பு.ஜ. உடன் ஓர் உரையாடல்

டந்த பிப்ரவரி மாதத்தில் பொதுவெளியில் விவாதிக்கப்பட்ட, பேசுபொருளாக இருந்த நிகழ்வுகள் குறித்தும் அரசியல் பிரச்சினைகள் குறித்தும் வாசகர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு புதிய ஜனநாயகம் ஆசிரியர் குழு சார்பாக அளிக்கப்பட்ட பதில்கள்.

கேள்வி: பட்டாசு ஆலைகளில் வெடி விபத்துகள் ஏற்பட்டு தொழிலாளர்கள் பலியாவது தொடர்கதையாகி வருகிறது. பிப்ரவரி மாதத்தில் சிவகாசியில் ஏற்பட்ட வெடி விபத்தில் 14 தொழிலாளர்களும் சாத்தூரில் ஏற்பட்ட வெடி விபத்தில் ஒரு தொழிலாளியும் உயிரிழந்துள்ளனர். இவ்வாறு மாதந்தோறும் பட்டாசு ஆலை வெடி விபத்துகள் நடந்து பல தொழிலாளர்கள் உயிரிழந்தாலும் அரசினால் ஏன் இதனை தடுக்க இயலவில்லை?

ட்டாசு ஆலை வெடி விபத்துகளுக்கு முக்கியமான காரணம், அரசு வகுத்துள்ள விதிமுறைகள் எவையும் பின்பற்றப்படுவதில்லை என்பதுதான். இந்த விதிமீறல்களை அதிகார வர்க்கமும் பட்டாசு ஆலை முதலாளிகளும் திட்டமிட்டு மேற்கொள்கின்றனர். அரசு வகுத்துள்ள விதிகளுக்கு மாறாக பட்டாசு ஆலைகள் அமைக்கப்பட்டிருப்பதால், விபத்துகள் நடப்பது என்பது அதன் இயல்பான அம்சமாக அமைந்துள்ளது.

ஒன்றிரண்டு விபத்துகள் நடந்தாலே, அந்தத் தொழிலில் இருக்கும் மற்ற முதலாளிகளுக்கு தங்களது ஆலையில் விபத்து நடந்துவிடுமே என்ற அச்சம் வந்திருக்க வேண்டும். ஆனால், வெடிவிபத்து நடக்காத பகுதியோ ஆலையோ இல்லை என்று சொல்லும் அளவிற்கு நிலைமை இருக்கும்போது, பட்டாசு ஆலை முதலாளிகளால் விதிமுறைகளை மீறி எப்படி ஆலையை நடத்த முடிகிறது? எந்த பட்டாசு ஆலை முதலாளியும் இதுவரை விபத்துக்குள்ளாகாமல் இருப்பது எப்படி?

இந்தத் தொழிலில் கிடைக்கும் இலாப விகிதமும், அதற்கு உறுதுணையாக இருக்கும் அரசும் அதிகாரவர்க்கமும்தான் இதற்கான முதன்மையான காரணங்களாகும். மற்றப்படி பட்டாசு ஆலை முதலாளிகள் மட்டும் வெடிவிபத்துகளில் சிக்காமல் தப்பித்துக் கொள்வதற்கேற்ப ஆலையில் தங்களது செயல்பாடுகளை அமைத்துக் கொள்கின்றனர் என்றுதான் பார்க்க வேண்டியுள்ளது.

மேலும், பட்டாசு ஆலை வேலைக்குச் செல்பவர்கள் எல்லாரும், பொருளாதார வளர்ச்சியில் மிகவும் பின்தங்கிய, மாற்று தொழில்களுக்கு செல்ல வாய்ப்பில்லாத, பின்தங்கிய பகுதிகளில் வாழும் ஏழை உழைக்கும் மக்கள்தான். சொந்த சாதிக்காரர்களிடம் வேலைக்குச் செல்வது, ஊரில் கட்டுப்பாடு வைத்திருப்பது, முதலாளிகள்-உள்ளூர் ஆதிக்கச் சக்திகள்-அதிகார வர்க்கம்-போலீசு கூட்டை பலமாகக் கட்டியமைத்திருப்பது போன்றவைதான், இம்மக்கள் வேறுவழியின்றி இந்த வேலைக்குத் தொடர்ந்து செல்வதற்கு காரணமாக உள்ளது. உள்ளூர் கட்டப்பஞ்சாயத்துகள் மூலமாகத்தான், வெடிவிபத்துகளில் உயிரிழந்த, படுகாயமுற்றவர்களின் குடும்பங்களுக்கான நட்ட ஈடுகள், அதிலும் மிக சொற்ப அளவாக வழங்கப்படுகின்றன.


படிக்க: ராமர் கோவில், பக்தியா? கலெக்ஷன் கட்டும் உத்தியா?


சிவகாசியில் நடந்த பட்டாசு ஆலை விபத்தின்போது, விபத்து குறித்து விசாரித்த மாவட்ட ஆட்சியர், இவ்வாறு அடிக்கடி வெடி விபத்துகள் நடப்பதைத் தடுப்பதற்கு, ஃபோர்மென், சூப்பர்வைசர் ஆகியோருக்கு வெடிமருந்துகளைக் கலப்பதற்கு பயிற்சி அளிக்கப் போவதாக அறிவித்துள்ளார். ஒவ்வொருமுறை விபத்து நேரும்போதும் வெடிமருந்து கலப்பவர்களின் தவறுதான் விபத்துகளுக்குக் காரணம் என்று அதிகார வர்க்கம் தொடர்ந்து சொல்லி வருகிறது.

இது உண்மையல்ல, பல ஆண்டுகளாகவே இந்த பொய்யான காரணங்களைக் கூறி தொழிலாளர்களுக்கு இழைக்கப்படும் அநீதி திட்டமிட்டு மறைக்கப்படுகிறது. அனுபவமில்லாதவர்கள், தவறுகளைச் செய்பவர்கள்தான் வெடிமருந்து கலக்கிறார்கள் என்றால் ஏன் அரசு இந்த வெடி ஆலைகளை நடத்துவதற்கு அனுமதிக்கிறது? ஆலைகள் சட்டபூர்வமாக நடக்கின்றனவா என்று கண்காணிப்பதற்காக நியமிக்கப்பட்டுள்ள, தொழிற்சாலை ஆய்வாளர்கள் என்ன செய்கிறார்கள்? இந்தக் கேள்விகளுக்கெல்லாம் அதிகார வர்க்கம் பதிலளிக்காது.

ஆகையால், விதிமுறைகள் மீறித்தான் ஆலைகள் நடக்கின்றன, இதன் மூலமாகத்தான் கோடிக்கோடியாக சம்பாதிக்கப்படுகிறது என்பதுதான் உண்மை.

இந்தப் பிரச்சினையில் பட்டாசுகள் அவசியமா என்ற கேள்வியை பலரும் எழுப்புகின்றனர். நிச்சயம் பட்டாசுகள் அவசியமானவை அல்ல. ஆனால், நுகர்வுக் கலாச்சாரம் வளர்ந்தோங்கி வரும் இன்றைய காலத்தில், பட்டாசு விற்பனை என்பது மிகவும் இலாபகரமான தொழிலாகும்.

நுகர்வுக்கலாச்சாரம், மதக் கலாச்சாரத்தின் அங்கமாக பட்டாசு வெடிக்கும் கலாச்சாரம் வளர்ந்துள்ளது. பட்டாசு உற்பத்தி, வானவேடிக்கை நிகழ்வுகள் சுற்றுச்சூழலுக்கும் பல்வேறு வகையில் எதிரானதாக அமைந்துள்ளது. சமூகத்தில் மக்களிடையே ஜனநாயக உணர்வுகள் மற்றும் சுற்றுச் சூழல் பாதுகாப்பு குறித்தான கண்ணோட்டத்தின் வளர்ச்சிக்கேற்ப, வாணவேடிக்கைகள் நடத்துவதும், பட்டாசு வெடித்து மகிழ்வதும் குறையத் தொடங்கும். அதேவேளையில், சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் அதே அளவிற்கு அந்தத் தொழிலில் ஈடுபடுபவர்களுக்கு மறுவாழ்வு உத்தரவாதம் செய்யப்பட வேண்டும்.


பு.ஜ. உடன் ஓர் உரையாடல்

(புதிய ஜனநாயகம் – மார்ச் 2024 இதழ்)

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க