும் கோட்பாடாக மாற்றுவது என்பது இதுதான். சம வேலைக்குச் சம ஊதியம் என்பதை ஒழித்து, பத்து ரூபாய் சேர்த்து வேண்டுமென்றால், அதை நீ தனியாகக் கேள், சங்கமாகச் சேர்ந்து கேட்கக் கூடாது என்கிறார்கள். இதில் முதலாளி வர்க்கத்தின் பொருளாதார ஆதாயம் மட்டும் இருப்பதாக நாம் புரிந்துகொள்ளக்கூடாது.

Minister for Loneliness
பிரிட்டனில் தனிமைத் துயரத்தை நீக்குவதற்காக அமைக்கப்பட்டிருக்கும் துறையின் அமைச்சர் ட்ரேஸி க்ரௌச்.

நாம் என்பதை உடைத்து நான் என மாற்றினால் என்ன நடக்கும்? விரக்தி, இயலாமை, மனச்சோர்வுஆகியவைதான் இதன் விளைவுகள். இன்றைக்கு ஐரோப்பிய ஒன்றியத்திலே 20-60 வயது வரை உள்ளவர்களில் 27% பேர் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர் என்கிறது ஒரு ஆய்வு. தொழிற்சங்கங்கள் இல்லாத இடங்களில்தான் தொழிலாளிகள் மனநோயால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர் என்றும் ஒரு ஆய்வு உள்ளது.

2018-ம் ஆண்டு முதல் பிரிட்டனில் புதிதாக ஒரு அமைச்சர் நியமிக்கப்பட்டிருக்கிறார். தனிமைத் துன்பத்தை அகற்றுவதற்கான அமைச்சர் (Minister for Loneliness). இது முதலாளித்துவ சமூகத்தின் நிலை குறித்த விளக்கம்.

ஆகவே, தொழிலாளி வர்க்கத்திற்கு இருக்கின்ற ஒரே ஆயுதம் அமைப்பு. அது தொழிற்சங்கம் மட்டுமல்ல, தொழிலாளி வர்க்கத்துக்கான கட்சி. அது எப்படிப்பட்ட கட்சியாக இருக்கவேண்டும், அந்தக் கட்சியின் கீழ் திரளுகின்ற தொழிலாளி வர்க்கம் என்ன கோரிக்கைக்காகப் போராட வேண்டும் என்ற பார்வையைத்தான் என்ன செய்ய வேண்டும் என்ற நூலிலும், ஓரடி முன்னால் ஈரடி பின்னால் என்ற நூலிலும் லெனின் கொடுக்கிறார்.

***

1980-ல் கிழக்கு ஐரோப்பிய, ரசிய வீழ்ச்சிக்குப் பிறகு கம்யூனிசம் வீழ்ந்துவிட்டது. இனிமேல் அப்படியொரு கட்சி உருவாக முடியாது என்று மீண்டும் மீண்டும் அவநம்பிக்கையை விதைக்கிறார்கள்.

நமது நாட்டில் 1969 நக்சல்பாரி எழுச்சியை ஒட்டி எண்ணற்ற மாணவர்களும், இளைஞர்களும் தங்களைக் கட்சியோடு இணைத்துக்கொண்டு கல்வியை இழப்பதற்கும், வேலையை இழப்பதற்கும் உயிரை இழப்பதற்கும் தயங்காமல் முன்வந்தார்களே, அது இன்றைக்கு நடக்குமா?

பொது நலனுக்காக ஒரு இழப்பையோ, மாற்றத்தையோ ஏற்றுக்கொள்ளத் தயாராகயில்லாத நாம், இன்ஜினியர், ஓட்டுனர், சுயதொழில் என முதலாளித்துவத்தால் ஒன்றிலிருந்து இன்னொன்றுக்குக் குப்பையைப் போல் விசிறி எறியப்படும்போது மாறிக்கொள்கிறோம். ஆனால், சுதந்திரமான விருப்பத்தின் அடிப்படையில் இழப்பை ஏற்றுக்கொள்வதற்கு நாம் தயாராக இருப்பதில்லை.

தோழர் விளவை ராமசாமி இழப்பதற்குத் தயாராக இருந்தார். வேலை போனால் பரவாயில்லை. மகன் கைதானால் பரவாயில்லை. அவற்றை எதிர்கொள்வோம் என்று கருதினார். தோற்றாலும் கவுரவமாகத் தோற்கவேண்டும் என்று அவர் கூறுவாரென ஒரு தோழர் இங்கே குறிப்பிட்டார். கவுரவமான என்ற உரிச்சொல் ஒரு மனிதனின் விழுமியத்திலிருந்து வருகிறது. தோற்கிறோமா, வெல்கிறோமா என்பதல்ல பிரச்சினை. நாம் எப்படி வாழவேண்டும் என்பது குறித்த விழுமியம் அது.

***

ன்று நாம் என்ன மாதிரியான அரசியல், சமூகச் சூழலில், வாழ்ந்துகொண்டிருக்கிறோம் என்பதைச் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

கூடங்குளத்தில் அணுக்கழிவு மையம், வேதாந்தா நிறுவனத்துக்கு ஹைட்ரோ கார்பன் உரிமங்கள், எட்டுவழிச் சாலைக்கு நிலப்பறிப்பு – இதையெல்லாம் செய்வது யார்? மக்களின் வாழ்வாதாரத்தையும், சூழலையும் பாதுகாப்போம் என உறுதியேற்றுக்கொண்ட அரசுதான் இவற்றையெல்லாம் செய்கின்றது.

பூமிக்கடியிலும், கடலுக்கடியிலும், ஆர்ட்டிக் பகுதியிலும் இருக்கும் கனிமவளங்களை எல்லாம் கொள்ளையடிக்க உலகு தழுவிய அளவில் வேட்டை நடந்து கொண்டிருக்கிறது. இந்த உலக முதலாளித்துவத்தின் தாக்குதல் என்பது தொழிலாளி வர்க்கத்தின் மீதான தாக்குதல் மட்டுமல்ல. மனித குலமே வாழமுடியுமா என்ற கேள்வி இன்று எழுந்திருக்கிறது.

படிக்க:
மனிதனை நாயாகப் பயிற்றுவிக்கிறது முதலாளித்துவம் ! தோழர் மருதையன்
♦ 19 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சியில் வாகன விற்பனை !

தூத்துக்குடியில் ஒரு இலட்சம் பேர் தடைகளை மீறி திரண்டு வந்த காட்சியைத் தொலைக்காட்சியில் பார்த்திருப்பீர்கள். மீனவர்கள், விவசாயிகள், வியாபாரிகள், தொழிலாளிகள், வேன் ஓட்டுபவர்கள், மூட்டை தூக்குபவர்கள் இப்படிப் பல்வேறு பிரிவு மக்கள் சாதி, மதங்களுக்கு அப்பாற்பட்டு இலட்சக்கணக்கில் ஏன் திரண்டு வந்தார்கள்? ஒரே காரணம், அங்கே யாரும் வாழ முடியாத சூழல் ஏற்பட்டுவிட்டது.

காற்று, நிலம், நீர் அனைத்தும் நஞ்சாகிவிட்டன. தூத்துக்குடியை விட்டு எங்கே ஓடுவது? அப்படி ஒரு நிலை ஏற்படும்பொழுது தங்கள் உயிரைத் துரும்பாக மதித்து மக்கள் போராடுவதற்குத் தயாராகிறார்கள். அப்படிப்பட்ட ஒரு நிலைக்கு நாடும் உலகமும் சென்று கொண்டிருக்கின்றன.

அதனால்தான் எதிர்த்துப் போராடும் உழைக்கும் வர்க்கத்திற்குச் சோர்வூட்டுவதற்கு அவர்கள் திட்டமிட்டு வேலை செய்கிறார்கள். கார்ல் மார்க்ஸின் மருமகன் பால்லபார்க், தன்னைச் சந்திக்க வந்த லெனினிடம் ஐரோப்பிய புரட்சி குறித்த தனது அவநம்பிக்கையை வெளிப்படுத்தியிருக்கிறார். விரக்தி பரவியிருந்த இந்தக் காலத்திற்குப் பிறகுதான் 1917- ரசிய சோசலிசப் புரட்சி நடக்கிறது.

இது ஒரு சவாலான காலம். இந்தச் சவாலை நாம் எதிர்கொள்ள வேண்டும். நீங்கள் சொந்த முறையிலேயே சிந்தித்துப் பாருங்கள். இந்த உரையின் தொடக்கத்தில் குறிப்பிட்டதை நினைவூட்டுகிறேன். ஒரே நேரத்தில் 5 அடையாளங்களுடன், 6 அடையாளங்களுடன், ஆறு தொழில்களுடன் நேற்று இந்த வேலை, நாளை அந்த வேலை, நாளை மறுநாள் இன்னொரு வேலை என்று மிதந்து கொண்டு இருக்கின்ற ஒரு உழைப்பாளியை எப்படிச் சங்கமாக சேர்ப்பது?

பாதி நாள் வேலை இருக்கிறது. பாதி நாள் வேலை இல்லை என்று அரை வேலைவாய்ப்புடன் இருக்கின்ற எண்ணற்ற மக்களை, “தண்ணீர் வந்தால் விவசாயி; தண்ணீர் வரவில்லை என்றால் தொழிலாளி” என்று நகரத்திற்கு ஓடுகின்ற ஒரு மனிதனை எப்படி அமைப்பாக்குவது?

காவி பாசிஸ்டுகளை முறியடிப்பது என்பது காவி அரசியலை எதிர்த்து பேசுவதனால் மட்டும் நடந்து விடுவது அல்ல. அதுவும் தேவை. தொழிலாளி வர்க்கத்தை உழைக்கும் வர்க்கத்தை இந்த வகையில் அணி சேர்ப்பதும் தேவை.

comrade vilavai ramasamy remembrance meeting maruthaiyan Speech (4)
விளவை ராமசாமியின் நினைவேந்தல் கூட்டத்தில் அவருக்குச் செவ்வணக்கம் செலுத்தும் தோழர்கள்.

தோழர் விளவை ராமசாமி தொண்ணூறுகளில் புரட்சிகர அரசியலுக்கு வந்தார். முப்பது ஆண்டுகளில் மறைந்து விட்டார். அவர் மறைகின்ற காலத்திலேயே புதிய தாராளவாதக் கொள்கையின் தீமைகள் தலைவிரித்து ஆடத் தொடங்கிவிட்டன. இன்றைக்குப் பள்ளிச் சிறுவர்களாக, கல்லூரி மாணவர்களாக இருக்கின்றவர்களுடைய எதிர்காலத்தை எண்ணும்போது கவலை ஏற்படுகிறது.

தண்ணீர் எங்கிருந்து வரும்? தெரியவில்லை. வேலை எங்கிருந்து வரும்? தெரியவில்லை. அவர்களுக்கு இதைப் புரியவைக்க வேண்டியிருக்கிறது. நம்முடைய கல்விமுறை என்பது ஏற்கனவே இருந்த அளவிற்குக்கூடச் சமூக உணர்வு இல்லாத அளவிற்கு, இருந்த சமூக உணர்வையும் அழிக்கின்ற அளவிற்குப் பாடத்திட்டங்கள் மாற்றப்படுகின்றன. இளைஞர்கள், மாணவர்கள் மாற்றப்படுகிறார்கள்.

அதில் நமக்கு இன்னும் கூடுதல் பொறுப்பு இருக்கிறது. அவர்களுக்கு இந்தச் சமூக உணர்வை ஏற்படுத்தும் பொறுப்பு இருக்கிறது. ஆகவே தோழர் விளவை ராமசாமி பழுத்த இலையாக இந்த மண்ணிலே உதிர்ந்தார். அவரை உரமாகப் பருகி வளரக்கூடிய புரட்சியாளர்களை உருவாக்குவதற்கு, இந்த அரசியல் கண்ணோட்டத்தை எடுத்துச் செல்வோம். நாம் மாற்றிக் கொள்ள வேண்டிய பண்புகளை எடுத்துச் சொல்வோம். நாமும் மாறிக் கொள்வோம். நன்றி.

– மருதையன்

(தோழர் விளவை ராமசாமியின் நினைவேந்தல் கூட்டத்தில் தோழர் மருதையன் ஆற்றிய உரையின் சுருக்கம்)

புதிய ஜனநாயகம் ஆகஸ்ட் 2019

மின்னூல்:

15.00Add to cart

மின்னூலை வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள். இந்தியாவில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Online Payments மூலமாகவும் வெளிநாட்டில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Paypal மூலமாகவும் தெரிவு செய்து பணத்தை செலுத்தலாம்.

பணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம்.

Mobile – (91) 97100 82506, (91) 99411 75876
Email – vinavu@gmail.com
இந்நூலின் கட்டுரைகள் அனைத்தும் வினவு தளத்தில் வெளியிடப்படும்.

புதிய ஜனநாயகம் மாத இதழை நேரடியாகப் பெற விரும்புவோர் ஆண்டுச் சந்தா செலுத்தலாம் : உள்நாடு ரூ.180 மட்டும்!

தொடர்பு முகவரி
புதிய ஜனநாயகம் ,
110, இரண்டாம் தளம்,
63, என்.எஸ்.கே. சாலை, (அ.பெ.எண்: 2355)
கோடம்பாக்கம், சென்னை – 600024

தொலைபேசி: 94446 32561
மின்னஞ்சல் : puthiyajananayagam@gmail.com

புதிய ஜனநாயகத்தின் முந்தைய மின்னூல் வெளியீடுகள்

15.00Add to cart

15.00Add to cart

15.00Add to cart

 

2 மறுமொழிகள்

  1. தோழர் விளவை ராமசாமியின் நினைவேந்தல் கூட்டத்தில் தோழர் மருதையன் ஆற்றிய உரையின் விடியோ பதிவு இருந்தால் அதை வெளியிடுங்கள் தோழர்களே

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க