“சித்திரை திருவிழாவில் சந்தேகத்தின் அடிப்படையில் சுற்றித் திரிந்த 82 பேர் குற்றத் தடுப்பு குழுவால் பிடிக்கப்பட்டு அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. அதில் 69 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்களிடமிருந்து 26 பட்டாக்கத்தி உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, திருவிழாவில் குற்றச் சம்பவங்கள் நிகழாமல் தடுக்கப்பட்டன” இது இந்த ஆண்டு நடைபெற்ற சித்திரைத் திருவிழா முடிந்த பிறகு, மதுரையின் போலீஸ் ஆணையர் லோகநாதன் பத்திரிக்கையாளர்களுக்கு கொடுத்த பேட்டி. 26 பட்டாக்கத்திகள் பறிமுதல் செய்யப்பட்டது என போலீஸ் ஆணையர் கொடுக்கும் தகவல் எல்லாம் மிகவும் சொற்பமே.
இந்த சித்திரைத் திருவிழாவில், மாணவர்கள் மத்தியில் ஏற்பட்டிருக்கும் கஞ்சா போதை பழக்கங்களின் தீவிரத்தையும் அதனால் ஏற்படும் விளைவுகளையும் நம் கண்முன்னால் காட்டக்கூடிய நிகழ்வுகள் நடந்துள்ளன.
மதுரை ஒத்தக்கடை பகுதியில் நடந்த சம்பவம் அதற்கு ஒரு மிகத் துலக்கமான எடுத்துக்காட்டு.
முழுவதும் போதையில் இருந்த 16 முதல் 20 வரை உள்ள 6 இளைஞர்கள் மாலை 6 மணியிலிருந்து ஒத்தக்கடையைச் சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் இருந்த பொருட்களை அடித்து நொறுக்குவது; வீட்டிற்கு வெளியே உள்ள இருசக்கர வாகனங்களை தள்ளிவிட்டு உடைப்பது; கடைகளை சேதப்படுத்துவது எனத் தொடர்ந்து அராஜகங்களில் ஈடுபட்டுள்ளனர். இதைப் பார்த்த சிலர் போலீசில் புகாரும் கொடுத்துள்ளனர். ஆனால் போலீஸ் அங்கு வரவே இல்லை. இதன் பிறகு அந்த இளைஞர்கள் இரவு 9 மணி அளவில் பைக்கில் தனியாக வந்த முகமது கான் என்பவரிடம் தகராறு செய்துள்ளனர். அவர் எதிர்த்து கேள்வி கேட்டவுடன், இந்த ஆறு பேரும் சேர்ந்து கொண்டு அவரை கொடூரமாக தாக்கியுள்ளனர். பிறகு அருகில் இருந்த மக்கள் குரல் கொடுத்ததும் தப்பி ஓடியுள்ளனர். அங்கிருந்து தப்பி ஓடியவர்கள், மதுரை புதூர் பகுதியில் வழிப்பறி செய்து போலீசில் மாட்டிக் கொண்டனர். இளைஞர்கள் போதை பழக்கத்தால் இப்படி தொடர் குற்றக் கும்பலாக மாறி சீரழிந்துள்ளனர்.
இதில் ஒரு சிலர் மீது பத்து வழக்குகள் வரை உள்ளதாக பாதிக்கப்பட்ட முகமது கான் தெரிவித்தார். மேலும் முகமது கான் அவர்கள் பேசும்போது “பாதிக்கப்பட்டு நான் மருத்துவமனை சென்றபோது இதுபோல பலரும் பாதிக்கப்பட்டு வந்ததார்கள். மருத்துவமனையில் மூணு மணி நேரம் கழித்து தான் எனக்கு படுக்கை வசதி கிடைத்தது. அந்த அளவுக்கு இது போன்ற அடிதடி மோதல் பிரச்சினைகளால் தொடர்ந்து ஆட்கள் வந்து கொண்டே இருந்தார்கள்” என்பதை பதிவு செய்தார்.
மதுரை: சித்திரை திருவிழாவுக்கு கஞ்சா போதையில் வந்த இளைஞர்கள், சாலையில் சென்று கொண்டிருந்தவர் மீது சரமாரி தாக்குதல்!#Madurai | #Ganja pic.twitter.com/AFPlSjjGtE
— PuthiyathalaimuraiTV (@PTTVOnlineNews) April 23, 2024
இதே திருவிழாவை வைத்து கஞ்சா போதை வியாபாரம் எந்த அளவிற்கு நடந்திருக்கும் அதன் மூலம் போலீசுக்கு எந்த அளவுக்கு கமிஷன் கிடைத்திருக்கும் என்பதெல்லாம் பெரிய விசாரனை கமிஷன் போட்டு ஆய்வு செய்ய வேண்டிய விஷயம் எல்லாம் இல்லை.
இது போன்ற நிகழ்வுகளை கண்டித்து பல்வேறு இயக்கங்களும் ஜனநாயக சக்திகளும் தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றனர். போதையும் சீரழிவும் ஒழிக்கப்பட வேண்டும் என கோருகிறார்கள். இது மக்களின் கோரிக்கையாகவும் உள்ளது.
படிக்க: பள்ளி மாணவர்களிடம் அதிகரிக்கும் போதைப்பொருள் கலாச்சாரம்! | ஆசிரியர் உமா மகேஸ்வரி
ஆனால் பாஜகவின் அண்ணாமலை இது போன்ற சம்பவங்களை வைத்து தமிழ்நாட்டில் கஞ்சா போதை சீரழிவு அதிகரித்து விட்டது. அதற்கு ‘திராவிட மாடல்’ அரசு தான் காரணம் என பேசி ஆதாயம் அடைய நினைக்கிறார். ஆனால் அண்ணாமலையின் பின்னே பல கிரிமினல்களும் கஞ்சா வியாபாரிகளும் அணிவகுத்து நின்றுகொண்டுள்ளனர். அந்த அயோக்கிய கும்பலின் தலைவனாக நின்று கொண்டு, அண்ணாமலை பேசுவது என்பது ஆக கேடுகெட்ட ஆதாயம் தேடும் நிகழ்வு என்பது துலக்கமாகத் தெரிகிறது.
கஞ்சா போதை பொருட்கள் அனைத்தையும் தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை, புதுச்சேரி சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட சமயத்தில் வீரியமாக எழுந்தது. மீண்டும் மீண்டும் இந்த கோரிக்கையை நாம் வீரியமாக தொடர்ந்து எழுப்ப வேண்டும்.
சீரழியும் மாணவர்களை கண்டு கோபப்படும் இந்த சமூகம், சீரழிக்கும் போதைப்பொருள் கும்பல்களுக்கு எதிராகவும் அதனுடன் இணைந்து செயல்படும் அரசு அதிகார கட்டமைப்புக்கு எதிராகவும் களம் இறங்க வேண்டும்.
ரவி
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube