ஒசூர் அருகே அத்திப்பள்ளி மற்றும் அரியலூர் பட்டாசு கடை வெடிவிபத்தில் 24 இளம் தொழிலாளர்கள் பலி!

முதலாளிகளின் இலாபவெறியும், அதிகாரிகள் இலஞ்சப் பேய்களாக இருப்பதும் மற்றும் அவர்களின் திமிர்த்தனமான அலட்சியமும் தொழிலாளர்களின் கொத்துக் கொத்தான மரணங்களுக்கு காரணமாக உள்ளன. இங்கே தொழிலாளர்களின் உயிருக்கு எந்த மதிப்பும் இல்லை.

ஒசூர் அருகே அத்திப்பள்ளியில் பட்டாசு கடை வெடிவிபத்து

ஒசூர் அருகே அத்திப்பள்ளி மற்றும் அரியலூர் பட்டாசு கடை வெடிவிபத்தில்
24 இளம் தொழிலாளர்கள் பலி!

சூர் அருகே கர்நாடக மாநில எல்லைக்குட்பட்ட அத்திப்பள்ளி பகுதியில் பட்டாசு கடையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 13 இளம் கூலித் தொழிலாளர்கள் தீயில் கருகி பலியாகினர். இன்னும் சிலர் கவலைக்கிடமான நிலையில் உள்ளனர்.

இந்த துயரம் நெஞ்சை அழுத்திக்கொண்டிருக்கும் சூழலில் அரியலூரில் நடந்த பட்டாசு ஆலையில் நடந்த விபத்தில் 10 பேர் இறந்துள்ளதாக தொலைகாட்சியில் செய்தி வந்துள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் சிப்காட் பகுதியில் இருந்து மாநில எல்லையான கர்நாடக மாநிலம் அத்திப்பள்ளி வரை நிரந்தர பட்டாசு கடைகள் மற்றும் தற்காலிக பட்டாசு கடைகள் இயங்கி வருகின்றன. இப்பகுதிகளில் 600 க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன.

அத்திப்பள்ளி டோல்கேட் அருகே நவீன் என்பவருக்கு சொந்தமான பட்டாசு கடையில்தான் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது என தெரிகிறது. சிவகாசியில் இருந்து 3 லாரிகளில் கொண்டு வரப்பட்ட பட்டாசுகளை இறக்கும்போது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. அங்கு நிறுத்தப்பட்டிருந்த நான்கு சக்கரவாகனங்களும், இரு சக்கர வாகனங்களும் தீக்கிரையாகிவிட்டன.

படிக்க : ஆருத்ரா மோடி அண்ணாமலைக்கு செக் ! | தோழர் மருது

விபத்தில் பலியானவர்களில் 8 பேர் தர்மபுரி மாவட்டம் அரூர் பகுதியில் உள்ள அம்மாபேட்டை என்ற கிராமத்தைச் சார்ந்தவர்கள். மற்றவர்கள் திருவண்ணாமாலை, கள்ளக்குறிச்சி பகுதியைச் சார்ந்தவர்கள். இறந்தவர்களில் பெரும்பாலானோர் கல்லூரி படித்துக் கொண்டிருக்கும் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள். இதில் 16 வயது சிறுவனும் அடக்கம். இன்னொருவர் திருமணமாகி 15 நாட்களே ஆன இளைஞர். மருத்துவமனையில் இந்த இளைஞரின் மனைவியின் கதறல் அங்கு கூடியிருந்த அனைவரையும் கலங்க வைத்தது.

ஒசூர் அருகே அத்திப்பள்ளியில் பட்டாசு கடை வெடிவிபத்து

விபத்து ஏற்பட்ட பட்டாசு கடையில் வெளியேறுவதற்கு முன்பக்க பாதை மட்டும்தான் இருந்துள்ளது. ஆபத்து சமயங்களில் வெளியேறுவதற்கான பாதை கிடையாது. இதுதான் உயிரிழப்பு ஏற்படுவதற்கு காரணமாக இருந்துள்ளது. பட்டாசு கடைகள் என்றாலே அதில் ஆபத்துக்கள் அதிகம்தான். அதற்கேற்ப கட்டமைப்பு வசதிகள் இருக்கின்றனவா என்பதை அதற்குரிய துறை அதிகாரிகள்தான் ஆய்வு செய்து முறைப்படுத்தியிருக்க வேண்டும்.

ஆனால் எங்கேயும் முறையாக விதிமுறைகள் கையாளப்படுவதில்லை. விபத்துகள் ஏற்படும் சமயங்களில் போக்குக்கு ஆய்வு செய்து விட்டு, பிறகு பட்டாசு ஆலை, கடை முதலாளிகளின் இலஞ்சத்திற்கு வேலை செய்வது என்பதுதான் அதிகாரிகளின் வழக்கமாக உள்ளது. கர்நாடக செய்தி ஊடகங்களில் அதிகாரிகளின் அலட்சியம் குறித்து பேசுபொருளாகியுள்ளது. உண்மையில் அதிகாரிகள்தான் இத்தகைய விபத்துக்களில் முதன்மைக் குற்றவாளிகள். யார் இவர்களை தண்டிப்பது?

அரியலூர் பட்டாசு ஆலை வெடிவிபத்து

இதனால்தான் பட்டாசு விபத்துக்கள் தொடர்ச்சியாக நடப்பதும், தொழிலாளர்கள் கொத்துக் கொத்தாக மரணமடைவதும் தொடர்ந்து நடக்கிறது. கடந்த 2 மாதங்களில் மட்டும் கிருஷ்ணகிரி, நாமக்கல், புதுக்கோட்டை, அரியலூர் |அத்திப்பள்ளி என பட்டாசு கடை விபத்துகளில் பல தொழிலாளர்கள் மரணமடைந்துள்ளனர். அரசாங்கமும் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்வதைத் தாண்டி விபத்துக்களை நிரந்தரமாக தடுத்து நிறுத்த முயற்சி எடுப்பதில்லை.

குறிப்பாக, கார்ப்பரேட் முதலாளிகளின் தீவிர சுரண்டலுக்கான தனியார்மயக் கொள்கைகள் அமல்படுத்தப்பட்ட பிறகு, உழைக்கும் மக்களின் அன்றாட வாழ்க்கைத் தேவைக்கான செலவீனங்கள் பன்மடங்கு  உயர்ந்துவிட்டன. அதே சமயம் ஏழ்மை நிலை மேலும் மேலும் அதிகரித்து வருகிறது. குறிப்பாக கிராமப்புறங்களில் கூலித் தொழிலாளர் குடும்பங்களின் வறுமை நிலையும் அதிகரிக்கிறது. இதனால் கல்லூரி படிக்கும்பொழுதே வேலைக்கு செல்வது என்பதும் அதிகரித்து வருகிறது.

வேலை செய்யும் இடங்களிலும் பணிப்பாதுகாப்பு, தொழிலாளர் உரிமைகள் என்பதெல்லாம் இன்று கனவாகி விட்டது. அப்படியெல்லாம் கேட்டால் வேலை பறிபோய்விடும் என்ற நிலைமைதான் உள்ளது. கிடைத்த வேலையை செய்வது அதாவது ஆபத்தான வேலைகளையும் வேறு வழியின்றி செய்வது என்ற நிர்ப்பந்தத்தை நோக்கி இந்த வறுமைச்சூழல் நெட்டித் தள்ளுகிறது. முதலாளிகளின் வரைமுறையற்ற சுரண்டலுக்கு இளம் தொழிலாளிகள் இரையாக்கப்படுகின்றனர். இப்படிப்பட்ட சூழ்நிலையில்தான் இத்தகைய படுகொலைகள் தொடர்கின்றன என்பதை புரிந்து கொள்ள வேண்டியுள்ளது.

படிக்க : சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் மீதான சோதனைகளைக் கண்டிப்போம்! – CDRO அறிக்கை

உண்மையில் உரிமைகளைப் பறிக்கும் தனியார்மயக் கொள்கைகள்தான் சமூகரீதியாக இப்பிரச்சினைக்கு ஊற்றுக்கண்ணாக உள்ளது. இந்த தனியார்மயக் கொள்கைகளை தீவிரமாக அமல்படுத்துவது, அதற்கேற்ப சட்ட திட்டங்களை மாற்றுவது என்பதைத்தான் ஒன்றிய, மாநில அரசுகள் தீவிரமாகவும், கவனமாகவும் செய்து வருகின்றன.

இன்னொரு பக்கம் முதலாளிகளின் இலாபவெறியும், அதிகாரிகள் இலஞ்சப் பேய்களாக இருப்பதும் மற்றும் அவர்களின் திமிர்த்தனமான அலட்சியமும் தொழிலாளர்களின் கொத்துக் கொத்தான மரணங்களுக்கு காரணமாக உள்ளன. இங்கே தொழிலாளர்களின் உயிருக்கு எந்த மதிப்பும் இல்லை.

மனு கொடுத்து இப்பிரச்சினைகளை தீர்க்க முடியாது. உழைக்கும் மக்களுக்கு எதிரான இந்த அரசுக்கட்டமைப்பிற்கு வெளியேதான் உண்மையான தீர்வு உள்ளது. அதற்கான விழிப்புணர்வும், போராட்டமும் தேவையாக உள்ளது.


சு.பரசுராமன்,
பொதுச்செயலாளர்,
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, 24/KRI
கிருஷ்ணகிரி – தர்மபுரி – சேலம் மாவட்டங்கள்.
9788011784

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க