பு.ஜ. உடன் ஓர் உரையாடல்

டந்த பிப்ரவரி மாதத்தில் பொதுவெளியில் விவாதிக்கப்பட்ட, பேசுபொருளாக இருந்த நிகழ்வுகள் குறித்தும் அரசியல் பிரச்சினைகள் குறித்தும் வாசகர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு புதிய ஜனநாயகம் ஆசிரியர் குழு சார்பாக அளிக்கப்பட்ட பதில்கள்.

கேள்வி: பக்தியின் அடிப்படையில் ராமர் கோவில் கட்டப்படவில்லை என்று பலரும் சொல்கின்றனர். அவ்வாறு சொல்வது சரியா?

மோடி தனது தேர்தல் பிரச்சாரத்திற்காகத்தான் ராமர் கோவில் திறப்பு விழாவை நடத்துகிறார்; இந்த விழாவிற்கு குடியரசுத் தலைவரை அழைக்காமல் தனது சாதிய, ஆணாதிக்கக் கண்ணோட்டத்தை வெளிப்படுத்துகிறார் என்பதையெல்லாம் எதிர்க்கட்சிகளே அம்பலப்படுத்தியுள்ளன.

வாஜ்பாய் – அத்வானி கும்பல், அயோத்தியில் ராமர் கோவில் இருந்ததாக சொல்லி, இஸ்லாமியர்களை எதிரிகளாகக்காட்டி, பொய்யான காரணங்களைக் கூறி, மதக்கலவரங்களையும் படுகொலைகளையும் அரங்கேற்றியது; இந்து மதவெறியைப் பரப்பியது; இதனைப் பயன்படுத்தி, ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க. சங்கப்பரிவார அமைப்புகளை விரிவுப்படுத்திக் கொண்டது; பாபர் மசூதியையும் இடித்தது.

அன்று, “ராமராஜ்ஜியம் மேன்மையானது, அங்கு இந்துக்கள் உயர்ந்த அந்தஸ்த்தில் இருந்தனர்” என்று பிரச்சாரம் செய்தது. இந்துராஷ்டிரத்தைப் படைப்போம் என்றது. அப்போது மதவெறிக்கு பலியான பலரும் ராமர் கோவிலை பழைய பக்தியின் அடிப்படையில் நியாயப்படுத்திக் கொண்டனர். ஆர்.எஸ்.எஸ்-இன் மதவெறியில் தங்களது பக்தி உணர்வை இணைத்துப் பார்த்தனர்.

இன்று, நிலைமையே வேறு. 10 ஆண்டுகளாக நாட்டை சூறையாடிக் கொண்டிருக்கும் மோடி-அமித்ஷா கும்பல் அம்பானி, அதானி, வேதாந்தா போன்ற வடநாட்டு கார்ப்பரேட் கும்பலுக்கு நாட்டை தாரைவார்த்துக் கொண்டிருக்கிறது. இந்த வடநாட்டுக் கார்ப்பரேட் கும்பலையே இராம – லெட்சுமனர்களாகக் கருதுகிறது. இந்துராஷ்டிரம் என்பது இந்த கார்ப்பரேட் கும்பலின் கொள்ளைக்கேற்ற வகையில் நாட்டில் இருக்கும் பன்முகத்தன்மையை அழித்து ஒரே நாடு, ஒரே வரி, ஒரே சட்டம், ஒரே மதம், ஒரே மொழி, ஒரே உணவு என்ற  பாசிசக் கொள்கைகளை நடைமுறைப்படுத்துவதுதான்.


படிக்க: மோடி அரசின் வெள்ளை அறிக்கையையும், ஜி.எஸ்.டி கொள்ளையையும் எப்படி புரிந்துகொள்வது?


ஆகையால், அம்பானி-அதானி வகையறா கார்ப்பரேட் கும்பலின் கொள்ளைக்காகவும் அவர்களது கொள்ளையை மறைப்பதற்காகவுமே ராமர் கோவில் கட்டப்பட்டுள்ளது என்பதுதான் உண்மை. இதற்கும் பக்திக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று பலரும் உணர்கின்றனர்.

இராமர் கோவிலை மையமாக வைத்து, அயோத்தியை சுற்றுலா மையமாக்கி, கார்ப்பரேட் கொள்ளை நடந்தேறிக் கொண்டிருப்பதை ஆங்கில வணிக இதழ்களில் வெளிவரும் செய்திகளே நமக்கு எடுத்துக்காட்டுகின்றன. ராமர் கோவிலை பழனி முருகன் கோவிலைப் போலவோ திருப்பதி ஏழுமலையான் கோவிலைப் போலவோ கருதிவிட முடியாது. திருப்பதியில், பெரும்பாலான அனைத்து இடங்களும் அரசின் கட்டுப்பாட்டில், திருப்பதி தேவஸ்தான கட்டுப்பாட்டில் உள்ளது. ஆனால், அயோத்தியிலோ நிலைமையே வேறு.

குறிப்பாக, “உத்தரப்பிரதேசத்தில் பொருளாதார மறுமலர்ச்சியை ஏற்படுத்தியவர்” என்று உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தை ஆங்கில இதழ்கள் புகழ்கின்றன. மதச்சுற்றுலா மூலம் பொருளாதார முன்னேற்றத்தை அடைவதற்கான யோகியின் உழைப்பை ராமர் கோவில் திறப்பில் பார்க்க முடிந்தது என்று அப்பத்திரிகைகள் கூறுகின்றன.

உலகத்தின் முக்கியமான புனிதத்தலமாக அயோத்தியை மாற்றுவதற்கான முயற்சியின் விளைவாக, அயோத்திக்கு சுற்றுலா செல்லும் பயணிகளின் எண்ணிக்கையானது 2021-ஆம் ஆண்டில் 3.25 லட்சம் பேராக இருந்தது. இது, 2022-ஆம் ஆண்டில் 2.39 கோடி பேராகவும் 2023-ஆம் ஆண்டில் 3.15 கோடி பேராகவும் உயர்ந்துள்ளது. ராமர் கோவில் திறப்பை ஒட்டிய  ஒரு வாரத்தில் மட்டும் 21 லட்சம் பேர் வந்து சென்றுள்ளதாகவும், தற்போது நாளொன்றுக்கு 2 இலட்சம் பேர் வருகைப் புரிவதாகவும் ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ஏப்ரல் முதலாக நாளொன்றுக்கு ஒரு லட்சம் சுற்றுலா பயணிகள் வருவார்கள் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இவ்வளவு மக்கள் வந்துசெல்வதற்கேற்ப, சர்வதேச விமான நிலையம் புதிதாக அமைக்கப்பட்டுள்ளது. அங்கிருக்கும் இரயில்நிலையம் மிக பிரம்மாண்டமாக விரிவாக்கப்பட்டுள்ளது. மேலும், சுற்றுலா பயணிகள் தங்குவதற்கான உல்லாச விடுதிகள், ஹோட்டல்கள், தங்குமிடங்கள் கட்டப்பட்டு வருகின்றன. நகரத்தின் விரிவாக்கத்தைத் திட்டமிட்டு மேற்கொள்ளும் வகையில், நான்குவழி, ஆறுவழி, எட்டுவழிச் சாலைகள் அமைக்கப்படுகின்றன.


படிக்க: பேராசிரியர் சாய்பாபா விடுதலை – களப்போராட்டம் அவசியம்


இந்தியாவின் முன்னணியான பிரபலங்கள் தங்குவதற்கான உயர் வசதிகளைக் கொண்ட பகுதிகள் உருவாக்கப்பட்டுள்ளன. சான்றாக, இந்தி நடிகர் அமிதாபச்சன் வீடு அமைந்துள்ள “தி சரயு” என்ற ஏழு நட்சத்திர (Seven Star) தங்குமிடம் 51 ஏக்கரில் அமைந்துள்ளது. மார்ரியோட் (Marriott) இண்டர்நேசனல், சரோவார், வ்யூதம் மற்றும் ஜே.எல்.எல். குழுமம் போன்ற கார்ப்பரேட் ஹோட்டல் நிறுவனங்கள் அயோத்தியை ஆக்கிரமித்துள்ளன.

இவை மட்டுமின்றி,  550 சொந்த வீட்டில் இருக்கும் வகையிலான தன்மைகள் கொண்ட குடும்பங்களுடன் தங்கும் குடியிருப்புகளும் (Homestay centers) உருவாக்கப்பட்டுள்ளன. வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் சுமார் 600 பேர் வரை இங்கு தங்குவதற்கு இப்போது விண்ணப்பித்துள்ளனர். இத்துடன், 1,200 ஏக்கர் பரப்பளவில் குடியிருப்புகள் கட்டப்படுகின்றன.

சுற்றுலா பயணிகளின் வருகையை உத்தரவாதப்படுத்தும் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதால், ரியல் எஸ்டேட் தொழில் கொடிகட்டிப் பறக்கிறது. இந்த உள்கட்டமைப்பு வளர்ச்சியின் காரணமாக விளைநிலங்கள் வீட்டுமனைகளாவது அதிகரித்திருப்பது மட்டுமின்றி, வீட்டுமனைகளின் விலையும் பல மடங்கு அதிகரித்துள்ளது. அயோத்தியின் புறநகர் பகுதியான “14 கோசி பரிக்கிரமா” பகுதியில், 1,350 சதுர அடி உள்ள நிலத்தின் பத்திரப் பதிவு தொகை ரூ.4 லட்சத்திலிருந்து ரூ.65 லட்சமாக உயர்ந்துள்ளதாக ஒரு பத்திரிகை செய்தி குறிப்பிடுகிறது.

இத்துடன், மின்சாரத் தேவைகளும் மிகவேகமாக அதிகரித்துள்ளது. அதற்காக அயோத்தியில், உலகின் பெரிய சூரிய மின்சக்தி நகரம் அமைப்பதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது. இவற்றில் எல்லாம் சிறிதும் பெரிதுமாக பல கார்ப்பரேட் கம்பெனிகள் மூலதனமிட்டுள்ளன.

சுற்றுலாவாசிகள் தங்குவதற்கு மட்டுமின்றி அயோத்தி ராமரை மையப்படுத்தி வணிகப் பொருட்களை  உருவாக்கி நாடுமுழுவதும் கொண்டு செல்லவும் திட்டமிட்டுள்ளது. நாளை, லல்லா ராமன் (குழந்தை ராமன்) படம் பொறிக்கப்பட்ட பொருட்கள் சந்தையில் விற்பனைக்கு வரலாம். அதற்கு மாநில அரசு வரிச்சலுகைகள் வழங்க வேண்டும் என நிர்பந்திக்கப்படலாம்.


படிக்க: ராமர் கோவில் திறப்பு: இந்துராஷ்டிரத்திற்கான பட்டாபிஷேகம்


தற்போது, மோடி அரசு அயோத்தி நகர விரிவாக்கத்திற்கு 15,700 கோடி ரூபாய் மதிப்புள்ள திட்டங்களை அறிவித்துள்ளது. உத்தரப்பிரதேச “2031 மாஸ்டர் பிளான்” திட்டத்தின்படி, ரூ.85,000 கோடிக்கு புதிய அந்நிய முதலீட்டாளர்களை கொண்டுவர திட்டமிட்டப்பட்டுள்ளது. அந்தவகையில், அயோத்தியில், ஒரு உள்ளூர்காரருக்கு 10 சுற்றுலா பயணி என்ற விகிதத்தில் சுற்றுலா பயணிகளை ஈர்க்க இலக்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதுமட்டுமின்றி, அயோத்தியை மையமாக வைத்துதான், ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை உத்திரப்பிரதேசம் அடையப் போவதாக ஆங்கில ஊடகங்கள் குறிப்பிடுகின்றன. ராமர் கோவில் கட்டப்பட்டதை ஒட்டி, அயோத்தியில் இருந்து மட்டும் 2024-25 ஆண்டில் 25,000 கோடி ரூபாய் வரி வசூல் செய்யமுடியும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.

கிறித்தவர்கள் வாட்டிகனுக்குச் செல்வதைப் போல, இஸ்லாமியர்கள் மெக்காவுக்கு செல்வதைப் போல, அயோத்தியை மாற்ற திட்டமிட்டுள்ளது மோடி-யோகி கும்பல். அந்தவகையில், இந்துக்களை ஈர்ப்பது ஒன்றே அக்கும்பலின் நோக்கமாகும். ஜக்கி, ராம்தேவ் போன்ற கார்ப்பரேட் சாமியார்கள் ஆன்மீகத்தை சரக்காக்கியதைப் போல, பக்தியை சரக்காகுகிறது மோடி-யோகி கும்பல்.

உலகளாவிய முக்கிய வணிகங்களை ஈர்க்கும் வகையில், “பிராண்ட் உ.பி.”-ஐ (Brand UP) உருவாக்கி வருகிறது மோடி-யோகி கும்பல். அதன் மூலம் உலகின் பிடித்தமான சுற்றுலா மையமாக  உத்தரப்பிரதேசத்தை மாற்ற இருக்கிறது. சுற்றுலா வளர்ச்சி என்றானபோது, சினிமா, உல்லாசம், குடி, கூத்து, விபச்சாரம் போன்றவற்றைப் பற்றி சொல்லத் தேவையில்லை. இவையெல்லாம் உள்ளடக்கியதுதான், இந்த “பிராண்டு உ.பி.”

“இந்திய சமுதாயத்தின் அமைதி, நிதானம், பன்முகத்தன்மை மற்றும் முதிர்ச்சியின் அடையாளம் ராமர் கோவிலாகும். அவர்களது கண்ணோட்டத்தை மறுபரிசீலனை செய்ய நான் இன்று அழைக்கிறேன்” என்று மோடி குறிப்பிடுவதும் இந்தப் பொருளில்தான்.

உத்தரப்பிரதேசத்தில், இந்த சுற்றுலா வளர்ச்சிக்கேற்ப லல்லா ராமர் பாடினார், சிரித்தார் என்று வதந்திகளைப் பரப்புவது; அக்ஷ்ய திருதியை நாளை கார்ப்பரேட் தங்க நகை வியாபாரிகள்  தங்களது வணிகத்திற்காக வளர்த்ததைப் போல, ராமர் கோவில் தொடர்பான விழாக்களும் திட்டமிட்டு நடத்தப்படுவது போன்றவற்றையெல்லாம் நாம் எதிர்ப்பார்க்கலாம்.

ஆக, கார்ப்பரேட் கொள்ளையின் மையம்தான் ராமர் கோவில். புனிதத்தலம் என்ற போர்வையில், சுற்றுலா என்ற பெயரில் உள்நாட்டு, வெளிநாட்டு உல்லாச கும்பலுக்கு அயோத்தியை மையமாக்குகிறது, மோடி-யோகி கும்பல்.

மொத்தத்தில், ராமனை பிராண்டாக்கி பாபர் மசூதியை இடித்தது அத்வானி கும்பல் எனில், லல்லா ராமனை பிராண்டாக்கி கலெக்‌ஷ்ன் பார்க்கிறது மோடி – யோகி கும்பல்!


பு.ஜ. உடன் ஓர் உரையாடல்

(புதிய ஜனநாயகம் – மார்ச் 2024 இதழ்)

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க