லகமயமாக்கல் என்ற பேரில் பன்னாட்டு மூலதனம் தருகின்ற நெருக்கடியில் எளிய மக்களின் வாழ்க்கை துவண்டு போய்க் கிடக்கின்றது. இந்த நேரத்தில் மக்களின் கவனத்தைத் திசை திருப்புவதற்காக மற்றொரு பக்கத்தில் இந்து அடிப்படைவாதிகள் ஆரவாரக் கூச்சல் இடுகிறார்கள். ‘இந்து’ என்ற சொல்லும் அதனடிப்படையும் வெகு மக்களுக்கு எதிரானவை. ஆனால் படித்த நகர்ப்புறம் சார்ந்த, வறுமைக்கோட்டினை அடுத்து இருக்கின்ற மக்கள் ‘இந்து’ என்ற சொல்லில் ஏமாந்து போகிறார்கள். கிறித்தவர் என்பது போல இசுலாமியர் என்பது போல ‘இந்து’ என்பதும் ஒரு அடையாளம் என்று நினைக்கின்றனர். ஆனால் பெருவாரியான மக்களுக்கு சாதி என்னும் கொடுமையான அடையாளம் தான் உண்மையானதாக இருந்து வந்திருக்கிறது. மத அடையாளம் எல்லாம் மேல் சாதிகளுக்குத்தான். இந்து அடையாளம் குறித்து சில பேராசிரியர்களிடம் கருத்துக் கேட்டோம். அவர்கள் தந்த விளக்கம்தான் இந்த சிறு வெளியீடு ஆகும். இந்து என்று தன்னை நம்புகின்ற அப்பாவி மக்களை நோக்கியே இந்த விளக்கங்கள் தரப்படுகின்றன. (நூலின் முன்னுரையிலிருந்து)

‘இந்து’ என்ற சொல்லுக்குப் பொருள் என்ன?

இந்து என்ற சொல், இந்தியாவிலே பிறந்த வேதங்களிலோ, உபநிஷதங்களிலோ, ஆரண்யகங்களிலோ பிராமண்யங்கள் என்று சொல்லக்கூடிய வேறு வகையான பழைய இலக்கியங்களிலோ இல்லை. இதிகாசங்களிலும் கிடையாது. இந்தச் சொல் 18-ம் நூற்றாண்டின் நடுப் பகுதியிலே ஐரோப்பிய Orientalist அதாவது கீழ்த்திசை நாடுகளைப் பற்றி ஆராய வந்தவர்கள் பயன்படுத்திய சொல். இந்தச் சொல்லுக்கான ”மரியாதை’ என்ன என்று கேட்டால். ‘இது வெள்ளைக்காரர்கள் கண்டு பிடித்த சொல்’ என்பது தான். இந்திய மொழிகளில் எந்த மொழியிலும் இந்து என்ற சொல்லுக்கு வேர்ச் சொல்லே கிடையாது.

மறைந்து போன சங்கராச்சாரியார் எழுதிய ‘தெய்வத்தின் குரல்’ என்ற புத்தகத்தைப் படித்துப் பார்த்தால் தெரியும். அதிலே “வெள்ளைக்காரன் வந்து நமக்கு இந்து என்று பொதுப்பெயர் வைத்தானோ இல்லையோ, நாம் பிழைத்தோம்” என்று சொல்கிறார். ‘இந்து’ என்று வெள்ளைக்காரன் பெயர் சூட்டியதாலே ஆதாயம் அடைந்தது பிராமணர்கள் மட்டும் தான். எப்படியென்றால் அந்தச் சொல்லுக்கான அதிகார அங்கீகாரத்தை காலனி ஆட்சிக் காலத்திலேயே பிராமணர்கள் பெற்றுக் கொண்டார்கள். 1799-ல் உள்நாட்டு நீதிநெறிகளைத் தொகுக்க வேண்டிய ஒரு கட்டாயம் வந்தபொழுது கல்கத்தாவில் இருந்த சர். வில்லியம் ஜோன்ஸ் (இந்தப் பெயரை இன்றும் ஆர்.எஸ்.எஸ் – காரர்கள் கொண்டாடுவார்கள்) உள்நாட்டு நீதி நெறிகளைத் தொகுத்து அதற்கு Hindu law என்று பெயரிட்டார். அப்பொழுதுதான் Hindu என்ற சொல் முதன் முதலாக அரசியல் அங்கீகாரம் பெறுகிறது. இந்தச் சொல் வெள்ளைக்காரன் கண்டுபிடித்த சொல். இந்த நாட்டிலே எந்த மொழியிலும் இல்லாத சொல். திராவிட மொழியிலும் கிடையாது, ஆரிய மொழிகளிலும் கிடையாது. (நூலிலிருந்து பக்.5)

பகுத்தறிவு வாதத்தால் தான் கோயில்கள் பாழடைந்து போய்விட்டன என்று சொல்கிறார்களே?

பகுத்தறிவு வாதத்தால் என்றல்ல. அவர்கள் வெளிப்படையாகச் சொல்வது திராவிட இயக்கம் வந்தபிறகுதான் தமிழ்நாட்டுக் கோயில்கள் பாழ்பட்டுக் கிடக்கின்றன என்ற குற்றச்சாட்டைத்தான். நாத்திகத்தோடு திராவிட இயக்கம் வந்தது 1925-க்குப் பிறகுதான். அதற்கு முன்னாலே பாழ்பட்ட கோயில்களுக்கு எல்லாம் யார் பொறுப்பு? இரண்டாவது. பார்ப்பனர் கையில் இருந்த – பாழ்பட்டுக் கிடக்கும் கோயில்கள் எல்லாம் பெரிய சொத்துடைமை நிறுவனங்களாக இருந்த – கோயில்கள்தானே தவிர எந்த ஊரிலாவது சாதாரண அம்மன் கோயில், சுடலை கோயில், இசக்கி கோயில் காத்தவராயன் கோயில் பாழ்பட்டுப் போகிறதா? எனில் எந்த ஆன்மீகம் பாழ்பட்டுப் போயிருக்கிறது? யாருடைய ஆன்மீகம் உயிரோடு இருக்கிறது?

பெருவாரியான மக்களுடைய ஆன்மீகம் உயிரோடு இருக்கிறதனால் தானே காத்தவராயன் கோயிலோ, சுடலை கோயிலோ, பொன்னியம்மன் கோயிலோ அழியாமல் அப்படியே இருக்கிறது. சுஜாதாகூட ஒருமுறை எழுதியிருந்தார்,  நவதிருப்பதியை சுற்றிப் பார்த்துவிட்டு வந்து,  அவை வாழ்ந்த காலத்தை நினைத்துப்பார்த்து விட்டு ‘அப்பொழுதெல்லாம் திராவிட இயக்கம் இல்லை’ என்று. திராவிட இயக்கம் பிறப்பதற்கு முன்னூறு, நானூறு ஆண்டுகளுக்கு முன்னாலேயே பெரும்பாலான கோயில்கள் பாழ்பட்டுப் போயின. அதற்கான காரணம், பிராமணர்கள் புதிய அதிகார மையத்தைத் தேடி அந்தக் கோயில்களை எல்லாம் கைவிட்டு விட்டு நகரங்களை நோக்கிப் புறப்பட்டுப் போனார்கள். 19-ம் நூற்றாண்டில் நீதிபதி முத்துச்சாமி ஐயரோ, எஸ்.எஸ். வாசனோ தங்கள் கிராமத்தைவிட்டு நகரத்திற்கு வந்ததற்கு திராவிட இயக்கமா காரணம்? திராவிட இயக்கம் பிறப்பதற்கு முன்னாலேயே இவர்கள் நகரத்திற்கு புதிய அதிகாரங்களையும், பொருள் வளத்தையும் தேடித்தான் கோயில்களைக் கைவிட்டு விட்டு வந்தார்கள். (நூலிலிருந்து பக்.17)

இந்துத் தலைவர்களிடையே ‘தலித்’ பற்றியதான பார்வை தற்பொழுது மாறியிருக்கிறதா ?

இல்லை. அவர்கள் மாறியதாகக் காட்டுகிறார்கள். இன்னும் இந்துத் தலைவர்களிடையே கூட சங்கராச்சாரியார் என்ன சொல்கிறார், ‘அம்பேத்காரை பின்பற்றும் மக்கள்’ என்கிறார். வெளிப்படையாகப் பெயர் சொல்லக்கூட அவருக்கு மனமில்லை. இவர்கள் சுத்தமாக இல்லையென்று ஒரு காலத்திலே சொன்னார்கள். இப்பொழுது எதிர்ப்பு வந்துவிட்டதால் அதை விட்டுவிட்டார்கள். யாருடைய சுத்தம் பற்றி யார் பேசுவது? அழுக்குகளை உரமாக்கி அழகான பயிர்களை உருவாக்கும் மனிதன் அசுத்தமானவன். மடாதிபதி சுத்தமானவரா? அசுத்தம் என்பது உடல்  உழைப்பை மதிக்காத அதை சுரண்டி வாழுபவரின் பேச்சாகும். ‘திரௌபதி சுத்தமாக இருந்தா ஆபத்திலே கிருஷ்ணனைக் கூப்பிட்டாள். கூப்பிட்டவுடன் உதவிக்கு அவர் வரவில்லையா’ என்று கேட்கிறார்களே வைணவர்கள். இந்தக் கேள்விக்கு சங்கராச்சாரியார் பதில் சொல்வாரா? நூற்றுக்கு இருபது பேராக இருக்கிற தலித் மக்கள் மதம் மாறிப்போய் விடவும் கூடாது. இருக்கிற இடத்திலே ‘இந்து’ என்ற பெயரோடு தலித்துகளும் பிற்படுத்தப்பட்ட மக்களும் பார்ப்பனர்களின் ஆன்மிக அதிகாரத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும். பங்காரு அடிகளார் போலப் புதிய நெறிகளைக் கண்டுபிடிக்கக் கூடாது. இதுதான் அவரது எண்ணமாகும்.

படிக்க :
மார்க்சிய பேராசான் பிரடெரிக் ஏங்கெல்ஸ் கம்யூனிசத்திற்கு மாறிய வரலாறு !
சீமான் சிங்கள ராணுவத்தின் தலையை உருவாமல் இட்லியை உருட்டியது ஏன் ? ஒரு சட்னிக் கதை !

ஏதேனும் ஒரு காரணம் பற்றி தங்களுடைய ஆன்மீக அதிகாரத்தையும் மறைமுகமான அரசியல் அதிகாரத்தையும் தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்பதுதான் அவர்களுடைய நோக்கம். அதுமட்டுமல்ல. இப்பொழுது அந்த ‘கிறிஸ்தவர் இசுலாமியராக அல்லாத இந்து’ என்கிற அரசியல் சட்டம் சொல்கிற வார்த்தையை ஒரு சமூக ஆதிக்கமாக மாற்றப் பார்க்கிறார்கள். இதனைப் புரிந்து கொண்டால் ‘இந்து’ என்னும், பண்பாட்டு மாயையிலிருந்து நமக்கு விடுதலை கிடைக்கும். அவரவர்கள் அவரவர் தெய்வங்களை நிம்மதியாக வணங்கிவிட்டுப் போவார்கள். நம்முடைய வழிபாட்டு உரிமையினையும், மத உரிமையினையும் நாம் காப்பாற்றிக் கொள்ள முடியும். (நூலிலிருந்து பக்.20)

நூல் : நான் இந்துவல்ல நீங்கள் … ?
ஆசிரியர் : தொ. பரமசிவன்

வெளியீடு : மணி பதிப்பகம்,
29-ஏ, யாதவர் கிழக்குத் தெரு,
பாளையங்கோட்டை.

பக்கங்கள்: 20
விலை: ரூ 11.00

வினவு தளத்தின் மின் நூல்கள் (e books) வாங்க

தமிழகத்தின் பல ஊர்களில் என்.சி.பி.ஹெச் மற்றும் பாரதி புத்தகாலயம் கடைகளில் கிடைக்கும்.

இணையத்தில் வாங்க : commonfolks | sixthsense publications | periyarbooks