சிவகாசி பட்டாசு ஆலை விபத்து: இந்த படுகொலைகளுக்கு முடிவே இல்லையா?

மனிதத் தவறுதான் காரணம் என்று பணிபுரிந்த தொழிலாளர்களின் மீது சுலபமாக பழியை போட்டுவிட்டு நகர்ந்து விடுகிறது அரசு.

சிவகாசி பட்டாசு ஆலை வெடி விபத்தில் 10 பேர் பலி!
தொடரும் இந்த படுகொலைகளுக்கு முடிவே இல்லையா?

விருதுநகர் மாவட்டம் வெம்பகோட்டை அருகே முத்துச்சாமிபுரத்தல் விஜய் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை உள்ளது. அதில் 17.02.2024 அன்று மதியம் ஏற்பட்ட வெடிவிபத்தில் 4 பெண்கள், 6 ஆண்கள் உள்ளிட்ட 10 பேர் உயிரிழந்தனர்.

இதுகுறித்து பேசிய மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் “ஒரே அறையில் விதியை மீறி 8 பேர் வேலை பார்த்தாக விசாரணையில் தெரிய வந்துள்ளது. முதற்கட்ட விசாரணையில் விபத்திற்கு மனிதத் தவறே காரணம் என தெரிய வந்துள்ளது, மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் விரிவான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. பட்டாசு ஆலைகளில் விபத்து ஏற்படாமல் இருக்க போலீஸ், தீயணைப்பு, தொழிலாளர் நலத்துறை மற்றும் வருவாய்த்துறை இணைந்து நான்கு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவர்களும் தொடர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்” எனக் கூறினார்.

இதுபோல் வெடி விபத்துகள் நடக்கும் போதெல்லாம் பெயரளவிற்கு ஒரு அறிக்கை வரும்.

மனிதத் தவறுதான் காரணம் என்று பணிபுரிந்த தொழிலாளர்களின் மீது சுலபமாக பழியை போட்டுவிட்டு நகர்ந்து விடுகிறது அரசு. அது போக, இந்த பட்டாசு ஆலைகளை கண்காணிக்க நான்கு குழுக்கள் அமைத்து தொடர்ந்து ஆய்வு செய்து வருவதாகவும் கூறுகிறது.

கடந்த வாரத்தில் கூட வெடி விபத்தில் எட்டு பேர் உயிரிழந்துள்ளதாக சிவகாசியை சேர்ந்த சமூக ஆர்வலர் மாரிச்சாமி பிபிசி செய்திகளுக்கு பேட்டி அளித்துள்ளார்.

அரசின் அறிக்கைகளும் இந்த ஆய்வுக் குழுக்களும் தொடர் வெடி விபத்தை தடுக்கவில்லை என்பதை நாம் கண் எதிரே காண்கிறோம்.


படிக்க: தொடரும் பட்டாசு வெடி விபத்துகளும் உயிரிழப்புகளும்! அரசே முதன்மையான குற்றவாளி!


சிவகாசி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஆயிரக்கணக்கான பட்டாசு ஆலைகள் இயங்கி வருகின்றன. இதில் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

இந்த பட்டாசு ஆலைகள் இன்னும் பெரிய அளவில் மனித உழைப்பில் தான் இயங்கி வருகின்றன. பட்டாசு ஆலை முதலாளிகளுக்கு பட்டாசு உற்பத்தியை அதிகப்படுத்த, வேலை செய்யும் தொழிலாளர்களின் வேகத்தை அதிகரிக்க  வேண்டிய தேவை உள்ளது. இதனால் தொழிற்சாலையில் உள்ள ஒவ்வொரு யூனிட்களையும் தனித்தனியான நபர்களிடம் குத்தகைக்கு விடுகிறார்கள். இந்த குத்தகை முறையினால் தொழிலாளர்கள் இன்னும் அதிகமான வேகத்தில் வேலை செய்ய நிர்ப்பந்திக்கப்படுகிறார்கள். இதனால் ஏற்படும் விபத்துக்கள் ஏராளமானது.

இங்கு தொழிலாளர்களுக்கு பெயர் அளவிலான உரிமைகள் கூட எதுவும் இல்லை. ஒவ்வொரு வெடிவிபத்தும் நடக்கும்போதும் தொழிலாளர்கள் தங்கள் உரிமைக்காக போராடுவதை தடுப்பதில் அரசுகளுக்கு முக்கியமான பங்கு உள்ளது. அதாவது அரசே இது தனிநபரின் தவறினால் நடக்கக் கூடியது என  பிரச்சாரம் செய்து  வேலை செய்யக்கூடிய தொழிலாளர்களை குற்றவாளிகளாக மாற்றுகிறது. ஒழுங்காக வேலை செய்யாதது கவனக்குறைவாக இருந்தது போன்ற காரணங்கள் தான் காரணம் என்று கூறி தொழிலாளர்களை மீண்டும் மீண்டும் குற்றவாளி கூண்டில் நிறுத்தப்படுகின்றனர். இப்படி தனித்தனியாக ஒவ்வொரு தொழிலாளரையும் குற்றவாளி கூண்டில் நிறுத்தி தொழிலாளர் ஒற்றுமையை சிதைக்கும் வேலையையும் தெளிவாக செய்யப்படுகிறது.

மேலும் அரசு இன்று அமைத்துள்ள நான்கு ஆய்வு குழுக்களும் பெயரளவிற்கானவை தான்.

2010-களில் 750 பட்டாசு தொழிற்சாலைகள் இருந்தன. அதே காலகட்டத்திலேயே இந்த தொழிற்சாலைகளை கண்காணிக்க  ஒரே ஒரு வட்டாட்சியாளர் தான் பொறுப்பானவராக இருந்தார். அவருக்கும் கூட போக்குவரத்து வசதிக்கு ஒரு வாகனம் கூட இல்லாமல் தன்னுடைய சொந்த மோட்டார் சைக்கிளில் தான் வருவார். தொடர்ந்து ஏற்பட்ட வெடி விபத்துகள், அதற்காக எழுந்த கண்டனங்கள் போன்றவற்றிற்குப் பிறகே ஒரு வாகனம் வாங்கித் தந்துள்ளார்கள் என குறிப்பிடுகிறது விகடன் கட்டுரை. அதன் பிறகு வந்த பல்வேறு கலெக்டர்கள் கண்காணிக்கும் அதிகாரிகளை அதிகப்படுத்த வேண்டும் என கோரினர். அங்கிருந்து அப்படியே மெதுவாக நகர்ந்து வந்ததுதான் இந்த நான்கு ஆய்வு குழுக்கள். அரசின் இந்த மெதுவான நகர்வு என்பது அதன் வர்க்கப் பாசத்தை தெளிவாகக் காட்டுகிறது.

இன்றுள்ள நவீன தொழிற்சாலைகளில் (ஃபயர் அண்ட் சேஃப்டி) பாதுகாப்பு குழுக்கள் உள்ளன. முதலாளியின் லாப வெறிக்கு எதிராக  தொடர்ந்து தொழிலாளர்கள் போராடியதன் விளைவாக தொழிலாளர் பாதுகாப்பு என்பது முக்கியத்துவம் பெற்று இதுபோன்ற பாதுகாப்பு குழுக்களை ஏற்படுத்துவது நடந்துள்ளது. ஆனால் இது போன்ற குழுக்களை அமைக்காத ஏராளமான தொழிற்சாலைகள் உள்ளன.


படிக்க: பட்டாசு ஆலை தொழிலாளர்களின் வலிகளும் வேதனைகளும்! | கவிதை


மேலும் ஒவ்வொரு தொழிற்சாலையும் எவ்வளவு பட்டாசுகள் தயாரிக்க வேண்டும் என்ற வரம்புகளாவது அரசிடம் உள்ளதா? என்ற கேள்வி நமக்கு எழுகிறது. அதீதமான உற்பத்தியும் அதற்காக வேகமாக வேலை செய்வதும் முதலாளிகளுக்கு தேவைப்படுகிறது. அவர்களுக்கு லாப வெறி தான் முக்கியமே தவிர தொழிலாளர்களின் வாழ்வு அல்ல. அரசும் முதலாளிகள் பக்கம் நிற்பதால் விபத்துகள் தொடர்கதை ஆகிவிட்டன.

விபத்துகளை தடுக்க வேண்டும் என்றால் ஒவ்வொரு தொழிற்சாலைக்கும் எவ்வளவு உற்பத்தி செய்யப்பட வேண்டும் என்ற வரம்பு, தொழிலாளர்களின் வேலைகளை உடனிருந்து கவனித்து வழிகாட்டக்கூடிய பாதுகாப்பு குழுக்கள், தொழிலாளர்களின் உரிமைகளை பேசக்கூடிய சங்கங்கள் அமைப்பது போன்றவற்றை இந்த அரசு செய்ய வேண்டும். இதை மீறும் தொழிற்சாலைகளை அரசே கட்டுப்பாட்டில் எடுக்கவேண்டும்.

தமிழ்நாடு அரசு தற்போது 3 லட்சம் ரூபாயும், மத்திய அரசு 2 லட்சம் ரூபாயும் நிவாரண நிதியாக அறிவித்துள்ளன. வேலையில் இருக்கும் போலீசு இறந்தால் ஒரு கோடி ரூபாய் வழங்கும் அரசுதான் தொழிலாளர் உயிருக்கு பிச்சை காசு போடுகிறது. அதைக் கூட ஏன் பிச்சை காசு என குறிப்பிடுகிறோம் என்றால் பட்டாசு தொழிலில் இருந்து ஆயிரக்கணக்கான கோடிகள் அரசிற்கு வரி வருவாயாக வருகிறது. இவையெல்லாம் அந்தத் தொழிலாளர்களின் ரத்தம் சிந்தும் உழைப்பால் கிடைத்தது.

இந்த அநீதிகளை நாம் தட்டி கேட்க களத்தில் இறங்காத வரை  விபத்துகளை தடுக்க முடியாது. என்ன செய்யப் போகிறோம்..


ரவி

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க