ஆந்திர மருந்து ஆலை வெடி விபத்து: கார்ப்பரேட் லாபவெறியின் பச்சைப் படுகொலை

இந்நிறுவனங்கள் தங்களது லாப வெறிக்காக முறையான சட்ட விதிமுறைகளை பின்பற்றாததால் அடிக்கடி விபத்துகள் நிகழ்வது வழக்கமான ஒன்றாக மாறியுள்ளது.

ந்திர மாநிலம் அனகாபள்ளி மாவட்டத்தில் உள்ள “எசென்ஷியா” மருந்து நிறுவனத்தில் கொதிகலன் (Boiler) வெடித்ததில் கட்டடம் இடிந்து விழுந்து 17 தொழிலாளர்கள் பலியாகியுள்ளனர். 50-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பல தொழிலாளர்கள் கட்டட இடிபாடுகளுக்குள் புதைந்துள்ள நிலையில் தற்போது வரை அவர்கள் முழுமையாக மீட்கப்படவில்லை. மதிய உணவு இடைவேளை நேரத்தில் பலத்த வெடி சத்தத்துடன் நேர்ந்த இந்த விபத்தால் அந்தப் பகுதி முழுவதும் அடர் புகை சூழ்ந்தது.

“எசென்ஷியா அட்வான்ஸ்டு சயின்ஸ் பிரைவேட் லிமிடெட்” என்ற இந்நிறுவனமானது ஆந்திராவின் அச்சுதாபுரம் என்ற பகுதியில் அமைந்துள்ளது. “அச்சுதாபுரம் ஃபார்மா” என்று அழைக்கப்படும் இப்பகுதி சிறப்புப் பொருளாதார மண்டலமாகும் (Specical Economic Zone – SEZ). சுமார் 10 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த சிறப்புப் பொருளாதார மண்டலத்தில் கிட்டத்தட்ட மூவாயிரம் ஏக்கரில் மருந்து தொழிற்சாலைகள் அமைந்துள்ளன. இங்குள்ள தொழிற்சாலைகளில் ரசாயனங்கள் தயாரிக்கப்பட்டு சேமித்து வைக்கப்படுகின்றன.

இந்நிறுவனங்கள் தங்களது லாப வெறிக்காக முறையான சட்ட விதிமுறைகளை பின்பற்றாததால் அடிக்கடி தீ விபத்துகள் நிகழ்வது வழக்கமான ஒன்றாக உள்ளது. கடந்த ஜூலை மாதத்தில் கூட இப்பகுதியில் நடந்த இதேபோன்றதொரு வெடி விபத்தில் தொழிலாளி ஒருவர் பலியாகியுள்ளார். இதேபோல் கடந்த ஆண்டு இங்குள்ள “சாகித்யா சால்வென்ட்ஸ்” நிறுவனத்தில் விபத்து ஏற்பட்டு நான்கு தொழிலாளர்கள் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.


படிக்க: பந்துவார்பட்டி பட்டாசு ஆலை விபத்து: அலட்சியம் காட்டும் அரசே முதல் குற்றவாளி!


தற்போது நடந்துள்ள இவ்விபத்து குறித்து பேசிய மாநில தொழிலாளர் துறை அமைச்சர் வாசம்செட்டி சுபாஷ், தொழிற்சாலை அதிகாரிகளின் அலட்சியத்தால் இந்த விபத்து ஏற்பட்டதா அல்லது போதிய தீ பாதுகாப்பு நடவடிக்கைகள் இல்லாததால் ஏற்பட்டதா என விசாரணை நடத்தப்படும் என்று கூறியுள்ளார். மேலும், முந்தைய அரசாங்கத்தின் கொள்கைகளால் தொழிற்சாலைகளில் பாதுகாப்புத் தரம் குறைந்து அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுகின்றன; தொழிலாளர் துறை புறக்கணிக்கப்பட்டுள்ளது; கட்டுமானத் தொழிலாளர்களுக்கான சலுகைகள் மற்றும் நலத்திட்டங்களும் நிறுத்தப்பட்டுள்ளன என்றும் பொங்கியுள்ளார். ஆனால், முன்பு ஆட்சியில் இருந்த ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் மட்டுமல்ல, தற்போது ஆட்சியில் உள்ள தெலுங்கு தேசம் கட்சியும் கார்ப்பரேட்டுக்கு சேவை செய்வதில் சிறிதும் சளைத்தது அல்ல என்பதை சந்திரபாபு நாயுடு அரசின் கார்ப்பரேட் மயமாக்க நடவடிக்கைகளை அம்பலப்படுத்தும் ஊடகங்கள் மீது தொடுக்கப்படும் தாக்குதல்களே நமக்கு எடுத்துரைக்கும்.

கார்ப்பரேட் நிறுவனங்கள் தங்களுடைய லாபவெறி நோக்கத்திற்காக எந்தவொரு சட்ட விதிகளுக்கும் உட்படாமல் தொழிற்சாலைகளை நடத்திவருவதன் விளைவுதான் இத்தகைய ‘விபத்துகள்’ என்பதை நன்கு அறிந்தும், இந்த அரசு தொழிலாளர்களின் சட்ட விதிமுறைகளை மீறி நடந்துவரும் கார்ப்பரேட் நிறுவனங்களை தடைசெய்வது, அந்நிறுவனத்தின் முதலாளிகள், உயரதிகாரிகளை கைது செய்வது போன்ற நடவடிக்கைகளை எடுத்து பாதுகாப்பை உறுதிசெய்யாமல், கார்ப்பரேட் நிறுவனங்களுடன் கைகோர்த்து நிற்கிறது என்பதே  உண்மை.  சொல்லப் போனால்,  லாப வெறிக்காக கார்ப்பரேட் முதலாளிகளும் அரசும் கூட்டு சேர்ந்து நடத்தும் பச்சை படுகொலைகளே  இவ்’விபத்துக்கள்’.

கார்ப்பரேட் முதலாளிகளின் லாப வெறிக்காக தொழிலாளர்களின் உயிரை பறிக்கும் இந்நிறுவனங்களுக்கு எதிராகவும் அதற்கு துணை நிற்கும் அரசுக்கு எதிராகவும் தொழிலாளர்கள்  ஒன்றுதிரண்டு போராட வேண்டும்.


தீரன்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க