வெனிசுலா மீது ட்ரம்ப் தலைமையிலான அமெரிக்க நிர்வாகம் தொடர்ந்து முறைகேடான மற்றும் கடுமையான பொருளாதாரத் தாக்குதல்களைத் தொடுத்து வருவதை வல்லுனர்களும் பொருளாதார அறிஞர்களும் எச்சரித்து வருகின்றனர். ஆனால் ஊடகங்களோ அந்த எச்சரிக்கையை கண்டும் காணாமலும் இருக்கின்றன.

சான்றாக,”condemns US sanction” என்று மேற்கோளுடன் கூகுளில் தேடிப் பாருங்கள். வட கொரியா, ஈரான், வெனிசுலா, கியூபா மற்றும் இரசியா பொன்ற நாடுகள்தான் அமெரிக்காவின் பொருளாதார தடையை எதிர்ப்பதாக பல்வேறு முக்கிய ஊடகங்கள் கூறுவதை பார்க்க முடியும். மோசமான  நாடுகளை வாசிங்டன் தண்டிக்கிறது பதிலுக்கு அந்த மோசமான நாடுகள் குறை சொல்லுகின்றன – இது எளிமையான சிக்கலில்லாத ஒரு விளக்கம்.

வெனிசுலா மீதான அமெரிக்காவின் பொருளாதார தடைகளை ஐக்கிய நாடுகளுக்கான மனித உரிமைகள் அமைப்பு வெளிப்படையாக கண்டித்திருப்பது குறித்து கூகுளுக்கு தெரியாது போலும்.  இந்த தடைகள் ஏழைகளை மிகக் கடுமையாக பாதிக்கும் என்று அது கூறியிருந்தது.

பொருளாதாரத் தடையினால் சாமானிய மக்களுக்கு ஏற்படும் கடுமையான பாதிப்புகள் குறித்து தனிப்பட்ட முறையில் ஐக்கிய நாடுகள் அவையின் வல்லுனர்களும் பொருளாதார அறிஞர்களும் கூறியிருப்பதை எந்த ஊடகங்களும் முதல் பக்கத்திலோ அல்லது நடுப்பக்கத்திலோ போடுவதேயில்லை.

படிக்க:
♦ மேற்குவங்கம் : இடதுசாரிகளின் இறங்குமுகம் – புத்ததேவ் எச்சரிக்கை
♦ கவுரி லங்கேஷ் கொலை – சம்ஜவுதா எக்ஸ்பிரஸ் குண்டுவெடிப்பு : ஒரே குற்றவாளிகள் !

அமெரிக்காவின் பொருளாதாரத் தாக்குதல்கள் குறித்து சமீபத்தில் பேசியிருப்பவர் ஐ.நா வின் பொருளாதாரத் தடைகள் மற்றும் மனித உரிமைகளுக்கான பதிவரான இட்ரிஸ் ஜஸேரி(Idriss Jazairy).  பொருளாதாரத் தடைகள் மூலம் அமெரிக்கா ஆட்சி கவிழ்ப்பு செய்வதை அவர் கண்டித்தார். சாதாரண மக்களை பகடைக் காய்களாகவும் பணயக் கைதிகளாகவும் வாசிங்டன் மாற்றுகிறது என்று அவர் விமர்சனம் செய்தார்.  இது போன்ற தாக்குதல்கள் நேரடியாக அடிப்படை மனித உரிமையை தடுப்பதாகும். மேலும் இதை ஒரு ஏற்றுக்கொள்ளத்தக்க சர்வதேச உறவாகக் கருத முடியாது என்றும் கடுமையாக சாடியுள்ளார்.

வெனிசுலா மக்களின் மனித உரிமைகள் குறித்து அக்கறை கொண்ட பத்திரிக்கையாளர்களின் குரலாக இதை சிலர் கருதலாம். அப்படி இல்லை. எந்த ஒரு முக்கிய அமெரிக்க ஊடகமும் ஜஸேரியின் கண்டனத்தை பதிவு செய்யவில்லை.

ஆனால் வெனிசுலாவிற்கான ஐநாவின் முன்னால் பதிவரான அல்ஃப்ரெட் டி ஜயாஸிற்கு (Alfred de Zayas) சிறிது நல்ல நேரம் இருந்ததால் இங்கிலாந்து மற்றும் ஐரிஸ் பத்திரிகைகளில் அவரது கருத்துக்கள் இடம் பிடித்துள்ளன. அமெரிக்க பொருளாதார தடைக்கும் மரணத்திற்குமான நேரடி தொடர்பை எதிர்த்து அவர் பேசினார். இது குறித்து எந்தவொரு முக்கியமான அமெரிக்க பத்திரிகைகளும் பேசவில்லை. இதில் ஒரே மாதிரியான பாங்கு தென்படவில்லையா?

வெனிசுலா அதிபர் மதுரோ

அமெரிக்காவின் பொருளாதாரத் தடை எப்படி வெனிசுலாவின் 40,000 குழந்தைகளின் குறை மரணங்களுக்கு காரணமாக இருந்தது என்பதை மிக சமீபத்தில் பொருளாதார மற்றும் கொள்கை ஆராய்ச்சிக்கான மையத்தைச் (Center for Economic and Policy Research ) சேர்ந்த பிரபல பொருளாதார வல்லுனர்களான மார்க் வெய்ஸ்ப்ராட் மற்றும் ஜெஃப்ரி சேச்சஸ் இருவரும் தங்களது ஆய்வில் கண்டறிந்துள்ளனர். மேலும் ஜெனீவா மற்றும் ஹேக் கூட்டு ஒப்பந்தத்தின் ”மொத்த குடிமக்களுக்கான கூட்டு தண்டனைக்கு” பொருத்தமான விளக்கமாக இது இருக்கிறது என்றும் அந்த அறிக்கை கூறியது.

இந்த அறிக்கை பெரும்பான்மையான ஊடகங்களால் திட்டமிட்டே மறைக்கப்பட்டது. ஃபாக்ஸ் நியூஸ் இது குறித்து செய்தி வெளியிட்ட போதும் ”ட்ரம்ப் நிர்வாகத்தின் மீதான இடதுசாரி சிந்தனையாளர்களின் தாக்குதல்” என்று கூறி அந்த அறிக்கையை அது நிரகரித்தது.

பொருளாதார தடையை எதிர்த்து நோம் சோம்ஸ்கி உள்ளிட்ட 70 அறிஞர்கள் கையெழுத்திட்ட கண்டன அறிக்கையையும் பெரும்பாலான அமெரிக்க பத்திரிகைகள் கண்டுகொள்ளவில்லை.  மேலும் வெனிசுலாவில் மோசமடைந்து வரும் பொருளாதார நெருக்கடிக்கு அமெரிக்காவின் தடைகள் முக்கியமான ஒரு காரணம் என்று ஃபண்டலதின் (Fundalatin) எனும் பிரபலமான அரசு சாரா தொண்டு நிறுவனம் கூறுவதை யாரும் கோடிட்டுக் காட்டவில்லை.

நேர்மையான செய்திகளை சிறிதேனும் வெளியிடுவதற்குக் கூட நேர்மையற்ற ஊடகங்கள் இதை, ”அமெரிக்காவின் மென்மையான போக்கு” என்றும் ”போருக்குப் பதிலாக இந்நடவடிக்கைகள் பரவாயில்லை” என்றும் ”இது பணக்காரர்களை மட்டுமே பாதிக்கும்; ஏழைகளுக்கு நல்லது செய்யும்” என்றும் செய்தி பரப்பி வருகின்றன.

தவறான செய்தி பரப்புவதாகச் சொல்லப்படுவதையும் அவர்கள் விரும்பவில்லை.  அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினரான ஈலன் ஒமர் பலவீனமான வெனிசுலாவை அமெரிக்கா கொடுமைப்படுத்துவதை கடுமையாக எதிர்த்த்துடன் இது வெனிசுலாவின் பொருளாதாரத்தை பேரழிவுக்குள்ளாக்கும் என்று கடுமையாக சாடினார். சென்ற வாரம் அமெரிக்க ஊடகங்கள் மற்றும் அரசியல்வாதிகள் மத்தியில் இது பெரும் ஆத்திரத்தை உண்டாக்கியது.

படிக்க:
♦ வெனிசுலா – தண்ணீர் கிடைக்காமல் அல்லாடும் மக்கள் | படக்கட்டுரை
♦ வெனிசுலா: அமெரிக்காவின் அடுத்த ஆக்கிரமிப்புப் போர் !

ஆனால் இந்த எதிர்ப்புகள் வெறுமனே கருத்துக்களோ ஊகங்களோ மட்டுமல்ல. ஏற்கனவே நொடிந்து கொண்டிருக்கும் வெனிசுலாவின் பொருளாதாரத்தை மூச்சு திணற அடித்து பட்டினி போடும் அமெரிக்காவின் நடவடிக்கைகள் சட்டவிரோதமானது என்பது நடைமுறை உண்மை. ஊடகங்கள் என்னதான் கூச்சல் போட்டாலும் பொருளாதார தடை மக்களை கடுமையாக பாதிக்கும் என்ற எளிமையான உண்மையை மறைக்க இயலாது. அதாவது மக்களை பட்டினி போடுவது அதன் மூலம் வன்முறைகளை தூண்டுவது, ஆட்சியை கவிழ்த்து  வாசிங்டனுக்கான பொம்மை ஆட்சியை நிறுவுவது – இது அமெரிக்காவின் வழமையான ஒரு ஆட்சி கவிழ்ப்பு உத்தியாகும்.

இப்படி ஒரு கணம் எண்ணுங்கள். வெனிசுலா போன்ற சிரமத்திலிருக்கும் நாட்டின் மீது ஒருவேளை இரசியா இதுபோன்ற தாக்குதல் தொடுத்திருந்து அதை ஜயாஸ், ஜஸேரி, வெய்ஸ்ப்ராட் மற்றும் மற்றவர்கள் சாடினால் என்ன நடக்கும். அது சி.என்.என், எம்.எஸ்.என்.பி.சி மற்றும் ஃபாக்ஸ் நியூஸ் உள்ளிட்ட பத்திரிகைகள் முன்பக்கம் நடுபக்கம் என முடிவுறாமல் செய்தி வெளியிட்டு கூக்குரலிடும்.

இது போன்ற பொருளாதாரத் தடைகள் குறித்து சரியான செய்திகளை வெளியிடாததால் ஏற்பட்ட மோசமான விளைவுகள் குறித்து பத்திரிகை கண்காணிப்பு நிறுவனங்களான ஃபேர் (FAIR) மற்றும் மீடியா லென்ஸ் (Media Lens)  ஆகியவை அழுந்தக் கூறுகின்றன. ஆனாலும் இப்படி அப்பட்டமான நெறி பிறழ்ந்த ஊடகத்தன்மை முற்றிலும் எதிர்பார்க்ககூடியதுதான்.  பொதுவாகவே நெருக்கடிகளை பொய்யும் புரட்டுமாக காட்டும் தேசிய வெறியின் நீட்சிதான் இது.

வெள்ளை மாளிகையின் முன்பு வெனிசுலா ஆக்கிரமைப்பை எதிர்த்து அமெரிக்க மக்கள் நடத்திய போராட்டம்

அமெரிக்காவின் கருத்தாடல் இதழியல் குறித்த ஃபேர் ஆய்வின்படி ஜனவரி – ஏப்ரல் மாதங்களில் நியூயார்க் டைம்ஸ் அல்லது வாசிங்டன் போஸ்டில், அமெரிக்காவின் ஆட்சி கவிழ்ப்பு நடவடிக்கை குறித்து கருத்து பக்கத்தில் ஒரு செய்தி கூட வெளியாகவில்லை.  தொலைக்காட்சியிலும் பெரிய மாற்றம் எதுவும் இல்லை. வெனிசுலாவிற்கு எதிரான அமெரிக்க பத்திரிக்கைகளின் இந்நடவடிக்கைகளை “ஆட்சி மாற்றம் செய்வதற்கான ஒரு முழு அளவிலான பிரச்சாரம்” அல்லது வேறு சொற்களில் சொல்வதானால் ”போர் பிரச்சாரம்” என்றும் கூறலாம்.

ஹெய்தி, எல் சால்வடோர் போன்ற நாடுகளிலிருந்து அகதிகள் மற்றும் தெற்கு எல்லை வழியாக இலத்தீன் அமெரிக்கர்களும் படையெடுப்பதாக மோசமான கருத்திட்ட ட்ரம்ப்பை ஒரு தீய சக்தியாகக் காட்டிய ஊடகங்கள், இன்று ஒட்டுமொத்த அமெரிக்க நிர்வாகத்தையும் ஏதொ வெனிசுல மக்களுக்கு நன்மை செய்பவர்களாக காட்டி பல்டியடிக்கின்றன.  அமெரிக்க உயரதிகாரிகள் கூட அமெரிக்க கார்ப்பரேட் நிறுவனங்களுக்காக வெனிசுலாவின் எண்ணைய் வளத்தை அபகரிப்பது தான் தங்களுடைய திட்டம் என்று வெளிப்படையாக அறிவித்தும் கூட இந்த ஊடகங்கள் இப்படி செய்தி வெளியிடுவதை என்னவென்று சொல்ல.

அமெரிக்கத் தலையீடுகள், ஆட்சிக் கவிழ்ப்பு என்று வந்துவிட்டாலே பத்திரிகைகளின் நிலை இதுதான். குழப்பமான தேசியவாதம் பற்றி பேசினாலே ஜனநாயகவாதிகள், குடியரசுவாதிகள் அல்லது மொத்த ஊடகங்களும் சாட்டையால் அடிபட்டது போலத் துடிக்கிறார்கள்.

வெனிசுலாவின் மீது பொருளாதார தாக்குதலிலிருந்து அதை விட கொடுமையான போர் நடவடிக்கைகள் எடுப்பது குறித்து ட்ரம்ப் நிர்வாகம் கடந்த வாரம் ஆலோசித்திருகின்றது. போர் முரசுகளுடன் ஊடகங்கள்  கூக்குரலிடுவதை மீண்டுமொருமுறை நாம் கேட்கலாம்.


கட்டுரையாளர் : Danielle Ryan
தமிழாக்கம் : சுகுமார்
நன்றி : RT

 

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க