யற்கை வளங்கள் கொட்டிக்கிடக்கும் வெனிசுலா நாட்டில், மக்கள் இதுவரை தண்ணீர் பிரச்சினையையே பார்த்திராத நிலையில் அரசியல் ஸ்திரத்தன்மை நொறுங்கி அரசு உறுப்புக்கள் சிதைந்து கிடப்பதால் குடிக்கத் தண்ணீரின்றி தவித்துவருகின்றனர்.

மின் விநியோக நிலையங்கள் கடந்த சில மாதங்களாக திரும்பத்திரும்ப பழுதடைந்து வருவதாலும், சரிசெய்ய முடியாத நிலை நிலவுவதாலும், குடிநீரேற்றும் இயந்திரங்கள் செயல்படமுடியாமல் இருப்பதால் தண்ணீர் தட்டுப்பாடு நாடு முழுவதும் நிலவுகிறது.

மின்சாரத் தட்டுப்பாடு காரணமாக நிலவும் நெருக்கடி நிலையை, வெனிசுலா மக்கள் துணிவுடன் எதிர்கொண்டு வருகின்றனர். தண்ணீரைத் தேடி அலைந்து திரிந்து, மலைப்பகுதிகளில் வழியும் நீர், பழுதடைந்த குழாய்களில் வரும் நீர், அரசாங்க லாரிகளின் மூலம் கிடைக்கும் தண்ணீர், தலைநகர் கராகஸ்-இல் ஓடும் குவைரே நதியில் வழிகின்ற தண்ணீர் என நீர் எங்கு கிடைத்தாலும் பயன்படுத்த ஆரம்பித்துள்ளனர். கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை என்பதுபோல, இயற்கை தண்ணீரை அள்ளிக்கொடுத்தாலும், நாட்டில் நிலவும் அரசியல் ஸ்திரமற்ற தன்மை இவர்களை அலைகழித்து வருகிறது.

நாட்டில் ஏழ்மையான பகுதிகளில் வசித்துவரும் மக்கள்கூட பல வருடங்களாக  தண்ணீர் தட்டுப்பாட்டைப் பார்த்திராத நிலையில், இப்போது தண்ணீர் பிரச்சினையால் கடும் அவதிக்குள்ளாகிவருகின்றனர்.

மலைப்பகுதியிலிருந்து வழியும் சுத்தமான நீரைப் பிடிக்கக் காத்துக்கொண்டிருக்கிறேன். கடுமையான மனப்புழுக்கத்திலிருக்கிறேன் ஆனால் சமாளிப்பதைத் தவிர வேறுவழியில்லை என்கிறார் லூயிஸ்.

70 வயதான முதியவர் கார்மென் கூறும்போது ‘இன்று நான் மிகவும் சோர்வாக இருக்கிறேன். காரணம் என் வயதல்ல, தண்ணீர் தட்டுப்பாடு, மின் தட்டுப்பாடு இவையெல்லாம் சேர்ந்து என்னை முடக்கி வைத்துவிட்டன.’ உலகின் மிகப்பெரிய சேரிப்பகுதிகளில் ஒன்றான பிட்டாரே என்ற இடத்தில் இவர் வசித்து வருகிறார்.

வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ, எதிர்க்கட்சிகள் மின் நிலையங்களை இயங்கவிடாமல் முடக்கிவைத்ததுதான் பிரதான காரணம் என்கிறார். எதிர்க்கட்சித் தலைவர் ஜுவன் குவைடா ஆளுங்கட்சியின் நிர்வாகத் திறமையின்மையே இதற்குக் காரணம் என்கிறார். குவைடா அமெரிக்காவின் ஆசிபெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தலைநகர் கராகஸ்-ல் மட்டும் ஒரு  நொடிக்கு 20,000 லிட்டர் தண்ணீர் தேவை இருக்கும் நிலையில், மின் பகிர்வு நிலையங்களை இயங்கவிடாமல் தடுக்கின்றன அமெரிக்க ஆதரவு பெற்ற எதிர்க்கட்சிகள். ஏற்கெனவே நிலவிவரும் அரசியல் பொருளாதார ஸ்திரமற்ற சூழ்நிலையில் தண்ணீர் பிரச்சினையும் சேர்ந்திருப்பது மக்களை மேலும் மன உளைச்சலில் தள்ளியுள்ளது.

தலைநகர் கராகஸ்-ல் தண்ணீர் தட்டுப்பாடு நிலவிவருவதைக் கண்டித்து போராடும் மக்கள்.

கடந்த ஒரு மாதமாகவே தண்ணீர் சிக்கலை எதிர்கொண்டு வருகிறோம். நெருக்கடி நிலைக்கு முன்பே தண்ணீர் பிரச்சினை ஆரம்பித்துவிட்டது – யொலாண்டா.

கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் வெனிசுலா மக்களின் மேல் அடுத்த இடியாக தண்ணீர் பிரச்சினையும் சேர்ந்து கொண்டுள்ளது.

நீரின்றி வாழப் பழகு என்பது தான் இப்போது வெனிசுலா மக்களுக்கான நியதியாகிவிட்டது. கடும் போராட்டத்திற்குப் பிறகுதான் இங்கு தண்ணீர் கிடைக்கிறது.

27 வருடங்களாக தண்ணீரை வீட்டிற்கு வெளியிலிருந்துதான் எடுத்து வருகிறேன். அக்கம் பக்கத்தில் உள்ளவர்களுக்கும் என் நிலைதான் என்கிறார் இந்தப் பெண்.

இது நாள் வரை என் வீட்டில் தண்ணீர் தாராளமாக கிடைத்துக் கொண்டிருந்தது. இப்போது சொட்டுத் தண்ணீர் கூட கிடைக்கவில்லை. ஒரு மாத காலமாகத் தண்ணீரின்றி தவித்துவருகிறேன் – கார்மென் – வயது 74.

தண்ணீர் கிடைக்கும் போது அதைக் கவனமாகச் சேர்த்து வைத்துக் கொள்ளும் வெனிசுலா மக்கள்.

உடல்நலம் பாதிக்கப்பட்டவன் நான். கடந்த 18 நாட்களாக தண்ணீரின்றி அவதிப்பட்டேன். மலை உச்சியில் வசிக்கும் நான் வீட்டில் தண்ணீர் கிடைக்காத பட்சத்தில், கீழிறங்கி வந்து தண்ணீர் பிடித்துச்செல்ல வேண்டும் – ஜூலியோ – வயது 65.

காலை 7 மணியிலிருந்து தண்ணீர் பிடிக்க ஆரம்பிப்பேன். கடந்த இரு மாதங்களாகத் தண்ணீரின்றி அவதிப்பட்டு வருகிறோம். என் வீட்டில் மொத்தம் 7 பேர், கழிவறை, சமையலறை மற்றும் வீட்டு உபயோகத்திற்கு தண்ணீர் அத்தியாவசிய தேவையாயுள்ளது – ஜுவன் – வயது 41

எங்கள் நாட்டின் நிலைமை மிகவும் மோசமாகிவிட்டது. எல்லா வளங்களும் இருந்தாலும், எதையும் அனுபவிக்க முடியாத நிலைதான் உள்ளது. அமெரிக்கா உட்பட ஆதிக்க நாடுகள் எங்களைச் சுரண்டி அழிப்பதை கேட்க நாதியற்றுக் கிடக்கிறோம் – அசேல் பட்டியாஸ் – வயது 44.

கிடைக்கும் சொற்ப தண்ணீரும் சுத்தமானதாக இல்லை.


கட்டுரையாளர் : Elizabeth Melimopoulos
தமிழாக்கம்: வரதன்
நன்றி: aljazeera 

2 மறுமொழிகள்

  1. அமெரிக்கா ஆதரவும் அந்நாட்டிற்கு அடிபனிந்தும் அந்நாட்டின் கார்பரேட் எண்ணெய் வியாபாரத்தை பொது உடமை ஆக்காமல் மதுரே ஆட்சி செய்திருந்தால் வெணிசுலா விற்கு இந்த கஷ்டம் வந்திருக்காது அப்படித்தானே

  2. எல்லாவற்றையும் அரசுடைமை ஆக்கி, நிர்வாக சீர்கேட்டின் மூலமாக வெனிசுலா இந்த நிலைமையை அடைந்துள்ளது. ஆனாலும் கம்யூனிசம் தான் உலகின் சிறந்த கொள்கை. இந்த உலகில் ஏற்ற தாழ்வு இல்லாமல் இருக்க முடியாது என்பதை ஏற்றுக்கொள்ளாமல், நிலைமையை உணராமல் கம்யூனிஸ்ட்களின் சர்வாதிகார போக்கே இதற்க்கு காரணம்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க