பந்துவார்பட்டி பட்டாசு ஆலை விபத்து: அலட்சியம் காட்டும் அரசே முதல் குற்றவாளி!

முறையான பாதுகாப்பு ஏற்பாடுகள் எதுவும் மேற்கொள்ளாமல்,  கொடுக்கப்பட்ட விதிமுறைகளை மீறி செயல்படுவதால் இம்மாதிரியான கோர சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டே இருக்கின்றன. ஆண்டுதோறும் ஏறத்தாழ 70 முதல் 90 பேர் வெடி விபத்தினால் இறந்து போகின்றனர்.

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே பந்துவார்பட்டியில் நேற்று (29.06.2024) பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டதில் நான்கு பேர் உயிரிழந்துள்ளனர்.

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே பந்துவார்பட்டியில் சகாதேவன் என்பவருக்கு சொந்தமான குரு ஸ்டார் என்ற பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது. இந்த பட்டாசு ஆலையில் 15 அறைகள் உள்ளன. அச்சங்குளம், நடுத்தரங்குடி, பந்துவார்பட்டி ஆகிய கிராமங்களில் இருந்து 50க்கும் மேற்பட்டோர் இந்த ஆலையில் வேலை செய்கின்றனர். இந்த ஆலையில் சிறிய ரக பட்டாசுகள் தயாரிக்கப்படுகின்றன.

இந்நிலையில் வழக்கம் போல் வேலை செய்வதற்கு தொழிலாளர்கள் ஆயத்தமாகிக் கொண்டிருக்கும்போது, நேற்று (29.06.2024) காலை பட்டாசுகள் தயாரிப்பதற்காக ரசாயன மருந்துகளை கலவை செய்யும் போது ஏற்பட்ட உராய்வின் காரணமாக விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் ஆலையில் உள்ள 3 அறைகள் இடிந்து தரைமட்டமாகியுள்ளது. வெடிச்சத்தம் மூன்று கிலோமீட்டர் வரை கேட்டுள்ளது.

இந்த விபத்தில் அச்சங்குளம் – ராஜ்குமார் (42), நடுத்தூரங்குடி – மாரிசாமி (44), சத்திரப்பட்டி சேர்ந்த செல்வகுமார் (48), மோகன் (50) ஆகிய நால்வர் உயிரிழந்துள்ளனர். மேலும் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார். இறந்தவர்களது உடல் சிவகாசி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனை செய்ய அனுப்பப்பட்டுள்ளது.

ஆலையின் உரிமையாளர் சகாதேவன் மற்றும் அவரது மகன் குரு பாண்டியன் ஆகியோர் மீது நான்கு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 3 லட்சம் இழப்பீடு அளிப்பதாக கூறியுள்ளார்.

ஒவ்வொரு முறையும் பட்டாசு வெடி விபத்து நிகழும் போது விபத்துகள் நடக்காமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்காமல், அரசு இழப்பீடு மட்டும் கொடுக்கிறது. “இழப்பீடு மட்டும் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு போதுமானதா?”, “இது போன்ற விபத்துக்கள் நடக்காமல் இருக்க அரசு என்ன செய்கிறது?” என்பதே மக்களின் கேள்வியாக உள்ளது.

மேலும் 09.05.2024 அன்று சிவகாசி அருகே செங்கமலைப்பட்டியில் கீழத்திருத்தங்கல்லை சேர்ந்த சரவணன் என்பவருக்கு சொந்தமான சுதர்சன் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 12 பேர் உயிரிழந்தனர். இதுபோல தொடர்ந்து பல பட்டாசு ஆலைகளும் பட்டாசு கடைகளும் வெடித்து மக்கள் இறந்து கொண்டே இருக்கின்றனர்.

விருதுநகர் மாவட்டம் ரெங்கபாளையத்தில் கடந்த அக்டோபர் மாதம் வெடித்த பட்டாசு விபத்தால் ஒரே ஆலையில் 12 பெண்கள், ஒரு ஆண் உள்பட மொத்தம் 13 பேர் பலியானது பெரும் உயிர்ச்சேத நிகழ்வாக பதிவானது. தமிழ்நாட்டையே உலுக்கிய இச்சம்பவத்தின் பாதிப்புகள் மறையும் முன்னரே, மீண்டுமொரு கோர சம்பவமாக விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அருகே பட்டாசு ஆலை வெடிவிபத்து நிகழ்ந்துள்ளது. இந்த விபத்தில் 6 ஆண்கள், 4 பெண்கள் உள்பட 10 தொழிலாளர்கள் உடல்கருகி உயிரிழந்துள்ளனர்.

தமிழ்நாட்டில், அரியலூர், கிருஷ்ணகிரி, விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களிலும், புதுச்சேரி அருகிலும் சமீப காலங்களில் நடந்த பட்டாசு ஆலை வெடி விபத்துகள் பெரும் உயிர்ப்பலிகளை ஏற்படுத்தியிருக்கிறது.


படிக்க: தொடரும் பட்டாசு ஆலை வெடிவிபத்துகள் – யார் காரணம்?


இந்த விபத்துகள் ஏற்படாமலிருக்க சில விசயங்களை பின்பற்ற வேண்டும். அவை:

  • பட்டாசு ஆலை நிறுவக்கூடிய பகுதி, குடியிருப்பு பகுதியில் இருந்து தள்ளியிருக்க வேண்டும்.
  • நெருப்பு மேல் நோக்கி பரவாமல் இருக்க Thin sheet என்ற ஒன்றை பயன்படுத்த வேண்டும்.
  • தீப்பிடித்தால் அணைப்பதற்காக தண்ணீர், மணல் ஆகியவற்றை ஒவ்வொரு அறைகளிலும் வைத்திருக்க வேண்டும்.
  • ஒரு அறையில் 3 அல்லது 4 பேர் தான் இருக்க வேண்டும்.
  • இந்த ஆலைகளில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு முறையான முகக்கவசம், கவச உடைகள் ஆகியவற்றை கொடுக்க வேண்டும்.
  • சில வெடி மருந்துகளில் ஈரப்பதம் இருக்கும்; சிலவற்றில் ஈரப்பதம் இருக்காது. அதனை தனித்தனியாக முறையாகக் கையாள வேண்டும்.

மேலும் ஆலையில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு முறையான பயிற்சி கொடுப்பதில்லை. இந்த ஆலைகளை மேற்பார்வையிட (Inspection) அதிகாரிகள் வரும்போது முன்னறிவிப்பின்றி தான் வர வேண்டும். ஆனால், அதிகாரத்தில் உள்ளவர்கள் லஞ்சம் பெற்றுக் கொண்டு, மேற்பார்வையிட வருவதை முன்கூட்டியே தெரிவித்து விடுவதால், ஒவ்வொரு ஆலையும் எல்லாவற்றையும் அன்று மட்டும் முறைப்படுத்தி விடுகின்றன.

பட்டாசு ஆலை வெடிவிபத்தில் உயிர்ப்பலிகளுக்கு காரணம் உரிமையாளர்களின் இலாப வெறியும், அப்பட்டமான விதிமீறலும், அதிகாரிகளின் மெத்தனப்போக்கும் தான். அதிக லாபத்துக்காக, உற்பத்தி அளவை காட்டிலும் அதிகளவு பட்டாசு தயாரிக்க பணியாளர்களை நிர்ப்பந்தம் செய்வதும் பட்டாசு விபத்துக்கான காரணமாகும்.


படிக்க: சிவகாசி பட்டாசு ஆலை விபத்து: இந்த படுகொலைகளுக்கு முடிவே இல்லையா?


பட்டாசு உற்பத்திக்காக மாவட்ட நிர்வாகத்தால் வழங்கப்படும் டி.ஆர்.ஓ. உரிமம், பேன்சி ரக பட்டாசு தயாரிக்க நாக்பூர் உரிமம் என இரண்டு வகையான உரிமங்கள் வழங்கப்படுகின்றன.

உரிமம் பெற்று செயல்படும் பட்டாசு ஆலைகளில் விதிமுறைகள் ஒழுங்காக கடைப்பிடிக்கப்படுகின்றனவா என்பதையும் அனுமதிக்கப்பட்ட அளவில்தான்‌ பணியாளர்கள், கையிருப்பு வெடிமருந்துகள் வைக்கப்பட்டிருக்கிறதா என்பதையும் அதிகாரிகள் ஆய்வு செய்யாததுமே எல்லாவற்றுக்கும் காரணம். விருதுநகர் மாவட்டத்தில் டி.ஆர்.ஓ. உரிமம் பெற்று இயங்கும் பல பட்டாசு ஆலைகள் விதிமுறைகளை மீறி பேன்சி ரக பட்டாசு தயாரிப்பிலும் ஈடுபடுகின்றன. இதை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டிய அதிகாரிகளும் அலட்சியமாக விட்டுவிடுகிறார்கள்.

டி.ஆர்.ஓ. உரிமம் பெற்று இயங்கும் ஆலைகளில் குறைந்த அளவே வெடி மருந்து கையிருப்பு வைக்கமுடியும். அதுவே நாக்பூர் லைசென்ஸ் பெற்று இயங்கும் பட்டாசு தொழிற்சாலையில் சற்று கூடுதலான அளவு வெடிமருந்துகளை கையிருப்பு வைத்துக் கொள்ளலாம்.

முறையான பாதுகாப்பு ஏற்பாடுகள் எதுவும் மேற்கொள்ளாமல்,  கொடுக்கப்பட்ட விதிமுறைகளை மீறி செயல்படுவதால் இம்மாதிரியான கோர சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டே இருக்கின்றன. ஆண்டுதோறும் ஏறத்தாழ 70 முதல் 90 பேர் வெடி விபத்தினால் இறந்து போகின்றனர்.

இம்மாதிரியான சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டே இருந்தாலும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் அரசாங்கம் இதற்கான முறையான நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் இருப்பது இது போன்ற சம்பவங்கள் நடைபெறுவதற்குக் காரணமாக அமைகிறது.

அரசு பட்டாசு ஆலை உரிமையாளர்கள் மீது காட்டும் அக்கறையை பட்டாசு ஆலைகளில் பணிபுரியும் தொழிலாளர்களைப் பாதுகாப்பதில் காட்டுவதில்லை.

விபத்து ஏற்பட்ட ஆலைக்குத் தற்காலிகமாக தடை உத்தரவு போட்டுள்ளனர். தற்காலிக தடை என்பது கண்துடைப்பு நடவடிக்கையே ஆகும். இந்த ஆலைகளுக்கு நிரந்தர தடை விதிப்பதே நிரந்தர தீர்வாகும். மேலும் முறையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படாத ஆலைகளுக்கு அரசு அனுமதி அளிக்கக்கூடாது.

மேலும் அரசு அதிகாரத்தில் உள்ளவர்கள் லஞ்சம் பெற்றுக் கொண்டு அலட்சியப் போக்காக இருப்பதே இந்த விபத்திற்குக் காரணமாகும். எனவே இந்த விபத்தினை கொலை குற்றமாக அறிவித்து சம்பந்தப்பட்ட துறையில் உள்ள அதிகாரிகளை உடனடியாக விசாரித்து உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.


அசுரன்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTubeவிவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க