அவர்களது தேர்தல் நாடகம் ஓய்ந்துவிட்டது !
நமது போராட்டக் களம் காத்துக் கிடக்கிறது !
ஐந்து மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தல் முடிவுகளில், தமிழகம், மேற்கு வங்கம், கேரளா ஆகியவற்றின் முடிவுகள், அதிலும் குறிப்பாக, மேற்கு வங்கத் தேர்தல் முடிவுகள் பா.ஜ.க.வுக்குப் பேரிடியாக அமைந்துள்ளது. சில ஜனநாயக – மதசார்பற்ற சக்திகளும், டெல்லியில் போராடும் விவசாய சங்கங்களும், சில ஆங்கில ஊடகத்தினரும் இதை மகிழ்ச்சியுடன் வரவேற்கின்றனர்.
சில ஆங்கில ஊடகங்கள், “தீதி”யை (மம்தா பேனர்ஜியை வங்க மொழியில் அக்கா என்று அழைப்பார்கள்) புகழ்வதோடு, “மம்தாவிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டும்” என்றும், “சரியான தேர்தல் வியூகங்களை வகுத்து செயல்பட்டால் பா.ஜ.க.வை வீழ்த்த முடியும் என்ற நம்பிக்கையைத் தருவதாகவும்” கூறுகின்றன.
படிக்க :
♦ தேர்தல்தான் ஜனநாயகம் என்ற மூடநம்பிக்கை எதற்கு? || மக்கள் அதிகாரம்
♦ நீங்க யாருக்கு ஓட்டுப் போட்டாலும் நாங்க தான் ஆட்சி செய்வோம் ! பாஜக ஸ்டைல் !!
இதேபோல, “தி வயர்” இணைய தளத்தில் வந்த ஒரு கட்டுரை, “தமிழகத்தில் இனி எந்தக் காலத்திலும் இந்துத்துவா வெற்றி பெற முடியாது” என்று கூறுகிறது. “இனமானப் போரில் திராவிடம் வென்றது!”, “மு.க.ஸ்டாலின் உருவாக்கிய வரலாற்று வெற்றி” என்று தி.மு.க. ஆதரவு பத்திரிகைகள் குதூகலிக்கின்றன.
மேற்கு வங்கத்தில் மார்க்சிஸ்ட் கட்சி தோல்வியடைந்திருந்தாலும், கேரளாவில் நிபா வைரஸ் தாக்கியது முதல் தற்போது கொரோனா வைரஸ் தாக்கியது வரை மக்களின் நல்வாழ்வில் கேரளத்தின் பினாரயி விஜயன் அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளே அவரை மீண்டும் இரண்டாவது முறையாக வெற்றி பெற வைத்துள்ளது என்று பலரும் கூறி மகிழ்கின்றனர்.
அஸ்ஸாமிலும் புதுச்சேரியிலும் பா.ஜ.க. வெற்றி பெற்றிருந்தாலும், மற்ற மூன்று மாநில சட்டமன்றத் தேர்தல் வெற்றிகள் பா.ஜ.க. எதிர்ப்பாளர்களால் பெரிதும் கொண்டாடப்படுகிறது.
இந்த அரசுக் கட்டமைப்பிற்குள் தீர்வைத் தேடுபவர்களும், சுவாசிப்பதற்கான அவசாகம் (breathing space) வேண்டும் என்று சொன்னவர்களும் இந்த தேர்தல் முடிவுகளால் பூரித்துப் போயுள்ளார்கள்.
ஆனால், மேலே குறிப்பிட்டுள்ள வகையில் பலவாறாக வெளியாகும் கருத்துகள் சரிதானா? இத்தேர்தல் முடிவுகள் மகிழ்ச்சிக்குரிய நிகழ்வுகள்தானா? இந்த தேர்தல் முடிவுகள் உண்மையில் எதை உணர்த்துகின்றன? பா.ஜ.க.வை தேர்தல் மூலம் வீழ்த்திவிட முடியுமா? போன்ற கேள்விகள் எழுகின்றன.
பாசிச ஜெயாவின் மறுவுருவம்தான் மம்தா !
தமிழகத்தில் தி.மு.க அறுதிப் பெரும்பான்மை இடங்களைப் பெற்று வெற்றி பெற்றுள்ளது. கேரளத்தில், கடந்த சட்டமன்றத் தேர்தலைவிட தற்போதைய சட்டமன்றத் தேர்தலில் இடது முன்னணி கூடுதல் இடங்களைப் பெற்றுள்ளது. மேற்கு வங்கத்தில் “நிச்சயம் 200” என சவடாலடித்த மோடி – அமித்ஷா கும்பலின் கனவு பலிக்கவில்லை என்பதோடு, திரிணாமுல் காங்கிரசு மிகப் பெரிய வெற்றியையும் பெற்றிருக்கிறது.
மேற்கு வங்கத்தில் பா.ஜ.க. வெற்றி பெற வேண்டும் என்பதற்காக கடந்த மூன்று ஆண்டுகளில் பா.ஜ.க. ஆடிய ஆட்டம் கொஞ்ச நஞ்சமல்ல. மோடி – அமித்ஷா கும்பல் தேர்தல் தொடங்குவதற்கு முன்பிருந்தே மேற்கு வங்கத்தைக் குறிவைத்துப் பிரச்சாரம் செய்தது. தேர்தல் ஆணையத்தையும் கைக்குள் போட்டுக் கொண்டு 7 கட்டமாக தேர்தல் அட்டவணையைக் கொண்டு வந்தது.
கொரோனா நோய்த் தொற்றுப் பரவல் அதிகமாகிக் கொண்டிருப்பதை நன்கு தெரிந்திருந்தும், மக்களைப் பற்றி சிறிதும் கவலையின்றி தேர்தல் வெற்றியை மட்டுமே இலக்காகக் கொண்டு கடைசி வரை தேர்தல் பிரச்சாரப் பொதுக் கூட்டங்களை நடத்திக் கொண்டிருந்தது பாசிச பா.ஜ.க.
தேர்தல் பிரச்சாரங்கள் தொடங்குவதற்கு முன்பாகவே, திரிணாமுல் காங்கிரசினரை விலைக்கு வாங்கியது, அமலாக்கத் துறையை ஏவியது உள்ளிட்ட அனைத்து அரசியல் சதிராட்டங்களிலும் பட்டவர்த்தனமாக ஈடுபட்டது. ஆள்பலம், பண பலம், அதிகார பலம் – என அனைத்தையும் பயன்படுத்தி திரிணாமுல் காங்கிரசுக்கு நெருக்கடிகளைக் கொடுத்தது.
“வளர்ச்சி, மதவெறி” என்ற தனது இரட்டை சீட்டை மாற்றி மாற்றிப் போட்டு மோடி மஸ்தான் வேலையைக் காட்டி வரும் பா.ஜ.க, இந்த தேர்தலில் மற்ற மாநிலங்களில் ஊழல் பிரச்சினையை முன்னிறுத்தியது. மேற்கு வங்கத்தில் இந்து மதவெறியைக் கிளறி ஆட்சியைப் பிடிக்கும் வேலையைச் செய்தது. சி.ஏ.ஏ பிரச்சினையை கிளப்பி, அதன் மூலம் முசுலீம் எதிர்ப்பு பிரச்சாரத்தைத் தீவிரமாக மேற்கொண்டது.
இத்தனை நடவடிக்கைகளையும் மீறி திரிணாமுல் காங்கிரசு வெற்றி பெற்றிருப்பதால், ஓட்டுச் சீட்டு அரசியல் எல்லைக்குள் நின்று சிந்திப்பவர்களுக்கு இந்தத் தேர்தல் முடிவுகள் மகிழ்ச்சியைக் கொடுத்திருக்கிறது. மாயாவதி, அகிலேஷ் யாதவ், உத்தவ் தாக்கரே ஆகியோரெல்லாம் பா.ஜ.க.வை வீழ்த்துவதற்கு முயற்சித்தும் அவர்களால் முடியவில்லை; ஆனால், மம்தா சாதித்துக் காட்டியுள்ளார் என்று ஊடகங்கள் சொல்வதில் உண்மையில்லாமல் இல்லை.
சி.ஏ.ஏ விசயத்தில் மோடி அரசுக்கு மம்தா எதிர்ப்பு தெரிவித்தார்; மோடி அரசின் பல்வேறு திட்டங்களுக்கும், ஜி.எஸ்.டி போன்ற மாநில உரிமைகள் பறிக்கும் நடவடிக்கைகளுக்கும் எதிர்ப்பு தெரிவித்தார் என்று ஊடகங்களால் சொல்லப்படும் காரணங்களைவிட முக்கியமான ஒரு அம்சம் இருக்கிறது.
மம்தா அரசுக்கு நெருக்கடி கொடுப்பதற்காக சாரதா சீட்டுக் கம்பெனி ஊழலை விசாரிக்க மோடி அரசால் சி.பி.ஐ ஏவிவிடப்பட்டபோது, மாநில அரசு விவகாரத்தில் நுழைய அனுமதிக்க முடியாது என்று அரசியல் சட்ட நெருக்கடியை ஏற்படுத்துவது; தேர்தலுக்கு சில நாட்களே இருக்கும் நிலையில், பா.ஜ.க. கும்பல் தன்னைத் தாக்கியதால் கால் உடைந்து விட்டது என நாடகமாடி அனுதாபம் தேடிக் கொள்வது – என எதற்கும் துணிந்து களம் காணும் துணிச்சல் ஜெயலலிதாவிற்குப் பிறகு மம்தாவிடம்தான் வெளிப்படுகிறது. ஜெயலலிதாவைப் போலவே, பேறுகால உதவித் தொகை, பெண்களுக்கு கல்வி உதவித் தொகை போன்ற சில நலத்திட்டங்களை அடித்தட்டு உழைக்கும் மக்களுக்கு வழங்குவதன் மூலம் சமூக ஆதரவையும் அவர் தேடிக் கொண்டுள்ளார்.
அ.தி.மு.க-விற்கு இருக்கும் அதே வர்க்க அடித்தளம்தான் மம்தாவிற்கான வர்க்க அடித்தளமாகும். தனியார்மயம் – தாராளமயத்தின் விளைவாக உருவான திடீர் அரசியல் பணக்கார ரௌடிகளுக்குப் பழைய பாணியில் இருக்கும் காங்கிரசைவிட பட்டவர்த்தனமான ஒரு கொள்ளைக் கும்பலின் ஆட்சி முறை தேவைப்படுகிறது. தமிழகத்தில் அப்படி ஒரு தேவையை அ.தி.மு.க ஈடு செய்து கொடுத்தது என்றால், மேற்கு வங்கத்தில் அதனை மம்தாவின் திரிணாமுல் காங்கிரசு ஈடு செய்து கொடுத்தது. 34 ஆண்டுகால போலி கம்யூனிஸ்ட் ஆட்சியின் மீது மக்களுக்கு இருந்த வெறுப்பைப் பயன்படுத்தி, போலி கம்யூனிஸ்டுகளை விட பலமடங்கு தீவிரமாகக் குண்டாயிசத்தை வைத்துக் கட்சியை நடத்தி, தடாலடியாக ஆட்சியதிகாரத்தைப் பிடித்ததுதான் மம்தாவின் வரலாறு.
ஆளும் வர்க்க அரசியலையே ஒரு தனிநபரின் செல்வாக்கின் கீழ் அதிரடி சர்வாதிகார பாணியில் மேற்கொள்ளப்படும் ஆட்சிக்கு என்ன கதி நேர்ந்தது என்பதை ஜெயலலிதாவிற்கு நேர்ந்த கதியுடனும், பா.ஜ.க-வின் எடுபிடியாக அ.தி.மு.க மாறியுள்ள இன்றைய அதன் நிலைமையுடனும் ஒப்பிட்டால் புரிந்து கொள்ள முடியும். ஆளும் வர்க்க அரசியலில் தனக்கு ஒரு இடத்தைத் தக்க வைக்க ஜெயலலிதாவிற்கு பார்ப்பன சாதி பின்னணியாவது உதவியது; ஆனால், மம்தாவிற்கு அதுவும் கிடையாது.
ஆகையால், தற்போதைய மம்தாவின் வெற்றி என்பது ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க கும்பல் கருத்தியல் ரீதியாக மக்களைத் தமது சித்தாந்தத்தின் கீழ் கொண்டு வருவதற்கு, நிரந்தரமான வெற்றியைச் சாதிக்கும் வகையில் களத்தைத் தயார் செய்து கொள்வதற்குக் கிடைத்துள்ள அவகாசமேயாகும். மாறாக, ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க-விற்கு எதிராக மக்களைத் தயார்ப் படுத்துவதற்கு மம்தா கும்பலுக்குக் கிடைத்துள்ள வாய்ப்பல்ல. அப்படி ஒரு நோக்கமும் மம்தா கும்பலுக்குக் கிடையாது.
காங்கிரசின் ‘மென்மையான’ காவி, ‘மனித முகம்’ கொண்ட தனியார்மயம் என்ற கொள்கையுடன் தனிநபர் அதிரடி சர்வாதிகாரம் கலந்த கலவைதான் மம்தா அரசியலே தவிர, அது காவி – கார்ப்பரேட் பாசிசத்திற்கு எதிரானதல்ல.
கேரளம் : பா.ஜ.க எதிர்ப்புணர்வே வெற்றியைத் தீர்மானித்தது !
கேரளத்தில் மார்க்சிஸ்ட் கட்சி தலைமையிலான இடதுசாரி கூட்டணி ஆட்சியும், காங்கிரசும் மாறி மாறி வெற்றி பெற்று வந்த வரலாறு இப்போது மாறிப் போயுள்ளது. தொடர்ந்து இரண்டாவது முறையாக இடதுசாரி கூட்டணி அரசு அமைந்திருப்பது கேரள வரலாற்றில் இதுவே முதல்முறையாகும்.
கேரள அரசு கொரானா காலத்திலும் நிபா வைரஸ் தாக்கிய காலத்திலும் மேற்கொண்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், ஒக்கிப் புயலின்போது மேற்கொண்ட நிவாரணப் பணிகள் ஆகியன மார்க்சிஸ்ட் கட்சியின் மீதான மக்களின் செல்வாக்கை ஓரளவிற்கு அதிகரிக்கச் செய்துள்ளது.
சபரிமலையில் பெண்கள் நுழைவதற்கான உச்சநீதிமன்றத் தீர்ப்பை அமல்படுத்தும் விவகாரத்தில் பா.ஜ.க மதவெறியைக் கிளப்பிவிட்டு ஆதாயம் அடைய முயற்சித்தது. ஆனால், அது எதிர்ப்பார்த்த அளவிற்கு நடக்கவில்லை. இதேபோல, மார்க்சிஸ்ட் கட்சிக்கு எதிராக தங்கக் கடத்தல் விவகாரத்தை மோடி அரசு முன்னிலைப் படுத்தினாலும், அதுவும் எடுபடவில்லை.
மோடி அரசின் தொடர்ச்சியான தனியார்மய – தாராளமயக் கொள்கைகளும், அதன் மதவெறி வெறுப்பு அரசியலும் கேரள மக்களிடம் கடுமையான எதிர்ப்பையே ஏற்படுத்தியது. சபரிமலை விவகாரத்தில் காங்கிரசும் பா.ஜ.க-வும் ஒரே நிலையை எடுத்ததால், காங்கிரசின் மீதான நன்மதிப்பும் குறைந்து போனது.
இவையன்றி, கேரளத்தின் பொருளாதாரம், அரபு நாடுகளில் பணிபுரியும் கேரள மக்களைச் சார்ந்திருப்பது; பாரம்பரியமாக பார்ப்பன எதிர்ப்பு மரபைக் கொண்டிருப்பது போன்றவையும் பா.ஜ.க-வின் தோல்விக்கு முக்கியக் காரணங்களாகும்.
அதேவேளையில், மார்க்சிஸ்டு முதல்வர் பினாரயி விஜயனின் ஆட்சியானது, கார்ப்பரேட் சேவை, ஊழல், மக்கள் விரோத செயல்பாடுகளில் பா.ஜ.க-விற்கு சற்றும் சளைத்ததல்ல. மக்கள் உரிமைகளுக்காகப் போராடுபவர்களைக் கருப்புச் சட்டங்களைக் கொண்டு ஒடுக்குவது, நக்சல்பாரி புரட்சியாளர்களைப் போலி மோதல் கொலைகள் மூலம் சுட்டுக் கொல்வது – என அனைத்து வகையிலும் எதேச்சதிகார ஆட்சியாகவே அது செயல்படுகிறது.
ஆகையால், பா.ஜ.க-விற்கு எதிரான மக்களின் உணர்வுதான் போலி கம்யூனிஸ்டுகளைத் தேர்வு செய்ய வைத்துள்ளது. மக்களுக்கு முன்வைக்கப்பட்டுள்ள தீர்வுகளில் ஒன்றை மட்டுமே தேர்வு செய்யும் ‘உரிமை’யை இந்த ‘ஜனநாயகம்’ மக்களுக்கு வழங்கியிருப்பதால், போலி கம்யூனிஸ்டுகளுக்கு வேறுவழியின்றி மக்கள் வாக்களித்துள்ளனர்.
தமிழகம் : இது திராவிட அரசியலின் வெற்றியா?
தமிழகத்தில் 10 ஆண்டு காலமாக எதிர் கட்சியாக செயல்பட்ட தி.மு.க, தமிழகத்தின் வாழ்வாதாரத்தை அழிக்கும் அழிவுத் திட்டங்களுக்கு எந்த வகையிலும் எதிரானதல்ல. ஆளுங்கட்சியாக இருந்தபோது, தமிழகத்தின் நலன்களுக்கு எதிராக செயல்பட்ட கட்சிதான் அது. மீத்தேன், கூடங்குளம், ஸ்டெர்லைட் – என அனைத்திலும் அதன் கொள்கை, கார்ப்பரேட் கொள்ளையை ஆதரித்து, அனுசரித்துப் போவதுதான்.
மோடி அரசால் தொடுக்கப்பட்ட தாக்குதல்களான ஜி.எஸ்.டி, பணமதிப்பிழப்பு நடவடிக்கை, புதியக் கல்விக் கொள்கை, நீட் – என அனைத்திலும் மாநில உரிமைகள் பறிக்கப்படுவதற்கு எதிராக தி.மு.க குரல் கொடுத்தது என்பதெல்லாம் வெற்று கண்டன அறிக்கைகள் என்ற வரம்பிலானவை மட்டுமே.
தமிழக மக்களின் வாழ்வுரிமைப் பறிப்புக்கு எதிராக எந்தத் தீவிரப் போராட்டங்களையும் தி.மு.க நடத்தியதில்லை. கருப்புக் கொடி காட்டுதல், மோடிக்கும் பா.ஜ.க-விற்கும் எதிராக ஹேஸ்டேக் உருவாக்கி சமூக ஊடங்களில் கருத்துருவாக்கம் செய்தல் போன்றவற்றையும், தேர்தல் பிரச்சாரத் தரகன் பிரசாந்த் கிஷோரின் உத்திகளையும் நம்பித்தான் தேர்தலை எதிர்கொண்டது.
படிக்க :
♦ கையில மைய வச்சா வந்திடுமா மாற்றம் ? || தேர்தல் பாடல் || மக்கள் அதிகாரம்
♦ மக்கள் அதிகாரம் தேர்தல் புறக்கணிப்பு ஏன்? || தோழர் மருது
“ஸ்டாலிந்தான் வாராரு, விடியலைத் தரப் போறாரு” என்று தி.மு.க கவர்ச்சிகரமான பிரச்சாரங்களைச் செய்வதென்பது இப்போது முதல்முறை அல்ல. கவர்ச்சி – பொறுக்கி அரசியலை முன்னிறுத்துவதில் அ.தி.மு.க-விற்கு தி.மு.க எந்த வகையிலும் சளைத்ததுமல்ல. ஆகையால், தமிழக மக்களின் பா.ஜ.க எதிர்ப்புணர்வுதான் தி.மு.க கூட்டணியை வெற்றிப் பெறச் செய்துள்ளதே தவிர, தி.மு.க மீதான மக்களின் நம்பிக்கையால் அல்ல.
முக்கியமாக, 10 ஆண்டுகால அ.தி.மு.க-வின் மக்கள் விரோத ஆட்சியில் தமிழகத்தின் உரிமைகள் பறிக்கப்பட்டது, நீட், புதிய கல்விக் கொள்கை, உயர்கல்வியில் இட ஒதுக்கீடு, ஏழு பேர் விடுதலை – என அனைத்திலும் அ.தி.மு.க அரசு பா.ஜ.க-விற்கு பக்கத் துணையாக இருந்தது, எங்கும் எதிலும் ஊழல்மயம், தொடர்ச்சியான விலைவாசி உயர்வு, ஸ்டெர்லைட் படுகொலை, மீத்தேன், எட்டுவழிச் சாலை போன்ற அழிவுத் திட்டங்கள், விலைவாசி உயர்வு, லாக்கப் படுகொலைகள்… போன்றவற்றால் மக்கள் சொல்லொணாத் துன்பங்களை அனுபவித்துள்ளனர்.
இன்னொரு பக்கம், ஜெயலலிதா இல்லாத அ.தி.மு.க கட்சியானது, அ.தி.மு.க, அ.ம.மு.க என பிளவுப் பட்டிருப்பதும் அ.தி.மு.க-வில் நிலவும் கோஷ்டிப் பூசல்களும் மக்களுக்கு அதன் மீதான நம்பிக்கையைக் குறைத்துள்ளது. இவ்வளவு இருந்தும் இந்த கும்பலுக்கு தமிழகத்தில் 66 சீட்டுகள் கிடைத்திருக்கிறது என்பது தமிழகத்தின் அவல நிலை.
2011-இல் அ.தி.மு.க-வுடன் கூட்டணி வைத்து தி.மு.க-வைத் தோற்கடித்தவைதான் சி.பி.ஐ, சி.பி.எம் ஆகிய போலி கம்யூனிஸ்டு கட்சிகள். 2014 நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க ஆட்சி அமைக்க கூட்டணி வைத்த கட்சிதான் ம.தி.மு.க. மத்தியில் மோடி தலைமையில் பா.ஜ.க ஆட்சி அமைத்த பின்னர், 2016-இல் நடந்த சட்டமன்றத் தேர்தலின்போது வி.சி.க, சி.பி.ஐ, சி.பி.எம், ம.தி.மு.க அனைத்தும், கடைசி நேரம் வரை ஜெயா-வின் ஆசிக்காக கூட்டணி அமைக்கச் சொல்லி சீட்டு கேட்டு போயஸ் தோட்டத்திற்குக் காவடி தூக்கியவைதான். ஜெயாவின் ஆசி கிடைக்காமல் போன பின்னர் கூட, மூன்றாவது அணி (மக்கள் நலக் கூட்டணி) அமைத்து, ‘பா.ஜ.க-வின் பி.டீமாக’ செயல்பட்டு தி.மு.க-வைத் தோற்கடித்தவைதான்.
இவர்கள் யாருக்காவது பா.ஜ.க எதிர்ப்புக் கொள்கை இருக்கிறதா? தங்களது அரசியல் வாழ்வே கேள்விக் குறியாக இருந்த நிலையில், பா.ஜ.க எதிர்ப்பலையைப் பயன்படுத்தி, சீட்டுகளை வாங்குவதற்குதான் இக்கட்சிகள் தி.மு.க.வுடன் கூட்டணி வைத்திருக்கின்றன.
இப்படிப்பட்ட தி.மு.க. கூட்டணிக்கு பா.ஜ.க-வின் காவி அரசியலை எதிர்க்கும் அருகதை இல்லை என்பது மட்டுமல்ல, தனது திராவிட அரசியல் மீதும் தி.மு.க-விற்கு நம்பிக்கையிருந்ததில்லை. அதனால்தான் மோடி அரசின் காவித் திட்டங்களுக்கு எதிராக தி.மு.க போராடாதது மட்டுமல்ல, இந்துக்களின் ஓட்டை அறுவடை செய்து கொள்வதற்காக, கோவில்களைப் புனரமைப்பதற்கு ரூ.1,000 கோடி ஒதுக்கப்படும் என தேர்தல் அறிக்கையும் வெளியிட்டது.
ஆகையால், “பா.ஜ.க-விற்கு தோல்வி”, “திராவிடம் வென்றது”, “மதசார்பின்மைக்கு வெற்றி, தமிழகம் தலை நிமிர்கிறது” என்று பேசுவதெல்லாம் பச்சையான மோசடிப் பிரச்சாரமாகும்; பிழைப்புவாத அரசியலாகும்.
பிழைப்புவாத அரசியலும் மதவெறி அரசியலும்
ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல்களின் முடிவுகள் மூலம் பா.ஜ.க தோல்வி அடைந்துள்ளதாக மதிப்பீடு செய்வது, பா.ஜ.க-வை மற்றக் கட்சிகளைப் போல பிழைப்புவாதக் கட்சியாக மட்டுமே கருதும் மனநிலையின் வெளிப்பாடாகும். இது ஆபத்தானதும் கூட.
பா.ஜ.க தனது தேர்தல் வெற்றிக்காக அனைத்து வகை சதி, அதிகார முறைகேடுகள், மதவெறிப் பிரச்சாரங்களில் ஈடுபட்ட பின்னரும் அது எதிர்பார்த்த வெற்றியை பெற முடியவில்லை என்று சொல்லலாமே தவிர, பா.ஜ.க படுதோல்வி அடைந்துவிட்டதாக கருதுவது உண்மையைக் காண மறுக்கும் ஒருதலைப்பட்சப் பார்வையே.
ஏனெனில், பிழைப்புவாதக் கட்சிகளைப் போல தேர்தல் வெற்றி என்ற தற்காலிக நலன்களை அடைவது மட்டும் பாசிச பா.ஜ.க-வின் நோக்கமல்ல. அது இந்துராஷ்டிரம் என்ற நீண்ட கால இலக்கும், ஆளும் வர்க்கச் சேவையில் பரம விசுவாசமும் கொண்டது.
இந்த நோக்கங்களை நிறைவேற்றுவதற்கு ஆர்.எஸ்.எஸ் என்ற நூற்றாண்டு அனுபவம் கொண்ட பார்ப்பன பாசிச அமைப்பையும், பார்ப்பன சித்தாந்தம் என்ற இரண்டாயிரம் ஆண்டுகள் பழைமை வாய்ந்த சித்தாந்தத்தையும் கொண்டது.
ஆகையால், குறுகிய தேர்தல் வெற்றியை அடைவதற்காக மட்டுமே பா.ஜ.க தேர்தலில் போட்டியிடவில்லை. எந்தவொரு நடவடிக்கையிலும் தனது நோக்கமான இந்துராஷ்டிரம், பார்ப்பன ஆதிக்கம், கார்ப்பரேட் சேவை ஆகியவற்றை நோக்கி முன்னேறுவதற்குப் பல்முனை தந்திரோபாயங்களைப் பயன்படுத்துவதில் ஆர்.எஸ்.எஸ் முன்னேறிய அனுபவம் கொண்ட அமைப்பு என்பதை நாம் மனதில் நிறுத்திக் கொள்ள வேண்டும்.
இந்த கண்ணோட்டத்தில் இருந்து பா.ஜ.க-வையும் தற்போதைய ஐந்து மாநிலத் தேர்தல்களையும் சரியாக அலசிப் பார்க்க வேண்டும்.
000
குடியுரிமைச் திருத்தச் சட்டத்தால் பா.ஜ.க பலனடைந்த மாநிலங்களில் ஒன்று அஸ்ஸாம். மக்கள் மத்தியில் இருந்து கடுமையான எதிர்ப்புகளைச் சந்திக்க நேர்ந்த போதும், பா.ஜ.க தனது மதவெறி அரசியலை சிறிதும் தளர்த்தவில்லை. அஸ்ஸாமிய இனவெறியையும் இந்து மதவெறியையும் இணைத்துப் பிரச்சாரம் செய்தது பா.ஜ.க. வங்கதேச முசுலீம்களால் அஸ்ஸாமியர்களுக்கு ஆபத்து என்று அச்சத்தைக் கிளப்பியது. எதிர்கட்சித் தலைவர் வங்கதேச முசுலீம்களை ஆதரிப்பவர் என்று பொய்ப் பிரச்சாரத்தைக் கட்டவிழ்த்து விட்டது.
தற்போது இந்த மாநிலத்தில் இரண்டாவது முறையாக பா.ஜ.க வெற்றிப் பெற்றுள்ளது. வாக்கு எண்ணிக்கையும் கூட சென்ற தேர்தலைவிட 2.71 சதவிகிதம் உயர்ந்து 32.25 சதவிகிதமாகியுள்ளது. இசுலாமியர் எதிர்ப்புப் பிரச்சாரமும் இந்துமதவெறியும் இங்கு வலுப்பெற்றுள்ளதையே இந்தத் தேர்தல் முடிவுகள் உணர்த்துகின்றன.
புதுச்சேரியில் ரெங்கசாமி கும்பலும் பா.ஜ.க-வும் வெற்றி பெற்றிருப்பதைப் பார்த்து ஆச்சரியப்படுவதற்கு ஏதுமில்லை. காங்கிரசு அரசின் ஆட்சி காலம் முடியும் வரை காங்கிரசில் இருந்து கொண்டு, ஆட்சி காலம் முடிவடையும் கடைசி நேரத்தில் பா.ஜ.க-விற்கு தாவி, ரெங்கசாமி காங்கிரசுடன் கூட்டணி வைத்து ஆட்சியைப் பிடிக்கும் அளவிற்கு அந்த மாநிலத்தில் சாதிய, பிழைப்புவாத அரசியல் கோலோச்சிக் கொண்டிருக்கிறது.
மொத்தத்தில், பிழைப்புவாத அரசியல்தான் காவி – கார்ப்பரேட் பாசிசத்திற்குக் களத்தை செப்பனிட்டுக் கொடுக்கிறது.
பா.ஜ.க தோல்வியடையவில்லை !
பா.ஜ.க-வும் அதன் கூட்டணியும் வெற்றி பெற்றுள்ள இந்த மாநிலங்களில் மட்டுமல்ல, பா.ஜ.க தோல்வியைச் சந்தித்துள்ளதாக சொல்லப்படும் மாநிலங்களில் என்ன நிலைமை ?
மேற்கு வங்கத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு 3 இடங்களில் இருந்து உயர்ந்து 77 இடங்களில் பா.ஜ.க வெற்றி பெற்றிருக்கிறது. 10.16 சதவிகித வாக்குகளிலிருந்து மிக பிரம்மாண்டமாக வளர்ந்து 38.13 சதவிகித வாக்குகளைப் பெற்றுள்ளது. ஆனால், மம்தா பானர்ஜி வெற்றி பெற்றதைப் பற்றி பேசுகின்ற பா.ஜ.க எதிர்ப்பாளர்களின் கண்களுக்கு இந்த விசயம் ஏனோ தெரிவதில்லை.
போலி கம்யூனிஸ்டுகள் முற்றிலுமாக துடைத்தொழிக்கப்பட்டு, திரிணாமுல் காங்கிரசும் பா.ஜ.க-வும் மட்டுமே அரசியல் அரங்கில் நீடிக்கும் நிலையை ஏற்படுத்தியிருப்பதே பா.ஜ.க-வின் பெரிய வெற்றியாகும். காங்கிரசும் கம்யூனிஸ்டுகளும் துடைத்தொழிக்கப்பட்டு, இரு துருவ அரசியல் நிலைமை உருவாக்கப்பட்டுள்ளது. இந்த நிலைமையை உருவாக்கியது யார் ? மம்தா அல்ல, பா.ஜ.க.!
“திரிணாமுல் காங்கிரசின் ரௌடி கலாச்சாரத்தை மார்க்சிஸ்டு கட்சியால் எதிர்கொள்ள முடியாது, அதனை எதிர்கொள்ள சரியான சக்தி பா.ஜ.க தான்” என்று அரசியலற்ற பெரும்பான்மையான மார்க்சிஸ்ட் கட்சியின் ஆதரவு சக்திகள் பா.ஜ.க-வின் பக்கம் சென்றுள்ளன. ஓரளவு சிந்திக்கும் ஜனநாயக சக்திகளோ, “பாசிச பா.ஜ.க-வை கம்யூனிஸ்டுகளால் எதிர்கொள்ள முடியாது, அதற்கு மம்தாதான் சரியான பதிலடி கொடுப்பார்” என்று திரிணாமுல் காங்கிரசின் பக்கம் சென்றுள்ளன.
சட்டமன்றத்தில் தனது 77 எம்.எல்.ஏ-க்களை வைத்துக் கொண்டு, தான் நினைத்த அனைத்து காரியங்களையும் பா.ஜ.க-வால் அடுத்தடுத்து நிறைவேற்றிக் கொள்ளவும் முடியும். மேலும், கார்ப்பரேட் ஆதரவுக் கொள்கைகளைப் பேசிக் கொண்டே பா.ஜ.க எதிர்ப்பு என்ற அரசியலில் பயணித்த மம்தாவின் 10 ஆண்டுகால ஆட்சியும், அதே திசையில் இனி நடக்கப் போகிற ஐந்தாண்டுகால ஆட்சியும், ஆளுங்கட்சிக்கு எதிரான மக்களின் உணர்வு வளர்வதைத் தவிர்ப்பது கடினம்.
அதே வேளையில், பா.ஜ.க – ஆர்.எஸ்.எஸ் கும்பல் மேலும் தீவிரமாக வேலை செய்து, கலவரங்களையும் அரசியல் சதித்தனங்களையும் அரங்கேற்றி மம்தா ஆட்சியைக் கவிழ்க்கவோ அல்லது அடுத்த தேர்தலில் திரிணாமுல் காங்கிரசை தோற்கடிக்கச் செய்வதோ கடினமான காரியமல்ல; இந்தியாவின் பல மாநிலங்கள் இதற்கு சாட்சியாகவும் உள்ளன.
தமிழகத்தின் நிலைமையோ இன்னும் மோசமானது. பா.ஜ.க-வின் பினாமியான அ.தி.மு.க 66 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க-வின் இன்னொரு அடியாள்படை போல செயல்படும் வன்னிய சாதிவெறிக் கட்சியான, பிழைப்புவாதத்தையே தனது கொள்கையாகக் கொண்டுள்ள பச்சையான சந்தர்ப்பவாதக் கட்சியான பா.ம.க, ஐந்து இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இந்த ஒட்டுண்ணி கும்பல்கள்தான் இன்று பா.ஜ.க-வின் அடியாள் படையாகச் செயல்படுகின்றன.
இதுமட்டுமல்ல; இது பெரியார் பிறந்த மண் என்று திராவிட இயக்கத்தினரால் பீற்றிக் கொள்ளப்படும் தமிழகத்தில் இதுவரை கண்டிராத அளவிற்கு பா.ஜ.க நான்கு இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.
“பா.ஜ.க தனித்து போட்டியிட்டிருந்தால் இந்த வெற்றியைப் பெற்றிருக்க முடியாது. பா.ஜ.க-வை முன்னிறுத்தாமல், அம்மாவின் ஆசி பெற்ற வேட்பாளர் என பெரிதாகக் காட்டி வேட்பாளரின் பெயரை முன்னிறுத்தித்தான் வெற்றி பெற்றனர். தாமரை சின்னத்தை ஓரமாக சிறியதாக போட்டுக் கொண்டனர்” என்றும், “இதுதான் தமிழ்நாடு; பா.ஜ.க பேரைச் சொல்லி ஓட்டுக் கூட கேட்க முடியாது” என்றும் மார்த்தட்டிக் கொள்கின்றனர் தி.மு.க ஆதரவாளர்களும், கட்டமைப்பிற்குள் தீர்வைத் தேடும் பா.ஜ.க எதிர்ப்பாளர்களும். இவ்வாறு மார்த்தட்டிக் கொள்வதற்கு எந்த ஒரு அடிப்படையும் இல்லை.
தனது பிறப்பிலேயே நயவஞ்சகத்தையும் சதியையும் பயங்கரவாதத்தையும் சாதி – வர்ணாசிரம பார்ப்பன சிந்தனையையும் கொண்டுள்ள பா.ஜ.க-விற்கு எந்த வழிமுறையும் ஒரு பொருட்டல்ல. பா.ஜ.க கையாண்டது நேர்மையான வழிமுறையா, இல்லையா என்பதையெல்லாம் வைத்து, பா.ஜ.க தோல்வியைந்திருப்பதாக மதிப்பீடு செய்வது, ஆர்.எஸ்.எஸ், பா.ஜ.க, காவி – கார்ப்பரேட் பாசிசம் போன்றவை குறித்த தவறான சித்தாந்தப் புரிதலாகும்.
பா.ஜ.க-வைப் பொறுத்தவரை அது முற்றிலும் துடைத்தொழிக்கப் படவேண்டிய கொடிய பாசிச அமைப்பு. தேர்தல் களம் என்பது ஆர்.எஸ்.எஸ் பரிவாரத்தின் ஒரு களம் மட்டும்தான். பஜ்ரங் தளம், இந்து முன்னணி, ஏ.பி.வி.பி, விஸ்வ இந்து பரிஷத் போன்று சிறிதும் பெரிதுமாக பல பாசிச குண்டர் படைகள் அதனிடம் உள்ளன. சித்தாந்த ரீதியாக மக்களை ஏமாற்ற பல கலாச்சார அமைப்புகளும் உள்ளன. ஐந்தாண்டு மோடி ஆட்சியில் அரசின் அதிகார அமைப்புகள் அனைத்தும் ஆர்.எஸ்.எஸ் மயமாக்கப் பட்டுள்ளன. இராணுவம் முதல் பள்ளிக் கல்வி வரை மத்திய அரசின் கட்டுப்பாட்டிற்குள் சென்று கொண்டிருக்கிறது. இப்படி சமூகத்தின் அனைத்து அங்கங்களும் பாசிசமயமாக்கப்பட்டு வருகிறது.
ஆகையால், பாசிச பா.ஜ.க-வை தேர்தல் களத்தில் ஒருக்காலும் முறியடிக்க முடியாது. மக்களைத் திரட்டி, போராட்டக் களத்தில்தான் மோதி வீழ்த்த முடியும். ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க காவி – கார்ப்பரேட் பாசிச கும்பலை எதிர்ப்பதற்கு பலமுனைகளைக் கொண்ட செயல்தந்திர நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இதற்கு மாறாக, “பா.ஜ.க தோல்வி”, “தமிழகத்தில் இந்துத்துவா வெற்றி பெறாது”, “தலைவர் ஸ்டாலின் பார்த்துக் கொள்வார்” என்பதெல்லாம் நம்மை நாமே ஏமாற்றிக் கொள்வது மட்டுமல்ல, மக்களை பாசிசத்திற்குப் பலி கொடுப்பதில் சென்று முடியும்.
கார்ப்பரேட் சேவையில் தி.மு.க, அ.தி.மு.க, பா.ஜ.க, போலி கம்யூனிஸ்டுகள் ஓரணியில் கைக் கோர்த்து நின்றதை, மிக அண்மையில், ஆக்சிஜன் உற்பத்தியை சாக்கிட்டு கொலைகார ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்கும் விவகாரத்தில் பார்த்த பின்னரும், பா.ஜ.க-வை தி.மு.க வீழ்த்திவிடும் என்று கருதுவதில் எந்தப் பொருளும் இல்லை.
உண்மையில், தமிழகத்தில் தி.மு.க பெற்றிருக்கும் வெற்றி என்பது பா.ஜ.க எதிர்ப்புணர்வின் வெளிப்பாடே அன்றி, பா.ஜ.க-விற்கு எந்தத் தோல்வியையும் தி.மு.க கூட்டணி ஏற்படுத்தி விடவில்லை. சென்ற சட்டமன்றத் தேர்தல்களைவிட இந்த சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க-வுக்குக் கூடுதல் இடங்களும், வாக்குகளும் கிடைத்துள்ளன; ஆட்சிக் கவிழ்ப்புச் சதிக்கு அ.தி.மு.க என்ற அடிமை கட்சியும் பா.ஜ.க-வுக்குக் கிடைத்துள்ளது.
மேற்கு வங்கம், தமிழகத்தில் மட்டுமல்ல; கேரளாவிலும் பா.ஜ.க-வின் வாக்கு எண்ணிக்கை அதிகரித்துள்ளது. சென்ற தேர்தலில் பா.ஜ.க 10.6 சதவித வாக்குகளைப் பெற்றது. இந்த தேர்தலில் 11.30 சதவிகித வாக்குகளை பா.ஜ.க பெற்றுள்ளது. இது குறைவான வாக்கு வளர்ச்சி; மார்க்சிஸ்ட் கட்சி பெற்ற வாக்குகளை ஒப்பிடும்போது இதனை வைத்துக் கொண்டு பா.ஜ.க-வால் ஒன்றும் செய்துவிட முடியாது என்று கருதலாம். ஆனால், கேரளத்தில் பா.ஜ.க பலவீனமடைந்துவிடவில்லை, மாறாக, மெல்ல வளர்ந்து வருகிறது என்பதுதான் உண்மை.
மொத்தத்தில், ஐந்து மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தல்களில் பார்ப்பன பாசிச பா.ஜ.க-வின் வாக்கு எண்ணிக்கை அதிகரித்துள்ளது. தமிழகம், மேற்கு வங்கத்தில் அதன் சீட்டு எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.
போராட்டக் களம் காத்துக் கிடக்கிறது !
ஐந்து மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தல் அறிவிப்பு வெளியிடப்படுவதற்கு முன்பு, நமது நாட்டில் நாளொன்றுக்கு ஆயிரக்கணக்கில் இருந்த கொரோனா நோய்த்தொற்று, இன்று இலட்சக் கணக்கில் உயர்ந்துள்ளது; ஆக்சிஜன் இல்லாமலும், உரிய மருத்துவ வசதி இல்லாமலும் மக்கள் கொத்துக் கொத்தாக மடிகின்றனர்; பிணங்கள் குவிகின்றன; சுடுகாடுகள் கூட வெப்பத்தில் தகிக்கின்றன; மக்கள் சொல்லொணாத் துன்பத்தில் துடிக்கின்றனர்.
கொரோனா நோய்த் தொற்று பரவிய முதல் அலையின்போது கூட, மக்களுக்கு எந்த நிவாரணத்தையும் மோடி அரசு அறிவிக்கவில்லை. மக்கள் மத்தியில் எதிர்ப்புக் குரல் வலுத்த பின்னர்தான், கண் துடைப்பாக சில அறிவிப்புகளை வெளியிட்டது. இப்போது தாக்கி வரும் இரண்டாவது அலையோ மேலும் கொடுமையாக இருக்கிறது. ஆனால், மக்களுக்கு நிவாரணம் வழங்குவது குறித்துப் பேசுவதற்குக் கூட மோடி அரசு தயாராக இல்லை. மொத்தத்தில், மோடி அரசு கொரோனா நோய்த் தொற்றில் இருந்து மக்களைப் பாதுகாப்பதற்குப் பதிலாக மௌனம் சாதிக்கிறது. அது பாசிஸ்டுகளுக்கே உரிய, கடுகளவும் மனிதாபிமானமற்றக் கொடூர அணுகுமுறையாகும்.
மற்றொரு புறம், மக்களை நிரந்தரமாகப் பிளவுப்படுத்தி இரத்த வெள்ளத்தில் ஆழ்த்தும் வகையில் மோடி அரசு கொண்டு வந்த குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு (சி.ஏ.ஏ) எதிராக நாடு முழுவதும் மக்கள் போராட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டனர். போராடியவர்கள் மீது பா.ஜ.க அரசுகளும் காவி பயங்கரவாதிகளும் துப்பாக்கிச் சூடுகளையும், டெல்லியில் கலவரங்களையும் நடத்தின.
அதன் வடுக்கள் மறையாத நிலையில், அடுத்தத் தாக்குதலாக இந்திய விவசாயத்தை கார்ப்பரேட்டுகள் கைப்பற்றிக் கொள்வதற்கு வழிவகுக்கும் வகையில் மோடி அரசு மூன்று வேளாண் சட்டங்களைக் கொண்டு வந்தது. இதற்கு எதிராக டெல்லியில் இலட்சக்கணக்கான விவசாயிகள் முற்றுகையிட்டுப் போராட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டனர். ஐந்து மாதங்களைக் கடந்தும் போராட்டம் நடந்து கொண்டிருக்கிறது.
இவை மட்டுமின்றி, புதியக் கல்விக் கொள்கை, தொழிலாளர் சட்டத் திருத்தங்கள், சுற்றுச்சூழல் மதிப்பீடு சட்டம், போக்குவரத்துச் சட்டத் திருத்தம் – என மக்கள் மீது பல்வேறு தாக்குதல்களை காவி – கார்ப்பரேட் பாசிச மோடி அரசு தொடுத்து வருகிறது. பொத்துறைகளைத் தனியார்மயாக்கும் வேலையையும் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.
மோடி ஆட்சியில் வீழ்ந்தப் பொருளாதாரம் எழவில்லை; வேலையின்மையும் வறுமையும் தலைவிரித்தாடுகிறது; உழைக்கும் மக்களின் குறைந்தபட்ச வாழ்வாதாரங்கள் அன்றாடம் பறிக்கப்பட்டு வருகின்றன; பெட்ரோல் – டீசல் விலை விண்ணை முட்டும் அளவிற்கு உயர்ந்துவிட்டது. பாலியல் குற்றங்கள் அதிகரிப்பு, சமூக விரோத செயல்கள் அதிகரிப்பு, தலித்துகள் – இசுலாமியர்கள் அடித்துக் கொல்லப்படுதல் – என அனைத்து அநீதிகளும் தாண்டவமாடுகின்றன.
படிக்க :
♦ விடியல் வேதாந்தாவுக்கா? || தி.லஜபதி ராய்
♦ தேர்தல் மூலம் பாசிசத்தை வீழ்த்த முடியுமா ? || வெற்றிவேல் செழியன் || காணொலி
நாளும் அதிகரித்து வரும் காவி – கார்ப்பரேட் பாசிச நடவடிக்கைகளால் இந்தப் போராட்டக் களம் பரந்து விரிந்து வருகிறது; தேர்தல் அரசியல் களமோ, இதில் இருந்து மக்களைத் திசைதிருப்புகிறது. நாட்டையும் மக்களையும் கொள்ளையிடுவதற்குப் போட்டிப் போடும் தேர்தல் நாடகம் என்பது, பாசிஸ்டுகளை வீழ்த்துவதற்கான களம் அல்ல; அது, பாசிஸ்டுகள் அதிகாரத்தை கைப்பற்றிக் கொள்வதற்கு உருவாக்கப்பட்டுள்ள களம் !
ஆகையால், பா.ஜ.க-விற்கும் காவி – கார்ப்பரேட் பாசிச கும்பலுக்கும் எதிரான நமது நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்த வேண்டும். பாசிஸ்டுகளின் செல்வாக்கிலிருந்து மக்களை மீட்பதும் பாசிஸ்டுகளின் ஒவ்வொரு நடவடிக்கையையும் களத்தில் நின்று வீழ்த்துவதும் நமது உடனடிக் கடமையாகும்.
வினவு