கடந்த 2014-ம் ஆண்டில் நரேந்திர மோடி மையத்தில் ஆட்சிக்கு வந்தவுடன், பாரதீய ஜனதா கட்சி அரியானா, மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் சட்டமன்றத் தேர்தல்களில் வெற்றிகளைப் பதிவு செய்தது. மோடி -அமித் ஷா தலைமையில் அதன் வெற்றி அணிவகுப்பு டெல்லி மற்றும் பீகாரைத் தவிர்த்து பல மாநிலங்களில் தொடர்ந்தது. 2018 வாக்கில், பாஜக 21 மாநிலங்களில் தனித்தோ அல்லது ஒரு மாநில கட்சியுடனோ கூட்டணி சேர்ந்து ஆட்சியில் இருந்தது.
ஆனால் இராஜஸ்தான், மத்தியப் பிரதேசம் மற்றும் சத்தீஸ்கர் ஆகிய மூன்று முக்கியமான இந்தி – பசு வளைய மாநிலங்களை காவி கட்சி இழந்தது. கர்நாடகத்தில் ஒற்றை மிகப்பெரிய கட்சியாக அதிக இடங்களைப் பெற்றிருந்தபோதும், காங்கிரஸ் – ஜனதா தளத்தின் (மதச்சார்பற்ற) தேர்தலுக்கு பிந்தைய கூட்டணி பாஜக அரசாங்கம் அமைப்பதைத் தடுத்தது. இருப்பினும், காங்கிரஸ் மற்றும் ஜே.டி (எஸ்) ஐச் சேர்ந்த 15 க்கும் மேற்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களை பாஜக விலை பேசி வாங்கியதால், எச்.டி. குமாரசாமி அரசாங்கம் கவிழ்ந்தது. ‘ஆபரேஷன் லோட்டஸ்’ என்னும் அமித் ஷாவின் குதிரை பேர ஃபார்முலாவைக் கொண்டு பாஜகவின் பி. எஸ். எடியூரப்பா முதலமைச்சர் ஆனார்.
இது நாடாளுமன்ற தேர்தலில் எதிரொலிக்கும் என ஆரூடம் கூறப்பட்ட நிலையில், 2019 தேர்தலில் மோடி பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சியில் அமர்ந்தார். ஆனால், சட்டமன்றத் தேர்தல் என வரும்போது பாஜக தனது மாநில சட்டமன்ற ஆட்சிகளை தக்க வைக்க பெரும்பாடு படவேண்டியிருந்தது. அரியானாவில், அது பெரும்பான்மை அரசாங்கத்தை அமைப்பதற்கு புதிதாக உதயமான ஜனநாயக ஜனதா கட்சியிடம் கையேந்த வேண்டிய நிலைக்கு வந்தது.
அதே நேரத்தில் மகாராஷ்டிராவில் அதன் நீண்ட கால நட்பான சிவசேனாவுடன் புரிந்துணர்வை எட்டத் தவறியதால் ஆட்சியமைக்கும் வாய்ப்பை தவறவிட்டது. அல்லது இப்போதைக்கு கர்நாடக பாணியில் விட்டுக்கொடுப்பதுபோல விட்டுக்கொடுத்து, பின்னர் கொத்தாக மாற்றுக்கட்சி எம்.எல்.ஏ.க்களை வாங்கி ஆட்சியமைக்கும் திட்டமும் இருக்கலாம்.
எனினும் மகாராஷ்டிராவில் பாஜக ஆட்சியை இழந்திருக்கும் நிலையில், இந்திய அரசியல் வரைபடம் மார்ச் 2018-ல் இருந்ததைவிட கணிசமாக வேறுபட்டதாகத் தெரிகிறது. தற்போது கர்நாடகா, உத்தரகண்ட், இமாச்சலப் பிரதேசம், உத்தரபிரதேசம், ஜார்க்கண்ட் , குஜராத், அருணாச்சல பிரதேசம் மற்றும் திரிபுரா ஆகிய மாநிலங்களில் மட்டுமே பாஜக பெரும்பான்மை நிலையில் உள்ளது. அதாவது, நட்பு கட்சிகள் வெளியேறினாலும், காவிக் கட்சியால் ஆட்சி அதிகாரத்தை தக்க வைத்துக் கொள்ள முடியும். இந்த எட்டு மாநிலங்களைத் தவிர, மற்ற மாநிலங்களில் பாஜக அதிகாரத்தைத் தக்க வைத்துக் கொள்ள அதன் நட்பு கட்சிகளையே முழுவதுமாக சார்ந்துள்ளது அல்லது பிராந்திய கட்சிகளுக்கு உதவிக் கொண்டிருக்கிறது.
படிக்க:
♦ பாபர் மசூதி – இறுதித் தீர்ப்பு ? முடிவல்ல – தொடக்கம் ! – அரங்கக் கூட்டம்
♦ நூல் அறிமுகம் : நான் இந்துவல்ல நீங்கள் … ?
அரசாங்கத்தில் இருக்கும் 16 மாநிலங்களில் 11 மாநிலங்களில், சட்டசபையில் 100-க்கும் குறைவான வலிமையுடனே உள்ளது. எனவே, அது பாஜக-வின் பெரிய வெற்றிகளின் பட்டியலில் வைக்க முடியாது.
சட்டப்பேரவை தேர்தல்களில் பாஜக இறங்கு முகத்தில் இருந்தாலும், மத்தியில் பெரும்பான்மையுடன் ஆட்சியில் இருப்பதால், தனது ஆட்சியதிகாரத்தைப் பயன்படுத்திதான் ஆட்சி செய்யாத மாநிலத்தையும் ஆட்டி வைக்க முடியும். உதாரணம், தமிழகம். நேரடியாக பாஜக ஆட்சியில் இல்லை என்றாலும், தமிழகத்தை ஆளும் அதிமுக அரசு, பாஜகவின் சித்தாந்தங்களை செயல்படுத்தும் அரசாகவே மக்களுக்கு துரோகமிழைத்துக் கொண்டிருக்கிறது. ஆளும் அரசு மீதான தனது பிடியை அவர்களின் முறைகேடுகளைக் காட்டி மிரட்டி இறுக்கிக்கொண்டுள்ளது பாஜக.
அதுபோல, ஆந்திரா, தெலுங்கானா, ஒடிசா மாநிலங்களில் பாஜகவுடன் கூட்டணியில் இல்லை என்றாலும், அம்மாநில அரசுகள் பாஜகவுடன் இணக்கமாகவே நடந்துகொள்கின்றன. பாஜகவின் மக்கள் விரோத திட்டங்களை, நீதித்துறை, சிபிஐ, ஆர்பிஐ என அரசின் அமைப்புகளை குலைக்கும் நடவடிக்கைகளுக்கு அவை சிறிய கண்டனத்தைக்கூட தெரிவிப்பதில்லை.
படிக்க:
♦ 21-ம் நூற்றாண்டின் மிகப்பெரிய பிரச்சினை !
♦ காலாவதியான தேர்தல் பத்திரங்கள் : விதிகளைத் தளர்த்திய நிதியமைச்சகம் !
உச்சநீதிமன்றம் பாபர் மசூதி நிலப்பிரச்சினையில் ஒருதலைப்பட்சமாக தீர்ப்பு எழுதியபோது, கிட்டத்தட்ட அனைத்து மாநில, தேசிய கட்சிகளும் அதை வரவேற்றன. எதிர்க்கட்சியாக கூறிக்கொள்ளும் காங்கிரசும் இதில் அடக்கம்.
எனில், தேர்தல் அரசியல் மூலமாக பாஜகவையும் அதன் பாசிச விசத்தையும் முறித்து விட முடியும் என நினைக்க முடியுமா? இந்தியாவை அனைத்து தரப்பினரும் ஏற்றுக் கொள்ளும்படியான – இந்துத்துவ பாசிசமயமாக்கியிருக்கும் பாஜகவை தேர்தல் அரசியலில் வென்றுவிட முடியும் என நினைப்பது வெறும் பகல் கனவு.
கலைமதி
நன்றி : த வயர்.