தமிழக தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழகம் முழுவதும் அரசியல் கட்சிகளின் தேர்தல் பிரச்சாரமும் கூட்டணி பேச்சுவார்த்தைகளும் பரபரப்பாகப் பேசப்படுகின்றன. யாருக்கு எத்தனை தொகுதி, எந்தக் கட்சியுடன் கூட்டணி, எந்தக் கட்சிக்கு எதிராக எந்தக் கட்சியை நிறுத்துவது என அன்றாடம் செய்தி ஊடகங்களும் ஆருடம் பார்க்கத் துவங்கிவிட்டன.
இந்தப் பிரச்சாரங்களோடு வாக்களிப்பது ஜனநாயகக் கடமை என்றும், தேர்தலில் பணம் வாங்காமல் நேர்மையாளர்களைத் தேர்ந்தெடுப்பதுதான் சரியானது என்றும் பிரச்சாரங்கள் தொடங்கிவிட்டன. தேர்தல் ஆணையம் துவங்கி ’பொதுநலன் கருதி’ தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் வரை இந்தப் பிரச்சாரத்தைத் துவங்கிவிட்டன.
படிக்க :
♦ கர்நாடகா – 116 க்கும் 104 க்கும் இடையில் …
♦ பீகார்: நிதீஷ் குமாரின் வெற்றியும் ஜனநாயகத்தின் அழுகுணியாட்டமும்!!
தேர்தல் முடிவுகள் வரும்வரை கட்சிகள் பதைபதைக்கும் காலம் எல்லாம் மலையேறி, தேர்தலில் வெற்றி பெற்ற பிறகும் பெரும்பான்மை பெற்ற கட்சி ஆட்சியில் அமர்வதற்கு முன்னால் எம்.எல்.ஏ.க்களை சொகுசு பங்களாக்களிலும் ரிசார்ட்டுகளிலும் அடைத்து வைக்கும் உன்னத நிலைக்கு இந்திய ஜனநாயகம் கடந்த 7 ஆண்டுகளில் சந்தி சிரித்துவிட்டது.
இன்றைய நிலையில் பாஜக-வைத் தவிர எந்தக் கட்சியுமே எவ்வளவு பெரும்பான்மை பெற்றிருந்தாலும் ஆள முடியாது என்ற நிலையில்தான் நிலைமைகளை ஏற்படுத்தி வைத்திருக்கிறது பாஜக. கடந்த 7 ஆண்டுகளில் மட்டும் பல மாநிலங்களில் பெரும்பான்மை பெற்ற கட்சிகளின் ஆட்சியைக் கவிழ்த்து தனது கைகளில் ஆட்சியைத் தக்கவைத்துக் கொண்டது.
கடந்த 2014-ம் ஆண்டு அருணாச்சலப் பிரதேசத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. 60 தொகுதிகளைக் கொண்ட அருணாச்சல பிரதேசத்தில் 42 இடங்களை காங்கிரஸ் வென்று ஆட்சியை பிடித்தது. பாஜக 11 எம்.எல்.ஏ.க்களை மட்டுமே கொண்டிருந்தது. 2016-ம் ஆண்டில் காங்கிரஸ் கட்சியின் 40 எம்.எல்.ஏக்களுடன் அக்கட்சியில் இருந்து வெளியேறி “மக்கள் கட்சி” எனும் புதிய கட்சியை துவங்கினார் பெமா காண்டு. அந்த கட்சி பின்னர், பாஜக-விற்கு ஆதரவு என மாறியது. காங்கிரஸ் ஆட்சி கவிழ்க்கப்பட்டது.
இங்கு கவனிக்க வேண்டிய முக்கிய விசயம் ஒன்று இருக்கிறது. காங்கிரசும் பாஜக-வும் சம அளவில் தொகுதிகளை வென்று சரிக்கு சமமாக இருக்கும் சூழலில் இந்த ஆட்சிக் கவிழ்ப்பு நடைபெறவில்லை. 11 சீட்டுகள் மட்டுமே கொண்ட பாஜகவால் ஆட்சி அமைத்திருக்க முடியும் என காங்கிரஸ் கட்சி கனவில் கூட நினைத்துப் பார்த்திருக்காது. ஆனால், அது நடந்தது. இங்கு பாஜக-வுக்கு எதிராக வாக்களித்த பெரும்பான்மையான அருணாச்சலபிரதேச மக்களின் வாக்குகள் குப்பைத் தொட்டிக்கு வீசப்பட்டன.
மணிப்பூரில் கடந்த 2017-ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. அதில் 28 இடங்களில் காங்கிரஸ் பெற்றது. 21 எம்.எல்.ஏக்களை மட்டுமே பாஜக கொண்டிருந்தது. நாகா மக்கள் முன்னணி, தேசிய மக்கள் கட்சி, லோக் ஜன சக்தி, சுயேச்சியுடன் கூட்டணியமைத்து குறைவாக இடங்களை பிடித்திருந்தாலும் குதிரை பேரம் நடத்தி ஆட்சியை கைப்பற்றியது பாஜக.
அடுத்தது, மேகாலயாவில் கடந்த 2018-ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. 21 இடங்களை காங்கிரஸ் வைத்திருந்தது. தேசிய மக்கள் கட்சி 19 இடங்கள் வைத்திருந்தது. வெறும் 2 இடங்களை மட்டுமே பாஜக வைத்திருந்தது. தேசிய மக்கள் கட்சியை விலை பேரத்தால் இணைத்துக் கொண்டு அங்கு ஆட்சியை பிடித்தது பாஜக.
சிக்கிம் மாநிலத்தில் கடந்த 2019-ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. அதில் பாஜக ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை. ஆனால், சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா கட்சியுடன் விலைபேரத்தில் இணைந்து ஆட்சியை பிடித்தது பாஜக.
மத்திய பிரதேசத்தில் 2018-ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. இதில் காங்கிரஸ் 114 இடங்களை பெற்றது. 121 ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் ஆதரவுடன் கூட்டணி ஆட்சியை அமைத்தது. பாஜக 109 இடங்களை பெற்றிருந்தது. காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் 29 பேரையும் விலைக்கு வாங்கி இரண்டே ஆண்டில் காங்கிரஸ் ஆட்சியை கவிழ்த்தது பாஜக.
பீகார் மாநிலத்தில் கடந்த 2015-ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைப்பெற்றது. அதில் ஐக்கிய ஜனதா தளம் 80 இடங்களிலும், ராஷ்டிரிய ஜனதா தளம் 71 இடங்களிலும் வெற்றி பெற்று கூட்டணி ஆட்சி அமைத்தது. பாஜக 53 இடங்களை பெற்றிருந்தது. மோடி அமித்ஷா கும்பல் நடத்திய பேரம் படிந்ததும், இரண்டே ஆண்டுகளில் முதல்வர் நிதிஷ்குமார், லல்லுவுடனான தமது கூட்டணியை ரத்து செய்துவிட்டு பதவி விலகினார்.
அதன் பிறகு 53 இடங்களைப் பெற்ற பாஜக-வில் இணைந்து கூட்டணி அமைத்து பாஜக-வின் எடுபிடியாக மாறினார். பாஜகவை வெறுத்து ஒதுக்கிய பீகார் மக்களின் விருப்பத்திற்கு எதிராகவே பாஜக-வை கூட்டணி ஆட்சியில் பங்கேற்கச் செய்து மக்களுக்கு துரோகம் இழைத்தார் நிதிஷ்குமார்.
ஜம்மூ காஷ்மீர் மாநிலத்தில் கடந்த 2015-ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. இதில் மக்கள் ஜனநாயக கட்சி 28 இடங்களை பெற்றது. பாஜக 25 இடங்களை பெற்றது. தேசிய மாநாடு கட்சி 15 இடங்களை பெற்றது. மக்கள் ஜனநாயக கட்சியுடன் விலைபேரத்தில் இணைந்து பாஜக கூட்டணி ஆட்சி அமைத்தது. முதலமைச்சர் 2016 ஏப்ரலில் இறந்த பிறகு அவர் மகள் மெகபூபா முப்தி முதல்வரானார். முப்தி பாஜகவிற்கு இசைவு கொடுக்காததால், கூட்டணியில் இருந்து விலகியது பாஜக. அதன்பின் முப்தி ஆட்சியை கவிழ்த்தது பாஜக.
கோவாவில் கடந்த 2017-ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் 17 இடங்களில் காங்கிரஸ் பெற்றது. 13 இடங்களை பாஜக பெற்றது. பிற கட்சிகளின் எம்.எல்.ஏக்களை விலைக்கு வாங்கி 27 தொகுதிகளை கொண்ட ஆட்சியை அமைத்துள்ளது பாஜக.
இங்கு நடந்த இந்த போங்காட்டம் மிகவும் அருவெறுப்பானது. பொதுவாக ஆளுநர்கள் ஒரு மாநிலத்தில் யாரை ஆட்சியமைக்க அழைப்பார்கள்? யார் எந்தக் கட்சி அதிக இடங்களை வென்றிருக்கிறதோ அந்தக் கட்சியைத் தானே அழைப்பார்கள். எந்த ஊரிலும் இல்லாத நடைமுறையாக குறைவான தொகுதிகளை வென்ற பாஜக-வை ஆட்சியமைக்க அழைத்தார் கவர்னர்.
கர்நாடகாவில் கடந்த 2018-ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. அதில் 104 இடங்களை பாஜக பெற்றது. காங்கிரஸ் 80 இடங்கள் பெற்றது. மதச்சார்பற்ற ஜக்கிய ஜனதா தளம் 37 இடங்கள் பெற்றது. மதச்சார்பற்ற ஐக்கிய ஜனதா தளமோ, காங்கிரசோ பாஜக-வுடன் கூட்டணி வைக்க விரும்பவில்லை. அதன் காரணமாக பாஜகவால் பெரும்பான்மை நிரூபிக்க முடியவில்லை. அதன் பின்னர், காங்கிரஸ் – மதசார்பற்ற ஜனதா தளம் கூட்டணி ஆட்சி அமைந்தது. அடுத்த ஒரு ஆண்டிலேயே 16 காங்கிரஸ் எம்.எல்.ஏக்களை விலைக்கு வாங்கி குமாரசாமி ஆட்சியை கவிழ்த்தது பாஜக.
புதுச்சேரியில் 2016-ல் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. 15 இடங்களில் காங்கிரஸ் பெற்றது. திமுக ஆதரவுடன் ஆட்சியை அமைத்தது. 5 ஆண்டு ஆட்சி முடிய இன்னும் இரண்டு மாதங்களே உள்ள நிலையில், காங்கிரஸின் 6 எம்.எல்.ஏக்களை விலைக்கு வாங்கி நாராயணசாமி ஆட்சியை கவிழ்த்தது பாஜக.
மக்கள் எந்தக் கட்சிக்கு ‘தாலி கட்டினாலும்’ சரி, குடும்பத்தை நான் தான் நடத்துவேன் என்று கீழ்த்தரமான அரசியலை இந்தியா முழுவதும் நடத்தி வருகிறது பாஜக. இப்படி மாநிலங்களில் தங்களுக்குச் சாதகமான ஆட்சியை கொல்லைப்புறம் வழியாக ஏற்படுத்திக் கொள்வதன் மூலம் ‘ஜனநாயகமாவது ஐகோர்ட்டாவது’ என மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள ‘ஒரே உரிமையான’ வாக்குரிமையையும் கேலிக் கூத்தாக்கியிருக்கிறது.
படிக்க :
♦ மாநில தேர்தல்கள் : சுருங்குகிறதா பாஜகவின் சாம்ராஜ்ஜியம் ?
♦ ஆன்டி இன்டியன்ஸ் வாக்குகள் தேவை இல்லை | பாஜக தேர்தல் அறிக்கை
இத்தகைய ஒரு பேரம் எதுவும் அவசியமில்லாமல் வருமானவரித் துறையை வைத்தே சில பல மாநிலங்களில் ஆட்சியை தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்திருக்கிறது பாஜக. அதில், நமது தமிழகமும் அடக்கம். அடிமை எடப்பாடி அரசு பாஜக-வின் கைப்பாவையாக இருப்பதன் மூலமே இதுவரையில் தமது இருப்பை தக்க வைத்து வந்திருக்கிறது.
ஆனால், இதில் உள்ள ஒரு கொடுமை என்ன தெரியுமா ? திரைமறைவு குதிரை பேரங்கள் தவிர்த்து பிற அனைத்து ஆட்சிக் கவிழ்ப்புகளும் மக்களின் அங்கீகாரம் பெறாத கட்சிகள் அமைக்கும் ஆட்சியும் சட்டப்படிதான் அரங்கேற்றப்படுகின்றன.
இப்படிப்பட்ட மக்கள் விரோதமான – மக்களின் ஜனநாயகத்தை மறுக்கின்ற நடைமுறைக்குப் பெயர்தான் தேர்தல் ஜனநாயகம். இதை மக்களை ஏய்க்கின்ற போலி ஜனநாயகம் என்று கூறுவதற்கு இதுவும் ஒரு காரணம்தான்.
சந்துரு
நன்றி : தினகரன் 24-2-2021.