பு.ஜ. உடன் ஓர் உரையாடல்
கடந்த ஜனவரி மாதத்தில் பொதுவெளியில் விவாதிக்கப்பட்ட, பேசுபொருளாக இருந்த நிகழ்வுகள் குறித்தும் அரசியல் பிரச்சினைகள் குறித்தும் வாசகர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு புதிய ஜனநாயகம் ஆசிரியர் குழு சார்பாக அளிக்கப்பட்ட பதில்கள்.
கேள்வி: செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தால் (ஏ.ஐ.) தொடர்ந்து வேலையிழப்புகள் நடந்து வருகிறது. சமீபத்தில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இதுகுறித்து பேசியுள்ளார். அவரின் கருத்துகளை எப்படி பார்க்க வேண்டியுள்ளது?
கடந்த டிசம்பர் மாத இறுதியில் சென்னைக்கு வந்தபோது ஏ.ஐ. தொழில்நுட்பம் குறித்து பேசிய ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ‘‘1980-களில் வங்கிகளில் கணினி அறிமுகமானபோது ஊழியர்களுக்கான மாற்றாக கணினி இருக்குமோ என்ற சந்தேகம் தொழிற்சங்கங்களுக்கு எழுந்தது. இப்போது நாடு எப்படி வளர்ச்சி கண்டுள்ளது என பாருங்கள். இன்று நமது இல்லங்கள் தொடங்கி அனைத்து இடங்களிலும் கணினி உள்ளது. அது வேலைவாய்ப்பை ஏற்படுத்தி உள்ளதா அல்லது பறித்துக்கொண்டதா என்பதை நாம் கவனிக்க வேண்டும்.
ஏ.ஐ. தொழில்நுட்பத்தை யார் இயக்க உள்ளோம் என்பதை பாருங்கள். அதன் திறனை பயன்படுத்துவதற்கான கருவியை உருவாக்கப்போவதும் நீங்கள்தான். டிஜிட்டல் வளர்ச்சி பணிகளை யாரும் வழிமறிக்க முடியாது. அது பொருளாதாரத்திற்கு கேடு. வளர்ச்சி எனும் நீரோடையுடன் சென்றால் நமக்கும், நாட்டுக்கும் நல்லது’‘ என்று கூறினார். இவை அனைத்தும் அப்பட்டமான பொய்யாகும்.
ஏ.ஐ. தொழில்நுட்பத்தினால் வேலையிழப்பு ஏற்படுவது குறித்தான செய்திகள் அன்றாடம் வெளிவந்த வண்ணம் உள்ளன. இந்த ஆண்டு தொடக்கமான ஜனவரி மூன்றாவது வாரத்தில் மட்டும் ஐ.டி. நிறுவனங்களில் இருந்து 5,500-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக ‘‘லேஆஃப்ஸ்’‘ என்ற இணையதளம் கூறுகிறது. கூகுள் நிறுவனம் 1,000 பேரையும், அமேசான் 500 பேரையும், யுடியூப் 100 பேரையும், டிக்டாக் 60 பேரையும், இன்ஸ்டாகிராம் 60 பேரையும் நீக்கியுள்ளன. மொத்தமாக, இந்நிறுவனங்கள் 1,720 ஊழியர்களைப் பணி நீக்கம் செய்துள்ளன. மேலும், மென்பொருள் நிறுவனங்களான யூனிட்டி சாஃப்ட்வேர் நிறுவனத்தில் 1,800 (மொத்த ஊழியர்களில் 25 சதவிகிதம்), வேஃபேர் நிறுவனத்தில் 1,650, ரியாட் கேம்ஸ் நிறுவனத்தில் 530, ட்விட்ச் நிறுவனத்தில் 500 (35 சதவிகிதம்), ஃப்ரண்ட்டெஸ்க் நிறுவனத்தில் 200, டிஸ்கார்ட் நிறுவனத்தில் 170 (17 சதவிகிதம்) என 4,850 ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். கடந்த 2023-ஆம் ஆண்டில் மட்டும் 1,190 தொழில்நுட்ப நிறுவனங்களால் 2,62,595 ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இந்த ஆண்டு தொடங்கி ஒரு மாதமே முடிவடைந்துள்ள நிலையில் 31,751 பேர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
ஆனால், நிர்மலா சீதாராமன் போன்ற பார்ப்பன கார்ப்பரேட் தரகர்கள், கணினியும் செயற்கை தொழில்நுட்பமும் ஒரே மாதிரியானவை என்பதாக சித்தரிக்கின்றனர். கணிப்பொறி வந்த பின்னர், பல துறைகள் அழிந்துவிட்டன. அந்தத் துறைகளில் பணிபுரிந்த கோடிக்கணக்கான கலைஞர்கள், ஊழியர்கள், தொழிலாளர்கள் வேலையிழந்து கூலிகளாக்கப்பட்டுள்ளனர். ஆனால், செயற்கை தொழில்நுட்பத்தின் தாக்கம் இதனைக்காட்டிலும் பலமடங்கு அதிகமானதாக இருக்கும்.
அண்மை காலங்களில், பத்திரப்பதிவுத்துறை, நீதித்துறை, கல்வித்துறை, போலீசுதுறை போன்ற பல அரசு அலுவலகங்களில் டிஜிட்டல்மயமாக்கம் நடந்து வருகிறது. இதுமட்டுமின்றி, பொதுத்துறை நிறுவனங்களான வங்கிகள், எல்.ஐ.சி. போன்றவையும் டிஜிட்டல்மயமாக்கப்படுகின்றன. இத்துறைகளில், ஆயிரக்கணக்கான ஊழியர்கள் வேலைநீக்கம் செய்யப்படும் அபாயத்தை எதிர்த்து ஊழியர் சங்கங்கள் தொடர்ந்து போராடி வருகின்றன. இன்னும், ஐந்து முதல் பத்தாண்டுகளில் கோடிக்கணக்கான ஊழியர்கள் வேலையிழக்கும் அபாயமும் உள்ளது.
ஜூலை 2023 கணக்கின்படி இந்தியாவில் வேலையின்மை விகிதம் 7.95 சதவிகிதமாகும். இது, அக்டோபர் மாதத்தில் மட்டும் 10.05 சதவிகிதமாக இருந்தது. நான்கு வாரங்கள் தொடர்ந்து வேலையில்லாமல் இருக்கும் 16-வயதுக்கு அதிகமானவர்களை மட்டுமே கொண்டு இந்த புள்ளிவிரவம் அளவிடப்படுகிறது. உண்மையில், நிரந்த வேலை, உத்தரவாதமான வேலை ஆகியவற்றின் வேலையின்மை விகிதம் இதனைவிட பல மடங்கு அதிகமாகும். பாசிச மோடி கும்பல் ஆட்சிக்கு வந்த பின்னர் வேலையின்மை மிக தீவிரமாக அதிகரித்துள்ளது.
இந்த உண்மைகளையெல்லாம் மறைத்துதான் நிர்மலா சீதாராமன் போன்ற கார்ப்பரேட் தாசர்கள் பொய்ப் பிரச்சாரம் செய்து வருகின்றனர். கார்ப்பரேட் முதலாளிகளின் கொள்ளை இலாபத்திற்காக மக்களின் வாழ்வாதாரத்தைப் பறிக்கின்றனர்.
மக்களின் வாழ்வாதாரத்தையும் அரசு ஊழியர்களின் வாழ்வாதாரத்தையும் பறித்துதான் டிஜிட்டல்மயமாக்கமும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பமும் புகுத்தப்படுகின்றன. இந்த மக்கள் விரோதத் தன்மையை எதிர்த்தாலே, செயற்கை நுண்ணறிவையே எதிர்ப்பதாகவும் இந்தியா வல்லரஸ் ஆவதை எதிர்ப்பதாகவும் இந்த கார்ப்பரேட் தாசர்கள் பொய்ப் பிரச்சாரம் செய்து வருகின்றனர். இந்த பொய்களை அம்பலப்படுத்தி முறியடிக்க வேண்டும்; உழைக்கும் மக்களின் வாழ்வாதாரமான நிரந்தர வேலை உரிமையை மீண்டும் நிலைநாட்ட போராட வேண்டும்.
பு.ஜ. உடன் ஓர் உரையாடல்
(புதிய ஜனநாயகம் – பிப்ரவரி 2024 இதழ்)
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube