’உலகமே உற்றுநோக்கிய’ அமெரிக்காவின் 47வது அதிபருக்கான தேர்தலில் பாசிஸ்டு டொனால்டு ட்ரம்ப் வெற்றி பெற்றிருக்கிறார். இனரீதியான வெறுப்புப் பேச்சுகள், பெண்களை இழிவாகப் பேசியது, மாற்றுப் பாலினத்தவரை இழிவாகப் பேசியது, மதவெறியைத் தூண்டும் வகையில் பேசியது, அகதிகளை வலுக்கட்டாயமாக வெளியேற்றுவோம் என்று பேசியது என எல்லா வகையிலும் ஆக கேடுகெட்ட ஒரு கீழ்த்தரமான பாசிஸ்டுக்குரிய வகையிலான பரப்புரைகளை மேற்கொண்ட ட்ரம்ப் இரண்டாவது முறையாக வெற்றி பெற்றிருக்கிறார்.
“இந்த நாட்டை மீட்டெடுக்க நாங்கள் உதவப் போகிறோம்”, “இது அமெரிக்காவின் பொற்காலம்”, “இந்த வெற்றி அமெரிக்காவை மீண்டும் சிறந்த தேசமாக மாற்றும்” ”நான் போரைத் தொடங்க மாட்டேன், போரை முடிப்பேன்” என்றெல்லாம் தேர்தல் வெற்றிக்குப் பிறகான கூட்டத்தில் அளந்து விட்டுள்ளார்.
தனது பிரச்சாரக் குழுவில் முக்கியப் பங்கு வகித்த உலகின் முதல்நிலை ஏகபோக முதலாளியும், பாசிஸ்டுமான எலான் மஸ்க்கை குடியரசுக் கட்சியின் புதிய நட்சத்திரம் என்றும், மிகச்சிறந்த மனிதர் என்றும் கூறினார்.
இன்னொரு பக்கம் முதலாளித்துவ தாராளவாத ஊடகங்களும், தாராளவாத அறிவுஜீவிகளும் ட்ரம்ப் அதிபரானால் ஆபத்து என்ற வகையில் தேர்தலுக்கு முன்பும், தற்போதும் கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர். தேர்தலுக்கு முன்பு நியூயார்க் டைம்ஸ் நாளிதழ் “இந்தத் தேர்தலில் அமெரிக்கர்கள் ஏன் ட்ரம்ப்புக்கு வாக்களிக்கக் கூடாது” என்ற பொருளில் கட்டுரைகளை வெளியிட்டது. ”ட்ரம்ப் சகாப்தத்தை முடிவுக்குக் கொண்டு வர வாக்களியுங்கள்” என்ற தலைப்பில் அது இரண்டு குறிப்புகளை வெளியிட்டது. ”அமெரிக்காவுக்குத் தலைமை தாங்க தகுதியற்றவர் ட்ரம்ப்” என்று முதல் குறிப்பு கூறுகிறது. “ஜனநாயகத்துக்கான அச்சுறுத்தல்” என்று ட்ரம்ப்பை அக்குறிப்பு விமர்சிக்கிறது.
படிக்க: வெனிசுலா: அமெரிக்காவின் சதிகளை முறியடித்து முன்னேறும் மதுரோ ஆட்சி
மக்கள் பக்கத்தில் நின்று அமெரிக்காவுக்கு எது நல்லதோ அதை அச்சமின்றி உரக்கச் சொல்வோம் என்ற தொனியில் இந்தக் கட்டுரைகள் எழுதப்பட்டதாகவும், இது நியூயார்க் டைம்ஸ் நாளிதழின் துணிச்சலுக்கு மட்டும் அன்றி, அமெரிக்கச் சமூகத்தில் நிலவும் ஜனநாயகச் சூழல், சகிப்புத் தன்மைக்கும் ஓர் உதாரணம் என அறிவுஜீவிகள் புகழ்வதாகவும் புதிய தலைமுறையின் செய்திப் பக்கத்தில் ’வியந்து’ கூறுகின்றனர்.
”கேட்பவன் கேனை என்றால், கேப்பையில் நெய் வடியும்” என்ற பழமொழிதான் நினைவுக்கு வருகிறது. ட்ரம்ப் ஒரு கீழ்த்தரமான பாசிஸ்டு என்பதில் நமக்கு எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. அமெரிக்க மக்களுக்கு மட்டுமல்ல, உல மக்களுக்கும் ட்ரம்ப் ஆபத்தானவன் என்பதிலும் மாற்றுக் கருத்தில்லை. அப்படியெனில் பைடனும், கமலா ஹாரிஸும் உத்தமர்களா என்ன? இவர்கள் எல்லோரும் ஏகாதிபத்திய பயங்கரவாதிகள்தானே? உலக மக்களின் முதன்மை எதிரியான அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் மேலாதிக்கத்திற்காக உலகம் முழுக்க கோடிக்கணக்கான மக்களைக் கொன்று குவித்தவர்கள்தானே, குவித்துக் கொண்டிருப்பவர்கள்தானே இந்தக் கயவர்கள். இதில் ஜனநாயகக் கட்சிக்கும், குடியரசுக் கட்சிக்கும் என்ன வேறுபாடு? இவர்கள் தான் அமெரிக்க மக்களின் பிரதிநிதிகளா? உண்மையில் மக்கள் பக்கம் நிற்கும் யாரையாவது உலகையே ஆட்டிப்படைக்கும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் ஆளும் வர்க்கங்கள் முன்னிறுத்துமா என்ன? இல்லை ஊடகங்கள்தான் முன்னிறுத்துமா?
முன்னாள் அதிபரான ஜனநாயகக் கட்சியின் பைடனின் உதவியோடுதானே பாலஸ்தீனத்தில் கொத்துக் கொத்தாக மக்களைக் கொன்று குவித்தது இஸ்ரேல்.
உண்மையில் இவையெல்லாம் எதைக் காட்டுகின்றன? 2008 ல் ஏற்பட்ட சப்-ப்ரைம் பொருளாதார நெருக்கடிக்குப் பிறகு அமெரிக்கா மீளவில்லை என்பதே உண்மை. அதற்குப் பதிலாக, மேலும் மேலும் நெருக்கடிக்குள் மூழ்கிக் கொண்டிருக்கிறது என்பதே வரலாறு. அமெரிக்காவின் பெருமளவிலான செல்வம் எலான் மஸ்க் போன்ற வெறும் 1% முதலாளிகளிடம் குவிவது, வேலையின்மை அதிகரிப்பது, அமெரிக்க மக்கள் பிச்சையெடுக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பது, மகிழ்ச்சிக் குறியீட்டில் அமெரிக்கா பின்தங்கிக் கொண்டிருப்பது, மந்தநிலையை நோக்கி அமெரிக்கா சென்று கொண்டிருப்பது (கோல்ட்மேன் சாக்ஸ்) போன்ற புள்ளிவிவரங்கள் எல்லாம் எதைக் காட்டுகின்றன? உலகை ஒட்டச் சுரண்டுவதற்காக அமெரிக்க ஆளும் வர்க்கங்கள் முன்தள்ளிய தனியார்மயம் – தாராளமயம் – உலகமயம் என்ற பொருளாதாரக் கொள்கைகள் உள்நாட்டிலேயே தோற்று பல்லிளிக்கின்றன என்பதைத்தான்.
படிக்க: இஸ்ரேலின் இனப்படுகொலையை எதிர்த்துத் தீக்குளித்த அமெரிக்க ஊடகவியலாளர்
நெருக்கடிகளைச் சமாளிக்க ‘ஜனநாயக’ முகத்தை முன்நிறுத்தும் கமலாவும் பைடனும் அவர்களுக்குப் போதவில்லை. எனவெ, சரியத் தொடங்கியிருக்கும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் ஒன்றைத் துருவ உலக மேலாதிக்கத்தை நிலைநிறுத்திக் கொள்வதற்கே அந்நாட்டு ஆளும் வர்க்கங்கள் ட்ரம்ப் போன்ற ஒரு பாசிஸ்டை தேர்ந்தெடுத்துள்ளன.
ஜனநாயகம், சகிப்புத்தன்மை என்ற முகமூடிகளையெல்லாம் தூக்கியெறிந்துவிட்டு எலான் மஸ்க் போன்ற பாசிச முதலாளிகள் அமெரிக்காவையும் உலகையும் கொள்ளையடிப்பதற்கு ஏற்ப சுரண்டலைத் தீவிரப்படுத்துவது, போர்களைத் தூண்டிவிட்டு உலக நாடுகளைக் கொள்ளையடிப்பது, உள்நாட்டில் உழைக்கும் மக்களிடையில் முரண்பாட்டைத் தீவிரப்படுத்துவது, அப்பட்டமாக தேசிய வெறியை ஊட்டுவது என்பதுதான் உலக பயங்கரவாதியான அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு இருக்கும் வழி. அந்த பயங்கரவாதத்தின் நீட்சியாக வரும் பாசிச முகம்தான் ட்ரம்ப்.
எனவே நாம் சொல்ல வருவது ஒன்றே ஒன்றுதான். ட்ரம்ப் வந்திருக்காவிட்டால் ஜனநாயகம் காப்பாற்றப்பட்டிருக்கும், அபாயம் இருந்திருக்காது என்று பேசுவதெல்லாம் அமெரிக்க ஏகாதிபத்திய மேலாதிக்கத்தைக் காப்பாற்றுவதற்குத்தான். ஆளை மாற்றுவதல்ல, அமெரிக்க ஏகாதிபத்தியத்தையே வீழ்த்துவதுதான் உண்மையான ஜனநாயகம். அமெரிக்க மக்களுக்கும், உலக மக்களுக்கும் அது ஒன்றுதான் மீட்சிக்கான வழி.
நவம்பர் 7 – ரசிய சோசலிசப் புரட்சிநாளில் உலக மக்களின் முதன்மை எதிரியான அமெரிக்க ஏகாதிபத்தியத்தை வீழ்த்துவதற்கு மக்கள் அனைவரும் உறுதியேற்க வேண்டும். உலகை ஏகாதிபத்திய போர் அபாயத்திலிருந்து நிரந்தரமாக மீட்டெடுக்க சோசலிசப் புரட்சியை நோக்கி முன்னேறுவது மட்டுமே ஒரே தீர்வாகும்.
அய்யனார்
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram