பா.ஜ.க. முதலமைச்சர்கள் நியமனம்: சாதி + ஆர்.எஸ்.எஸ். பின்னணி

பெரும்பாலும் அனைத்து சாதிகளிலும் முதல்வர்கள் மற்றும் சபாநாயகர்களை நிறுத்தியுள்ளதன் மூலம் பெரும்பான்மை மக்களின் வாக்குவங்கியை குறிவைத்துள்ளது, பா.ஜ.க. ஐந்து மாநில தேர்தல் பிரச்சாரத்தின்போது காங்கிரஸ் கையிலெடுத்த சாதிவாரிக் கணக்கெடுப்பு அரசியல் மூலம் தற்காப்பு நிலைக்கு தள்ளப்பட்ட பா.ஜ.க., இந்நியமனங்கள் மூலம் அந்த அரசியலை எதிர்கொள்ள முயற்சிக்கிறது.

டந்து முடிந்த ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தலில் சத்தீஸ்கர், மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மூன்று ‘பசு வளைய’ மாநிலங்களில் வெற்றிபெற்ற பா.ஜ.க., ஒரு வார இழுபறிக்கு பிறகு தற்போது அம்மாநில முதலமைச்சர்களின் பெயர்களை அறிவித்துள்ளது.

ஐந்து மாநில தேர்தல்களில் தெலுங்கானாவில் வெற்றிபெற்ற காங்கிரஸ் கட்சியும் மிசோரமில் வெற்றிபெற்ற சோரம் மக்கள் இயக்கம் என்ற மாநில கட்சியும் கடந்த டிசம்பர் 7, 8 ஆகிய தேதிகளிலேயே தங்கள் கட்சியின் முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களின் பதவியேற்பு நிகழ்ச்சிகளை நடத்தி முடித்துவிட்டன. ஆனால், பா.ஜ.க-வோ தேர்தல் முடிவுகள் வெளியாகி ஒரு வாரத்திற்கு மேலாகியும் தங்கள் கட்சியின் முதலமைச்சர்களின் பெயர்களைக் கூட அறிவிக்காமல் இழுத்தடித்து வந்தது.

ஐந்து மாநில தேர்தல் பிரச்சாரத்தின் போதே பா.ஜ.க-வால் ஒரு மாநிலத்தில் கூட முதலமைச்சர் வேட்பாளர்களை முன்னிறுத்த முடியவில்லை. இதே நிலை தேர்தல் முடிவுகள் வெளியான பிறகும் தொடர்ந்தது. தேர்தல் முடிவுகள் வெளியாகி ஒரு வாரம் ஆகியும் யார் முதலமைச்சர்களாக நியமிக்கப்படுவர் என்பது கட்சிக்குள்ளும் தெரிவிக்கப்படாமலேயே இருந்தது. ஒரு வாரமாக அந்தந்த மாநிலங்களில் பா.ஜ.க. எம்.எல்.ஏ-க்கள் விடுதிகளில் தங்கவைக்கப்பட்டிருந்தனர்.

இந்நிலையில், கடந்த மூன்று நாட்களாக ஒவ்வொரு மாநிலத்திலும் முதலமைச்சர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். கடந்த 10-ஆம் தேதி சத்தீஸ்கர் மாநில முதலமைச்சராக விஷ்ணு தியோ சாயும், 11-ஆம் தேதி மத்தியப்பிரதேச முதலமைச்சராக மோகன் யாதவும், 12-ஆம் தேதி ராஜஸ்தான் மாநில முதல்வராக பஜன்லால் சர்மாவும் அறிவிக்கபட்டனர்.


படிக்க: ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல்கள்: பாசிஸ்டுகளின் தோல்வி முகமும்! எதிர்க்கட்சிகளின் கேடுகெட்ட சந்தர்ப்பவாதமும்!


இங்கு கவனிக்க வேண்டியது என்னவெனில், இந்த மூன்று மாநில முதல்வர்கள் நியமனங்களிலும் பாசிச கும்பல் ஒரு பொதுவான வழிமுறையினை கையாண்டுள்ளது.

மூன்று மாநிலங்களை பொறுத்தவரையிலும் பா.ஜ.க. கட்சியினரே எதிர்பார்க்காத, பிரபலமில்லாத தலைவர்கள்தான் முதல்வர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும், ஒவ்வொரு மாநிலங்களிலும் இரண்டு துணை முதல்வர்களையும் சபாநாயகரையும் நியமித்துள்ளது, பா.ஜ.க. இந்த நியமனங்களில் சாதி ஒரு முக்கிய காரணியாக உள்ளது.

பழங்குடி இன மக்கள் பெரும்பான்மையாக வசிக்கும் சத்தீஸ்கர் மாநிலத்தில், பழங்குடியினத்தை சேர்ந்த விஷ்ணு தியோ சாய் முதலமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். சத்தீஸ்கரின் ஓ.பி.சி. பிரிவில் மிகப்பெரிய சாதியாகக் கருதப்படும் சாஹு சமூகத்தைச் சேர்ந்த அருண் சாவோவும் பிராமண சாதியை சேர்ந்த விஜய் சர்மாவும் துணை முதல்வர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். உயர்சாதியாக கருதப்படும் ராஜ்புத் சாதியைச் சேர்ந்த ராமன் சிங் சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

கிட்டத்தட்ட 52 சதவிகித ஓ.பி.சி. மக்களை கொண்ட மத்தியப்பிரதேசத்தில், ஓ.பி.சி. பிரிவின் யாதவ் சாதியை சேர்ந்த மோகன் யாதவ் முதலமைச்சராக பதவியேற்றுள்ளார். தலித் சாதியை சேர்ந்த ஜகதீஷ் தேவ்தாவும் பிராமண சாதியை சேர்ந்த ராஜேந்திர சுக்லாவும் துணை முதல்வர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

ராஜஸ்தானில், பிராமண சாதியைச் சேர்ந்த பஜன்லால் சர்மா முதல்வராக அறிவிக்கப்பட்டுள்ளார். ஜெய்ப்பூரின் முன்னாள் அரச குடும்பத்தைச் சேர்ந்த தியா குமாரி மற்றும் பட்டியல் சாதியைச் சேர்ந்த பிரேம்சந்த் பைர்வா ஆகியோர் துணை முதல்வர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். சிந்தி சாதியை சார்ந்த வாசுதேவ் தேவ்னானி ராஜஸ்தான் சட்டசபை சபாநாயகராக நியமிக்கப்பட்டுள்ளார்.


படிக்க: ஐந்து மாநிலத் தேர்தல்: ஓரங்கட்டப்பட்ட பழங்குடியின மக்கள் பிரச்சனை!


மேலும், நியமிக்கப்பட்டுள்ள இந்த மூன்று முதலமைச்சர்களும் ஆர்.எஸ்.எஸ். உடன் நெருங்கிய தொடர்பில் உள்ளவர்கள் மற்றும் பல ஆண்டுகளாக ஆர்.எஸ்.எஸ்-இல் இணைந்து செயல்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மத்தியப்பிரதேசத்தின் உஜ்ஜைன் தொகுதியில் மூன்று முறை எம்.எல்.ஏ-வாக இருந்த 58 வயதான மோகன் யாதவ், 19 வயதிலேயே ஆர்.எஸ்.எஸ்-இன் மாணவர் அமைப்பான ஏ.பி.வி.பி-இல் இணைந்து அதன் பிறகு ஏ.பி.வி.பி-இன் மாநில செயலாளராகவும் தேசிய செயலாளராகவும் செயல்பட்டவர். மேலும், கடந்த சிவராஜ் சிங் சௌகான் ஆட்சியில் அம்மாநில உயர்கல்வி அமைச்சராக இருந்தபோது உயர்கல்வியை காவிமயப்படுத்துவதில் முக்கிய பங்காற்றியவர். தீவிர இந்துத்துவ மற்றும் இஸ்லாமிய வெறுப்பு பிரச்சாரங்களை மேற்கொள்பவர்.

ராஜஸ்தான் மாநில முதல்வராக நியமிக்கப்பட்டுள்ள லால் ஷர்மாவும் பள்ளி பருவத்தில் இருந்தே ஆர்.எஸ்.எஸ்-இன் ஏ.பி.வி.பி. அமைப்பிலும் அதன் பிறகு ஆர்.எஸ்.எஸ்-இன் இளைஞர் அமைப்பிலும் தீவிரமாக செயல்பட்டவர். பாபர் மசூதி இடிப்பு உள்ளிட்ட பல்வேறு ஆர்.எஸ்.எஸ். பேரணிகள் மற்றும் கலவரங்களில் ஈடுபட்டு போலீசால் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்தவர்.

சத்தீஸ்கர் முதல்வரான விஷ்ணு தியோ சாய் ஆர்.எஸ்.எஸ். மற்றும் அதன் பழங்குடியின அமைப்பான “வனவாசி கல்யான ஆசிரம்” அமைப்புடன் மிகவும் நெருக்கமானவர். பா.ஜ.க-வின் சித்தாந்த வழிகாட்டியாகக் கருதப்படுபவர்.

அந்தவகையில் மூன்று மாநிலங்களிலும் திட்டமிட்டு சாதி-மத முனைவாக்கத்தை மேற்கொள்வதற்கு ஏற்ப அப்பட்டமான இந்துத்துவவாதிகளை முதல்வர்களாக நியமித்துள்ளது காவி கும்பல். ஆனால், இம்முதல்வர்கள் நியமனம் என்பது மூன்று ‘பசு வளைய’ மாநிலங்களுக்கான தனித்த திட்டமல்ல.

இம்மூன்று மாநிலங்களும் கணிசமான எண்ணிக்கையில் நாடாளுமன்ற தொகுதிகளைக் கொண்டுள்ளது. எனவே, இம்மூன்று மாநிலங்களிலும் கவனம் செலுத்தி வேலை செய்வதன் மூலம் 2024 நாடாளுமன்ற தேர்தலில் கணிசமான தொகுதிகளில் பா.ஜ.க-வால் பெற முடியும்.

பெரும்பாலும் அனைத்து சாதிகளிலும் முதல்வர்கள் மற்றும் சபாநாயகர்களை நிறுத்தியுள்ளதன் மூலம் பெரும்பான்மை மக்களின் வாக்குவங்கியை குறிவைத்துள்ளது, பா.ஜ.க. சான்றாக, மத்தியப்பிரதேச முதலமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள மோகன் யாதவை 2024 நாடாளுமன்ற தேர்தலில் முன்னிறுத்துவதன் மூலம், “இந்தியா கூட்டணி”யில் உள்ள அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சி மற்றும் பீகாரின் லல்லு பிரசாத் யாதவின் ராஷ்டிரிய ஜனதா தல் ஆகிய கட்சிகளின் யாதவ் சாதி வாக்குவங்கியை கவர முடியும் என திட்டமிடுகிறது பா.ஜ.க. மேலும், ஐந்து மாநில தேர்தல் பிரச்சாரத்தின்போது காங்கிரஸ் கையிலெடுத்த சாதிவாரிக் கணக்கெடுப்பு அரசியல் மூலம் தற்காப்பு நிலைக்கு தள்ளப்பட்ட பா.ஜ.க., இந்நியமனங்கள் மூலம் அந்த அரசியலை எதிர்கொள்ள முயற்சிக்கிறது.

மேலும், நடந்துமுடிந்த ஐந்து மாநில தேர்தலை தோல்வி முகத்தில் எதிர்கொண்ட பாசிச கும்பல் பல்வேறு நெருக்கடிகளையும் சவால்களையும் மீறி இம்மாநிலங்களில் தனிபெரும்பான்மையுடன் வெற்றிபெற்றதற்கு அடித்தளத்தில் ஆர்.எஸ்.எஸ். மேற்கொண்டுவந்த இந்துத்துவ முனைவாக்கம்தான் முக்கிய காரணியாக அமைந்தது. எனவே, வருங்காலங்களில் இம்முதல்வர்களை வைத்து இம்மாநிலங்களிலும் சாதிமுனைவாக்க, இந்துமுனைவாக்க, இந்துமதவெறி, இஸ்லாமிய வெறுப்பு பிரச்சாரங்களையும் பாசிச கும்பல் தீவிரமாக முன்னெடுக்கும்.


தியா

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க