Wednesday, October 16, 2024
முகப்புஇதரபுகைப்படக் கட்டுரைஅர்ஜெண்டினா: கல்வி உரிமையை பாதுகாப்பதற்காக திரண்ட மக்கள்

அர்ஜெண்டினா: கல்வி உரிமையை பாதுகாப்பதற்காக திரண்ட மக்கள்

”பணம் இல்லை என்ற பொய்யான கதையை சொல்லி அதன் மூலம் இலவச கல்வியை தடுக்கப்பார்க்கிறார்கள். அரசிடம் பணம் இருக்கிறது அதை பொதுக் கல்விக்காக செலவிட வேண்டாம் என்று நினைக்கிறது”

-

பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் தென் அமெரிக்க நாடான அர்ஜெண்டினாவில் உள்ள 57 அரசு பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த மாணவர்கள், பேராசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் முன்னாள் மாணவர்கள் இணைந்து, “இலவசமாக வழங்கப்பட்டு வரும் பல்கலைக்கழகக் கல்வியைப் பாதுகாப்பதற்காக” நேற்று (23-04-2024) போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தொழிலாளர் சங்கங்கள், எதிர்க்கட்சிகள், தனியார் பல்கலைக்கழகங்கள் ஆகியவை இணைந்து ப்யூனஸ் அயர்ஸ் (Buenos Aires) மற்றும் பிற முக்கிய நகரங்களான கோர்டோபா (Cordoba) போன்றவற்றில் நடந்த போராட்டங்களுக்கு தங்களுடைய ஆதரவை ஆதரவளித்துள்ளன. இது டிசம்பரில் பதவியேற்ற அர்ஜெண்டினாவின் ஜனாதிபதி ஜேவியர் மிலேக்கு எதிரான மிகப்பெரிய ஆர்ப்பாட்டங்களில் ஒன்றாகும்.

அர்ஜெண்டினாவின் தலைநகரில் மட்டும் சுமார் 1,00,000 பேர் வந்ததாக போலீசு தெரிவித்தது, ஆனால் போராட்டத்தின் ஒருங்கிணைப்பாளர்கள் 5,00,000 மக்கள் பங்குபெற்றதாக தெரிவித்தனர். ஆசிரியர் சங்கம் ஒன்று நாடு முழுவதும் பத்து இலட்சம் போராட்டக்கார்ர்கள் போரட்டத்தில் கலந்து கொண்டனர் என்று தெரிவித்துள்ளது. தலைநகரையே இந்த போராட்டம் முடக்கியது. பல நகரங்கள் மக்கள் போராட்டத்தால் ஸ்தம்பித்தன.

போராட்டத்தில் கலந்து கொண்ட மூன்றாம் ஆண்டு மருத்துவ மாணவர் பாப்லோ விசென்டி (22) புவெனஸ் அயர்ஸில் உள்ள ஏஜென்ஸ் பிரெஞ்சு-பிரஸ் செய்தி நிறுவனத்திடம், ”பல்கலைக்கழக அமைப்பின் மீது இந்த அரசு மிருகத்தனமான தாக்குதலை நடத்தியுள்ளது தான் எங்களது இந்த போராட்டத்திற்கு காரணம்” என்று கூறினார்.

மேலும் ”பணம் இல்லை என்ற பொய்யான கதையை சொல்லி அதன் மூலம் இலவச கல்வியை தடுக்கப்பார்க்கிறார்கள். அரசிடம் பணம் இருக்கிறது அதை பொதுக் கல்விக்காக செலவிட வேண்டாம் என்று நினைக்கிறது” என்றார்.

கடந்த ஆண்டு நவம்பரில் நடந்த தேர்தலில் ஜேவியர் மிலே வெற்றி பெற்றார். பட்ஜெட் பற்றாக்குறையை பூஜ்ஜியமாகக் குறைப்பதாக உறுதியளித்தார்.

ஆனால் ஜேவியர் மிலே மக்களின் அடி மடியில் கைவைத்துள்ளார். போக்குவரத்து, எரிபொருள் மற்றும் எரிசக்திக்கான மானியங்களை அவரது அரசாங்கம் குறைத்து மக்களை நெருக்கடிக்கு தள்ளியுள்ளது.

ஏப்ரல் 23, 2024 அன்று, லட்சக்கணக்கான அர்ஜெண்டினா மக்கள் தங்கள் பாடப்புத்தகங்களை கையிலேந்தி தேசிய கீதத்தைப் பாடினார்கள்.
மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் அர்ஜெண்டினாவின் சக்திவாய்ந்த தொழிற்சங்கங்கள் மற்றும் இடதுசாரி அரசியல் கட்சிகளுடன் ஒருங்கிணைந்து போராடினார்கள்.
டிசம்பரில் ஜேவியர் மிலே ஆட்சிக்கு வந்ததில் இருந்து தலைநகரை உலுக்கிய மற்ற போராட்டங்களை விட, பியூனஸ் அயர்ஸ் நகரத்தில் நடந்த இந்த போராட்டம் மிகப்பெரியது.
பட்ஜெட் நெருக்கடியை காரணம் காட்டி பல்கலைக்கழகங்களுக்கு வழங்கப்படும் நிதியை நிறுத்தியதை கண்டித்து பதாகைகளை ஏந்தி நிற்கும் மக்கள்.
“நீங்கள் ஏன் பொதுக் கல்விக்கு மிகவும் பயப்படுகிறீர்கள்?” “பல்கலைக்கழகம் தன்னை தற்காத்துக் கொள்ளும்!” என்று மாணவர்கள் முழங்கினார்கள்.
ஒரு மாணவர் அணிவகுப்பின் போது, “அறிவியல் இல்லாமல் எதிர்காலம் இல்லை” என்று எழுதப்பட்ட பலகையை வைத்திருந்தார்.
ஜேவியர் மிலே தனது ஜனாதிபதி மாளிகையில் இருந்து பல்கலைகழகங்களுக்கான பட்ஜெட் குறைப்பை அறிவித்த சில மணி நேரங்களுக்குப் பிறகு, மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் தொழிலாளர்கள் புவெனஸ் அயர்ஸின் தெருக்களில் திரண்டனர்.
தலைநகரில் மட்டும் 5 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் போராட்டத்தில் கலந்து கொண்டதாக பியூனஸ் அயர்ஸ் பல்கலைக்கழகம் கூறுகிறது.
சுமார் 22 இலட்சம் மக்கள் அர்ஜெண்டினாவின் பல்கலைக்கழக அமைப்பில் படிக்கின்றனர்.


ஆதன்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube,



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க