வெனிசுலா: அமெரிக்காவின் சதிகளை முறியடித்து முன்னேறும் மதுரோ ஆட்சி

தங்களது பல்வேறு சதித்திட்டங்களையும் மீறித் தேர்தல் வெற்றிகரமாக நேர்மையாக நடந்து முடிந்து மதுரோ தனது ஆட்சியை நிலைநிறுத்திக் கொண்டதை அமெரிக்க மேலாதிக்க கும்பலால் சகித்துக் கொள்ள முடியவில்லை.

தென் அமெரிக்கக் கண்டத்து நாடுகளில் அமெரிக்காவின் மேலாதிக்க நடவடிக்கைகளை உறுதியுடன் எதிர்த்து நிற்கும் நாடுகளில் முதன்மையானது வெனிசுலா ஆகும்.

2013 இல் மரணித்த வெனிசுலாவின் முன்னாள் அதிபர் ஹியூகோ சாவஸின் வழியில் தேசப் பொருளாதாரத்தைப் பாதுகாக்கும் வகையிலான திட்டத்தைத் தொடர்கிறார் தற்போதைய அதிபர் நிக்கோலஸ் மதுரோ (Nicolás Maduro).

ஏற்கெனவே தேர்தலில் வென்று உழைக்கும் மக்களின் ஆதரவுடன் ஆட்சி நடத்தும் நிக்கோலஸ் மதுரோ, சென்ற ஜூலை மாதம் மறு தேர்தலை எதிர்கொண்டார். ஜூலை 28 அன்று நடந்து முடிந்த தேர்தலில் அதுவரை எண்ணப்பட்ட 80 சதவிகித வாக்குகளில் 51 விழுக்காடு வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றுள்ளார் என்று தேசிய தேர்தல் கவுன்சில் (National Electoral Council) அறிவித்துள்ளது.

அவரை எதிர்த்துப் போட்டியிட்ட அமெரிக்க ஆதரவு கட்சியின் வேட்பாளர் எட்மன்டோ கன்சோலஸ் (Edmundo González) 44 விழுக்காடு வாக்குகள் பெற்று தோல்வியைத் தழுவினார். எனினும் இந்தத் தேர்தல் முறையாக நடக்கவில்லை என்றும் தேர்தல் ஆணையம் வெளியிட்ட முடிவுகள் மோசடியானவை என்றும் நிக்கோலஸ் மதுரோவின் வெற்றியை ஏற்க முடியாது என்றும் கூறி நாடு தழுவிய அளவில் தமது ஆதரவாளர்களைக் கொண்டு போராட்டங்கள் எனும் பெயரில் மக்கள் விரோதக் கலவரங்களை நடத்தி வருகிறார்.

தேர்தல் சமயத்தில் தாங்கள் தேர்தலுக்குப் பிந்திய கருத்துக் கணிப்பு நடத்தியதாகவும், அவற்றில் 84 சதவீதத்துக்கும் மேற்பட்ட இடங்களில் தாங்கள்தான் பெரும்பான்மை வாக்குகளைப் பெற்றிருந்ததாகவும் அமெரிக்க ஆதரவு கன்சோலஸ் கூறுகிறார். ஆனால் அதற்கு எந்த சான்றோ ஆதாரமோ அவர் வெளியிடவில்லை என்பது முக்கியமாகும்.

இவரது கருத்தை அப்படியே வழி மொழிகிறது அமெரிக்கா. இன்னும் தென்னமெரிக்காவின் பிரேசில், அர்ஜெண்டினா, கொலம்பியா, சிலி, உருகுவே, பனாமா உள்ளிட்ட பல நாடுகளும் அமெரிக்காவின் முடிவை ஆதரித்து நிற்கின்றன. பிரேசில் அதிபர் லூலா ஒருபடி மேலே போய் வெனிசுலாவில் மீண்டும் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று கூறுகிறார். இவ்வாறாக “வெளிர்நிற சோசலிசம்” மேலும் வெளுத்துக் கொண்டிருக்கிறது.

மேற்கு ஐரோப்பிய நாடுகள் பலவும் அவ்வாறே கூறி வருகின்ற நிலையில், பொலிவியா, நிகார குவா, கியூபா, ஹோண்டுராஸ், ஈரான், சீனா, ரஷ்யா, இந்தியா உள்ளிட்ட உலகின் பல நாடுகளும் இந்த தேர்தல் முடிவை ஏற்றுக்கொண்டு நிக்கோலஸ் மதுரோவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளன.


படிக்க: வெனிசுலா : அமெரிக்க தடைக்குக் குவியும் கண்டனங்கள் ! மவுனிக்கும் ஊடகங்கள் !


உண்மையில் தேர்தலில் முறைகேடுகள் நடந்தனவா இல்லையா என்பது குறித்தெல்லாம் அமெரிக்காவிற்குக் கவலையில்லை. இருபது ஆண்டுகளுக்கு முன்னர் ஈராக்கின் சதாம் உசேன் உலகத்தை பலமுறை அழிக்கவல்ல பேரழிவு ஆயுதங்களைக் குவித்து வைத்திருக்கிறார் என்ற பொய்ப் பிரச்சாரத்தை முன்னெடுத்து ஈராக்கின் மீது போர் தொடுத்து அம்மக்களை கொன்றழித்தது, அந்நாட்டை தனது மறுகாலனி ஆக்கிக் கொண்டது. அதேபோல் தான், வெனிசுலாவில் ‘தேர்தல் முறைகேடு’ ஜனநாயக படுகொலை என்ற பொய் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வெனிசுலாவில் தனது தலைமையில் ஒரு பொம்மையாட்சியை நிறுவத் துடிக்கிறது அமெரிக்க ஏகாதிபத்தியம்.

வெனிசுலாவில் தேர்தலில் வாக்குப்பதிவு இயந்திரம் பயன்படுத்தப்படுகிறது அனைத்து வாக்குச் சாவடிகளும் வாக்கு இயந்திரங்களும் இணையத்தின் வழியே தேர்தல் தேசிய கவுன்சில் (National Electoral Council) இணையதளத்துடன் இணைக்கப்பட்டுள்ளன.

வாக்காளர்கள் அங்க அடையாளங்களுடன் (biometric) பரிசோதிக்கப்பட்டு வாக்குச்சாவடிக்குள் நுழைந்து வாக்கு இயந்திரத்தில் தனது வாக்கைப் பதிவிடுகின்றனர் அது மின்னணுவாக்காக தேசிய தேர்தல் கவுசிலின் இணையத்தில் பதிவாகி விடுகிறது. உடனே வாக்குப் பதிவு இயந்திரம் அவரது வாக்கைக் குறிப்பிட்ட வேட்பாளர் பெயருடன் அச்சிட்ட துண்டு சீட்டை வெளியிடும். அதை வாக்காளர் எடுத்துப் பார்த்துவிட்டு வாக்கு பெட்டியில் போடுகிறார்.

இந்த நடைமுறைகள் முடிந்த பின் இறுதியில் மொத்த வாக்குப்பதிவு விவரங்கள் தேசிய தேர்தல் கவுன்சில் இணையத்தில் பதிவாகி இருக்கும். பின்னர் வாக்குப் பெட்டியில் உள்ள வாக்குச்சீட்டுகள் சேகரிக்கப்பட்டு எண்ணப்பட்டு இரண்டையும் ஒப்பிட்டுப் பார்த்து முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன

ஏதேனும் குறிப்பிட்ட வாக்குச்சாவடியில் பிழையோ தவறுகளோ நடந்திருப்பின் அவை மறுபரிசீலனைக்கு உட்படுத்தப்படும்.

இங்கே ஒரு அம்சத்தைக் கவனிக்க வேண்டும். இந்தியாவில் மின்னணுவாக்கையும் வாக்குச்சீட்டு முடிவையும் ஒப்பிட்டுப் பார்க்கும் வகையில் விவி பேட் (VVPAT) வெளியிடும் துண்டுச்சீட்டை வாக்காளர் கையில் எடுத்து வாக்குப் பெட்டியில் போடும் நடைமுறைக்காக பிரசாந்த் பூஷன் போன்ற வழக்குரைஞர்கள் உச்ச நீதிமன்றத்தில் எவ்வளவோ எடுத்துக் கூறினர். உச்ச நீதிமன்றம் இறுதி வரையிலும் வாக்குச்சீட்டு இயந்திரத்தையோ தேர்தல் ஆணையத்தையோ சந்தேகிக்கும் எதையும் தாம் ஏற்க முடியாது என்று கூறி  மறுத்துவிட்டது என்பதை இந்த இடத்தில் நினைவுபடுத்திப் பார்க்கலாம்.


படிக்க: வெனிசுலா குறித்து தி இந்துவில் ஒரு அபத்தக் கட்டுரை | கலையரசன்


இவ்வகையில் நேர்மையாக நடத்தப்பட்டிருக்கும் வெனிசுலா தேர்தலில் எந்த மோசடிக்கும் அடிப்படையே இல்லை. இதில் நூறு சதவிகிதம் வெளிப்படைத்தன்மை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. எனவே தான் எதிர்க்கட்சியினர் தேர்தல் முடிவுகளை ஏற்கெனவே அறிந்து கொண்டவர்களாகத் தேர்தல் நடந்து கொண்டிருக்கும் அன்றே நாடு முழுவதிலும் போராட்டங்களையும் நாச வேலைகளையும் கலவரங்களையும் தொடங்கிவிட்டனர்.

இதற்காக ஆறு மாதங்களுக்கு முன்னரே கொலம்பியா நாட்டிலிருந்து கூலிப்படையினர் இறக்கி வரப்பட்டனர். வெனிசுலா தேர்தலில் நேரில் பார்வையிட்ட சர்வதேச பார்வையாளரான போஜன் டாபிக்கா தனது நேரடி அனுபவத்தைக் குறிப்பிடும்போது, “சர்வதேசப் பார்வையாளர்களின் வாகனங்களை 50-க்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிளில் வந்த குண்டர் படையினர் வழிமறித்தனர். பாதுகாப்புப் படையினரின் துரித நடவடிக்கைகளால் கூலிப்படையின் முயற்சிகள் முறியடிக்கப்பட்டு நாங்கள் மாற்றுப் பாதையில் தங்குமிடங்களைச் சென்றடைந்தோம்” என்று வெனிசுலா தேர்தலில் வெளிநாட்டுக் கூலிப்படைகளின் ஆதிக்கத்தைப் பற்றிக் குறிப்பிடுகிறார்.

மேலும், மேற்குலக ஊடகங்களோ தங்கள் தரப்பு வேட்பாளரை வெற்றி பெறச் செய்யும் நோக்கில் நேர்மறை பிரச்சாரம் எதிலும் ஈடுபடவில்லை. மாறாக, தேர்தலை சீர்குலைக்க மட்டுமே முயற்சிகளை மேற்கொண்டன.

தங்களது பல்வேறு சதித்திட்டங்களையும் மீறித் தேர்தல் வெற்றிகரமாக நேர்மையாக நடந்து முடிந்து மதுரோ தனது ஆட்சியை நிலைநிறுத்திக் கொண்டதை அமெரிக்க மேலாதிக்க கும்பலால் சகித்துக் கொள்ள முடியவில்லை. அதனால் தான் அமெரிக்கா ஆதரவு ஊடகங்கள் வெனிசுலா தேர்தல் குறித்துத் தொடர்ந்து அவதூறு பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றன. அமெரிக்க மேலாதிக்க வெறி பிடித்த சமூக ஊடக நிறுவனமான எக்ஸ் தளம் (முந்தைய ட்விட்டர்) இந்த மோசடி பிரச்சாரத்தில் தன்னை நேரடியாகவே ஈடுபடுத்திக் கொண்டது.

மேலும், தேர்தலுக்கு முன்னதாகவே நிக்கோலஸ் மாதுராவை கொலை செய்யும் பல முயற்சிகளில் ஈடுபட்டுத் தோல்வியுற்றது அமெரிக்கா என்று அதன் கெடு நோக்கங்களை அம்பலப்படுத்துகின்றனர் சர்வதேச பார்வையாளர்கள்.

இவை அனைத்திற்கும் மேலாக, தேர்தல் முடிவுகளை எதிர்த்து எதிர்க்கட்சிகள் வெனிசுலாவின் உச்ச நீதிமன்றத்தில் தொடுத்திருந்த வழக்கை ஆகஸ்ட் 22 அன்று உச்ச நீதிமன்றமும் தள்ளுபடி செய்து விட்டது.

ஆனால் அதையும் ஏற்காமல், வெனிசுலாவின் இறையாண்மைக்கு எதிராக அமெரிக்காவும்  மேற்குலக ஏகாதிபத்திய நாடுகளும்  வெனிசுலா தேர்தல் முடிவுகளை ஏற்க மறுப்பது அப்பட்டமான காலனி ஆதிக்க மனோபாவம் ஆகும்.

வெனிசுலாவில் ஒரு சிறு மேட்டுக்குடி கும்பல் மட்டுமே அமெரிக்காவிற்கு ஆதரவாக இருக்கிறது. மதுரோ முன் வைக்கின்ற தற்சார்பு பொருளாதார கொள்கைகளை ஏற்காத பிரிவினரும் மதுரோவை எதிர்க்கவுமே செய்கிறார்கள். இந்த கும்பல்கள் அனைத்தையும் நிராகரித்து, மக்கள் மதுரோவின் ஆட்சிக்கு தமது ஆதரவைத் தொடர்ந்து வழங்கி வருகிறார்கள் என்பதே உண்மை.


ஆதி

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க