திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே மலையடிவார கிராமமான ஆவிச்சிபட்டியில் செல்வம் என்பவருக்குச் சொந்தமான பட்டாசு தயாரிக்கும் ஆலை ஒன்று உள்ளது. கடந்த 24 ஆம் தேதி இங்கு தொழிலாளர்கள் வழக்கம்போல், இரவு பணியில் பட்டாசு தயாரிக்கும் வேலையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில், பட்டாசு ஆலையில் வேலை பார்த்த தொழிலாளர்கள் 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அவர்களது உடலை போலீசார் மீட்டு, அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இறந்தவர்கள் சிவகாசியைச் சேர்ந்தவர்கள் மேலும் அவர்கள் குறித்து எந்த விபரமும் தெரியவில்லை. வெடி விபத்துக்கான காரணம் குறித்து போலீஸ் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். மேலும் பட்டாசு ஆலை உரிமையாளர் செல்வம் தலைமறைவாகியுள்ளார். இச்சம்பவம் குறித்து நத்தம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை நடத்தி வருகின்றனர்.
தொடர்ந்து பட்டாசு அலைகளில் வெடி விபத்துகள் நடந்து கொண்டே தான் இருக்கிறது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் விருதுநகர் மாவட்டம் ரெங்கபாளையத்தில் பட்டாசு வெடிவிபத்தால் ஒரே ஆலையில் 12 பெண்கள், ஒரு ஆண் உள்பட மொத்தம் 13 பேர் பலியானார்கள். அதேபோல் விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அருகே பட்டாசு ஆலை வெடிவிபத்து நிகழ்ந்துள்ளது. இந்த விபத்தில் 6 ஆண்கள், 4 பெண்கள் உள்பட 10 தொழிலாளர்கள் உடல் கருகி உயிரிழந்தனர்.
கடந்த பிப்ரவரி மாதத்தில் சிவகாசியில் ஏற்பட்ட வெடி விபத்தில் 14 தொழிலாளர்களும், மே மாதத்தில் சிவகாசி அருகே செங்கமலைப்பட்டியில் கீழத்திருத்தங்கல்லை சேர்ந்த சரவணன் என்பவருக்குச் சொந்தமான சுதர்சன் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 12 பேர் உயிரிழந்தனர். கடந்த ஜூன் மாதத்தில் விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே பந்துவார்பட்டி பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டதில் நான்கு பேர் உயிரிழந்தனர்.
படிக்க: சிவகாசி பட்டாசு ஆலை விபத்து: இந்த படுகொலைகளுக்கு முடிவே இல்லையா?
பட்டாசு ஆலைகளில் வெடி விபத்துகள் ஏற்பட்டு தொழிலாளர்கள் பலியாவது என்பது தொடர்கதையாகி வருகிறது. இந்த விபத்துகளுக்கு முக்கியமான காரணமாக இருப்பது அரசு வகுத்துள்ள விதிமுறைகள் எதுவும் பின்பற்றப்படுவதில்லை என்பதுதான். இந்த விதிமீறல்களை அதிகாரிகளும், பட்டாசு ஆலை முதலாளிகளும் திட்டமிட்டு மேற்கொள்கின்றனர். இதன் விளைவாகவே விபத்துகள் நடப்பது என்பது அதன் இயல்பான ஒன்றாக அமைந்துள்ளது.
குறிப்பாக ஆண்டுதோறும் ஏறத்தாழ 70 முதல் 90 தொழிலாளர்கள் வெடி விபத்தினால் இறந்து போகின்றனர். ஆனால் எந்த ஒரு பட்டாசு ஆலை முதலாளியும் விபத்துக்கு ஆளாவதில்லை. இது எப்படி என்ற கேள்வி நம்முன்னே எழுகிறது.
அதேபோல், விதிமுறைகளை மீறித்தான் ஆலைகள் இயங்குகின்றன. இதன் மூலமாகத்தான் முதலாளிகள் இலாபம் பார்க்கின்றனர் என்பதுதான் உண்மை. அரசு அதிகாரத்தில் உள்ளவர்கள் லஞ்சம் பெற்றுக் கொண்டு பட்டாசு ஆலை உரிமையாளர்கள் மீது காட்டும் அக்கறையைப் பட்டாசு ஆலைகளில் பணிபுரியும் தொழிலாளர்களைப் பாதுகாப்பதில் காட்டுவதில்லை. மேலும் முறையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படாத ஆலைகளுக்கு அரசு அனுமதி அளிக்கக்கூடாது.
விபத்துகள் ஏற்படாமலிருக்க சில விசயங்களைப் பின்பற்ற வேண்டும். பட்டாசு ஆலை நிறுவக்கூடிய பகுதி, குடியிருப்பு பகுதியிலிருந்து தள்ளியிருக்க வேண்டும்; நெருப்பு மேல் நோக்கிப் பரவாமல் இருக்க “தகடு” (Thin sheet) என்ற ஒன்றைப் பயன்படுத்த வேண்டும்; தீப்பிடித்தால் அணைப்பதற்காகத் தண்ணீர், மணல் ஆகியவற்றை ஒவ்வொரு அறைகளிலும் வைத்திருக்க வேண்டும்; ஒரு அறையில் 3 அல்லது 4 பேர் தான் இருக்க வேண்டும்; இந்த ஆலைகளில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு முறையான முகக்கவசம், கவச உடைகள் ஆகியவற்றைக் கொடுக்க வேண்டும்; சில வெடி மருந்துகளில் ஈரப்பதம் இருக்கும்; சிலவற்றில் ஈரப்பதம் இருக்காது. அதனை தனித்தனியாக முறையாகக் கையாள வேண்டும்.
படிக்க: தொடரும் பட்டாசு வெடி விபத்துகளும் உயிரிழப்புகளும்! அரசே முதன்மையான குற்றவாளி!
மேலும் ஆலையில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு முறையான பயிற்சி கொடுப்பதில்லை. இந்த ஆலைகளை மேற்பார்வையிட (Inspection) அதிகாரிகள் வரும்போது முன்னறிவிப்பின்றி தான் வர வேண்டும். ஆனால், அதிகாரத்தில் உள்ளவர்கள் இலஞ்சம் பெற்றுக் கொண்டு, மேற்பார்வையிட வருவதை முன்கூட்டியே தெரிவித்து விடுவதால், ஒவ்வொரு ஆலையும் எல்லாவற்றையும் அன்று மட்டும் முறைப்படுத்தி விடுகின்றன.
இந்தப் பிரச்சினையில் பட்டாசுகள் அவசியமா என்ற கேள்வியைப் பலரும் எழுப்புகின்றனர். நிச்சயம் பட்டாசுகள் அவசியமானவை அல்ல. ஆனால், நுகர்வுக் கலாச்சாரம் வளர்ந்தோங்கி வரும் இன்றைய காலத்தில், பட்டாசு விற்பனை என்பது மிகவும் லாபகரமான தொழிலாகும்.
நுகர்வுக்கலாச்சாரம், மதக் கலாச்சாரத்தின் அங்கமாகப் பட்டாசு வெடிக்கும் கலாச்சாரம் வளர்ந்துள்ளது. பட்டாசு உற்பத்தி, வானவேடிக்கை நிகழ்வுகள் சுற்றுச்சூழலுக்கும் பல்வேறு வகையில் எதிரானதாக அமைந்துள்ளது. சமூகத்தில் மக்களிடையே விழிப்புணர்வு மற்றும் சுற்றுச் சூழல் பாதுகாப்பு குறித்தான கண்ணோட்டத்தின் வளர்ச்சிக்கேற்ப, வானவேடிக்கைகள் நடத்துவதும், பட்டாசு வெடித்து மகிழ்வதும் குறையத் தொடங்கும். அதேவேளையில், சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் அதே அளவிற்கு அந்தத் தொழிலில் ஈடுபடுபவர்களுக்கு மறுவாழ்வு உத்தரவாதம் செய்யப்பட வேண்டும். அப்போது தான் தொடர் நிகழ்வாகி வரும் பட்டாசு ஆலை வெடி விபத்துகளைத் தடுக்கமுடியும்.
அகிலன்
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram