ராமர் கோவில் திறப்பு: இந்துராஷ்டிரத்திற்கான பட்டாபிஷேகம்

நிலவுகின்ற போலி ஜனநாயகம், போலி மதச்சார்பின்மை ஆகியவற்றிற்கெல்லாம் சமாதி கட்டிவிட்டு, தாங்கள் நிறுவத்துடிக்கும் இந்துராஷ்டிரத்திற்கான பட்டாபிஷேகத்தை ஆரவாரமாக நடத்திமுடித்துள்ளது ஆர்.எஸ்.எஸ் - பா.ஜ.க கும்பல். இந்த பட்டாபிஷேகத்தில், அதானி - அம்பானியின் சேவகரான மோடி இந்துராஷ்டிரத்திற்கான ‘மன்னனாக’ முடிசூட்டிக் கொண்டுள்ளார்.

ந்துக்களின் வெற்றி”, “இந்தியாவின் பெருமிதம்”, “500 ஆண்டுகாலப் போராட்டத்தின் வெற்றி”, “ராம ராஜ்ஜியம் அமைந்துவிட்டது”, “புதிய வரலாறு படைக்கப்பட்டிருக்கிறது” என ராமர் கோவில் திறப்பை ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. கும்பல் தனது நூறு ஆண்டுகால இந்துத்துவச் சித்தாந்தத்திற்கும் அரசியலுக்கும் கிடைத்த வெற்றியாக கொண்டாடித் தீர்த்துள்ளது.

ராமர் கோவில் திறப்பு குறித்து பேசிய பிரதமர் மோடி “ஜனவரி 22, நாள்காட்டியில் இது ஒரு தேதி மட்டுமல்ல, ஒரு புதிய சகாப்தம் பிறந்துள்ளது. இப்போது நாம் இந்தியாவின் 1,000 ஆண்டுகளுக்கான அடித்தளத்தை அமைக்க வேண்டும். ராமர் கோவில் இந்தியாவின் “தேசிய உணர்வு”, ராமர் இந்தியாவின் அடித்தளம், ராமர் இந்தியாவின் கருத்து, ராமர் இந்தியாவின் சட்டம், ராமர் இந்தியாவின் மாண்பு, பெருமை, கொள்கை எல்லாமே ராமர்தான்” என்றார்.

ராமர் கோவில் திறப்பை பிரம்மாண்டமாகவும் வெற்றிகரமாகவும் நடத்தியதற்காக மோடிக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் ஒன்றை ஒன்றிய அமைச்சரவை நிறைவேற்றியிருந்தது. அதில், ‘‘பல நூற்றாண்டுகள் பழமையான இந்திய நாகரிகத்தின் 500 ஆண்டுகாலக் கனவு தற்போது நனவாகியுள்ளது. மேலும், 1947-இல் தேசத்தின் உடல் சுதந்திரம் பெற்றதென்றால், அதன் ஆன்மா தற்போதுதான் விடுதலை பெற்றுள்ளது’‘ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ராமர் கோவில் திறப்புக் குறித்து பேசிய ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத், ‘‘உலக நாடுகளுக்கு உதவி செய்யும் புதிய இந்தியாவின் அடையாளம் ராமர் கோவில்’‘, ‘‘இன்று கோவில் எழுந்ததற்கான ஆன்மீக கொண்டாட்டங்களில் பங்கேற்கும் அதே வேளையில் பாரதத்தை புனர் நிர்மாணம் செய்து அதன் மூலம் உலக புனர் நிர்மாண பணியில் ஈடுபட உறுதி எடுத்துக்கொள்வோம். இந்த பேரொளியை மனதில் வைத்து முன்னேறி செல்வது காலத்தின் கட்டாயம்’‘ என்று பாசிசக் கும்பலின் அகண்ட பாரதக் கனவை வலியுறுத்தி பேசினார். இவர்களை போலவே, பா.ஜ.க. தலைவர் ஜே.பி நட்டா, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா என ஒட்டுமொத்த காவிக் கும்பலும் தங்களது வெற்றியை உச்சிமுகர்ந்து பேசியுள்ளது. பாசிசக் கும்பலின் வார்த்தைகளிலிருந்தே அவர்கள் எத்தகைய வெற்றிக்களிப்பில் உள்ளனர் என்பதை நம்மால் புரிந்துக்கொள்ள முடியும்.

இந்த ‘கொண்டாட்டத்தின்’ மூலம், பாபர் மசூதியை இடித்து ராமர் கோவில் கட்டப்பட்டது இஸ்லாமிய மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி என்ற உணர்வே ஏற்படாத வகையில், பக்தி என்ற பெயரில் மதவெறியை ஊட்டி ‘இந்து மக்களின்’ ஜனநாயக உணர்வை ஒழித்துக்கட்டும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது காவிகும்பல். மேலும், மோடியின் பத்தாண்டுகால ஆட்சியில் அம்பானி-அதானி போன்ற கார்ப்பரேட் முதலாளிகளுக்கு சேவை செய்வதற்காக உழைக்கும் மக்கள் மீது தொடுக்கப்பட்ட ஜி.எஸ்.டி., பணமதிப்பிழப்பு போன்ற பொருளாதார தாக்குதல்களையும் பார்ப்பனிய மேலாதிக்கத்தை நிலைநிறுத்துவதற்காக இஸ்லாமிய சிறுபான்மையின மக்கள், தலித் மக்கள், பெண்கள்மீது இழைக்கப்பட்ட அநீதிகளையும் கொடுமைகளையும் மூடிமறைத்து, ராமர் கோவில் திறப்பை ஒட்டுமொத்த ‘இந்திய மக்களின் வெற்றியாக’, ‘இந்தியாவின் சாதனையாக’ சித்தரிக்க முயன்றது பாசிசக் கும்பல். அதாவது, வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றிப்பெற்று மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றி தங்களுடைய பார்ப்பனிய மேலாதிக்கத்தை நிலைநிறுத்திக்கொள்வதற்கான ஆயுதமாக ராமர் கோவில் திறப்பை கையிலெடுத்துள்ளது.

‘தேசிய விழாவான’ ராமர் கோவில் திறப்பு

ராமர் கோவில் திறப்பை முன்னிட்டு, வி.எச்.பி., இந்து முன்னணி போன்ற தனது குண்டர் படையினருடன் ஆர்.எஸ்.எஸ் கும்பல். ‘கிரஹ சம்பர்க் அபியான்’ என்ற பெயரில் வீடு வீடாக சென்று பிரச்சாரத்தில் ஈடுபட்டது. இந்தியா முழுவதும் பல இடங்களில் பெரிய எல்.இ.டி. திரைகளை அமைத்து, ராமர் கோவில் திறப்பை மக்களிடம் நேரலையில் ஒளிபரப்பு செய்தது. நாடு முழுவதும் ஆங்காங்கே பிரசாதம் தருவது, வீட்டில் விளக்கேற்ற சொல்வது என ஒட்டுமொத்த ‘இந்து’ மக்களிடமும் ‘இது நமக்கான விழா’ என்ற பிம்பத்தை கட்டமைக்க முயன்றது காவிக் கும்பல்.

நாடு முழுவதிலுமிருந்து கார்ப்பரேட் முதலாளிகள், நடிகர்கள், விளையாட்டு வீரர்கள், அரசு அதிகாரிகள், நீதிபதிகள் என 8000 பேருக்கு ராமர் கோவில் திறப்பில் கலந்துக்கொள்வதற்கான அழைப்பு விடுக்கப்பட்டது. அம்பானி, பிர்லா போன்ற கார்ப்பரேட் முதலாளிகள், கங்கனா ரனாவத், ரஜினி, அமிதாப் பச்சன், சச்சின் டெண்டுல்கர் போன்ற ஆயிரக்கணக்கான சங்கிகள் ராமர் கோவில் திறப்பிற்கு சென்று ஆரவாரம் செய்தனர்.


படிக்க: எது கேலிக்கூத்து? நிதிஷ்குமாரின் ‘பல்டி’யா,  இந்திய ‘ஜனநாயகமா’


ஆர்.எஸ்.எஸ்-இன் இந்த மதவெறி பிரச்சாரம் பலரிடம் தாக்கம் செலுத்தவும் செய்தது. உத்தரப்பிரதேசம் போன்ற வட மாநிலங்களில் உள்ள மருத்துவமனைகளில் பிரசவத்திற்கு அனுமதிக்கப்பட்டிருந்த பெண்கள், ராமர் கோவில் திறப்பு நாளான ஜனவரி 22-ஆம் தேதி அறுவை சிகிச்சை மூலம் தங்கள் குழந்தைகளை வெளியே எடுக்குமாறு மருத்துவர்களிடம் கேட்டுக்கொண்ட கொடுமையெல்லாம் அரங்கேறியது. ‘‘ராம் லாலா வருகையுடன் எங்கள் வீட்டில் குழந்தை பிறக்க வேண்டும் என்று விரும்புகிறோம்’‘ என பிரசவத்திற்கு காத்திருக்கும் அப்பெண்களின் குடும்பத்தினர் கூறியுள்ளனர். இது காவிக் கும்பலின் மதவாத பிற்போக்கு கருத்துகள் சமூகத்தில் எந்தளவிற்கு தாக்கம் செலுத்தியிருக்கின்றன என்பதற்கு சான்றாகும்.

இந்தியாவில் மட்டுமின்றி உலகின் பிற நாடுகளிலும் ராமர் கோவில் திறப்பை ‘இந்தியாவின் தேசிய விழா’வாக காட்டியது, பாசிசக் கும்பல். ராமர் கோவில் திறப்பில் கலந்துக்கொள்வதற்கான அழைப்பிதழ் அமெரிக்கா, கனடா, ஜெர்மனி என 50-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு அனுப்பப்பட்டது. அந்தந்த நாடுகளில் ராமர் கோவில் திறப்பை நேரலை செய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டது. இங்கிலாந்தில் மட்டும் 300 இடங்களில் ஒளிபரப்பப்பட்டது. பிரான்ஸ் நாட்டில் பாரிஸ் நகரத்தில் ராமர் கோவில் திறப்பையொட்டி ‘‘ராம் ரத யாத்திரை’‘ என்ற பெயரில் ஊர்வலம் நடத்தப்பட்டது. அமெரிக்காவில், ‘‘இந்து அமெரிக்க சமூகம்’‘ என்ற அமைப்பு ஏற்பாடு செய்த கார் பேரணியில், காவிக்கொடிகளுடன் ‘‘ஜெய் ஸ்ரீ ராம்’‘ என்று கோஷமிட்டவாறு 216 கார்களை கொண்டு ஊர்வலம் நடத்தப்பட்டது. ஆர்.எஸ்.எஸ்-இன் சர்வதேச அமைப்பான எச்.எஸ்.எஸ். அமைப்பு உலகின் பல நாடுகளில் வளர்த்துவிடப்பட்டுள்ளதன் மூலம் இதனை சாத்தியப்படுத்தியுள்ளது பாசிசக் கும்பல்.

மேலும், ஒட்டுமொத்த அரசுக்கட்டமைப்பையும் கைப்பற்றியுள்ள ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. கும்பல் தனது அதிகாரத்தை பயன்படுத்தி ராமர் கோவில் திறப்பை ‘அரசு விழா’வாகவும் மாற்றியது. இந்தியா முழுவதும் ராமர் கோவில் திறப்பிற்காக ஜனவரி 22-ஆம் தேதி அன்று ஒன்றிய அரசு ஊழியர்களுக்கு அரை நாள் விடுமுறை அளிக்கப்பட்டது. அந்நாளில் தேசிய பங்குச் சந்தை மற்றும் மும்பை பங்குச் சந்தைகள்  மூடப்படும் என்று இந்திய ரிசர்வ் வங்கியும் அறிவித்தது.

பா.ஜ.க. ஆளும் குஜராத், உத்தரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம், சத்தீஸ்கர், மகாராஷ்டிரா, ராஜஸ்தான், உத்தரகாண்ட், திரிபுரா, அசாம், கோவா, ஹரியானா ஆகிய மாநிலங்களில் பள்ளிகளுக்கும் அரசு அலுவலகங்களுக்கும் பொதுவிடுமுறை அளிக்கப்பட்டது. புதுச்சேரி மற்றும் சண்டிகர் யூனியன் பிரதேசங்களிலும், பா.ஜ.க. ஆட்சி செய்யாத ஒடிசாவிலும், காங்கிரஸ் ஆளும் இமாச்சலப்பிரதேசத்திலும் கூட விடுமுறை அறிவிக்கப்பட்டது.

ராஜஸ்தான், சத்தீஸ்கர், மத்தியப்பிரதேசம், உத்தரப்பிரதேசம், அசாம் போன்ற பா.ஜ.க ஆளும் மாநிலங்களில் இறைச்சி விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டது. சத்தீஸ்கர் பா.ஜ.க. அரசு அயோத்திக்கு செல்வதற்கு இலவச ரயில் சேவையை அறிவித்தது. பல மாநிலங்களில், பள்ளிக்கல்லூரிகளில் ராமர் கோவில் திறப்பிற்கு பூஜைகளும் ராமன் பெயரில் போட்டிகளும் நடத்தப்பட்டன.

தமிழ்நாட்டில், கூட’‘ராமர் கோவில் திறப்பிற்கு பூஜை செய்ய தி.மு.க. அரசு தடைவிதிக்கிறது’‘ என்று ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமன், ஆளுநர் ஆர்.என்.ரவி, தினமலர் உள்ளிட்ட சங்கிக்கூட்டம் கலவரத்தை தூண்ட முயற்சித்தது. ஆனால், காவிக்கும்பலின் அனைத்து சதித்திட்டங்களும் தமிழ்நாட்டில் தோற்கடிக்கப்பட்டது.

காட்டுமிராண்டித்தனத்தின் உச்சமாக, ராமர் கோவில் திறப்பு காரணமாக அனைத்து மத்திய அரசு மருத்துவமனைகளும் ஜனவரி 22-ஆம் தேதி 2:30 மணி வரை மூடப்படும் என்று அறிவித்தது பா.ஜ.க. பாசிசக் கும்பல். மருத்துவமனைகள் மூடப்பட்டால் பல லட்சகணக்கான மக்கள் பாதிக்கப்படுவர் என பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனையடுத்து, எய்ம்ஸ் மருத்துவமனை மட்டும் இம்முடிவை திரும்ப பெற்றது.

‘தேசிய நாயகன்’ ராமனல்ல மோடிதான்

புதிய நாடாளுமன்றக் கட்டடம் திறப்பு, சந்திரயான்-3 விண்ணில் ஏவப்பட்டது, ஜி20 உச்சி மாநாடு என நாட்டில் நடக்கும் முக்கியமான நிகழ்வுகள் ஒவ்வொன்றிலும், மோடியின் பெயர் மட்டும்தான் இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில்தான் மோடி – அமித்ஷா கும்பல் வேலைசெய்து வருகிறது. அந்த வரிசையில் ராமர் கோவில் திறப்பும் முழுக்க முழுக்க மோடியை முன்னிறுத்தியே நடத்தப்பட்டது. ‘‘ராமர் கோவில் திறப்பை நிகழ்த்திக்காட்டியவர் மோடிதான்’‘, ‘‘இது மோடியின் சாதனை’‘, ‘‘மோடி, கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றியுள்ளார்’‘ என்றுதான் ஜனவரி மாதத் தொடக்கத்திலிருந்தே சங்கிக்கூட்டமும், பா.ஜ.க. அரசும், அதன் ஊதுகுழலான ஊடகங்களும் பிரச்சாரம் செய்து வந்தன.

‘‘பிரதமர் 11 நாட்கள் விரதம் இருக்கிறார், வெறும் தரையில் படுத்து உறங்குகிறார், கோவில் கோவிலாக சுற்றுகிறார், கோவில்களை சுத்தம் செய்கிறார்’‘ என மோடியை ஒரு துறவியைப் போல இந்திய ஊடகங்கள் காட்சிப்படுத்தின. திறப்பு விழாவிற்கான அனைத்து போஸ்டர்களிலும், பேனர்களிலும் ராமன் புகைப்படம் சிறிய அளவில் ஒரு ஓரமாக இருக்க, மோடியின் முகமே பிரம்மாண்டமாக முன்னிறுத்தப்பட்டது. கோவில் திறப்பு ராமனுக்கா? மோடிக்கா? என்று சந்தேகம் எழும் அளவிற்கு ராமனை விட மோடிதான் பாசிசக் கும்பலால் முதன்மைப்படுத்தப்பட்டார்.

இந்நிலையில், பாரப்பனரல்லாதவரான மோடியின் கைகளால்தான் ராமன் சிலை நிறுவப்படப்போகிறது என்பதைக் கேட்டு பொங்கியெழுந்த சங்கராச்சாரியர்கள், மோடி- அமித்ஷா கும்பலை கடித்து குதறத் தொடங்கினார்கள். மோடி ராமர் கோவிலுக்குள் சென்று பூஜை செய்வதை சகித்துக்கொள்ள முடியாத பார்ப்பன கும்பல், முழுமையாகக் கட்டி முடிக்காமல் அரசியல் ஆதாயத்திற்காக கோவிலைத் திறக்கிறார்கள், சனாதனத்தையும் வேத மரபையும் மீறுகிறார்கள் எனக் கோவில் திறப்பிற்கு செல்லாமல் புறக்கணித்தனர்.

சங்கராச்சாரியர்களால் ஏற்பட்ட இந்த நெருக்கடியை மோடிக் கும்பல் சற்றும் எதிர்பார்க்கவில்லை. கோவில் கட்டிமுடிக்கப்படாமல் அவசர அவசரமாக திறக்கப்படுவது விவாதப்பொருளாகி பாசிசக் கும்பலுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியது. சமூக ஊடகங்களில், ‘‘மோடி இந்துவிரோதி’‘ என்றும் ‘‘சங்கராச்சாரியர்கள் மோடி விரோதி’‘ என்றும் விவாதங்கள் கிளம்பின. இதன்பிறகு பேசிய அவிமுக்தேஸ்வரானந்த் சரஸ்வதி என்ற சங்கராச்சாரியர், ‘‘நான் மோடிக்கு எதிரானவன் அல்ல, ஆனால் தர்ம சாஸ்திரத்துக்கும் எதிரானவனாகவும் இருக்க முடியாது’‘ என்று பதுங்கினார். ஆனால், பா.ஜ.க. ஆட்சியைப் பிடிப்பதற்கு மோடி பிம்பம் எவ்வளவு முக்கியம் என்பதை உணர்ந்திருந்த ஆர்.எஸ்.எஸ். கும்பல், மோடிதான் ராமன் சிலையை நிறுவவேண்டும் என்பதில் உறுதியாக இருந்தது.

இந்திய ஊடகங்களின் கரசேவை

பாபர் மசூதி இடிக்கப்பட்டு அந்த இடத்தில் ராமர் கோவில் கட்டப்பட்டுள்ளது என சர்வதேச ஊடகங்கள் மோடிக் கும்பலின் மதவெறிச்செயலை காறி உமிழ்ந்துக்கொண்டிருந்த போது, இந்திய ஊடகங்களோ ‘‘ராமர் கோவில் இந்தியாவின் பெருமிதம்’‘ என காவிக்கும்பலுடன் சேர்ந்து ஊளையிட்டுக் கொண்டிருந்தன. ராமர் கோவில் திறப்பு இந்தியாவின் அனைத்து இந்தி, ஆங்கில செய்தி ஊடகங்களாலும் அதன் மாநில மொழி ஊடகங்களாலும் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது. காவி உடையும் மாலையும் அணிந்துக் கொண்டு தொலைக்காட்சி நிருபர்கள் அயோத்தியின் மைதானங்களைச் சுற்றிக்கொண்டிருந்தனர்.

டிசம்பர் 6, 1992-இல் பாபர் மசூதி இடிப்பை படம் பிடித்ததற்காக ‘‘இந்தியா டுடே’‘ பத்திரிகையாளர்கள் உட்பட பல பத்திரிகையாளர்கள் காவிக்குண்டர் படையால் கொடூரமாக தாக்கப்பட்டனர். அன்று ‘‘அயோத்தி: தேசத்தின் அவமானம்’‘ என்ற அட்டைப்படத்துடன் பத்திரிகையை வெளியிட்ட இந்தியா டுடே, ராமர் கோவில் திறப்பையொட்டி ‘‘ராமர் வருகிறார்’‘ என்ற வாசகத்துடன் கூடிய ஊடக வாகனத்தை அயோத்தியில் நிறுத்தி செய்திகளை வெளியிட்டது.

இந்தியா டுடே போன்று ‘‘தி ஹிந்துஸ்தான் டைம்ஸ்’‘, ‘‘தி டைம்ஸ் ஆஃப் இந்தியா’‘ போன்ற பல முக்கிய செய்தித்தாள்களின் பக்கங்கள் மோடி, யோகி ஆதித்யநாத் மற்றும் ராமர் கோவிலின் புகைப்படங்களால் நிரப்பப்பட்டிருந்தன. ‘‘ராமர் திரும்புகிறார்’‘, ‘‘இந்தியாவிற்கான ராமர் கோவில்’‘, ‘‘ஐந்து நூற்றாண்டுகளுக்கான காத்திருப்பு’‘, ‘‘தேசம் முழுவதும் பக்தி அலை’‘ என்ற தலைப்புகளில் செய்திகள் வெளியிடப்பட்டன. ஆனால், இந்த ஊடக செய்திகளில் தப்பித்தவறி ஒரு இடத்தில் கூட பாபர் மசூதி என்ற வார்த்தை இடம்பெறவில்லை.


படிக்க: பாசிச மோடி அரசை பணியவைத்த லாரி ஓட்டுநர்களின் வேலைநிறுத்தப் போராட்டம்


பத்திரிகையாளரும் சமூக ஆய்வாளருமான பமீலா பிலிபோஸ் ‘‘தி வயர்’‘ இணையதளத்தில் எழுதிய கட்டுரையில், ஊடகங்களில் பாபர் மசூதி இடிப்பிற்கு முன்னர் ‘‘பாபர் மசூதி-ராம ஜென்ம பூமி மோதல்’‘ என்று பயன்படுத்தப்பட்டுவந்த கருத்தாக்கம் மசூதி இடிப்பிற்குப் பிறகு ‘‘சர்ச்சைக்குரிய இடம்’‘ என்று மாற்றப்பட்டதையும், அதன் பிறகு ‘‘பாபர் மசூதி’‘ என்ற சொல் கைவிடப்பட்டு, ராமர் கோவிலாக மாற்றப்பட்டதையும் விரிவாக விளக்கியுள்ளார். மோடி ஆட்சிக்கு வந்ததிலிருந்து பெரும்பாலான ஊடகங்கள் பாசிசக் கும்பலுக்கு ஊதுகுழலாக மாற்றப்பட்டதன் விளைவாக, தற்போது பாபர் மசூதியை இடித்துதான் ராமர் கோவில் கட்டப்பட்டது என்ற உண்மை இந்திய ஊடகங்களால் இருட்டடிப்பு செய்யப்பட்டுள்ளது.

மேலும் ராமர் கோவில் திறப்பால் வெறி முற்றிப்போன ஆர்.எஸ்.எஸ். காவி பயங்கரவாதிகள், ராமர் கோவில் திறப்பு நாளன்றும் அதற்குப் பிறகும் இந்தியா முழுவதிலும் இஸ்லாமியர்கள், கிறித்துவர்கள் மீது கொடூரமான தாக்குதல்களை நடத்தினர். மசூதிகளிலும் கிறித்துவ ஆலயங்களிலும் காவிக் கொடி ஏற்றப்பட்டன. ஆனால், ராமர் கோவில் திறப்பையொட்டி மேற்கொள்ளப்பட்ட ஒவ்வொரு நடவடிக்கையையும் ஒளிபரப்பிக் கொண்டிருந்த ஊடகங்களோ, சிறுபான்மையின மக்கள் மீது தொடுக்கப்பட்ட தாக்குதல்களை பற்றி வாயை திறக்கவில்லை.

எதிர்க்கட்சிகளின் ‘எதிர்ப்பு’

ராமர் கோவில் திறப்பிற்கான அறிவிப்பு வெளியானதிலிருந்தே, இந்நிகழ்வில் கலந்துகொள்பவர்கள், புறக்கணிப்பவர்கள் பற்றிய விவாதமும் தொடங்கியது. சி.பி.ஐ.(எம்) கட்சி மட்டும் ராமர் கோவில் திறப்பை புறக்கணிப்பதாக டிசம்பர் மாதத்திலேயே அறிவித்திருந்த நிலையில், காங்கிரசும் ‘‘இந்தியா’‘ கூட்டணியில் உள்ள பிற எதிர்க்கட்சிகளும் மோடிக் கும்பலால் இந்துவிரோதிகள், தேசவிரோதிகள் என்று முத்திரை குத்தப்படுவோம் என்ற அச்சத்தில் அமைதி காத்துவந்தன.

இந்நிலையில், ஜனவரி 10-ஆம் தேதிக்குப் பிறகு காங்கிரஸ், சமாஜ்வாதி கட்சி என இந்தியா கூட்டணியில் உள்ள கட்சிகள் ஒவ்வொன்றாக ராமர் கோவில் திறப்பை புறக்கணிப்பதாக அறிவித்தன. இதை ஜனநாயக சக்திகள் பலரும் வரவேற்றிருந்தனர். இந்தியா கூட்டணியை பாசிசத்திற்கு எதிராக முன்னிறுத்தும் ‘பாசிச எதிர்ப்பாளர்கள்’ சிலர் இதை ஒரு புரட்சிகர நடவடிக்கை என்றுகூட கூறினார்கள். ஆனால், எதிர்க்கட்சிகளின் ‘எதிர்ப்பு’ எத்தகையது என்பதை அவர்கள் வெளியிட்ட அறிக்கைகளும், அவர்கள் கூறிய கருத்துகளுமே அம்பலப்படுத்தின.

அகில இந்திய காங்கிரஸ் கட்சி, ‘‘2019 உச்சநீதிமன்றத் தீர்ப்பைக் கடைப்பிடித்து, ராமரை வணங்கும் லட்சக் கணக்கான மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, ஸ்ரீ மல்லிகார்ஜுன கார்கே, சோனியா காந்தி மற்றும் ஆதீர் ரஞ்சன் சவுத்திரி ஆகியோர் ஆர்.எஸ்.எஸ். மற்றும் பா.ஜ.க. விடுத்த ராமர் கோவில் திறப்பு நிகழ்ச்சிக்கான அழைப்பை மரியாதையுடன் நிராகரித்துள்ளனர்’‘ என ‘ராம பக்தர்களுக்கு’ மனக்கசப்பு ஏற்படாத வகையில் அறிக்கை விட்டிருந்தது.

காங்கிரசின் மற்றொரு முக்கிய தலைவரான சசிதரூர், ‘‘நான் திறப்பு விழாவிற்கு போக மாட்டேன். ஆனால், பிறகொரு நாள் போவேன். ராமர் கோவிலுக்கு போவது என்பது தனி நபர் விருப்பம்’‘ எனத் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் தலைமையின் புறக்கணிப்பு முடிவை ‘‘அவமதிப்பு’‘ என்று காங்கிரசின் சில தலைவர்களே கண்டித்தனர். போபால் காங்கிரஸ் கட்சியின் அலுவலக வாயிலில், ‘‘ராஜீவ் காந்தியின் கனவு நனவாகியுள்ளது’‘ என ராமர் கோவில் திறப்பிற்கு போஸ்டரே ஒட்டினர்.

சிவசேனா கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரே ராமர் கோவில் திறப்பை புறக்கணிப்பதாக செய்தியாளர் சந்திப்பில் பேசிய அதேவேளையில், ‘‘ராமர் கோவில் கட்டுவது தனது தந்தை பாலா சாகேப் தாக்கரேவின் கனவு. இன்று கோவில் கட்டப்படுவது மகிழ்ச்சியின் தருணம்’‘ என்று சிலாகித்தார். தேசியவாதக் காங்கிரஸ் கட்சி தலைவர் சரத் பவார், சமாஜ்வாதி கட்சித் தலைவரான அகிலேஷ் யாதவ் மற்றும் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோரும் ராமர் கோவிலுக்கு நிச்சயம் செல்வோம் என வாக்குறுதி அளித்துள்ளனர்.

தமிழ்நாட்டில் உதயநிதி ஸ்டாலினை தவிர, ராமர் கோவில் திறப்பை புறக்கணிப்பதாக கூறிய எந்த எதிர்க்கட்சி தலைவரும் பாபர் மசூதி இடிக்கப்பட்டது குறித்து மறந்தும் வாய்திறக்கவில்லை. பா.ஜ.க. தன் தேர்தல் ஆதாயத்திற்காக ராமர் கோவிலை பயன்படுத்திக் கொள்கிறது என்பது மட்டுமே இவர்களின் கவலை. அதனால்தான், ராமர் கோவில் கட்டப்பட்டது இஸ்லாமிய மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி என்று பிரச்சாரம் செய்யவில்லை. இதுவே எதிர்க்கட்சிகளின் பா.ஜ.க. ‘எதிர்ப்பின்’ எதார்த்த நிலை.

போலி மதச்சார்பின்மை – போலி ஜனநாயகக் கட்டமைப்பு
இந்துராஷ்டிரத்திற்கான தூண்கள்

ஜனவரி 22 அன்று இந்தியாவின் சில இடங்களில் கூட்டங்கள், ஒருங்கிணைப்புகள், ஆவணப்பட திரையிடல்கள் மூலம் ராமர் கோவில் திறப்பிற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இவற்றில் பெரும்பாலானவை இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் முகவுரையை (Preamble) வாசிப்பதாகவும் அதிலுள்ள மதச்சார்பின்மை என்ற வார்த்தை குறித்து விவாதிப்பதுமாகவே இருந்தது. சமூக வலைதளங்களில் அரசியலமைப்பு சட்டத்தின் முகவுரை பகிரப்பட்டது; கல்லூரிகளில் முகவுரை வாசிக்கப்பட்டது. ராமர் கோவில் திறப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து எழுதப்பட்ட சில கட்டுரைகளும் இந்தியாவின் போலி மதச்சார்பின்மையை வட்டமடித்தவாறே இருந்தன.

ராமர் கோவில் திறப்பு மூலம் இந்தியாவின் ‘மதச்சார்பின்மையை’ பா.ஜ.க. கும்பல் சிதைக்கிறது, அரசியல் அமைப்பு சட்டத்தில் உள்ள மதச்சார்பின்மையை காப்பாற்ற வேண்டும் என்பதே மேற்கண்ட அனைத்து நடவடிக்கைகளின் உள்ளடக்கமாகும்.

ஆனால், இந்தியாவில் உண்மையான மதச்சார்பின்மை என்று ஒன்றில்லை. நிலவுகின்ற போலி மதச்சார்பின்மை சிதைக்கப்படுவது முதன்முறையும் இல்லை. ராமர் கோவில் திறப்பு ‘அரசு விழாவாக’ மாற்றப்பட்டதற்கும் இந்தியாவில் பாசிசம் வளர்வதற்குமான காரணமாக, பலரால் தீர்வாக காட்டப்படும் போலி மதச்சார்பின்மை, போலி ஜனநாயகக் கட்டமைப்பு, அரசியல் அமைப்பு சட்டம் ஆகியவைதான் உள்ளன.

ஏனெனில், மதச்சார்பின்மை என்ற வார்த்தை அரசியலமைப்பில் பெயரளவில் சேர்க்கப்பட்ட ஒன்றுதான். 1950-இல் உருவாக்கப்பட்ட அரசியலமைப்புச் சட்டம் இந்தியாவை மதச்சார்ப்பற்ற நாடு என்று குறிப்பிடவில்லை. 1976-இல் கொண்டுவரப்பட்ட 42-வது அரசியல் சட்டத்திருத்தத்தின் மூலமே ‘‘இந்தியாவை மதச்சார்பற்ற, சோசலிச, ஜனநாயகக் குடியரசாக அமைப்பதற்கு உறுதி பூணுவதாக’‘ இந்திய அரசியல் சாசனத்தின் முகவுரையில் சேர்க்கப்பட்டது. அதற்கான விளக்கம், வரையறை எதுவும் அரசியல் சாசனத்தில் குறிப்பிடப்படவில்லை.

உண்மையில் மதச்சார்பின்மை என்றால், மனிதனின் அன்றாட வாழ்க்கையைக் கட்டுப்படுத்தவும், ஒழுக்கத்தை வரையறுக்கவும் மதம் பெற்றிருக்கின்ற அனைத்து சட்டப்பூர்வமான அதிகாரங்களையும் பறிப்பது, மதத்துடனான அனைத்து உறவுகளிலிருந்தும் அரசு தன்னைத் துண்டித்துக்கொள்வது, மதம் தனிநபர் நம்பிக்கை சார்ந்த சொந்த விவகாரம் என்று வரையறுப்பது என்பதே அதன் அர்த்தம். ஆனால், இந்தியாவில் மதமும் அரசியலும் அவ்வாறு பிரிக்கப்படவில்லை. அது தெரியாமல் நிகழ்ந்த தவறல்ல, தெரிந்தே செய்யப்பட்ட மோசடி.

மதமும் அரசியலும் தனித்தனியாக பிரிக்கப்பட வேண்டும் என்பதை மேற்கத்திய சிந்தனை என்று கூறி ஆர்.எஸ்.எஸ்-இன் முன்னோடிகள், கடுமையாக எதிர்த்தனர். இதனால், 1947 ‘சுதந்திரத்திற்கு’ பிறகு இந்தியாவின் பிரதமரான நேரு, மதச்சார்பின்மைக்கு சரியான மொழிப்பெயர்ப்பு வார்த்தை இல்லை, என்பதால் அது தவறாக புரிந்துக்கொள்ளப்படுகிறது, உண்மையில் ‘‘இந்திய அரசு அனைத்து மதங்களையும் சமமாக மதிக்கும். அவர்களுக்கு சம வாய்ப்புகளை வழங்கும்’‘ என்று மதச்சார்பின்மைக்கு உலகிலேயே வேறு எங்கும் அளிக்கப்படாத ஒரு புதிய விளக்கத்தை கொடுத்தார்.

இதனையடுத்து இந்திரா காந்தி ஆட்சிக்காலத்தில் மதச்சார்பின்மை என்ற வார்த்தை அரசியலைமைப்பின் முகவுரையில் பெயரளவில் சேர்க்கப்பட்டதே ஒழிய, அதனை இந்திரா காந்தியோ காங்கிரசோ நடைமுறையில் பின்பற்றியதில்லை. மேலும்,  பெயரளவில் இருந்த மதச்சார்பின்மையை தனது வாக்குவங்கிக்காக சிதைக்க தொடங்கியதும் காங்கிரஸ்தான்.

சான்றாக, 1983-ஆம் ஆண்டு விஷ்வ இந்து பரிஷத் ஆதரவுடன் கட்டப்பட்ட பாரத் மாதா கோவிலை இந்திரா காந்தி திறந்து வைத்துள்ளார். அவருக்கு அடுத்து பிரதமரான ராஜீவ் காந்தி குறித்து நாம் பேச வேண்டியதில்லை. ‘‘பாபர் மசூதி இடத்தில் இருந்த தற்காலிக ராமர் கோவிலின் பூட்டை ராஜீவ் காந்திதான் திறந்து வைத்தார். வரலாற்றை மறந்துவிடக் கூடாது’‘ என்று மத்தியப்பிரதேச காங்கிரஸ் தலைவர் கமல்நாத் பேசியதே போதுமானவை. எனவே, பெரும்பான்மை மக்களின் வாக்குகளை கவர்வதற்காக காங்கிரசும் மதத்தை ஒரு ஆயுதமாக பயன்படுத்தி பெயரளவில் இருந்த மதச்சார்பின்மையை சிதைத்து வந்தது என்பதே உண்மை.

அதேபோல், 1949-இல் பாபர் மசூதிக்குள் ராமன் சிலையை இந்து மதவெறியர்கள் திருட்டுத்தனமாக வைத்தது முதல் இறுதியாக 2019-ஆம் ஆண்டு பாபர் மசூதி நிலத்தை ராமர் கோவில் கட்ட தாரைவார்த்தது வரை பாபர் மசூதியை காவி பாசிஸ்டுகள் ஆக்கிரமித்த ஒவ்வொரு கட்டத்திலும் இந்திய நீதிமன்றங்களின் கரசேவை அடங்கியிருக்கிறது. இந்த தீர்ப்புகள் அனைத்தும் தீர்வாக முன்னிறுத்தப்படும் அரசியல் அமைப்பு சட்டத்தின் அடிப்படையிலேயே வழங்கப்பட்டிருக்கின்றன. அதனால்தான், ராமன் கோவில் திறப்பில், தீர்ப்பு வழங்கிய நீதிபதிகளுக்கு மோடி நன்றி தெரிவித்திருந்தார், அவர்களுக்கு அழைப்பும் விடுக்கப்பட்டிருந்தது. ஆனால், தற்போது இதற்கு நேர்மாறாக ராமர் கோவில் திறப்பையொட்டி, ‘‘மதச்சார்பற்ற இந்தியாவை பா.ஜ.க. கும்பல் இந்து தேசமாக மாற்றிவிட்டது’‘, ‘‘தாங்கள்தான் உண்மையான இந்துக்கள் என்று எதிர்க்கட்சிகள் நிரூபிக்கவேண்டிய நிலைக்கு பா.ஜ.க. தள்ளியிருக்கிறது’‘ என்று ஜனநாயகச் சக்திகள் பலரால் விவாதிக்கப்படுகிறது.

நிலவுகின்ற போலி மதச்சார்பின்மையும், போலி ஜனநாயகமும் அரசியல் அமைப்பு சட்டமுமே இந்துராஷ்டிரத்தை நிறுவுவதற்கு பாசிசக்கும்பலுக்கு போதுமானதாக உள்ளது என்பதை ராமர் கோவில் திறப்பு நன்கு உணர்த்தியிருந்தாலும், இந்த கட்டமைப்பில் உள்ள பிரச்சினையை மறைத்து விட்டு பா.ஜ.க மட்டும்தான் பிரச்சினை என்ற பிம்பத்தை கட்டமைக்க முயல்கின்றனர்.  இந்தக் கட்டமைப்பை மீட்டெடுக்க முடியும் என்று போலியான நம்பிக்கையை தொடர்ந்து விதைத்து வருகின்றனர். ஆனால், இந்த போலி ஜனநாயக அரசுக்கட்டமைப்பை பயன்படுத்தி பாசிசக்கும்பல் தனது சர்வாதிகாரத்தை நிறுவுவதற்கு உருவாக்கியிருக்கும் ஜி.எஸ்.டி, நீட் போன்ற இந்துராஷ்டிரத்தின் அடிக்கட்டுமானங்களை என்ன செய்யப்போகிறார்கள்? என்ற கேள்விக்கு அவர்களிடம் பதில் இருக்காது.

தற்போது, ராமர் கோவில் திறப்பிற்கு பிறகு நாடுமுழுவதும் இஸ்லாமியர், கிறித்துவர்கள், தலித் மக்கள் மீது காட்டுமிராண்டித்தனமாக தாக்குதல்களை தொடுத்து வருகிறது பாசிசக்கும்பல். அடுத்தது வாரணாசியில் உள்ள ஞானவாபி மசூதியை குறிவைத்து காய் நகர்த்தி வருகிறது. ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை கொண்டுவருவதற்கு குழு அமைத்து வேலை செய்துவருகிறது. இவையெல்லாம், பாசிசக் கும்பல் இந்துராஷ்டிரத்திற்கான அடுத்தக்கட்ட பாய்ச்சலை நோக்கி முன்னேறி வருகிறது என்பதையே காட்டுகிறது. எனவே, இந்த போலி ஜனநாயக மாயயையில் மறைந்துக்கொண்டு உண்மையைக் காண மறுப்பதனால், பாசிசச் சர்வாதிகாரம் நிலைநிறுத்தப்படுவதை தவிர வேறு எதுவும் நடக்கப்போவதில்லை. உண்மையான ஜனநாயக உரிமைகள், மதச்சார்பின்மை பெறுவதற்கு நிலவுகின்ற போலி ஜனநாயக கட்டமைப்பை அடித்து வீழ்த்தி பாசிச எதிர்ப்பு ஜனநாயக குடியரசுக்காக போராடுவது ஒன்றே தீர்வு.


மதி

(புதிய ஜனநாயகம் – பிப்ரவரி 2024 இதழ்)

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTubeவிவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க