அமெரிக்க போயிங் விமானத் தொழிலாளர்களின்
53 நாள் வேலை நிறுத்தப் போராட்டம் மாபெரும் வெற்றி!
தொழிலாளர்களின் வர்க்க ஒற்றுமைக்குப் பணிந்தது நிர்வாகம்!
அமெரிக்க போயிங் விமான தொழிலாளர்களின் வேலை நிறுத்த போராட்டம் மாபெரும் வெற்றி.
33,000 தொழிலாளர்கள் வர்க்க உணர்வுடனும் உறுதி குலையாத ஒற்றுமையுடனும் சொந்த வாழ்வில் பல இன்னல்களை, சவால்களை எதிர்கொண்டு 53 நாட்களாக நடத்திய மாபெரும் வேலை நிறுத்தப் போராட்டம் முடிவுக்கு வந்தது.
நவம்பர் 6 முதல் தொழிலாளர்கள் வெற்றிக் களிப்புடன் மீண்டும் பணிக்குத் திரும்புகின்றனர் என்பதை இயந்திர இயக்குநர்கள் மற்றும் விண்வெளி தொழிலாளர்களின் சர்வதேச கழகத்தின் (IAMAW – International Association of Machinists and Aerospace Workers) தலைவர் ஜான் ஹோல்டன் தெரிவித்தார்.
நிர்வாகம் ஏற்கெனவே முன்மொழிந்திருந்த பணப்பலன்களுடன் 38 சதவீத ஊதிய உயர்வு என்ற புதிய ஒப்பந்த அறிவிப்பின் மீது வாக்கெடுப்பு நடத்துவதற்கான தொழிற்சங்கக் கூட்டம் நவம்பர் 5 அன்று நடைபெற்றது. நிர்வாகத்தின் புதிய முன்மொழிதலின் பலாபலன்கள் போராட்டத்தின் சாதக பாதகங்கள் பற்றி தொழிற்சங்க தலைமை விளக்கமளித்து ஒப்பந்தத்தை ஏற்கும் படி தொழிலாளர்களுக்கு அறிவுறுத்தியது. பின்னர் நடைபெற்ற வாக்கெடுப்பில் 59 சதவீதம் பேர் ஒப்பந்தத்தை ஏற்றனர்.
போயிங் நிர்வாகம் தமது நெருக்கடிகளைத் தொழிலாளர்கள் மீது சுமத்தி கடந்த எட்டு ஆண்டுகளாக எந்த முறையான ஊதிய ஒப்பந்தமும் இல்லாமல் ஒவ்வொரு ஆண்டும் 1 முதல் 1.5 சதவீதம் ஊதிய உயர்வு அளித்து தொழிலாளர்களை ஏய்த்துக் கடுமையாகச் சுரண்டி வந்தது. இனியும் சகிக்க முடியாது என்ற நிலைமையில் தொழிலாளர்கள் ஏற்றுக்கொள்ளும்படியான முறையான புதிய ஊதிய உயர்வு ஒப்பந்தத்தை பெரும் வரையில் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவது என்று தொழிலாளர்கள் முடிவு செய்தனர். அதில் வர்க்க ஒற்றுமையுடனும் உறுதியுடனும் ஊன்றி நின்றனர்.
வேறு வழி இல்லாத நிலையில் நிர்வாகம் பணிந்தது. தொழிலாளர்கள் நடத்திய இந்த மாபெரும் வேலை நிறுத்த போராட்டம் போயிங் நிறுவன வரலாற்றிலும் அதேபோன்று இயந்திர இயக்குநர்கள் தொழிற்சங்க வரலாற்றிலும் ஒரு முக்கியமான மைல்கல்லாகும்.
படிக்க: அமெரிக்க அதிபர் தேர்தல்: பாசிஸ்டு ட்ரம்ப் வெற்றி!
புதிய ஒப்பந்தத்தின்படி நான்கு ஆண்டுகளில் 38 சதவீதம் ஊதிய உயர்வு என்பது முதலாம் ஆண்டு 13 சதவீதம் உயர்ந்து அடுத்தடுத்த ஆண்டுகளில் 9 + 9 + 7 சதவீதம் என்று நான்காம் ஆண்டு இறுதியில் 38 சதவீத உயர்வு என்பதாகும். இதன்மூலம் 33,000 தொழிலாளர்களின் சராசரி மாத ஊதியம் இன்றைய 6,300 டாலர் என்பதிலிருந்து நான்காம் ஆண்டு இறுதியில் சற்றேறக்குறைய 10,000 டாலர் என்று உயரும். அத்துடன் ஒவ்வொரு ஆண்டும் தரப்படுகின்ற ஊக்கத்தொகை (Incentive Bonus) 7,000 டாலரை 5,000 உயர்த்தி 12,000 டாலர் வழங்க நிர்வாகம் ஏற்றிருக்கிறது.
தொழிலாளர்களின் முக்கியமான மற்றொரு கோரிக்கை 10 ஆண்டுகளுக்கு முன்பு கைவிடப்பட்ட ஓய்வூதிய திட்டம் மீண்டும் வேண்டும் என்பது. இதை இறுதி வரையில் நிர்வாகம் ஏற்றுக்கொள்ளவில்லை. இப்போது வாக்கெடுப்பில் 41% தொழிலாளர்கள் இந்த ஒப்பந்தத்திற்கு எதிராக வாக்களித்திருப்பதும் கூட ஊதிய உயர்வு போதாது என்பதனால் அல்ல மாறாக ஓய்வூதியம் வழங்கப்படவில்லை என்பதனால் தான் என்கிறார் தொழிற்சங்க தலைவர் ஜான் ஹோல்டன்.
ஓய்வூதிய திட்டத்திற்குப் பதிலாக தற்பொழுது இருந்து வருகின்ற 401 K என்று அழைக்கப்படும் ஓய்வுக் கால சேமநலத் திட்டத்தில் ஊதியத்தில் பிடிக்கப்படுகின்ற 4 சதவீத தொகையுடன் நிர்வாகத்தின் சார்பில் 3 சதவீத தொகை வழங்கப்படுகிறது. அந்தத் தொகையை இப்போது 4 சதவீதமாக உயர்த்தி தர ஏற்றிருக்கிறது.
(இந்தியாவில் உள்ள சேமநலத் திட்டம் போன்று மாத ஊதியத்தில் ஒரு தொகை பிடித்தம் செய்து அதில் நிர்வாகம் அதற்கு இணையான ஒரு தொகையைச் சேர்த்து ஓய்வு பெற்ற பின் மொத்தமாக வழங்கப்படும் திட்டம்).
இந்த அனைத்தையும் இணைத்துப் பார்த்தால் மொத்த பணப்பலன்கள் 43 சதவீதம் என்று வருகிறது. அதாவது தொழிலாளர்கள் முதலில் கோரியது மூன்று ஆண்டுகளில் 40% என்பது இப்போது கிடைத்திருப்பதோ நான்கு ஆண்டுகளில் 43 சதவீதம் ஆகும்.
அதாவது முதல் பேச்சு வார்த்தை முடிவில் நிர்வாகம் கொடுக்க முன்வந்தது நான்கு ஆண்டுகளில் 25 சதவீதம். இதை நிராகரித்துத் தான் வேலை நிறுத்தம் அறிவிக்கப்பட்டது. போராட்டம் தொடங்கி முதல் வாரம் முடிந்த நிலையில் நிர்வாகம் தன்னிச்சையாக 30 சதவீதம் உயர்வு என்றது. அதை வாக்கெடுப்பு நடத்தாமலேயே தொழிற்சங்க தலைமை நிராகரித்தது. பின்னர் 5 வாரம் ஆன பிறகு 35 சதவிகிதம் ஊதிய உயர்வுடன் மற்ற இரு பணப் பலன்களையும் சேர்த்து அறிவித்தது. அதன் மீது நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் 64 சதவீதம் பேர் ஒப்பந்தத்தை நிராகரித்தனர். மீண்டும் தொடர்ந்த போராட்டம் ஏழாவது வாரத்தைத் தாண்டிய பிறகுதான் இந்த 38 சதவீத ஊதிய உயர்வு அறிவிக்கப்பட்டது. அதன் மீதான வாக்கெடுப்பில் 59 சதவீதம் பேர் ஒப்பந்தத்தை ஏற்றுக் கொண்டதைத் தொடர்ந்து வேலை நிறுத்தம் முடிவுக்கு வந்தது. எனவே தான் இந்த வேலை நிறுத்த போராட்டம் மாபெரும் வெற்றி என்று தொழிற்சங்க தலைமை அறிவித்திருக்கிறது.
படிக்க: அமெரிக்காவில் போயிங் விமானத் தொழிலாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டம்!
இந்த வேலை நிறுத்தக் காலத்தில், மைய போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் 33,000 பேர் என்றாலும் போயிங் நிறுவனத்துக்கு உதிரிப்பாகங்கள் தயாரித்துக் கொடுக்கும் சிறிய நிறுவனங்கள் 10,000க்கும் அதிகமானவை அமெரிக்காவின் 50 மாநிலங்களில் பரவலாகச் சிதறி இருக்கின்றன. அவற்றில் பல நிறுவனங்களில் ஆலை மூடல் (Lay Off) அறிவிக்கப்பட்டு தொழிலாளர்கள் வேலை இன்றி பலவிதமான துன்ப துயரங்களுக்கு ஆளாயினர் என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
இந்த வேலை நிறுத்தத்தால் போயிங் நிர்வாகம் ஒரு நாளைக்கு 100 கோடி டாலர் இழப்பைச் சந்தித்திருக்கும் என்று பல மதிப்பீட்டு நிறுவனங்கள் தெரிவித்தன.
இறுதிக் கணக்கில் தொழிலாளர்கள் தங்களின் ஊதிய இழப்பால் நட்டப்பட்டது 60 லட்சம் டாலர்கள். அதேசமயம் நிர்வாகம் அதனுடைய ஏகபோக மூலதன திமிரால் தொழிலாளர்களை வேலை நிறுத்த போராட்டத்தில் தள்ளி அதனால் இழந்தது 650 கோடி டாலர்கள் ஆகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
போயிங் நிர்வாகம் இந்தப் போராட்டத்தைப் பிளவுபடுத்திக் கலைப்பதற்குப் பல வழிகளில் முயன்றது. ஏற்கெனவே ஊதியமின்றி இருக்கும் தொழிலாளர்களின் நிலைமையை மோசமாக்கும் வகையில் போராட்டத்தில் இருக்கும் தொழிலாளர்களுக்கு மருத்துவப் பயன்கள் (Healthcare Benefits) அனைத்தையும் ரத்து செய்தது.
அதற்குப் பிறகு நிறுவனம் கடன் உள்ளிட்ட பல்வேறு நெருக்கடிகளில் இருப்பதால் 10 சதவீத தொழிலாளர்களை ஆட்குறைப்பு செய்ய இருப்பதாக அறிவித்து. வேலை போய்விடும் என்று பீதியூட்டி ஒற்றுமையைக் குலைக்க முயன்றது. ஆனால் இவை எதற்கும் எந்த ஒரு தொழிலாளியும் அசைந்து கொடுக்கவில்லை என்பதுதான் வர்க்க உணர்வின் மகத்துவமும் பலமுமாகும்.
இந்தப் போராட்டத்தின் வெற்றி என்பது 33,000 தொழிலாளர்கள் வர்க்க உணர்வுடன் ஒன்றுபட்டு எந்த பிளவுக்கும் இடம் தராமல் ஜனநாயக மத்தியத்துவ அமைப்பு கோட்பாடுகளுக்குக் கட்டுப்பட்டு நடந்து முடிந்திருக்கும் வர்க்கப் போராட்ட வழிமுறைக்குக் கிடைத்த வெற்றியாகும்.
இந்தியத் தொழிலாளி வர்க்கமும் தொழிற்சங்கங்களும் போயிங் தொழிலாளர் போராட்டத்திலிருந்துக் கற்றுக் கொள்ள நிறைய இருக்கிறது. அமெரிக்க நிலைமைகள் வேறு இந்தியச் சூழ்நிலைமை வேறு என்பதைக் கணக்கில் கொள்ளாமல் கூறவில்லை. உலக அளவில் வர்க்க ஒற்றுமை வேண்டும் என்பது இலட்சியமாக இருப்பினும் ஒரு தொழிற்சாலை அளவில் தொழிலாளர் ஒற்றுமையைக் கட்டி அமைப்பதன் தேவையை உணர வேண்டி இருக்கிறது. தொழிற்சங்க ஒற்றுமை என்று பொதுவில் பேசாமல் ஒரு ஆலைக்கு ஒரு சங்கம் என்பதை உறுதியாகப் பற்றி நிற்க வேண்டியது அவசியமாகும்.
சுந்தரம்
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram