ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல்கள்: பாசிஸ்டுகளின் தோல்வி முகமும்! எதிர்க்கட்சிகளின் கேடுகெட்ட சந்தர்ப்பவாதமும்!

இந்த ஒன்பது ஆண்டுகால மோடியின் ஆட்சியில் பாசிசக் கும்பல் புதியக் கல்வி கொள்கை, நீட் தேர்வு, ஜி.எஸ்.டி. உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை அமல்படுத்தியுள்ளது. அவை, வெறும் திட்டங்கள் மட்டுமல்ல, அவை ஒவ்வொன்றும் இந்துராஷ்டிரத்திற்கான அடிக்கட்டுமானங்கள் என்ற பார்வையில் அணுகப்பட வேண்டியவை.

ஐந்து மாநில தேர்தல் முடிவுகள் 2023 | பதிவு 1

மிசோரம், தெலுங்கானா, சத்தீஸ்கர், மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய ஐந்து மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தல்கள் நவம்பர் 7 முதல் நவம்பர் 30-ஆம் தேதி வரை நடைபெற்று முடிந்துள்ளன. இத்தேர்தல் முடிவுகள் டிசம்பர் 3, 4 தேதிகளில் வெளியாக உள்ளன. 2024 நாடாளுமன்றத் தேர்தல், எதிர்க்கட்சிகளின் “இந்தியா” கூட்டணி உருவாக்கம், தீவிரமடைந்து வரும் பாசிசக் கும்பலின் தோல்வி முகம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இத்தேர்தல் முடிவுகள் முக்கியத்துவமுடையதாகப் பார்க்கப்படுகின்றன.

இம்மாநிலங்கள் இந்திய வாக்காளர் எண்ணிக்கையில் ஆறில் ஒரு பங்கு வாக்காளர்களைக் கொண்டிருப்பதோடு, குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் மக்களவை தொகுதிகளையும் கொண்டிருக்கின்றன. மேலும், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மத்தியப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் பா.ஜ.க-வும் காங்கிரசும் நேரடியாக மோதியுள்ளன. இக்காரணங்களால், இத்தேர்தல் 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கான முன்னோட்டமாகவும் பார்க்கப்படுகிறது.

கருத்துக்கணிப்புகளின் அடிப்படையில், தற்போது காங்கிரஸ் கட்சி ஆட்சியிலிருக்கும் சத்தீஸ்கரிலும், பா.ஜ.க. ஆட்சியிலிருக்கும் மத்தியப்பிரதேசத்திலும் காங்கிரசே ஆட்சியமைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. காங்கிரஸ் ஆட்சியிலிருக்கும் ராஜஸ்தானில் காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க. இடையே கடுமையான போட்டி நிலவும் என்றும், மாநிலக் கட்சியான பாரதிய ராஷ்டிரிய சமிதி (பி.ஆர்.எஸ்.) ஆட்சியிலிருக்கும் தெலுங்கானாவில் காங்கிரசுக்கும் பி.ஆர்.எஸ். கட்சிக்கும் கடுமையான போட்டி இருக்கும் என்றும் கருத்துக்கணிப்புகள் கூறுகின்றன. வடகிழக்கு மாநிலமான மிசோரமில் பா.ஜ.க. கூட்டணியிலுள்ள ஆளுங்கட்சியான மிசோ தேசிய முன்னணி மீண்டும் ஆட்சியமைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மற்றொருபுறம், குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராக நடந்த மக்கள் போராட்டத்தாலும், மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக நடந்த விவசாயிகளின் வீரமிக்க போராட்டத்தாலும் அரசியல் அரங்கில் தோல்வி முகத்திற்குத் தள்ளப்பட்ட பாசிசக் கும்பல், தொடர்ந்து தோல்விகளையும் பலமான அடிகளையும் எதிர்கொண்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக, இந்த ஐந்து மாநிலத் தேர்தல்களிலும் பா.ஜ.க. பல்வேறு நெருக்கடிகளைச் சந்தித்துள்ளது.

குறிப்பாக, இந்துத்துவ அரசியலின் இதயம் என்று கூறப்படுகின்ற பசு வளைய மாநிலங்களிலேயே பா.ஜ.க. கடுமையான நெருக்கடிகளுக்கு உள்ளானது. இத்தேர்தல்களின் போது, “மோடியின் தோல்வி முகம்”, “சரிந்துவரும் மோடியின் பிம்பம்”, “தோல்வி பயத்தில் இந்துத்துவவாதிகள்” என பொதுவெளியில் விவாதிக்கப்படும் அளவிற்கு பாசிசக் கும்பலின் தோல்வி முகம் அம்பலப்பட்டுப் போயுள்ளது.

நெருக்கடியில் பாசிசக் கும்பல்:

பா.ஜ.க-விற்கு எதிராக “இந்தியா” கூட்டணி உருவாக்கப்பட்டதிலிருந்தே, அக்கூட்டணி குறித்து பாசிசக் கும்பல் பல்வேறு அவதூறு பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருகிறது. அவற்றில், “பிரதமர் வேட்பாளர் இல்லாத கூட்டணி” என்பது முக்கியமானது. இந்தப் பிரச்சாரத்தை மோடியிலிருந்து பா.ஜ.க-வின் மாநிலத் தலைவர்கள் வரை அனைவரும் மேற்கொண்டு வருகின்றனர். ஆனால், நடந்து முடிந்த ஐந்து மாநிலத் தேர்தல்களில் ஒரு மாநிலத்தில் கூட தனது கட்சி சார்பில் முதல்வர் வேட்பாளரை நிறுத்தி பிரச்சாரம் செய்ய முடியாத பரிதாபகரமான நிலைக்கு பா.ஜ.க. தள்ளப்பட்டுள்ளது.

ராஜஸ்தான் மாநிலத்தில் இரண்டுமுறை முதல்வராக பதவி வகித்தவரும், ராஜஸ்தான் பா.ஜ.க-வின் முகமாக அறியப்படுபவருமான வசுந்தரா ராஜே, இம்முறை ராஜஸ்தான் தேர்தலிலிருந்து முற்றிலுமாக ஓரங்கட்டப்பட்டுள்ளார். இதைப்போல, மத்தியப்பிரதேசத்தின் தற்போதைய பா.ஜ.க. முதல்வரும் மூன்றுமுறை பா.ஜ.க. சார்பாக முதல்வராக இருந்தவருமான சிவராஜ் சிங் சௌகானும் ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளார். இதனால் இவ்விரு மாநிலங்களிலும் பா.ஜ.க-வின் முதல்வர் வேட்பாளராக எவரையும் முன்னிறுத்தவில்லை. சத்தீஸ்கர், தெலங்கானா மற்றும்  மிசோரத்திலும் கூட பா.ஜ.க. சார்பாக முதல்வர் வேட்பாளர்கள் நிறுத்தப்படவில்லை.

இந்த நெருக்கடியை சமாளிக்கும் வகையில் ராஜஸ்தானில் உள்ள சித்தோர்கரில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட மோடி, “பா.ஜ.க-விற்கு ஒரே முகம், அந்த முகம் தாமரை” என்று பூசி மொழுகினார். மத்தியப்பிரதேசத் தேர்தல் பிரச்சாரத்திலும் “மத்தியப்பிரதேசம் மோடியின் இதயத்தில் உள்ளது, மோடி மத்தியப்பிரதேசத்தின் இதயத்தில் உள்ளார்” என்ற பாடல் மூலமாகவே பா.ஜ.க. பிரச்சாரம் செய்தது.

அதேசமயத்தில், ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம், சத்தீஸ்கர் ஆகிய மூன்று மாநிலங்களிலும் பா.ஜ.க. சார்பாக 18 எம்.பி-க்கள் சட்டமன்ற வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டனர். இவர்களில், நான்கு பேர் மத்திய அமைச்சர்கள் என்பது முக்கியமானது. அனைத்து மாநிலங்களிலும் பா.ஜ.க-வின் தேசியத் தலைவர்களையும் அண்டை மாநில பா.ஜ.க. தலைவர்களையும் அழைத்தே பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது.


படிக்க: நெருங்கும் நாடாளுமன்றத் தேர்தல்: சிலந்திவலைகள் எச்சரிக்கை!


பா.ஜ.க-வின் இந்தப் போக்கை விமர்சிக்கும்  பா.ஜ.க-வின் நலவிரும்பிகள், கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் எடியூரப்பாவை ஓரங்கட்டியதால் ஏற்பட்ட எதிர்மறை விளைவை பா.ஜ.க. இன்னும் உணரவில்லை எனக் கடிந்துகொண்டன. மற்றொருபுறம், பா.ஜ.க-வின் இந்த அணுகுமுறைக்கு “கூட்டுத்தலைமை முறை” (Collective Leadership) என்று மோடி ஆதரவு ஊடகங்கள் பெயர் சூட்டின.

ஆனால் உண்மையில், பா.ஜ.க. கட்சி மற்றும் முதல்வர்கள் மீதான மக்களின் வெறுப்பு, உட்கட்சி சண்டை, மோடிக்கு நிகராக கட்சிக்குள் யாரும் வளர்ந்துவிடக் கூடாது என்ற மோடி-அமித்ஷா கும்பலின் அடியறுக்கும் போக்கு போன்ற பல்வேறு காரணங்களால், அடுத்தடுத்த மாநிலங்களில் முதல்வர் வேட்பாளரை நிறுத்த முடியாத நெருக்கடியான சூழலுக்கு பாசிசக் கும்பல் தள்ளப்பட்டுள்ளது.

மேலும், தென்னிந்திய மாநிலமான தெலுங்கானாவிலும் பா.ஜ.க-வின் நிலை கவலைக்கிடமாகவே உள்ளது. “மிஷன் சவுத்” திட்டத்தின் அடிப்படையில் தெலுங்கானா உள்ளிட்ட தென்னிந்திய மாநிலங்களை குறிவைத்து வேலைசெய்துவரும் பா.ஜ.க., ஆறு மாதங்களுக்கு முன்புவரை “பி.ஆர்.எஸ். கட்சியை வீட்டுக்கு அனுப்பப்போவது பா.ஜ.க. தான்” என்று ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்கள் வாயிலாக தனது பிம்பத்தை ஊதிப்பெருக்கி வந்தது. ஆனால், அண்டை மாநிலமான கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்ற பிறகு இந்த பிம்பம் உடைந்ததோடு, அந்த மாநிலத்தில் காங்கிரஸ் ஆதரவு மனநிலையும் உருவாகத் தொடங்கியது.

இந்நிலையில், தற்போது தெலுங்கானாவில் பி.ஆர்.எஸ். கட்சிக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் இடையே தான் இருமுனைப் போட்டி உள்ளது. பா.ஜ.க. ஆட்டத்திலேயே இல்லை என்ற நிலை உருவாகியுள்ளது. சில கருத்துக்கணிப்புகள், பா.ஜ.க. ஒற்றை இலக்கத்தில்தான் தொகுதிகளை வெல்லும் என்றும் பல இடங்களில் டெபாசிட்டை இழக்கும் என்றும் கூறுகின்றன.

மேலும், பிரச்சாரத்தின் இறுதி கட்டத்தில் தெலுங்கானாவில் காங்கிரசின் கை மேலோங்கியது. இதனால் முன்பு காங்கிரசிலிருந்து வெளியேறிய பலரும் மீண்டும் வந்து இணைந்ததோடு, தெலுங்கானா பா.ஜ.க. தேர்தல் அறிக்கை குழு தலைவராக இருந்த விவேக் வெங்கடசாமி என்பவரும் பா.ஜ.க.-விலிருந்து விலகி காங்கிரசில் இணைந்தார். இவற்றை கண்டு பீதியடைந்த பா.ஜ.க. கும்பல், தெலுங்கானாவில் பி.ஆர்.எஸ். கட்சி வென்றால் கூட பரவாயில்லை, ஆனால் காங்கிரஸ் வெற்றி பெற்றுவிடக் கூடாது என்ற நிலைக்கு சென்றுவிட்டது.

ஏற்கனவே, கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க-வை தோற்கடித்து காங்கிரஸ் வென்றதையடுத்து, “பா.ஜ.க-வை நிராகரித்தது தென்னிந்தியா” என இந்தியா முழுக்க பேசப்பட்டது. இந்நிலையில், தெலுங்கானாவிலும் காங்கிரஸ் வெற்றி பெற்றால் இக்கருத்து மேலும் தீவிரமடைந்து 2024 நாடாளுமன்றத் தேர்தலில் தென்னிந்தியாவில் பா.ஜ.க-விற்கு பெருத்த அடிவிழும் என்பதால் பீதியில் உறைந்துள்ளது பா.ஜ.க. கும்பல்.

எடுபடாத மோடி பிம்பம்:

வடகிழக்கு மாநிலமான மிசோரத்தைப் பொறுத்தவரையில், மோடி நேரடியாக சென்று பிரச்சாரம் செய்யாமலேயே அங்கு தேர்தல் நடந்து முடிந்துள்ளது. கடந்த ஒன்பது ஆண்டுகளில் மோடி நேரடியாக சென்று பிரச்சாரம் செய்யாமல் தேர்தல் நடந்த ஒரே மாநிலம் மிசோரம் மட்டுமே. இதற்குக் காரணம், பா.ஜ.க-வுடன் ஒன்றிய அளவில் கூட்டணியிலுள்ள மிசோரம் முதல்வர், தேர்தல் பிரச்சாரத்தில் மோடியுடன் மேடையைப் பகிர்ந்துகொள்ள முடியாது என்று கூறியதுதான். இது பா.ஜ.க-வுக்கு பெருத்த அடியாகும்.

கடந்த அக்டோபர் மாதத்தில், பி.பி.சி.க்கு பேட்டியளித்த மிசோரம் முதல்வர் ஜோரம்தங்கா, “மிசோரம் மக்கள் அனைவரும் கிறித்தவர்கள். மணிப்பூரில் நூற்றுக்கணக்கான தேவாலயங்களை மெய்திகள் எரித்ததை மிசோக்கள் எதிர்க்கிறார்கள். இந்த நேரத்தில் பா.ஜ.க-விற்கு அனுதாபம் காட்டுவது என் கட்சிக்கு எதிர்மறையாக சென்று முடியும். எனவே, பிரதமர் தனியாக வந்து, அவர் அவருடைய மேடையிலும் நான் என்னுடைய மேடையிலும் இருந்தால் நன்றாக இருக்கும்” என்றார்.

பல விடயங்களில் பா.ஜ.க-வின் முடிவுகளை அப்படியே பின்பற்றுபவரான ஜோரம்தங்கா இவ்வாறு கூறியது பெரும் பேசுபொருளானது. பல மாதங்களாகக் கலவரம் நடந்து கொண்டிருக்கும் மணிப்பூருக்கு மோடி செல்லவில்லை என்பதாலும், மணிப்பூர் கலவரத்தை பா.ஜ.க. கட்டுப்படுத்தவில்லை என்பதாலும், மோடியுடன் இணைந்து பிரச்சாரம் செய்தால் மக்கள் எதிர்ப்புக்கு ஆளாகி தோல்வியைச் சந்திக்க நேரிடும் என்ற அச்சத்தில்தான், மிசோரம் முதல்வர் மோடியுடன் மேடையைப் பகிர விரும்பவில்லை. ஒன்றிய அளவில் என்.டி.ஏ. கூட்டணியில் அங்கம் வகித்தாலும், மிசோ தேசிய முன்னணிக் கட்சியானது, மாநில சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைக்க மறுத்துவிட்டது குறிப்பிடத்தக்கது.

இதனையடுத்து, அக்டோபர் 30-ஆம் தேதி மிசோரத்திற்கு தேர்தல் பிரச்சாரத்திற்கு செல்லத் திட்டமிட்டிருந்த மோடியின் பயணம் ரத்து செய்யப்பட்டது. இதனால், கடந்த ஒன்பது ஆண்டுகளில் 60 முறை வடகிழக்கு மாநிலங்களுக்குப் பயணம் செய்த ஒரே பிரதமர் என பீற்றிக்கொள்ளப்பட்ட மோடி, தேர்தலுக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு காணொளி வாயிலாக மிசோரம் மக்களிடையே பிரச்சாரம் செய்யவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார்.

பிற மாநிலங்களைப் பொறுத்தவரையிலும் பிரச்சாரக் கூட்டங்களில் பெரிய அளவில் மோடியைக் காண முடியவில்லை. தேர்தல் பிரச்சாரத்தின் இரண்டாம் கட்டத்தில்தான் கணிசமான எண்ணிக்கையில் மோடியின் பிரச்சாரங்களைப் பார்க்க முடிந்தது. மோடியின் வழக்கமான பிரச்சார எண்ணிக்கைகளுடன் ஒப்பிடுகையில் இதுவும் குறைவுதான் என்றும் கூறப்பட்டது. இன்னொருபுறம், அமித்ஷா, ஜே.பி.நட்டா, யோகி ஆதித்யநாத், நிர்மலா சீதாராமன், பா.ஜ.க.-வின் மத்திய அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோரை தேர்தல் பிரச்சாரத்தில் இறக்கி இந்த வெற்றிடத்தை இட்டு நிரப்ப முயன்றது, பா.ஜ.க.

வளர்ச்சி நாயகன் என ஊதிப்பெருக்கப்பட்ட மோடியின் பிம்பம், 2014-ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க.வின் வெற்றிக்கு முக்கியக் காரணமாக இருந்தது. அதன் பிறகு, பா.ஜ.க. எதிர்கொண்ட அனைத்து தேர்தல்களிலும் மோடியின் முகத்தைக் காட்டியே பிரச்சாரம் செய்தது. சட்டமன்றத் தேர்தல்களில் எதிர்க்கட்சிகளால் முன்னிறுத்தப்படும் மாநிலத் தலைவர்களுக்கு எதிராக, நாட்டின் பிரதமராக உள்ள மோடியின் முகமே முன்னிறுத்தப்பட்டது.  இந்த உத்தியை 2015-ஆம் ஆண்டு நடந்த பீகார் சட்டமன்றத் தேர்தலிலேயே பா.ஜ.க. கையாளத் தொடங்கிவிட்டது.

ஆனால், பாசிசக் கும்பலின் தோல்வி முகம் காரணமாக அண்மைக்காலமாக மோடியின் பிம்பம் சரிந்து வருகிறது. கடந்த மே மாதம் நடந்த கர்நாடக சட்டமன்றத் தேர்தலிலேயே இதைக் காண முடிந்தது. அத்தேர்தலின் போது 33 பேரணிகளிலும், 28 ரோடு ஷோக்களிலும், 7 நாள் தொடர் பிரச்சாரக் கூட்டங்களிலும் மோடி கலந்து கொண்டார். ஆனால், கர்நாடகாவில் பா.ஜ.க. படுதோல்வியை சந்தித்ததோடு, மோடி பிரச்சாரம் செய்ததால் பா.ஜ.க. வெற்றி பெற வாய்ப்பிருந்த தொகுதிகளின் எண்ணிக்கையும் குறைந்துவிட்டது.

இந்த எதிர்மறை விளைவின் காரணமாக தேர்தல்களில் மோடியின் முகத்தை முன்னிறுத்துவதில் பாசிசக் கும்பலுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. மேலும், கர்நாடக தேர்தல் தோல்வியின்போதே “அதிர்ஷ்டமற்ற தலைவர் மோடி” என்று பொதுவெளியிலும் கட்சிக்குள்ளும் பேசப்பட்டது. எனவே, இந்த ஐந்து மாநிலத் தேர்தல்களில் பெரும்பாலானவற்றில் தோல்வி உறுதியாகியுள்ள நிலையில் மோடியை முன்னிறுத்தினால், மோடி அதிர்ஷ்டமற்றவர் என்ற பிரச்சாரம் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் பெரும் பேசுபொருளாகி, தங்களின் ஒரே பிரம்மாஸ்திரமான “மோடி பிம்பம்” புஸ்வானமாகிவிடும் என்ற அச்சம் பாசிசக் கும்பலுக்கு ஏற்பட்டுள்ளது.

ஆனால், பரிதாபம் என்னவெனில் தேர்தலை எதிர்கொள்ள மோடியை முன்னிறுத்துவதைத் தவிர பாசிசக் கும்பலுக்கு தற்சமயம் வேறு உத்தி கையில் இல்லை. அந்தந்த மாநிலங்களில் செல்வாக்குமிக்க பிரபலத் தலைவர்கள் பா.ஜ.க-விற்கு இல்லாத காரணத்தினாலும், அப்படியிருந்தாலும் உட்கட்சி பூசல் காரணமாக அவர்களை முன்னிறுத்த முடியாததாலும் இந்நிலை மேலும் மோசமாகியுள்ளது. எனவே, வேறுவழியில்லாமல் இந்த ஐந்து மாநிலத் தேர்தல்களில் வரம்புக்குட்பட்ட அளவிற்கு மட்டும் மோடியை முன்னிறுத்திப் பிரச்சாரம் செய்ய வேண்டிய இக்கட்டான நிலைக்கு பா.ஜ.க. தள்ளப்பட்டது.

பாசிஸ்டுகளின் பிரச்சாரப் போக்கை மாற்றிய சாதிவாரிக் கணக்கெடுப்பு:

இந்த ஐந்து மாநிலத் தேர்தலில், முந்தைய தேர்தல்களை காட்டிலும் “கவர்ச்சிவாதம்” முன்னுக்கு வந்துள்ளது. மிசோரம் மாநிலம் தவிர்த்து மீதமுள்ள நான்கு மாநிலங்களில் மட்டும் மகளிருக்கு ஸ்கூட்டி, சிலிண்டர் விலை குறைப்பு, மகளிருக்கான மாதாந்திர தொகை உள்ளிட்ட பல்லாயிரம் கோடிகள் மதிப்பிலான கவர்ச்சிவாதத் திட்டங்களை காங்கிரசும், பா.ஜ.க.வும் வாரி இறைத்துள்ளன. இலவசத் திட்டங்களை “ரேவ்டி கலாச்சாரம்” என இழிவுப்படுத்திய பா.ஜ.க., குஜராத், உ.பி தேர்தல்களைப் போலவே இப்போதும் கவர்ச்சிவாதத் திட்டங்களை அறிவிப்பதில் காங்கிரசுடன் போட்டியில் இறங்கியிருக்கிறது.

மற்றொருபுறம், இந்துமதவெறியைத் தூண்டும் பா.ஜ.க-வின் வழக்கமான பிரச்சாரம் இந்தத் தேர்தலில் குறைவாகவே இருந்தது. இராமர் கோவிலுக்கு இலவசமாக அழைத்துச் செல்வது, தெலுங்கானா மாநிலத்தில் பொது சிவில் சட்டம் அறிமுகப்படுத்துவது போன்ற வாக்குறுதிகள்,  தெலுங்கானா பாக்கியலட்சுமி கோவிலை ஒட்டிய பேரணிகள் என ஒருசில இந்துமதவெறிப் பிரச்சாரங்கள் பா.ஜ.க-வால் மேற்கொள்ளப்பட்டன. ஆனால், கடந்த கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் மேற்கொள்ளப்பட்ட “ஜெய் பஜ்ரங் பலி”, “தி கேரளா ஸ்டோரி” போன்ற இந்துமதவெறி, இஸ்லாமிய வெறுப்பு பிரச்சாரங்கள் அளவிற்கு அவற்றை பா.ஜ.க-வே இத்தேர்தலில் முதன்மைப்படுத்தவில்லை. பெரும்பாலும் கவர்ச்சிவாதத் திட்டங்களுக்கே கவனம் தரப்பட்டது. பா.ஜ.க-வின் உள்ளூர் பிரமுகர்கள் பலரே இதை ஒப்புக்கொண்டுள்ளனர்.

இதுகுறித்து “பொழியும் வாக்குறுதிகள்: ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தலில் போட்டி கவர்ச்சிவாதம்” என்ற தலைப்பில் தலையங்கம் எழுதிய, “தி இந்து”  நாளிதழ்,  “பிரச்சாரத்தில் வகுப்புவாதத்திற்குப் பதிலாக போட்டி கவர்ச்சிவாதம் தோன்றியுள்ளது” எனக் குறிப்பிட்டுள்ளது. இவையன்றி, பழங்குடி மக்கள் மற்றும் விவசாயிகளுக்கான வாக்குறுதிகளும் முன்னுக்கு வந்தன.

இந்த மாற்றத்திற்கு முக்கியமான காரணங்களில் ஒன்று, எதிர்க்கட்சிகளால் கையிலெடுக்கப்பட்ட சாதிவாரிக் கணக்கெடுப்பு. ஐந்து மாநிலத் தேர்தலில் சாதிவாரிக் கணக்கெடுப்பை காங்கிரஸ் ஒரு முக்கிய ஆயுதமாக கையிலெடுத்தது. காங்கிரஸ் வெற்றிபெற்றால் ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம், சத்தீஸ்கர், தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தப்படும் என்றும், 2024 நாடாளுமன்றத் தேர்தலில் “இந்தியா” கூட்டணி வெற்றிபெற்றால் நாடு முழுவதும் நடத்தப்படும் என்றும் கூறியது. இது பாசிசக் கும்பலை தற்காப்பு நிலைக்குத் தள்ளியது.

சான்றாக, அக்டோபர் மாதத் தொடக்கத்தில் சத்தீஸ்கர் மாநிலத்தில் பிரச்சாரம் செய்த மோடி, “காங்கிரஸ் சாதிவாரிக் கணக்கெடுப்பை ஆதரிக்கிறது; இந்துக்களைப் பிரிக்க முயற்சிக்கிறது” என்று பேசினார். ஆனால், காங்கிரஸ் இந்த அரசியலை தீவிரமாகக் கொண்டு சென்றதன் விளைவாக, நவம்பர் மாதத் தொடக்கத்தில் அதே சத்தீஸ்கரில் பேசிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, “சாதிவாரிக் கணக்கெடுப்பை பா.ஜ.க. எதிர்க்கவில்லை. அது தொடர்பாக விவாதித்து முடிவு எடுக்கப்படும்” என்று தற்காப்பு நிலையிலிருந்து பதிலளித்தார்.

இத்தனை ஆண்டுகளாக தாங்கள் கட்டிவைத்திருந்த “இந்து” என்ற பிம்பத்தை சாதிவாரிக் கணக்கெடுப்பு நொறுக்கத் தொடங்குவதைக் கண்டு பாசிசக் கும்பல் பீதியடைந்தது. இந்து என்று கூறி பிரச்சாரம் செய்ய இயலாமல் உழைக்கும் மக்கள், பெண்கள், விவசாயிகள், பழங்குடிகள் என பிரித்து பிரச்சாரம் செய்யும் நிலைக்கு பா.ஜ.க. சென்றது.

மேலும், சத்தீஸ்கர் மாநிலப் பிரச்சாரத்தில் பேசிய ராகுல் காந்தி, பழங்குடியினரை “ஆதிவாசிகள்” என்பதற்கு பதிலாக “வனவாசிகள்” என்று குறிப்பிட்டு பா.ஜ.க. அவமதிக்கிறது, அவர்களை “மூத்த குடி” என்று சொல்வதற்கு பா.ஜ.க. அஞ்சுகிறது என்று பேசியது பாசிசக் கும்பலை பின்வாங்கச் செய்தது. இதனால் சத்தீஸ்கர் உள்ளிட்ட தேர்தல்களில் பல்வேறு பழங்குடி மக்கள் சார்ந்த திட்டங்களை பா.ஜ.க. முன்வைக்க வேண்டியிருந்தது. அச்சம் தலைக்கேற, தேர்தல் நடந்துகொண்டிருக்கும் போதே 24,000 கோடி ரூபாய் மதிப்பிலான “பிரதம மந்திரி ஜன்ஜாதி ஆதிவாசி நியாய மகா அபியான்” என்ற திட்டத்தைத் தொடங்கி வைத்தார் மோடி.

இந்த சாதிவாரிக் கணக்கெடுப்பு, தேர்தல் பிரச்சாரத்தில் மட்டுமின்றி அரசியல் அரங்கிலும் முக்கியமான தாக்கத்தைச் செலுத்தியுள்ளது. இரண்டு மாதத்திற்கு முன்புவரை புதிய நாடாளுமன்றத் திறப்பு, மோடியின் அரசுமுறை அமெரிக்கப் பயணம், நிலவின் தென்துருவத்தில் ஏவப்பட்ட சந்திரயான்-3 விண்கலம், G-20 உச்சி மாநாடு மற்றும் பொது சிவில் சட்டம், ஒரே நாடு ஒரே தேர்தல், இந்தியாவிற்கு “பாரத்” என பெயர் மாற்றம் ஆகியவற்றைப் பிரச்சாரமாக்கியது, நாடாளுமன்றச் சிறப்புக் கூட்டத்தொடர், ராமர் கோவில் திறப்புக்கான தேதி அறிவிப்பு என அடுத்தடுத்த நிகழ்ச்சிநிரல்களை கொண்டுவந்த பாசிசக் கும்பலின் நிகழ்ச்சிநிரல் சங்கிலியை சாதிவாரிக் கணக்கெடுப்பு அறுத்தெறிந்துள்ளது.

ராமர் கோவில் திறப்புக்கான தேதி நெருங்கிக் கொண்டிருந்தாலும், ஐந்து மாநிலத் தேர்தல் முடிவுகளுக்கு அடுத்த நாளே நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடருக்கான தேதி அறிவிக்கப்பட்டிருந்தாலும், அதற்குப் பலியாகி அதற்குள் சென்று விவாதிக்க எதிர்க்கட்சிகள் உட்பட யாரும் தயாராக இல்லை. இதனால் அடுத்தடுத்த நிகழ்ச்சிநிரல்களை உருவாக்கிகொண்டிருந்த பாசிசக் கும்பல் இந்த இரண்டு மாதங்களாக சொந்தமுறையில் ஒரு நிகழ்ச்சிநிரலை உருவாக்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. மேலும், கிரிக்கெட்டில் இந்திய அணி உலகக்கோப்பையை வென்றால், அதைத் தமது மோடி பிம்பப் பிரச்சாரத்துக்குப் பயன்படுத்த எண்ணியதும் பகல் கனவாகிவிட்டது. இந்திய அணியின் தோல்விக்கு மோடியே காரணம் என ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களும் காறி உமிழாத குறையாக தூற்றியது பாசிசக் கும்பலுக்கு மேலும் சோர்வை ஏற்படுத்தியது.

இவற்றின் மூலம் பாசிசக் கும்பல் எந்த அளவிற்கு தோல்வி முகத்தில் உள்ளது என்பது தெளிவாகிறது. அரசியல் அரங்கில் உருவாக்கப்பட்ட இந்தத் தோல்வி முகம் தேர்தல் உள்ளிட்ட பிற அரங்கங்களிலும் எதிரொலிக்கின்றது. சொல்லப்போனால், அடித்து வீழ்த்த ஆளில்லாத காரணத்தினாலேயே பாசிசக் கும்பல் இன்னும் அதிகார நாற்காலியில் அமர்ந்து கொண்டிருக்கிறது. இந்த நேரத்தில் ஏறி அடித்தால் தேர்தல் களத்திலும் சமூக அரங்கிலும் பாசிசக் கும்பலை வீழ்த்த முடியும் என்ற நம்பிக்கையான சூழல் தற்போது உருவாகியுள்ளது.

இச்சூழலுக்கு ஏற்ப பாசிசக் கும்பலை வீழ்த்துவதற்கான திசையில் பணிகளை மேற்கொள்ளாமல், பா.ஜ.க.விற்கு எதிராக எதிர்க்கட்சிகளை “மீட்பராக” முன்னிறுத்தும் போக்கு தமிழ்நாடு உட்பட அனைத்து மாநிலங்களிலும் வளர்ந்து வருகிறது. ஆனால், எதிர்க்கட்சிகளின் “இந்தியா” கூட்டணியும் அதிலுள்ள கட்சிகளும் எந்தளவுக்கு சந்தர்ப்பவாதமானவை என்பதையும், அக்கூட்டணியை நம்பி மக்களின் பாசிச எதிர்ப்பை அடகு வைப்பது அப்பட்டமான தற்கொலைப் பாதை என்பதையும் இந்த ஐந்து மாநிலத் தேர்தல்களில் காங்கிரசின் நடவடிக்கைகள் தெளிவாகக் காட்டுகின்றன.

ஓட்டு பொறுக்குவதே ஒற்றைக் கொள்கை:  

தேர்தல் நடந்த ஐந்து மாநிலங்களில் பெரும்பாலான மாநிலங்களில் காங்கிரசின் கை ஓங்கி இருந்தது. இதனால் காங்கிரசுக்கு இம்மாநிலங்களில் கூட்டணிக் கட்சிகளின் தயவு தேவைப்படவில்லை. எனவே, கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதிகளைப் பகிர்ந்து கொள்ளாமல் காங்கிரஸ் அக்கட்சிகளை ஓரங்கட்டியது. இதனால் கூட்டணியிலுள்ள ஒவ்வொரு கட்சியும் தனித்தனியாக வேட்பாளர்களை நிறுத்தி தங்களுக்குள்ளேயே அடித்துக் கொண்டன.

சி.பி.ஐ. மற்றும் சி.பி.ஐ.(எம்) கட்சிகள், ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் கணிசமான தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தின. இவ்விரு கட்சிகளும் இச்சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் தங்களைக் கூட்டணியில் இணைத்துக் கொள்ளவில்லை என்ற ஆதங்கத்தை பகிரங்கமாகவே வெளிப்படுத்தின. இக்கட்சிகளன்றி, ஆம் ஆத்மி கட்சியும் இத்தேர்தலில் தனியாக வேட்பாளர்களைக் களமிறக்கியது.

மத்தியப்பிரதேச மாநிலத்தின் உ.பி. எல்லையோர மாவட்டங்களில் செல்வாக்கு பெற்றுள்ள அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சிக்கும் தொகுதிகளைப் பிரித்துத்தர காங்கிரஸ் மறுத்துவிட்டது. இதனால், கடுப்பான அகிலேஷ் யாதவ், காங்கிரஸ் இவ்வாறே நடந்து கொண்டிருந்தால் உத்தரப்பிரதேசத்தில் காங்கிரசுக்கு இதே நிலை ஏற்படும் என்று மிரட்டல் விடுத்ததோடு தேர்தலைத் தனியாக எதிர்கொண்டார். இதனால், பல தொகுதிகளில் பலமுனைப் போட்டி உருவானது.

“இந்தியா” கூட்டணியின் பலமே பா.ஜ.க-விற்கு எதிராக ஒற்றை வேட்பாளரை நிறுத்தி பா.ஜ.க. எதிர்ப்பு வாக்குகளை அறுவடை செய்வதுதான் என்று தொடக்கத்தில் சொல்லப்பட்டதற்கு, காங்கிரசே இப்போது குழி தோண்டியிருக்கிறது. இன்னொருபுறத்தில், ஐந்து மாநிலத் தேர்தல்களில் மட்டுமே காங்கிரஸ் கவனம் செலுத்துவதாகவும், “இந்தியா” கூட்டணிக்கான வேலைகளை மறந்து விட்டதாகவும் நிதீஷ்குமார் புலம்பியிருக்கிறார்.

மோடிக்கு எதிரான தலைவராக ராகுல் வளர்ந்து வருவதாலும், காங்கிரஸ் கட்சி கொஞ்சம் கொஞ்சமாக வலுப்பெறுவது போல தோன்றுவதாலும், பெரிய அளவில் கூட்டணிக் கட்சிகளை சாராமலேயே தேர்தலை எதிர்கொள்ளலாம் என்று காங்கிரஸ் திட்டமிடுகிறது. மேலும், கர்நாடகா மற்றும் ஹிமாச்சலில் ஏற்கனவே காங்கிரஸ் ஆட்சியில் உள்ளதால், இந்தத் தேர்தலிலும் குறைந்தது மூன்று மாநிலங்களில் வென்றுவிட்டால் பிரதமர் வேட்பாளரை காங்கிரசிலிருந்து நிறுத்த முடியும்; கூட்டணிக் கட்சிகளை தனது கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருக்க  முடியும் என்பது காங்கிரசின் திட்டமாக உள்ளது.

பிற எதிர்க்கட்சிகள் செல்வாக்காக உள்ள மாநிலங்களை பொறுத்தவரையிலும், அக்கட்சிகள் காங்கிரசுடனோ “இந்தியா” கூட்டணியிலிருக்கும் பிற கட்சிகளுடனோ தொகுதிகளைப் பகிர்ந்து கொள்ளப்போவதில்லை. ஆனால், தற்போதைய சூழலில் மாநில அளவில் அக்கட்சிகளுக்கு அடித்தளம் இருந்தாலும் காங்கிரசுடன் இணைந்து நின்றாலே, “இந்தியா” கூட்டணி பெயரில் நின்றாலே சமூகத்திலுள்ள பாசிச எதிர்ப்பு வாக்குகளை அறுவடை செய்துகொள்ள முடியும்.

மொத்தத்தில், எந்தக் கட்சிக்கும் பாசிசக் கும்பலை எதிர்க்க வேண்டும் என்பதிலும் குறைந்தபட்சம், பா.ஜ.க-வை தேர்தலில் தோற்கடிப்பது என்பதிலும் கூட உறுதியில்லை. இந்தக் கூட்டணியை வைத்து தங்களைப் பாதுகாத்துக்கொண்டு, தேர்தலில் எவ்வாறு பொறுக்கி தின்னலாம் என்பதே இக்கட்சிகளின் ஒற்றைத் திட்டமாக இருக்கிறது.

காங்கிரசின் இந்துத்துவம் கொல்லாதா?

ஒருபக்கம், எதிர்க்கட்சிகளின் சாதிவாரிக் கணக்கெடுப்புப் பிரச்சாரம் காரணமாக, இத்தேர்தலில் பா.ஜ.க-வின் இந்துத்துவப் பிரச்சார நெடி குறைவாக இருந்தாலும் அந்தக் ‘குறையை’ காங்கிரஸ் தீர்த்து வைத்தது. மத்தியப்பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் காங்கிரஸ் வெவ்வேறு அளவுகோல்களில் இந்துத்துவப் பிரச்சாரத்தை முன்னெடுத்தது.

மத்தியப்பிரதேசத்தில் அறிவிக்கப்படாத காங்கிரஸ் முதல்வர் வேட்பாளரான கமல்நாத் பேசுவதை ஒருவர் கேட்டால் நிச்சயம் அவர் ஆர்.எஸ்.எஸ்-காரர் என்றே எண்ணத் தோன்றும். “பாபர் மசூதி இடத்தில் உள்ள தற்காலிக இராமர் கோவிலின் பூட்டுகளை இராஜீவ் காந்தி திறந்து வைத்தார். வரலாற்றை மறந்துவிடக் கூடாது” என்று காங்கிரசே பகிரங்கமாக சொல்லத் தயங்குவதைப் பேசும் இந்துத்துவவாதி தான் கமல்நாத்.

இத்தேர்தலில், ராமனும் சீதையும் வனவாசத்தின் போது சென்றதாக சொல்லப்படுகின்ற பாதையை மேம்படுத்தும் “ஸ்ரீ ராம் வான் கமன் பாதை” திட்டம், ராமன் உள்ளிட்ட இந்து கடவுள்களுக்கு சிலை வைப்பது ஆகியவை மத்தியப்பிரதேச காங்கிரசால் வாக்குறுதிகளாக அளிக்கப்பட்டுள்ளன. மேலும், காங்கிரஸ் ஆட்சியமைத்தால் இலங்கையில் சீதா கோவில் கட்டும் திட்டம் மீண்டும் தொடங்கப்படும் என்பது உள்ளிட்ட பல ‘இந்து’ ஆதரவுத் திட்டங்களை அவர் அறிவித்துள்ளார். மத்தியப்பிரதேசக் காங்கிரசின் நிறத்தை கலம்நாத்  ஏற்கனவே காவியாக்கி வரும் நிலையில், சமீபத்தில் இந்துத்துவ அமைப்பான பஜ்ரங் சேனாவின் நிர்வாகிகள் கும்பலாக காங்கிரசில் இணைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதைப்போல, சத்தீஸ்கர் மாநிலக் காங்கிரஸ் முதல்வரான பூபேஷ் பாகலும் பல்வேறு இந்துத்துவ வாக்குறுதிகளை அளித்திருப்பதோடு, ஏற்கனவே பலவற்றை நடைமுறைப்படுத்தி, கமல்நாத்துக்கே முன்னோடியாக இருந்து வருகிறார். சொல்லப்போனால், அம்மாநிலத்தில் பா.ஜ.க-வால் தன்னை நிலைநிறுத்திக்கொள்ள முடியாததற்கே, பா.ஜ.க-வின் இந்துத்துவ முகமூடியை  பூபேஷ் பாகல் அணிந்துகொள்வது தான் காரணம் என்று சொல்லப்படுகின்றது.


படிக்க: தேர்தல் ஆணையர்கள் மசோதா: தேர்வுக் குழுவிலிருந்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி நீக்கம்!


கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலின்போது ஆர்.எஸ்.எஸ்-இன் குடை அமைப்பான பஜ்ரங் தள் அமைப்பை தடைசெய்வோம் என்ற பிரச்சாரத்தை காங்கிரஸ் தீவிரமாக முன்னெடுத்தது. அப்போது ஊடகங்களுக்கு பதிலளித்த பூபேஷ் பாகல், “மாநிலத்தின் நிலைமையை அடிப்படையாகக் கொண்டு முடிவுகள் எடுக்கப்படும். தேவைப்பட்டால் சத்தீஸ்கரில் தடை செய்வது பற்றி யோசிப்போம்” என்று மழுப்பலாகப் பேசியது குறிப்பிடத்தக்கது.

ராஜஸ்தான் மாநிலத்தில், தேர்தல் பிரச்சாரத்தில் நேரடியாக இந்துத்துவப் பிரச்சாரத்தை காங்கிரஸ் முன்னெடுக்கவில்லை எனினும், பல இந்துத்துவத் திட்டங்கள் காங்கிரஸ் அரசாங்கத்தால் அமல்படுத்தப்பட்டு வருகின்றன. பிராமணர் நல வாரியம் அமைத்தது, அர்ச்சகர்களுக்கான கவுரவத்தை அதிகரிப்பது, கோசாலைகளுக்கான நிதி ஒதுக்கீடு, பசுக் காப்பீடு போன்ற பல இந்துத்துவக் கொள்கைகள் ராஜஸ்தான் காங்கிரசால் அமல்படுத்தப்பட்டுள்ளன.

மேலும், இஸ்லாமியர்கள் கணிசமான எண்ணிக்கையில் வாழும் அம்மாநிலத்தில், இஸ்லாமியர்களுக்கு எதிராக நடந்த கும்பல் வன்முறைகளைக் கட்டுப்படுத்தவோ, தடுக்கவோ சொல்லிக் கொள்ளும்படியான எந்த நடவடிக்கையையும் காங்கிரஸ் எடுத்ததில்லை. மேலும், காங்கிரசின் ஆட்சியில் தான் ராஜஸ்தானில் பல  இந்துத்துவ அமைப்புகள் உருவாகி செழிப்பாக வளர்ந்துள்ளன. காங்கிரஸ் கைகட்டிக்கொண்டு இவற்றை வேடிக்கை பார்த்தது என்பதே உண்மை.

காங்கிரசின் இந்த இந்துத்துவ முகத்தை நாம் அம்பலப்படுத்தி, இது தான் மாற்றா என்று கேள்வி எழுப்பினால், “காங்கிரஸ் மிதவாத இந்துத்துவத்தை கடைப்பிடிக்கின்றதுதான், ஆனால், அது யாரையும் கொல்லுவதில்லை” என்று சிலர் பதில் வாதம் வைக்கக்கூடும்.

ஆனால், மத்தியப்பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான் மாநிலங்களில் முன்னெடுக்கப்படும் காங்கிரசின் இந்துத்துவம் இஸ்லாமியர்கள், பழங்குடி மக்கள், சிறுபான்மையினர்களை பா.ஜ.க. சுதந்திரமாக கொலை செய்வதற்கான வழியை உருவாக்கி தருகிறது. பா.ஜ.க. கொலை செய்யும் போது கள்ளமவுனம் சாதித்துவிட்டு, கொலையில் தனக்குப் பங்கில்லை என்று நழுவிக் கொள்கிறது காங்கிரஸ்.

இந்தியா கூட்டணி பா.ஜ.க-விற்கு மாற்றா?

ஒருபக்கம், பசு வளைய மாநிலங்களில் இந்துத்துவத்தைக் கையிலெடுத்துப் பிரச்சாரம் செய்யும் காங்கிரஸ், தென்னிந்திய மாநிலமான தெலுங்கானாவில் அங்குள்ள அரசியல் நிலைமைக்கு ஏற்ப தனக்கு மதச்சார்பின்மை வேடம் தரித்துக்கொண்டு பிரச்சாரம் செய்தது. இக்கட்சிக்கு ஆதரவாக பல ஜனநாயக அமைப்புகள் களத்தில் பிரச்சாரம் செய்தது காங்கிரசின் இந்த வேடத்திற்கு வலுச்சேர்த்தது. “பாம்புக்கு வாலையும், மீனுக்கு தலையையும் காட்டுவதை” போல வட மாநிலங்களுக்கு இந்துத்துவம், தென்மாநிலங்களுக்கு மதச்சார்பின்மை என பிரித்துப் பிரச்சாரம் செய்வதன் மூலம் காங்கிரஸ் ஒரு கேடுகெட்ட சந்தர்ப்பவாதக் கட்சி என்பதனை நிரூபித்துள்ளது.

நாடாளுமன்றக் கூட்டத்தொடர்களிலும் பொதுக்கூட்ட மேடைகளிலும் மட்டும் “பாசிசம், பாசிசம்” எனப் பேசி, பாசிச எதிர்ப்பு ஓட்டுகளைப் பொறுக்கிக் கொள்ளும் காங்கிரஸ், இந்த ஐந்து மாநிலத் தேர்தலில் பாசிசக் கும்பலுக்கு நெருக்கடி தருகின்ற எந்த வாக்குறுதியையும் அளிக்கவில்லை. சாதிவாரிக் கணக்கெடுப்பு அரசியல் காங்கிரசால் முன்னெடுக்கப்பட்டாலும், தேர்தலில் வென்ற பிறகு காங்கிரஸ் அதை நிறைவேற்றுமா என்பது சந்தேகமே.

கர்நாடக சட்டமன்றத் தேர்தலின்போது பஜ்ரங் தள் அமைப்பை தடை செய்வோம் என்று பேசிய காங்கிரஸ், தேர்தலில் வென்ற பிறகு அது குறித்து மூச்சுகூட விடாமல் இருப்பதே இதற்குச் சான்று. மேலும், 2011-ஆம் ஆண்டில் சாதிவாரிக் கணக்கெடுப்பை எடுத்த பின்பும், சந்தர்ப்பவாதமாக காங்கிரஸ் அதனை வெளியிடாமல் இருந்தது குறிப்பிடத்தக்கது. சாதிவாரிக் கணக்கெடுப்பு காங்கிரசிற்கே எதிராக சென்று முடியும் என்று அரசியல் விமர்சகர்கள் பேசிவரும் சூழலில், தேர்தலில் வென்ற பிறகு காங்கிரஸ் அவ்வாக்குறுதியை அப்படியே ஊற்றி மூடுவதற்கான வாய்ப்புகளே அதிகம்.

இந்த ஒன்பது ஆண்டுகால மோடியின் ஆட்சியில் பாசிசக் கும்பல் புதியக் கல்வி கொள்கை, நீட் தேர்வு, ஜி.எஸ்.டி. உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை அமல்படுத்தியுள்ளது. அவை, வெறும் திட்டங்கள் மட்டுமல்ல, அவை ஒவ்வொன்றும் இந்துராஷ்டிரத்திற்கான அடிக்கட்டுமானங்கள் என்ற பார்வையில் அணுகப்பட வேண்டியவை. கல்வி, மருத்துவம் – தனியார்மயம், மாநில உரிமைப் பறிப்பு, அம்பானி-அதானிகளுக்கான பன்னாட்டுச் சந்தை உருவாக்கம் என பல நோக்கங்களுடன் அவை அமல்படுத்தப்பட்டுள்ளன. ஆனால், இவற்றுக்கு எதிராக காங்கிரஸ் எந்த மாற்றையும் முன்வைக்கவில்லை. ராகுல் காந்தி வாய்கிழிய பேசும் அதானி ஊழல் முறைகேடு, ஜி.எஸ்.டி-க்கு எதிராகக் கூட காங்கிரஸ் இத்தேர்தலில் பெரிதாகப் பேசவில்லை.

பலரும்  சொல்வதுபோல, இந்தத் தேர்தல்கள் 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கான அரை இறுதியாக இல்லாவிட்டாலும், அத்தேர்தலுக்கான முன்னோட்டம் என்ற வகையில் பார்க்கலாம். அப்படிப் பார்த்தால், காங்கிரஸ் உள்ளிட்ட எந்த எதிர்க்கட்சியும் மக்களின் பிரச்சினைகளையும் பாசிச எதிர்ப்பையும் பேசுபொருளாக்குவதில்லை. வெறும் கவர்ச்சிவாதத் திட்டங்களையும் சந்தர்ப்பவாத அணுகுமுறைகளையும் வைத்தே தேர்தலை எதிர்கொள்ளும் நோக்கத்தில் இருப்பது அப்பட்டமாகத் தெரிகிறது. இத்தகைய காங்கிரசும் “இந்தியா” கூட்டணியும் தான் பா.ஜ.க. மற்றும் பாசிசத்தை வீழ்த்தப்போகின்றன என்று நம் காதுகளில் பூ சுற்றுவதைச் சிலர் செய்து வருகின்றனர்.

பாசிசக் கும்பல் தோல்வி முகத்தில் இருக்கும் இன்றைய சூழலில், பாசிஸ்டுகளுக்கு எதிராக சிதறலான வகையில் மக்கள் போராட்டங்கள் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கும் வேளையில், பா.ஜ.க-வுக்கு எதிராக மறந்தும் பேசத் துணியாத சந்தர்ப்பவாதிகளை மாற்றாகக் காட்டுவது தற்கொலைப் பாதைக்கு ஒப்பானது. இது, தமது சந்தர்ப்பவாதத்தையும் செயலின்மையும் மறைத்துக் கொள்ள விரும்புவோரின் தந்திரமேயன்றி வேறேதுமில்லை.


ஆசிரியர் குழு,
புதிய ஜனநாயகம்

இன்று டிசம்பர் 3 ஆம் தேதி மிசோரம் தவிர்த்து மீதமுள்ள நான்கு மாநிலங்களுக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகவுள்ளதால், ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல் குறித்து ஓர் பார்வைக்கு வந்தடைய “புதிய ஜனநாயகம்” டிசம்பர் மாத இதழ் கட்டுரை வெளியிடப்படுகிறது. இக்கட்டுரை தேர்தல் முடிவுகள் வெளியாவதற்கு முன்பு எழுதப்பட்டது.

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க