மனிதனை நாயாகப் பயிற்றுவிக்கிறது முதலாளித்துவம் ! தோழர் மருதையன்

0

மனிதனை நாயாகப் பயிற்றுவிக்கிறது முதலாளித்துவம் ! சகோதரர்களாக வாழக் கற்றுக் கொடுக்கிறது சோசலிசம்!!

கார்ல் மார்க்சின் மூலதனம் நூலின் 150-ம் ஆண்டு, ரசிய சோசலிசப் புரட்சியின் 100-ம் ஆண்டு சிறப்புக் கூட்டம் சென்னையில் நவம்பர் 19, 2017 அன்று நடைபெற்றது. கூட்டத்தில், தோழர் மருதையன், பொதுச் செயலர், ம.க.இ.க. ஆற்றிய உரையின் சுருக்கப்பட்ட கட்டுரை வடிவம்!

து மூலதனம் நூலின் முதல் பதிப்பின் 150-ஆவது ஆண்டு, நவம்பர் புரட்சியின் நூற்றாண்டு. அது மட்டுமல்ல, சீனத்தில் நடந்த பண்பாட்டுப் புரட்சியின் 50-ஆவது ஆண்டு, இந்தியாவில் நடந்த நக்சல்பாரி எழுச்சியின் 50-ஆவது ஆண்டு. இவை எல்லாம் தனித்தனி நிகழ்வுகள் அல்ல. இவற்றுக்கிடையே உள்ளார்ந்த ஒரு உறவு இருக்கிறது.

கற்பனாவாத பொதுவுடமைக் கருத்துகளில் இருந்து தொழிலாளி வர்க்கத்தை விடுவித்து, ஒரு அறிவியல் பார்வையை வழங்கியவர் மார்க்ஸ்.

பொருளாதாரவாதப் போக்குக்கு எதிராகவும், சாகசவாத போக்குகளுக்கு எதிராகவும், தேசபக்தி என்ற பெயரிலே முதலாளித்துவத்துக்கு அடிமைச் சேவகம் செய்த தேசவெறிக்கெதிராகவும் போராடி ஒரு பாட்டாளி வர்க்கப் புரட்சியை ரசிய மண்ணிலே சாதித்தார் லெனின்.

பெரும் திரளான விவசாயிகளைக் கொண்ட, மிகப் பின்தங்கிய சீனத்தில் ஒரு புரட்சியை நடத்திக் காட்டினார் மாவோ. சோசலிசம் வெற்றி பெற்றுவிட்டதென நாம் இறுமாந்திருந்திட முடியாது, மீண்டும் முதலாளித்துவம் மீட்கப்படுவதைத் தடுக்க பண்பாட்டுப் புரட்சி என்ற விடையைக் கண்டார் மாசேதுங்.

இங்கே இந்தியாவில் நாடாளுமன்றப் பாதையிலே சிக்கிக் கொண்ட பொதுவுடைமை இயக்கத்தில், புரட்சியை நிகழ்ச்சி நிரலுக்கு கொண்டு வந்தது நக்சல்பாரி எழுச்சி. அதிலே பல தவறுகள், பின்னடைவுகள் இருப்பினும், அதன் முக்கியத்துவம் புரட்சியை நிகழ்ச்சிநிரலுக்குக் கொண்டு வந்ததிலே இருக்கிறது.

இந்த நான்கு நிகழ்வுகளை இந்த நேரத்திலே நாம் நினைவுகூற வேண்டியிருக்கிறது என்றாலும் கூட, ஒப்பீட்டளவில் முக்கியத்துவம் வாய்ந்தவை என்பதனாலே, இரண்டை மட்டும் நாம் மையப்படுத்தியிருக்கிறோம்.

வரலாற்றில் முதன்முறையாக உழைக்கும் வர்க்கத்தின் ஆட்சி நிலைநாட்டப்பட்டது ரசியப் புரட்சியில் என்பதை நாம் குறித்துக் கொள்ள வேண்டும். இன்றைக்கு நிலைமைகள் தலைகீழாகிவிட்டன. தொழிலாளி வர்க்க அரசு இருந்த காலம் போய், ஒரு முதலாளித்துவ ஜனநாயகம் என்று சொல்லப்பட்டதும்கூட ரத்து செய்யப்படுகின்ற காலத்தில் நாம் உள்ளோம். மார்க்ஸ் காலத்திலே உலகம் எப்படி இருந்ததோ அந்த நிலை நோக்கிப் போயிருக்கிறோம்.

1990 – 91 -இல் பெர்லின் சுவர் வீழ்ந்தவுடன், முதலாளித்துவ ஜனநாயகம்தான் மனித நாகரீகம் அடையத்தக்க உன்னதம் – எண்ட் ஆஃப் ஹிஸ்ட்ரி என்றார் பிரான்சிஸ் ஃபுகுயாமா. இது முன்னரே ஹெகல் கூறியதுதான். அதை மறுத்தார் மார்க்ஸ். இன்று ஃபுகுயாமவை மறுப்பதற்கு ஒரு மார்க்ஸ் தேவைப்படவில்லை. முதலாளித்துவமே அக்கருத்தை மறுத்துவிட்டது.

அவர் புத்தகம் போட்டு மூன்றே ஆண்டில் தென்கிழக்காசிய நெருக்கடி. அடுத்த நான்கு ஆண்டுகளில் டாட்காம் குமிழி வெடிப்பு. அடுத்த ஐந்தாண்டுகளில் சப்-பிரைம் நெருக்கடி. அதிலிருந்து இன்று வரை முதலாளித்துவம் எழுந்திருக்கவில்லை. இது வழக்கமாக வந்து போகும் நெருக்கடியல்ல சிஸ்டமிக் க்ரைசிஸ், உலக முதலாளித்துவக் கட்டமைப்பின் நெருக்கடி என்று அவர்களே ஒப்புக் கொள்கிறார்கள்.

மல்டி ஆர்கன் ஃபெயிலியரில் முதலாளித்துவம் ஐ.சி.யு.-வில் கிடக்கிறது. ஆனால், இட்லி சாப்பிடுகிறார், சட்னி சாப்பிடுகிறார். முதலாளித்துவத்தை மோடி மீட்டு விடுவார். ட்ரம்ப் மீட்டுவிடுவார் என்று சிலபல திண்டுக்கல் சீனிவாசன்கள் நமக்குக் கதை சொல்லுகிறார்கள்.

ஏழைத் தொழிலாளியின் உடலுறுப்புகளை எடுத்து நடராஜனது உயிரைக் காப்பாற்றினார்களே, அதுபோல, ஒடுக்கப்பட்ட நாடுகளின் உழைக்கும் வர்க்கத்தின் கிட்னியையும், லிவரையும் இப்போது எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். அதுதான் கிரீஸ் நெருக்கடி. அதுதான் போர்ச்சுக்கல் நெருக்கடி. முதலாளித்துவ அமைப்பை மீட்க ஆளுக்கு ஒரு யோசனை சொல்கிறார்கள்.

இன்று ரஜினிகாந்த்கூட சொல்கிறார், சிஸ்டம் சரியில்லை என்று. அவர் வீட்டில் ஹோம்தியேட்டர் சிஸ்டம் சரியில்லையாயிருக்கும். அல்லது டிக்கெட் எல்லாம் 1000 ரூபாய்க்குதான் பிளாக்கில் போகுது, 2000 ரூபாய்க்குப் போவது போல சிஸ்டத்தை மாற்றியமைக்கணும் என்று அவர் விரும்பலாம். மோடியும் அப்படித்தான் சொல்கிறார். காலாவதியான சட்டங்கள் இருப்பதால், எல்லாம் வீணாய்ப் போய்விட்டது. மாற்றியமைக்கிறேன் என்கிறார். எப்படி?

இருக்கின்ற பெயரளவிலான ஜனநாயகத்தை அவர்கள் ரத்து செய்ய விரும்புகிறார்கள். எதிர்த்திசையில் மாற்றியமைக்க விரும்புகிறார்கள். ஆர்.எஸ்.எஸ். –க்கும் பார்ப்பனியத்திற்கும் ஜனநாயகம் ஒத்துவராது. முதலாளித்துவத்துக்கும் ஜனநாயகம் ஒத்து வராது. புதிய தாராளமயக் கொள்கைகள் அமல்படுத்தப்பட்டதற்குப் பின்னால் இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் இருந்ததை விட ஏற்றத்தாழ்வு அதிகமாகி விட்டது என்று தாமஸ் பிக்கட்டி சொல்கிறார்.

முதலாளித்துவம் என்று சொல்லக்கூடிய  இந்த அமைப்பைச் சீர்குலைப்பவர்களாக,  ஒழித்துக்கட்டுபவர்களாக முதலாளிகளே இருக்கிறார்கள் என்பதைத் தரவுகளோடு சொல்கிறார் ரகுராம் ராஜன்.  அவர் முதலாளித்துவக் கொள்கையாளர்தான். இருப்பினும், வாங்கின கடனைக் கட்டு என்று சொன்னதால், அவரை அம்பானிக்குப் பிடிக்கவில்லை.

முதலாளித்துவத்தை முதலாளிகளிடம் இருந்து காப்பாற்ற வேண்டும் என்று அவர் எழுதினார். தொழிலாளி வர்க்கம் தான் இந்த முதலாளி வர்க்கத்திற்கு சவக்குழி தோண்டும் என்றார் மார்க்ஸ். முதலாளி வர்க்கமே முதலாளி வர்க்கத்துக்கு சவக்குழி தோண்டுகிறதென்று ரகுராம் ராஜன் சொல்வதைக் கேட்டு மனதார சிரிக்க மார்க்ஸ் இங்கே இல்லை.

சவக்குழி தோண்ட வேண்டிய தொழிலாளி வர்க்கம் பால் குடம் எடுக்கிறது. ஜெயலலிதாவிற்கு பால் குடம் எடுத்ததை மட்டும் சொல்லவில்லை. ஏன் ஆட்குறைப்பு என்று ஐ.டி. ஊழியர்களைக் கேளுங்கள். ரிஷசன் என்பார். திருப்பூர்த் தொழிலாளியைக் கேளுங்கள். எக்ஸ்போர்ட் ஆர்டர்  இல்லை என்பார். எல்லாருக்கும் ஒரு கண்ணோட்டம்தான். அந்த அளவிற்கு இந்தக் கருத்து  நம்முடைய மூளையிலே இறக்கப்பட்டிருக்கின்றது.

புதிய தாராளவாதக் கொள்கைகளை அமல்படுத்த தொடங்கி பத்து வருஷம் ஆச்சே, என்னையா ஒண்ணையும் காணோமே இன்னும் என்று ப.சிதம்பரத்தைக் கேட்டபோது, அவர் சொன்னார், இருங்க டிரிக்கிள் டவுன் ஆவதற்கு கொஞ்சம் காலம் ஆகும். புல்லுக்கும் ஆங்கே பொசியும். காத்திருங்கள் என்று. முதலாளிகள் வீட்டிலே விருந்து நடக்கிறது. தொழிலாளிகளே கொஞ்சம் காத்திருங்கள். எச்சில் இலை விழுவதற்குக் கொஞ்சம் நேரம் ஆகும் என்பதே இதற்குப் பொருள்.

மோடி என்ன சொல்லுகிறார்? முதலாளிகளுக்கு ஆதரவான இன்வெஸ்மென்ட் பிரண்ட்லி அரசாக இருந்தால்தான், மக்களுக்கு முன்னேற்றம் வரும் என்கிறார். அதாவது, எச்சில் இலை விழும் அச்சே தின் வரும் என்று மூன்று ஆண்டுகளாகச் சொல்கிறார். செல்வம் மேலிருந்து கீழே வருவதற்கு அதனை இயக்குவது புவி ஈர்ப்பு விசை அல்ல. முதலாளித்துவத்தை இயக்குவது இலாபவெறி. அது கீழே இருந்து மேலே மட்டும்தான் உறிஞ்சும்.

புருசன் வேலைக்குப் போய் பொண்டாட்டி, புள்ள, அப்பன், ஆயி கஞ்சி குடித்த காலம் இருந்தது. இன்று கணவன், மனைவியுடன்  பிள்ளையும் வேலைக்குப் போகணும். மகள் தன் கல்யாணச் செலவைத் தானே ஈட்டிக்கொள்ளவேண்டும் என்பதை முப்பது ஆண்டுகளுக்கு முன் ஒரு தந்தை அவமானகரமாகக் கருதி இருப்பான். இன்று அவனே சுமங்கலி திட்டத்துக்கு அனுப்பி வைக்கிறான். மொத்தத்தில் எவ்வளவு தீவிரமாக உழைக்கிறோமோ, அந்த அளவிற்கு வேகமாக நமக்கு எதிரான சக்தியான மூலதனம் வலுப்பெறும் என்ற விதியைத்தான் மார்க்ஸ் மூலதனத்திலே சொல்கிறார்.

மூலதனத்திலே மார்க்ஸ் எழுதுவார். மேரி அன்னே வாக்கியே என்ற ஒரு பெண், நூற்பாலைத் தொழிலாளி. நாள் கணக்கில் தூக்கமின்றி வேலை செய்து ஆலையிலேயே இறந்து போவதைக் குறிப்பிடுவார். ஜப்பானில் இன்று ஒரு  பெண்மணி அந்த மாதிரி அளவுக்கதிகமான நேரம் வேலை செய்து ஆலையிலே இறக்கிறார்.

அன்றைக்குக் கடனுக்காகத் தமிழக மக்களை மலேசியாவுக்கும், இந்தோனேசியாவிற்கும் கொத்தடிமைகளாக  பிடித்துச் சென்றார்கள். இன்று நெல்லையிலே தற்கொலை செய்து கொண்டார்களே, அவர்கள் அந்தக் காலமாக இருந்தால், எட்டணாவிற்கோ ஒரு ரூபாய்க்கோ தங்களை விற்றுக்கொண்டிருப்பார்கள். மார்க்சுக்கு முந்தைய காலத்தில்  என்ன நடந்ததோ, அதை இன்று காண்கிறோம். ஆனால், மார்க்சியம் காலாவதியாகிவிட்டது என்கிறார்கள். முதலாளித்துவம் காலாவதி  ஆகும் வரை மார்க்சியம் காலாவதி ஆக முடியாது.

முதலாளித்துவத்தின் அழிவு தவிர்க்க இயலாதது என்கிறார் மார்க்ஸ். அதற்குப் பொருள் முதலாளித்துவம் தானே அழிந்து விடும் என்பதல்ல. அம்பானியோ அதானியோ நெருக்கடி தாங்க முடியவில்லை, இந்தாங்க சாவியை, வச்சிக்கோங்க என்று தொழிலாளர் வர்க்கத்தின் கையில் பீரோ சாவியை கொடுக்க போகிறார்களா? அது எந்த காலத்திலாவது நடக்குமா?. முதலாளித்துவம் அழுகி நாறுகிறது என்பது உண்மைதான். ஆனால், அது தானாகவேஅழிந்து விடாது.

முட்டைக்குள்ளே குஞ்சி இருப்பது என்பது உண்மைதான். முதலாளித்துவத்துக்குள்ளே சோசலிசம் இருப்பதும் உண்மைதான். ஆனால், முட்டை தானாகக் குஞ்சு பொரிக்காது. அதற்குப் பொருத்தமான வெப்பத்தைக் கொடுக்கவேண்டியது தொழிலாளி வர்க்கத்தின் வேலை. அதற்குப் புரட்சி என்பது தேவை. படிப்படியாகக் கொண்டு வந்து விடலாம். அமைதி வழியில் சோசலிசம் என்றெல்லாம் பேசுகிறார்கள். அமைதி வழியிலே சீர்திருத்தியிருக்கிறதா முதலாளித்துவம்? ஏன் நூற்றைம்பது ஆண்டுகளுக்குப் பின்னால் போயிருக்க வேண்டும். கொஞ்சம் கொஞ்சமாக, ஒவ்வொரு தோலாக உரிப்பதற்கு இது வெங்காயமில்லை. முதலாளித்துவம் என்பது ஓநாய். அதன் நகத்தை ஒவ்வொன்றாகப் பிடுங்க முடியாது.

தங்களால் முடியாது என்று கருதுகிறவர்கள், அதை அப்படி சொல்லாமல், யாராலும் முடியாது என்கிறார்கள். சோசலிசத்தைப் பற்றி அச்சுறுத்துகிறார்கள். அவர்கள் சொல்லுகின்ற ஒவ்வொன்றுக்கும் கம்யூனிஸ்டுகள் விளக்கம்சொல்லுகிறோம். ஆனால், அவர்கள் எதற்காவது பதில் சொல்லியிருக்கிறார்களா? என்றைக்காவது?

உலகப் போர்கள், அணுகுண்டு, ஹிட்லர், முசோலினி, ஜெயலலிதா, ஓ.பி.எஸ்., இ.பி.எஸ். இவர்களெல்லாம் யார்? முதலாளித்துவம் பெற்ற பிள்ளைகள். அதை அவர்கள் சொல்வதில்லை. நமக்கும் கேட்கத் தெரிவதில்ல. பஞ்சமும் பட்டினியும் விவசாயிகள் தற்கொலையும் முதலாளித்துவத்தின் தோல்வியைக் காட்டவில்லையா? அவர்கள் இதெற்கெல்லாம் பதில் சொல்லுவதில்லை. நாம் பதில் சொல்லுகிறோம். ஏனென்றால், தொழிலாளி வர்க்கம் எங்களுக்கு என்று மட்டுமே கேட்டுப் பழக்கப்பட்ட வர்க்கம். எனக்கு எனக்கு என்பது முதலாளி வர்க்கம்.  முதலாளிகளைப் போலச் சிந்திப்பதற்கு நாம் பழக்கப்படுத்தப்படுகிறோம்.

போட்டி என்பதை உன்னதமாகக் கருதப் பழக்கப்படுத்தப்படுகிறோம். பத்து வேலைக்கு இருபதாயிரம் பேர் போட்டி. எலும்புத் துண்டுக்கு அடித்துக் கொள்ளும் நாய்களாக நம்மை மாற்றி விட்டு, இதையே பெரிய கவுரவம் என்று கருதுமாறும் பழக்குகிறார்கள். அடுத்தவனை வீழ்த்தாமல் வாழமுடியாது என்ற பண்பாட்டை நமது மரபணுக்கள் வரை பதிக்கிறார்கள். இது அநாகரிகம். இந்த அநாகரிகத்துக்கு முடிவுகட்டியது தான் நவம்பர் புரட்சி. எல்லோருக்கும் வேலை, எல்லோருக்கும் உணவு, எல்லோருக்கும் வீடு என்பது சாத்தியம் என்பதை நிரூபித்தது.

யார் திறமைசாலியோ, யார் வலிமையானவனோ அவன் அடுத்தவனை வீழ்த்தித்தான் வாழமுடியும் என்பது முதலாளித்துவம். நாம் நாய்கள் அல்ல, மனிதர்கள். நாம் சகோதரர்களாக வாழ முடியும் என்று நிரூபித்தது சோசலிசம். 1917 என்பது கடந்த காலம் அல்ல, அது வருங்காலம். வருங்காலத்தை நோக்கி 1917 -ஐ நோக்கிச் செல்வோம்.

-புதிய ஜனநாயகம், டிசம்பர் 2017

15.00Add to cart

மின்னூலை வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள். உங்களுக்கான பணம் செலுத்தும் முறையை தெரிவு செய்து பணத்தை செலுத்துங்கள்.

இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். பணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். உடன் உங்களுக்கு மின் நூல் அனுப்பி வைக்கப்படும்.

Mobile – (91) 97100 82506, (91) 99411 75876

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க