மோடி அரசின் வெள்ளை அறிக்கையையும், ஜி.எஸ்.டி கொள்ளையையும் எப்படி புரிந்துகொள்வது?

பு.ஜ. உடன் ஓர் உரையாடல்

டந்த பிப்ரவரி மாதத்தில் பொதுவெளியில் விவாதிக்கப்பட்ட, பேசுபொருளாக இருந்த நிகழ்வுகள் குறித்தும் அரசியல் பிரச்சினைகள் குறித்தும் வாசகர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு புதிய ஜனநாயகம் ஆசிரியர் குழு சார்பாக அளிக்கப்பட்ட பதில்கள்.

கேள்வி: பட்ஜெட் கூட்டத்தொடரில் ஒன்றிய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெள்ளையறிக்கை தாக்கல் செய்தார். அதில், ஜி.எஸ்.டி. வரிப் பகிர்வில் மாநிலங்களுக்கு இடையே உள்ள ஏற்றத்தாழ்வை வெளிப்படையாக குறிப்பிட்டிருந்தனர். இதனை எப்படி புரிந்துகொள்வது?

காங்கிரசின் 2004-2014 ஆட்சி குறித்து மோடியின் பத்தாண்டுகால ஆட்சி  நிறைவடையவுள்ள சூழலில் வெள்ளையறிக்கை தாக்கல் செய்வதே கேலிகூத்தானது. அவ்வறிக்கையில் உள்ள மோசடிகள் குறித்து எதிர்க்கட்சிகள் பல விசயங்களை அம்பலப்படுத்தியுள்ளனர். இதனைவிட முக்கியமாக, பாசிச கும்பல் கொடுக்கும் அறிக்கை, “வெள்ளை” அறிக்கையாக இருக்கும் என்று கருதுவதைவிட ஏமாளித்தனம் எதுவும் இருக்க முடியாது. கார்ப்பரேட்டுகளுக்கு சேவை செய்வதற்காக இந்திய உழைக்கும் மக்களை வதைத்த பணமதிப்பிழப்பு நடவடிக்கைப் பற்றி வெள்ளையறிக்கையில் எதுவும் இடம்பெறாததே அதற்கு போதுமான சான்று.

மாநிலங்களுக்கு இடையிலான ஜி.எஸ்.டி. வரிப்பகிர்வு  குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டபோது, மோடி கும்பல் மொன்னையான வாதங்களை முன்வைத்தாலும் அவ்விவாதத்தின் மூலம் மோடி கும்பல் மக்களுக்கு சில செய்திகளை சொல்கிறது.

முதலில், ஜி.எஸ்.டி. வரி வசூலுக்கும் வரிப் பகிர்வுக்கும் இடையிலான ஏற்றத்தாழ்வைப் பார்ப்போம். ஜி.எஸ்.டி. வரியாக தமிழ்நாடு செலுத்தும் வரியில், ஒரு ரூபாய்க்கு 26 பைசா மட்டுமே ஒன்றிய அரசால் திருப்பி அளிக்கப்படுகிறது. இதே போல கர்நாடகாவிற்கு 16 பைசா, தெலங்கானா 40 பைசா, கேரளா 62 பைசா திரும்ப பெறுகின்றன. அதே சமயத்தில், மத்தியப்பிரதேசம் 1 ரூபாய் 70 பைசாவும், ராஜஸ்தான் 1 ரூபாய் 14 பைசாவும் உத்தரப்பிரதேசம் 2 ரூபாய் 2 பைசாவும் திரும்பப் பெறுகின்றன.

இந்த விவரங்களை தொகையில் சொல்வதாக இருந்தால், சுமார்  8 கோடி மக்கள்தொகையைக் கொண்ட தமிழ்நாட்டில் இருந்து கடந்த 5 ஆண்டுகளில் வசூலித்த தொகை ரூ.6,00,674.49 கோடி. தமிழ்நாட்டிற்கு ஒன்றிய அரசு திருப்பிக்கொடுத்த தொகை ரூ.1,88,145.62 கோடி மட்டுமே.

இதே காலகட்டத்தில், தமிழ்நாட்டைவிட இரண்டு மடங்கு பரப்பளவும், மூன்று மடங்கு மக்கள்தொகையும் (24 கோடி) கொண்ட உத்தரப்பிரதேசத்தில் இருந்து வசூலித்த தொகை ரூ.3,41,817.60 கோடி. உத்தரப்பிரதேசத்திற்கு ஒன்றிய அரசு திருப்பிக்கொடுத்த தொகை ரூ.6,91,375.12 கோடி.


படிக்க: ஜி.எஸ்.டி வரிப்பங்கீடு: அம்பலமான மோடி அரசின் சதி


இது குறித்து, தமிழ்நாட்டின் சிறு குறு தொழில் முனைவோர், வியாபாரிகளிடம் கேட்கும்போது, “இங்கு வரியைக் கட்டச்சொல்லி கட்டாயப்படுத்துகிறார்கள். ஆனால், உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான், குஜராத் போன்ற மாநிலங்களில் வரியைக் கட்டச்சொல்லி இந்த அளவிற்கு நெருக்கடி கொடுப்பதில்லை. ஆனால், அங்கு மட்டும் வரி வசூல் குறைவாக இருப்பதற்கு காரணம், மோடி அரசு வரியை வசூலிப்பதில் தென்னிந்தியாவிற்கு, குறிப்பாக, தமிழ்நாட்டிற்கு கொடுக்கும் நெருக்கடியை பசுவளைய மாநிலங்களுக்குக் கொடுப்பதில்லை” என்கின்றனர்.

தமிழ்நாட்டைவிட மூன்று மடங்கு அதிக மக்கள்தொகை கொண்ட உத்தரப்பிரதேசத்தில் இருக்கும் சிறு குறு தொழில்முனைவோருக்கு சலுகை வழங்கி, தனது ஓட்டு வங்கியாக தக்கவைத்துக் கொண்டுள்ளது. அதேவேளையில், அம்மாநில அரசுக்கு கூடுதலாக இரண்டரை மடங்கு நிதியைக் கொடுத்ததன் மூலம், அங்கு தொழில் வளர்ச்சி, மக்களுக்கு இலவசங்கள், கார்ப்பரேட்டுகளுக்கு வரிச்சலுகைகள் சென்று சேர்ந்துள்ளன.

ஆகையால், நிதிப்பகிர்வில் இருக்கும் ஏற்றத்தாழ்வு மூலமாக வடமாநில மக்களுக்கு சலுகை அளிப்பதை மோடி அரசு வெளிப்படையாகவே தெரிவிக்கிறது. பா.ஜ.க. கும்பல் உத்தரப்பிரதேச மக்களை இந்து மதவெறியால் மட்டுமே தனது செல்வாக்கில் நிலைநிறுத்திக் கொள்ளவில்லை. மற்ற மாநிலங்களைக் கொள்ளையடித்து அம்மாநிலத்திற்கு வாரி வழங்குவதன் மூலமும் இதனை செய்கிறது.

இன்னும் சொல்லப்போனால், தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா போன்ற தென்மாநிலங்களில் வளர்ச்சி இருக்கக் கூடாது என்பதற்குத்தான், மாநிலங்கள் கடன் வாங்குவதற்கும் கட்டுப்பாடுகளை விதித்து நிதி நெருக்கடிக்குத் தள்ளுகிறது. இந்த பட்டவர்த்தனமான  கொள்ளைதான், இந்துராஷ்டிரம்.


பு.ஜ. உடன் ஓர் உரையாடல்

(புதிய ஜனநாயகம் – மார்ச் 2024 இதழ்)

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTubeவிவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க