26.02.2025

தர்மபுரி: கம்பைநல்லூர் பட்டாசு ஆலை வெடி விபத்து!
மூன்று பெண்கள் உடல் சிதறி பலி!

அதிகார வர்க்கமே முதல் குற்றவாளி!

பத்திரிகை செய்தி

ருமபுரி மாவட்டம், அரூர் தாலுகா, கம்பைநல்லூர் அஞ்சல், சின்னமுருக்கம்பட்டி சாலையில் சின்னதுரை என்பவருக்கு இரண்டு பட்டாசு ஆலைகள் உள்ளன. 24/02/2025 அன்று பட்டாசு ஆலையில் உடன்பிறந்த சகோதரிகள் திருமலர் (36), திருமஞ்சு (35) மற்றும் செண்பகம் (35), காந்தி, ஆலை உரிமையாளர் சின்னதுரை அவரது மனைவி உட்பட 6 பேர் திருவிழாவில் வெடிக்கும் உருண்டை வெடி தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வந்துள்ளனர்.

மதியம் 2.00 மணியளவில் ஆலை உரிமையாளர் சின்னதுரை அவரது மனைவி மற்றும் காந்தி ஆகிய மூவரும் மதிய உணவு சாப்பிட அவர்களது வீட்டிற்குச் சென்றுவிட்டனர். திருமலர், திருமஞ்சு, செண்பகம் ஆகிய மூவர் மட்டும் வேலை செய்துள்ளனர். மதியம் சுமார் 2.15 மணியளவில் இவர்கள் வேலைசெய்த பட்டாசு ஆலையில் பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த வெடிவிபத்தில் ஆலையின் கட்டடம் தரைமட்டமாகி மேற்கூரை தூக்கி வீசப்பட்டுள்ளது.

திருமலர், திருமஞ்சு, செண்பகம் ஆகியோரின் கை, கால்கள், மூளை, இதயம், தலை என ஒவ்வொரு உடல் உறுப்புகளும் 800 மீட்டர் துரத்திற்கு வீட்டின் மொட்டை மாடியின் மீதும், வயல்களிலும் சிதறியடிக்கப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்த கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது. சம்பவம் நடைபெற்ற பகுதியில் அன்றைக்குப் பொதுமக்களின் நடமாட்டம் குறைவாக இருந்துள்ளது. இல்லையெனில், மிக அதிகமான உயிரிழப்புகள் ஏற்பட்டிருக்கும்.

தகவல் அறிந்து வந்த இறந்தவர்களின் உறவினர்கள் மற்றும் அவரது பிள்ளைகள் இறந்தவர்கள் யார் என்று அடையாளம் தெரியாமலும், சிதறிக் கிடக்கும் உடல் உறுப்புக்களைத் தேடும் காட்சியும் காண்போரின் இதயத்தை நொறுக்கியது. இறந்தவர்களின் உடல் உறுப்புக்களின் மீது ஒட்டியிருந்த துணியின் அடையாளத்தைப் பார்த்து இன்னார் என அடையாளம் கண்டுபிடித்தனர்.

இறந்தவர்களின் கிடைத்த உடல் உறுப்புக்களை ஒரு பாட்டிலில் அடைத்தும், எஞ்சியிருக்கும் உடல்களை மூட்டையாகக் கட்டியும் தருமபுரி அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரிக்குப் பிரேதப் பரிசோதனைக்குக் கொண்டு சென்றனர்.

தருமபுரி மாவட்ட ஆட்சியர் சதீஷ், போலீஸ் சூப்பிரண்டு மகேஷ்வரன், உதவி கலெக்டர் காயத்ரி, அரூர் துணை போலீஸ் சூப்பிரெண்ட் கரிகால் பாரிக்கர், தருமபுரி எம்.பி. ஆ.மணி ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்தனர். அங்கு செய்தியாளர்களைச் சந்தித்த மாவட்ட ஆட்சியர் சதீஷ், பட்டாசு ஆலை உரிமையாளர் சின்னதுரை முறையாக உரிமம் (Licence) பெற்று நடத்துவதாகவும், ஆலையில் வேலை செய்பவர்கள் நீண்டகாலமாக அனுபவம் பெற்றவர்கள் என்றும் திடீரென வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது என்றும் கூறியுள்ளார். தடயவியல் நிபுணர்கள் (forensic department) ஆய்வு செய்து அறிக்கை ஒப்படைத்த பிறகே இந்த வெடிவிபத்து எப்படி நடந்தது என்று தங்களால் உறுதியாகக் கூறமுடியும் என்று கூறியுள்ளார்.

மாவட்ட ஆட்சியர் சதீஷ் கூறியதும், வெடி விபத்து நடைபெற்ற இடத்தில் உள்ள பொதுமக்கள் எழுப்பும் கேள்வியும் நேரெதிராக உள்ளது.

திருமலர், திருமஞ்சு, செண்பகம், காந்தி ஆகிய நான்கு பேருமே கடந்த மூன்று மாதங்களாகத்தான் வேலைக்குச் செல்கின்றனர். ஆனால் ஆட்சியர் சதீஷ் இவர்கள் அனுபவமிக்க வேலையாட்கள் என்று குறிப்பிட்டுள்ளார். இந்த நான்கு பேரும் நீண்ட கால அனுபவம் பெற்ற வேலையாட்கள் என்று அரசு அதிகாரிகள் கொடுக்கவேண்டிய சான்றிதழை (Certificate) ஆலை உரிமையாளர் சின்னதுரையே அவரது சீல் வைத்து, கையொப்பம் இட்டு வழங்கியுள்ளார்.

பட்டாசு ஆலைக்குப் பத்து அடி தூரத்திலேயே சர்ச் மற்றும் வீடுகள் உள்ளன. ஆண்டுதோறும் பட்டாசு ஆலையைச் சுற்றிக் குடியிருப்புகள் அதிகரித்துக் கொண்டே வருகின்றன. இதனை முறையாகக் கண்காணித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து ஆலையின் உரிமையை ஏன் ரத்துசெய்யவில்லை?

பொதுமக்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதியில் 10 × 30 அடி அளவு கொண்ட குறுகிய அறையில், அரசு அங்கீகரித்த அளவை விட அளவுக்கு அதிகமாக வெடிமருந்து வைக்கப்பட்டுள்ளது. அரசு அதிகாரிகள் இதை ஆய்வு செய்யாதது ஏன் என்ற பாதிக்கப்பட்ட மக்களின் எந்த கேள்விக்கும் மாவட்ட ஆட்சியரோ, அதிகாரிகளோ, அரசியல்வாதிகளோ யாரும் நேர்மையாகப் பதிலளிக்கவில்லை.

அரசு அதிகாரிகள் சடங்குத்தனமாகப் பேசிவிட்டுச் சென்றுள்ளார் என்று கூறுகின்றனர் பாதிக்கப்பட்ட மக்கள்.

வெடி விபத்து ஏற்பட்ட ஆலையின் கண்காணிப்பு (CCTV) கேமராவின் பதிவு அனைத்தும் ஆலை உரிமையாளர் சின்னதுரை வீட்டில் பதிவாகியுள்ளது.

சிசிடிவி-யில் பதிவாகியுள்ள காட்சிகளை வெளியிட்டால் ஆலையில் எப்படி வெடிவிபத்து ஏற்பட்டது என்ற உண்மைத் தகவல் வெளிவந்துவிடும் என்பதற்காகவும், ஆலை உரிமையாளர் சின்னதுரை பட்டாசு ஆலைக்குச் சட்டவிரோதமாக அனுமதி கொடுத்து முறையாகக் கண்காணிக்காத அதிகாரிகள் என அனைவரின் குற்றச்செயல்களும் அம்பலமாகிவிடும் என்பதற்காகவும் இதனைப்பற்றி வெளியில் யாரிடமும் கூறாமல் மூடிமறைக்கின்றனர், அரசு அதிகாரிகள்.

விபத்தில் உயிரிழந்த திருமலருக்கு 4 மகள்களும், திருமஞ்சுக்கு ஒரு மகன் மற்றும் மகளும், செண்பகத்திற்கு ஒரு மகன் இரண்டு மகள்களும் உள்ளனர். இவர்கள் அன்றாடம் கூலி வேலைக்குச் செல்லும் எளிய குடும்பப் பின்னணியைச் சார்ந்தவர்கள்தான்.

“அரசாங்கம் கொடுத்த நான்கு இலட்சத்தை வைத்து எவ்வளவு நாள் வாழ்க்கையை ஓட்டமுடியும்? நான்கு இலட்சம் கொடுத்தால் எங்கள் அம்மாவின் அன்பு, பாசம், அரவணைப்பு கிடைத்து விடுமா? நாங்கள் எப்படி நிம்மதியாக வாழமுடியும்? எங்கள் குடும்பத்தை நாசம் செய்துவிட்டார்களே… எங்களுக்கு அம்மா வேண்டும்” என்ற பிள்ளைகளின் கதறல் இதயத்தை சுக்கு நூறாக்குகிறது.

ஆலை உரிமையாளர் சின்னதுரை, தருமபுரி போலீஸ் நிலையத்தில் சரணடைந்த நிலையில் சின்னதுரையின் வீட்டிற்கும் பட்டாசு ஆலைக்கும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

அரசு அதிகாரிகள் உண்மையிலேயே யாருக்காக வேலை செய்கிறார்கள்?

விபத்திற்குக் காரணமாக அமைவது அளவுக்கு அதிகமான வெடி மருந்துகளைப் பதுக்கி வைப்பது, குறிப்பாக ஃபேன்சிரக வெடிமருந்து கலவை.

கலவையைக் கலக்கும் போது பின்பற்ற வேண்டிய விதிகளைப் பக்கம் பக்கமாகக் கூறுகிறது வெடிபொருள் கட்டுப்பாட்டுத்துறை. வெடிமருந்து கலவையைக் கலந்தவுடன் குறிப்பிட்ட நேரத்தில் குப்பியில் அடைத்துவிட வேண்டும். நேரம் கடந்தால் வெடிமருந்து நீர்த்துப்போகத் தொடங்கும். அதன் பிறகு வெடிமருந்தைத் தொட்டாலே வெடித்துவிடும்.

அதேபோல வெடிமருந்தில் உள்ள வேதிப்பொருளான சல்பரின் (sulphur) அளவு சில மில்லிகிராம் கூடினாலே வெடி மருந்து கலக்கும் போதே வெடித்துவிடும் என்கிறார்கள், வெடிமருந்து கட்டுப்பாடு துறையினர்.

ஆண்டுதோறும் 100க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலை தொழிலாளர்கள் விபத்தால் உயிரிழக்கிறார்கள்.

உழைக்கும் மக்கள் தங்களின் வறுமையைச் சமாளிக்க தங்கள் உயிரைப் பணயம் வைத்து வேலை செய்கின்றனர்.

சின்னமுருக்கம்பட்டியில் மட்டுமல்ல தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு பட்டாசு ஆலை வெடிவிபத்திற்கு முக்கிய காரணம், ஆலை உரிமையாளர்களின் இலாப வெறியும், அரசு அதிகாரிகளின் இலஞ்ச வெறியும், அலட்சியமும் தான்.

விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு சில இலட்சங்களை மட்டும் கொடுத்துவிட்டு முடித்துக் கொள்கிறது, அரசு.

பட்டாசு ஆலையில் தொடர்ந்து நடைபெறும் விபத்துகளைத் தடுக்க எந்த ஒரு நடவடிக்கையும் எடுப்பதில்லை. உழைக்கும் மக்களாகிய நாம் அனைவரும் ஒன்றிணைந்து அதிகார வர்க்கத்தைக் கேள்விக்குள்ளாக்காமல், நமக்கு இழைக்கப்படும் அநீதிக்கெதிரான போராட்டங்களை நடத்தாமல் நமக்குத் தீர்வு கிடைக்காது.

எனவே, சின்னமுருக்கம்பட்டி பட்டாசு ஆலை விபத்தினை கொலை வழக்காகப் பதிவுசெய்து, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும்.

உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா 50 இலட்சம் நிவாரண நிதி வழங்க வேண்டும்.

உயிரிழந்தோரின் குடும்பங்களில் உள்ள பிள்ளைகளின் கல்விச் செலவு அனைத்தையும் அரசே ஏற்க வேண்டும்.


மக்கள் அதிகாரம்,
கிருஷ்ணகிரி.
8754674757

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க