தொடரும் பட்டாசு வெடி விபத்துகளும் உயிரிழப்புகளும்! அரசே முதன்மையான குற்றவாளி!

தொடர் பட்டாசு வெடி விபத்துகளையும் உயிரிழப்புகளையும் கண்டுகொள்ளாத தொழிலாளர் நலத்துறையும் மாவட்ட ஆட்சியரும், விபத்திற்கு தனிமனித தவறுதான் காரணம் என்று தொழிலாளர்கள் மீது பழியை சுமத்தி தங்களை நியாயப்படுத்திக் கொள்கின்றனர்.

விருதுநகர் மாவட்டம் வெம்பங்கோட்டை அருகே உள்ள முத்துச்சாமிபுரத்தில் விஜய் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை இயங்கி வருகிறது. கடந்த சனிக்கிழமை அன்று தொழிலாளர்கள் வழக்கம்போல் பட்டாசு தயாரிக்கும் வேலையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மதியம் 12:30 மணியளவில் திடீரென வெடி விபத்து ஏற்பட்டதில் 10 பேர் உயிரிழந்துள்ளனர் 3 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பட்டாசு ஆலை தொழிலாளி செல்வம் செய்தியாளர்களிடம் பேசுகையில், “மதிய உணவுக்கு அனைவரும் தயாரான போது திடீரென வெடி சத்தம் கேட்டது. ஓடிப்போய் பார்க்கும்போது அங்கு ஒரு அறை முழுவதுமாக சரிந்து அதில் வேலை பார்த்துக் கொண்டிருந்த தொழிலாளர்கள் நான்கு புறமும் சிதறி கிடந்தனர்” என்று வெடிவிபத்தில் தொழிலாளர்களுக்கு நேர்ந்த அவலத்தை விவரித்தார்.

மேலும், “நாங்கள் ஒவ்வொரு நாளும் உயிரை பணயம் வைத்து இந்த தொழிலை செய்து வருகிறோம். காலையில் எங்களுடன் வந்தவர்கள் மாலையில் இல்லை எனும் போது என்ன சொல்வது என்றே தெரியவில்லை” என்று தொழிலாளர்களின் அவல நிலைகளையும் துயரங்களையும் தெரிவித்தார்.

விபத்து நடந்த இடத்தை பார்வையிட வந்த விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் பத்திரிகையாளர்களிடம் பேசுகையில், “ஆலை முறையாக உரிமம் பெற்று இயங்குகிறது. ஆனால் விதியைமீறி ஒரு அறையில் எட்டு பேர் வேலை பார்த்ததுதான் விபத்திற்கு காரணம். முதற்கட்ட விசாரணையில் மனித தவறுதான் விபத்திற்கு காரணம் என்று தெரியவந்துள்ளது” என்றார்.


படிக்க: ஒசூர் அருகே அத்திப்பள்ளி மற்றும் அரியலூர் பட்டாசு கடை வெடிவிபத்தில் 24 இளம் தொழிலாளர்கள் பலி!


தொடர் பட்டாசு வெடி விபத்துகளையும் உயிரிழப்புகளையும் கண்டுகொள்ளாத தொழிலாளர் நலத்துறையும் மாவட்ட ஆட்சியரும், விபத்திற்கு தனிமனித தவறுதான் காரணம் என்று தொழிலாளர்கள் மீது பழியை சுமத்தி தங்களை நியாயப்படுத்திக் கொள்கின்றனர்.

தொடர்பு பட்டாசு ஆலை வெடி விபத்துகளுக்கு தொழிலாளர்களின் உழைப்பை சுரண்டி அதில் லாபம் சம்பாதிக்கும் முதலாளிகளின் லாப நோக்கமே காரணம் என்பதை மறைத்து தனிமனித தவறு தான் என்று கூறி முதலாளிகளின் விதி மீறல்களுக்கு துணைபோகும் மாவட்ட ஆட்சியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் இவ்விபத்தையொட்டி, பட்டாசு ஆலைகளில் வெடி விபத்து ஏற்படுவதை தடுப்பதற்கு தமிழ்நாடு அரசு சார்பில் காவல்துறை, தீயணைப்புதுறை, தொழிலாளர் நலத்துறை, வருவாய்த்துறை அதிகாரிகள் அடங்கிய குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தக் குழுக்களும் முதலாளிகளிடம் லஞ்சத்தை வாங்கிக் கொண்டு அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை, முறையான அறிக்கையையும் அரசிடம் ஒப்படைப்பதில்லை

இது போன்ற சம்பவங்களை தடுப்பதற்கு மாவட்ட நிர்வாகத்திடமும் அரசிடமும் கோரிக்கைகளை வைத்துக் கொண்டு இருப்பதால் எந்த பலனும் இல்லை. அனைத்து தொழிலாளர் வர்க்கங்களும் இணைந்து போராடுவதே ஒரே தீர்வு.


தினேஷ்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTubeவிவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க