புதிய தண்டனை சட்டத்தை எதிர்த்து நாடு முழுவதும் பல பகுதிகளில் லாரி ஓட்டுனர்கள் லாரிகளை இயக்காமல் சாலைகளில் நிறுத்தி போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர். இந்த போராட்டத்தை ஜனவரி 1 ஆம் தேதியான புத்தாண்டு தினத்தில் தொடங்கியுள்ளனர்.
Hit and Run என்று சொல்லக்கூடிய விபத்துகளை ஏற்படுத்துதல் என்ற குற்றத்திற்காக 7 லட்சம் வரை அபதாரமும் 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும் கொடுக்கப்படும் என்ற சட்டத்தை எதிர்த்து இந்த போராட்டத்தை தொடங்கியுள்ளனர். பழைய இந்திய தண்டனைச் சட்டம் IPC-இன் படி இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனையும், 1000 ரூபாய் அபதாரமும் மட்டுமே உள்ளது. எளிய உழைக்கும் மக்களான லாரி ஓட்டுனர்களின் மீது இது பெரும் தாக்குதலாகும். அதனால் தான், எளிய மக்களிடம் இருந்தே பெரும் போராட்டங்கள் தொடங்கிறது என்ற வரலாற்று உண்மையை மீண்டும் நிரூபணம் செய்யும் வகையில் லாரி ஓட்டுனர்கள் போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர். பீகார், சத்தீஸ்கர், பஞ்சாப், ஹரியானா, மகாராட்டிரம், மத்திய பிரதேசம், இமாசலப் பிரதேசம் ஆகிய பகுதிகளில் லாரி ஓட்டுனர்கள் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். மும்பையில் மொத்த லாரிகளில் 70 சதவீதத்திற்கும் மேல் நிறுத்தப்பட்டுள்ளது.
இதில், பெட்ரோல் நிலையங்களுக்கு, பெட்ரோல் டீசலை கொண்டு செல்லும் லாரிகளும் இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால், பெட்ரோல் நிலையங்களுக்கு சரக்கு கிடைக்காது. நிலையங்களின் இருப்பில் உள்ள சரக்குகளும் செவ்வாய்கிழமை தீர்ந்துவிடும். இதனால் பதட்டமடைந்த மக்கள் பெட்ரோல் நிலையங்களில் அலை அலையாக வரிசையில் நிற்கின்றனர். இந்த செய்தி எதிர்மறையான கோணத்தில் அதாவது லாரி ஓட்டுனர்கள் போராட்டத்தால் தான் மக்கள் கஷ்டப்படுகிறார்கள் என்று ஊடகங்கள் சித்தரிக்க முயற்சிக்கின்றனர். ஆனால் இந்த போராட்டத்தின் உயர்ந்த நோக்கத்தை புரிந்து கொண்டால் இது ஜனநாயகத்திற்கான பாசிச எதிர்ப்பு போராட்டமாக வளர வாய்ப்புள்ளது.
படிக்க: புதிய குற்றவியல் சட்ட மசோதாக்களை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்
இந்திய தண்டனைச் சட்டம் (IPC), இந்திய சாட்சிய சட்டம் (Evidence Act), குற்றவியல் நடைமுறைச் சட்டம் (CrPC) ஆகிய மூன்று சட்டங்களுக்கு பதிலாக பாரதிய நியாயா சன்ஹிதா, பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா மற்றும் பாரதிய சாக்ஷ்யா ஆகிய மூன்று சட்டங்களை நிறைவேற்றியுள்ளது. கிட்டத்தட்ட 141 நாடாளுமன்ற உறுப்பினர்களை இடைநீக்கம் செய்துவிட்டு இந்த சட்டங்கள் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. பின்னர் டிசம்பர் 25 ஆம் தேதி குடியரசு தலைவர் ஒப்புதல் வழங்கப்பட்டது. ஆனால் இந்த சட்டம் எந்த நாளில் இருந்து அமலுக்கு வரும் என்று உள்துறை அமைச்சகம் இன்னும் அறிவிக்கவில்லை.
தனது இந்து ராஷ்டிரத்தை நிறுவும் நோக்கத்தோடு பாஜகவால் கொண்டுவரப்பட்ட இந்த சட்டங்கள் முற்றிலும் மக்கள் விரோதமானவை. போலீசுக்கு அளவில்லா அதிகாரங்களை அளித்துவிட்டு, எளிய மக்களின் அனைத்து பிரிவினரையும் எப்போதும் தண்டனை பயத்தில் வாழும்படி செய்யும் சட்டங்கள் இவை.
போராடும் மக்களை தேச துரோக வழக்கில் கைது செய்து சித்திரவதை செய்வது, மோடி கும்பலை அம்பலப்படுத்தும் செயல்பாட்டாளர்களை ஒடுக்குவது, உண்ணாவிரதம், பொது ஆர்ப்பாட்டம் போன்ற போராட்டங்களை ஒடுக்குவது, சங்க பரிவார கும்பல்கள் மட்டும் ஆயுதங்களுடன் அணி வகுப்பு நடத்த அனுமதிப்பது, போலீசுக்கு அதிக அதிகாரங்கள் அளிப்பது என அனைத்து தரப்பு மக்களுக்கும் விரோதமான சட்டப் பிரிவுகளைக் கொண்டுள்ளது. இதற்கு எதிராக லாரி ஓட்டுனர்களின் போராட்டத்தை முன்மாதிரியாக கொண்டு, அனைத்து தரப்பு மக்களின் ஒருங்கிணைந்த போராட்டங்களை கட்டமைக்கவேண்டும்.
சீனிச்சாமி
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube