பாசிச மோடி அரசை பணியவைத்த லாரி ஓட்டுநர்களின் வேலைநிறுத்தப் போராட்டம்

வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகளின் போராட்டம், குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிரான இசுலாமிய மக்களின் போராட்டத்தை தொடர்ந்து பாசிசச் சட்டத்திட்டங்களுக்கு எதிரான மக்களின் களப்போராட்டங்கள் காவி பாசிஸ்டுகளை அச்சங்கொள்ள செய்யும் என்பதற்கு லாரி ஓட்டுநர்களின் போராட்டம் மற்றொரு சான்றாக அமைந்துள்ளது.

டந்த டிசம்பர் மாதத்தில் நடந்த நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத்தொடரில் ஏற்கெனவே நடைமுறையில் இருந்த மூன்று குற்றவியல் சட்டங்களுக்கு பதிலாக பாரதிய நியாய சன்ஹிதா, பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா மற்றும் பாரதிய சாக்ஷ்ய விதேயக் ஆகிய பாசிசச் சட்டங்களை விவாதங்கள் ஏதுமின்றி நிறைவேற்றியிருந்தது மோடி அரசு. இந்நிலையில், கடந்த ஜனவரி மாதத்தில் இந்த கருப்பு சட்டத்திற்கு எதிராக லாரி ஓட்டுநர்கள் முன்னெடுத்த பிரம்மாண்டமான போராட்டம் பாசிஸ்டுகளை பயங்கொள்ள வைத்தது. அனைத்து தரப்பு உழைக்கும் மக்களுக்கும் எதிராக பாசிசத் தாக்குதல்களை ஏவக்கூடிய இச்சட்டத்திருத்தத்திற்கு எதிராக பெரியளவில் வினையாற்றப்படாமல் இருந்தவந்த மோன நிலையை லாரி ஓட்டுநர்களின் முன்னுதாரணமிக்க இப்போராட்டம் உடைத்திருக்கிறது.

பாசிஸ்டுகளால் நிறைவேற்றப்பட்டுள்ள பாரதிய நியாய சன்ஹிதா (இந்திய தண்டனைச் சட்டம்) குற்றவியல் சட்டத்தில், வாகன விபத்தை ஏற்படுத்துவோருக்கு தண்டனைகளை வழங்கும் ‘‘விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பித்தல்’‘ (Hit and Run) என்ற சட்டப்பிரிவு 106(2)-இல் மோசமான திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டிருந்தது. இந்த சட்டப்பிரிவுக்கு எதிராக கடந்த ஜனவரி 1-ஆம் தேதி சரக்கு மற்றும் எரிபொருள் விநியோகம் செய்யும் லாரி ஓட்டுநர் சங்கங்கள் நாட்டின் பல்வேறு மாநிலங்களில் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டன. குறிப்பாக, காவி பாசிஸ்டுகளின் ‘கோட்டை’ என்று சொல்லப்படுகின்ற குஜராத், உத்தரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம், மகாராஷ்டிரா, ராஜஸ்தான், ஹரியானா போன்ற பசுவளைய மாநிலங்களில் இப்போராட்டம் நடந்தது பாசிஸ்டுகளுக்கு பெரிய அடியாக விழுந்தது.

இப்போராட்டத்தில் ஓட்டுநர்கள் லட்சக்கணக்கான லாரிகளை பல கி.மீ. தூரங்களுக்கு அணிவகுத்து நிற்கவைத்தனர். சரக்கு மற்றும் டேங்கர் லாரி ஓட்டுநர்களுடன் இணைந்து தனியார் ஆம்னி பேருந்து ஓட்டுநர்களும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். பல மாநிலங்களில் பெட்ரோல் மற்றும் டீசலுக்கு தட்டுப்பாடு ஏற்படும் அளவிற்கு பிரம்மாண்டமாக போராட்டம் நடந்தது. வடக்கு மற்றும் மேற்கு இந்திய மாநிலங்களில் அமைந்துள்ள சுமார் 2,000 பெட்ரோல் நிலையங்கள் எரிபொருள் பற்றாக்குறையை எதிர்கொண்டதாக ‘‘பிரஸ் டிரஸ்ட் ஆப் இந்தியா’‘ (Press Trust of India) என்ற செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. காய்கறிகள், பழங்கள் போன்ற அத்தியாவசியப் பொருட்களின் விநியோகமும் பாதிக்கப்பட்டது.

வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டதோடு மட்டுமல்லாமல், மும்பை-அகமதாபாத் போன்ற பல முக்கிய தேசிய நெடுஞ்சாலைகளில் லாரி ஓட்டுநர்கள் சாலை மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர். தங்களின் வாகனங்களை சாலைகளின் குறுக்கே நிறுத்தி மோடிக்கும்பலின் கருப்புச் சட்டத்திற்கு எதிராக முழக்கமிட்டு ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டதோடு சில இடங்களில் லாரி ஓட்டுநர்களுக்கும் போலீசுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டது. போரடிய ஓட்டுநர்களை கைது செய்வது, அவர்களை கலைப்பதற்கு துப்பாக்கிசூடு நடத்தியது போன்ற பாசிச ஒடுக்குமுறைகளையும் செலுத்தியது மோடிக்கும்பல்.


படிக்க: புதிய தண்டனை சட்டத்தை எதிர்த்து சாலைகளில் இறங்கிய லாரி ஓட்டுனர்கள்!


இதற்கு முன்னர் இருந்த இந்திய தண்டனைச் சட்டம் 304(A)-இல் சாலை விபத்தில் எதிர்பாராத விதமாக ஒருவர் உயிரிழந்தால், விபத்து ஏற்படுத்திய ஓட்டுநருக்கு அதிகபட்சமாக இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை, அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம் என்று மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், தற்போது திருத்தப்பட்டுள்ள பாரதிய நியாய சன்ஹிதா சட்டம் 106(2)-இல், ‘‘சாலை விபத்தில் எதிர்பாராதவிதமாக ஒருவர் உயிரிழந்தால், விபத்து ஏற்படுத்திய ஓட்டுநருக்கு அபராதத்துடன் ஏழு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கலாம். ஓட்டுநர் தப்பித்துவிட்டாலோ அல்லது உயிரிழப்பு குறித்து உடனடியாகப் போலீசாருக்கு புகாரளிக்கத் தவறினாலோ பத்து ஆண்டுகள் சிறைத்தண்டனையும் ஏழு லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கலாம்’‘ என்று மாற்றப்பட்டுள்ளது.

குறிப்பாக இச்சட்டமானது, சாலை விபத்துகளினால் ஏற்படும் உயிரிழப்புகளை கொலைக் குற்றமாக வரையறுக்கிறது. பழைய சட்டத்தின்படி, சாலை விபத்துகளில் உயிரிழப்பு ஏற்பட்டால் பெரும்பாலும் ஓட்டுநருக்கு அபராதம் விதிப்பதே நீதிமன்றத்தால் தண்டனையாக வழங்கப்பட்டுவந்தது. ஆனால் புதிய சட்டத்தின்படி, சிறைத்தண்டனை, அபராதம் ஆகிய இரண்டும் கட்டாயமாக்கப்படுகிறது.

மேலும், இச்சட்டத்தின்படி, சாலைகளில் மூடுபனி போன்ற புறச்சூழல் காரணமாக விபத்து நேர்ந்து உயிரிழப்பு ஏற்பட்டாலும் ஓட்டுநர்கள் சிறைத்தண்டனையை அனுபவித்தாக வேண்டும். பெரும்பாலும் விபத்தை ஏற்படுத்தியபிறகு, பொதுமக்களால் அடித்துக்கொல்லப்படுவோம் என்ற அச்சத்தில் வேறுவழியின்றி தப்பித்துச் செல்வதாக ஓட்டுநர்கள் கூறுகின்றனர். ஆனால் புதிய சட்டம் தப்பித்து செல்வதற்கு மேலும் கடுமையான தண்டனைகளை வழங்குகிறது.

கார், மோட்டார் சைக்கிள் போன்ற சிறிய வாகனங்களோடு சரக்கு லாரிகள் போன்ற பெரிய வாகனங்கள் மோதுவதால் ஏற்படும் விபத்துகளில், பெரிய வாகனங்களின் ஓட்டுநர்களை குற்றவாளிகளாக கருதும் பார்வை நாடு முழுவதும் ஏற்கெனவே இருக்கிறது என அகில இந்திய மோட்டார் போக்குவரத்து காங்கிரஸ் (AIMTC) தெரிவித்துள்ளது. இந்நிலையில், பாரதிய நியாய சன்ஹிதா சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டால் சரக்கு வாகன ஓட்டுநர்கள் மேலும் பாதிப்புகளுக்கு உள்ளாவர்.


படிக்க: மீண்டும் தில்லியில் விவசாயிகள் போராட்டம் – பாசிசத்தை வீழ்த்துவதற்கான பாதை இதுதான்!


கூடுதலாக, இச்சட்டத்தில் அதிகபட்சமாக ஏழு லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்பட்டிருப்பதும் லாரி ஓட்டுநர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. ‘‘எங்களுக்கு சம்பளமாக ரூ.10,000 முதல் ரூ.12,000 வரை மட்டுமே கிடைக்கிறது. அப்படியிருக்க, எப்படி லட்சக்கணக்கான ரூபாய் அபராதமாக செலுத்த முடியும்? இந்த முடிவை திரும்ப பெறாவிட்டால் வேறு வேலைகளை செய்ய வேண்டிய நிலைக்கு நாங்கள் தள்ளப்படுவோம். இது எங்களின் வாழ்வாதாரத்திற்கு அச்சுறுத்தலாக உள்ளது’‘ என்று கூறுகிறார் 46 வயதான லாரி ஓட்டுநர் ஜகத் பால் ஷர்மா.

இதற்கிடையே, லாரி ஓட்டுநர்களின் போராட்டம் வளர்ந்து, இச்சட்டத்திருத்தத்தின் பாசிச நோக்கம் பிற தரப்பு மக்களிடம் அம்பலப்பட்டு, போராட்டத்தின் வீரியம் அதிகரித்துவிடும் என்ற அஞ்சிய மோடி அரசு, போராட்டம் தொடங்கிய அடுத்த நாளே ஒன்றிய உள்துறைச் செயலர் அஜய் பல்லாவை ஏ.ஐ.எம்.டி.சி. பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தைக்கு அனுப்பி வைத்தது. பேச்சுவார்த்தையின்போது, புதிய சட்டப்பிரிவுகள் இன்னும் அமல்படுத்தப்படவில்லை என்றும், ஏ.ஐ.எம்.டி.சி. பிரதிநிதிகளுடன் கலந்து ஆலோசித்த பிறகே சட்டம் அமல்படுத்தப்படும் என்றுக் கூறி பின்வாங்கியது பாசிசக் கும்பல். இதனால், லாரி ஓட்டுநர்கள் போராட்டத்தை தற்காலிகமாக நிறுத்த வைப்பதாக அறிவித்தனர். மேலும், போராடிய லாரி ஓட்டுநர்களை இழிவாகப் பேசிய மத்தியப்பிரதேச மாநிலத்தின் ஷாஜாபூர் மாவட்ட ஆட்சியர் கிஷோர் கன்யாலை பணிமாற்றம் செய்ததன் மூலம் ஓட்டுநர்களுக்கு சாதகமாகத்தான் மோடி அரசு செயல்படுகிறது என்ற பிம்பத்தை உருவாக்கவும் முயன்றது பா.ஜ.க. அரசு.

சமீபத்தில் நடந்துமுடிந்த ஐந்து மாநிலத் தேர்தல்களில் மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் பா.ஜ.க. வெற்றிபெற்றதையடுத்து, வடமாநிலங்கள் பா.ஜ.க-வின் கோட்டை என்ற பிம்பத்தை சங்கிகள் கட்டமைத்துவந்த சூழலில் நாடாளுமன்றத்தில் ஐந்து இளைஞர்கள் புகைக்குப்பி வீசி போராட்டத்தில் ஈடுபட்டதும், அதற்கடுத்து வடமாநிலங்களில் லாரி ஓட்டுநர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதும் அந்த பிம்பத்தை தவிடுபொடியாக்கியுள்ளது. மேலும், மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகளின் போராட்டம், குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிரான இசுலாமிய மக்களின் போராட்டத்தை தொடர்ந்து பாசிசச் சட்டத்திட்டங்களுக்கு எதிரான மக்களின் களப்போராட்டங்கள் காவி பாசிஸ்டுகளை அச்சங்கொள்ள செய்யும் என்பதற்கு லாரி ஓட்டுநர்களின் போராட்டம் மற்றொரு சான்றாக அமைந்துள்ளது.

இருப்பினும், லாரி ஓட்டுநர்களின் போராட்டத்தை கண்டு மோடி அரசு அஞ்சியிருந்தாலும், பேச்சுவார்த்தை நடத்தி போராட்டத்தை தற்காலிகமாக நிறுத்திவைத்திருப்பது என்பது போராட்டத்தை கலைப்பதற்கான உத்தியே. ஏனெனில், இம்மூன்று சட்டங்களின் வரைவு வந்தபோது, ‘‘மருத்துவர்களின் அலட்சியத்தால் நோயாளிக்கு உயிரிழப்பு ஏற்பட்டால் அதிகபட்சம் ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனையும் அபராதமும் விதிக்கப்படும்’‘ என்ற அம்சத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மருத்துவர்கள் போராட்டம் நடத்தினர். இதனையடுத்து, இச்சட்டத்தை மக்களவையில் நிறைவேற்றிய அன்று ‘‘இந்திய மருத்துவ கவுன்சிலின் கோரிக்கைக்கேற்ப சட்டத்தில் மாற்றம் கொண்டுவரப்படும்’‘ என்று பேசிய அமித்ஷா, சட்டத்தில் எந்த மாற்றத்தையும் மேற்கொள்ளாமல் அடுத்தநாளே மாநிலங்களவையில் நிறைவேற்றினார். எனவே, லாரி ஓட்டுநர்களுடன் பரிசீலித்துவிட்டே சட்டத்தை அமல்படுத்துவோம் என்று மோடி அரசு தற்போது கொடுத்துள்ள வாக்குறுதியும் அந்தவகையில் சேர்ந்ததே.

எனவே, பாசிச மோடி அரசால் கொண்டுவரப்பட்டுள்ள இந்த மூன்று குற்றவியல் சட்டங்களுக்கு எதிரான போராட்டத்தை நாடு தழுவிய போராட்டமாக, அனைத்து தரப்பு உழைக்கும் மக்கள் மத்தியிலும் கட்டமைத்து அதனை பாசிஸ்டுகளுக்கு எதிரான போராட்டமாக வளர்த்தெடுக்க வேண்டியது புரட்சிகர, ஜனநாயகச் சக்திகளின் கடமையாகும்.


அமீர்

(புதிய ஜனநாயகம் – பிப்ரவரி 2024 இதழ்)

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க