நெருங்கும் நாடாளுமன்றத் தேர்தல்: சிலந்திவலைகள் எச்சரிக்கை!

ஆர்.எஸ்.எஸ் - பா.ஜ.க கும்பல் இன்று அரசியல் ரீதியாக தோல்வி முகத்தை அடைந்துள்ளது என்று நாம் அடையாளப்படுத்தியுள்ளோம். இந்த தருணத்தை சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு பாசிசக் கும்பலுக்கு எதிரான மக்கள் போராட்டத்தை வளர்த்தெடுக்க வேண்டுமென்றால், அக்கும்பலின் சதித்தனமான அணுகுமுறைகளையும் உத்திகளையும் நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

க்களை எப்போதும் பரபரப்பிலேயே வைத்துக் கொள்வது; நிகழ்ச்சி நிரலை எப்போதும் தான் தீர்மானிக்கும் வகையில் பார்த்துக் கொள்வது; எதிரணியினரிடம் உள்ள பலவீனங்களைப் பயன்படுத்திக் கொண்டு, எதிராளிகளை எப்போதும் தற்காப்பு நிலைக்குத் தள்ளுவது போன்ற உத்திகள்தான் பா.ஜ.க.வை அரசியல் அரங்கில் பலம்வாய்ந்த கட்சியாக வைத்துள்ளது.

ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. கும்பலின் பல்வேறு சதித்தனமான அணுகுமுறைகளை கவனத்தில் கொள்ளவில்லை என்றால், அக்கும்பல் திட்டமிட்டுப் பின்னிவைத்திருக்கும் சிலந்திவலைக்குள் நாம் சிக்கிக் கொள்வோம். இன்று, நமது நாட்டில் நடந்துகொண்டிருப்பது அதுதான்.

நாடாளுமன்றத் தேர்தலுக்கு சரியாக இன்னும் ஏழு மாதங்களே உள்ளன. இந்த ஏழு மாதங்களில் ஒவ்வொரு நாளும், கடந்துசெல்லும் ஒவ்வொரு மணிநேரங்களும் நாம் எதைப் பேச வேண்டும், எது பொது விவாதமாக இருக்க வேண்டும் என்பதை ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. கும்பல் முன்பே தீர்மானித்துச் செயல்படுத்துகிறது; எதுவும் தங்களது கட்டுப்பாட்டுக்கு அப்பால் செல்லாமல், அனைத்தும் தாங்கள் தீர்மானித்தபடி நடப்பதை உத்தரவாதப்படுத்திக் கொள்கிறது.

கடந்த நான்கு, ஐந்து மாதங்களாக நாம் எதையெல்லாம் விவாதித்துக் கொண்டிருந்தோம்; எதையெல்லாம் பேச மறந்து போயுள்ளோம் என்று எண்ணிப் பார்த்தால் பாசிசக் கும்பலின் இந்த சூழ்ச்சிகளைப் புரிந்து கொள்ள முடியும்.

ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. கும்பல் இன்று அரசியல் ரீதியாக தோல்வி முகத்தை அடைந்துள்ளது என்று நாம் அடையாளப்படுத்தியுள்ளோம். இந்த தருணத்தை சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு பாசிசக் கும்பலுக்கு எதிரான மக்கள் போராட்டத்தை வளர்த்தெடுக்க வேண்டுமென்றால், அக்கும்பலின் சதித்தனமான அணுகுமுறைகளையும் உத்திகளையும் நாம் புரிந்துகொள்ள வேண்டும். அப்போதுதான் ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. கும்பலுக்கு எதிரான போராட்டத்தை சரியான திசையில் உறுதியாக நடத்திச் செல்ல முடியும்.

சந்திரயான் – சி.ஏ.ஜி. அறிக்கை: ஊடகங்களின் கரசேவைக்கு ஒரு வகைமாதிரி!

பார்ப்பன இந்துமதவெறி பாசிஸ்டுகள் எப்போதுமே தங்களுக்குச் சாதகமாக பொது உளவியலைக் கட்டமைப்பதில் வல்லவர்கள். குறிப்பாக, தேர்தல் நேரத்தில் இதற்காக அவர்கள் எடுக்கும் முயற்சிகள் பாரதூரமானவை. ஏனெனில், தேர்தல் நெருக்கத்தில் ஏற்படுத்தப்படும் பொது உளவியல்தான், பெரும்பான்மை மக்களின் வாக்குகளை தீர்மானிக்கக் கூடியதாக இருக்கிறது. அந்தவகையில், ஊடகங்களைக் கைக்குள் போட்டுக்கொண்டு தங்களுக்கு சாதகமான கருத்துருவாக்கத்தில் ஈடுபட்டு வருகிறது பாசிசக் கும்பல்.

நிலவின் தென் துருவத்தில் ஆய்வுசெய்யும் இஸ்ரோவின் “சந்திரயான்-3” திட்டத்தின் வெற்றியை, மோடி அரசின் தனிப்பட்ட சாதனையாக காட்டும் முயற்சிகள் அப்படித்தான் உருவாக்கப்பட்டன.

அமெரிக்கா, ரஷ்யா, சீனா போன்ற நாடுகள் நிலவின் தென் துருவத்திற்குச் சென்று ஆய்வு செய்யும் முயற்சியில் தோல்வியடைந்துள்ள நிலையில், இந்தியா உலகின் முதல் நாடாக நிலவின் தென் துருவத்தில் தனது விண்கலத்தை வெற்றிகரமாக தரையிறக்கியுள்ளது. ஆகவே, இஸ்ரோவின் இந்த வெற்றி, நாட்டு மக்கள் அனைவராலும் தேசத்தின் பெருமிதமாகக் கருதிக் கொண்டாடப்பட்டது.


படிக்க: யூதர்கள் சொல்கிறோம் காசா மீதான போரை நிறுத்து!


வாஜ்பாய் காலத்தில் இந்தியா அணுகுண்டு சோதனை நடத்தியது; அதன்பிறகு, சந்திரயான்-3 திட்டத்தின் சாதனைகள், மோடி அரசில்தான் நிகழ்த்தப்பட்டுள்ளன; எனவே, பா.ஜ.க.தான் ‘தேசத்தை வலுப்படுத்தக் கூடிய கட்சி’ என்பது போன்ற பிரச்சாரங்களை ஊதுகுழல் ஊடகங்கள் முன்னெடுத்தன.

பா.ஜ.க.வின் அடிவருடியான முன்னாள் இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணன், “காங்கிரசுக்கு என்றுமே இஸ்ரோவின் மீது நம்பிக்கை இருந்ததில்லை, இதன் காரணமாக காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் இஸ்ரோ அமைப்புக்கு போதிய நிதி ஒதுக்கவில்லை” என்று விமர்சித்தார். இவரை கதாநாயகனாக சித்தரித்து, நடிகர் மாதவன் நடித்துள்ள “ராக்கெட்ரி” திரைப்படத்திற்குதான், ஒன்றிய செய்தி மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகம், இந்த ஆண்டிற்கான சிறந்த திரைப்படத்திற்கான விருதை வழங்கியுள்ளது.

விக்ரம் லேண்டர் தரையிறங்கிய இடத்திற்கு, சர்வதேச விதிகள் எதையும் மதிக்காமல் “சிவசக்தி” என பெயரிட்டார் மோடி. இது, பெண் சக்தியை கௌரவப்படுத்தும் வகையில் சூட்டப்பட்டதாகவும் கூறினார். சங்கிகள் ஒருபடி மேலேபோய், நிலவின் அந்தப் பகுதியை இந்துராஷ்டிரமாக அறிவிக்க வேண்டும் என்று சமூக ஊடகங்களில் அலும்பல் செய்தார்கள்.

மொத்தத்தில், சந்திரயானின் வெற்றி, பச்சையாக மோடியின் அரசியல் லாபத்திற்காக பயன்படுத்திக் கொள்ளப்பட்டது. அடுத்தது, சூரியனுக்கு அருகில் சென்று ஆய்வு மேற்கொள்ளும் ஆதித்யா விண்கலமும் ஏவப்பட்டுள்ளது. அதுபற்றிய பரபரப்புகளும் தொடங்கிவிட்டன.

இந்த தேசப் பெருமிதக் கூச்சல்களின் நடுவே இஸ்ரோவையே தனியார்மயமாக்கும் மோடி அரசின் சதித்திட்டத்தைப் பற்றி யாரும் பேசவில்லை.

ஜூலை 14 அன்று சந்திரயான் விண்கலம் விண்ணில் ஏவப்பட்டது. ஆகஸ்டு 23-ஆம் தேதி, விக்ரம் லேண்டர் நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கியது. சந்திரயான் விண்கலம் ஏவப்படுவதற்கு முன்பும், நிலவில் தரையிறங்கியதற்கு பின்பும் என ஜூலை மற்றும் ஆகஸ்டு மாதங்கள் முழுக்க நாட்டு மக்களை தேசப் பெருமிதத்திலேயே மூழ்கடித்தது மோடி அரசு. இதற்கு இடைப்பட்ட காலத்தில்தான், மோடி அரசின் உலக மகா ஊழலை சி.ஏ.ஜி. அறிக்கை அம்பலப்படுத்தியது.

ஒன்றிய அரசின் பல்வேறு திட்டங்களில் சுமார் 7.5 லட்சம் கோடி ரூபாய் ஊழல் நடைபெற்றிருப்பதை சி.ஏ.ஜி அறிக்கை வெளிக்கொண்டுவந்தது. மோடி அரசு மிகவும் பெருமையாகப் பேசிவந்த ஆயுஷ்மான் பாரத் என்ற மருத்துவக் காப்பீடுத் திட்டத்தில், ஒரே செல்போன் எண்ணின் கீழ் 7.5 லட்சம் பெயர்கள் பதிவு செய்யப்பட்டிருப்பதையும், இறந்துபோன பலருக்கு சிகிச்சை நடைபெற்றதாக மோசடி செய்திருப்பதையும் சி.ஏ.ஜி. அறிக்கை அம்பலப்படுத்தியிருந்தது. துவாரகா விரைவுச் சாலை கட்டுமானத்தில், ஒரு கிலோ மீட்டர் சாலைக்கு திட்ட மதிப்பான 18 கோடியிலிருந்து 250 கோடி வரை செலவழிக்கப்பட்டதும் அம்பலப்படுத்தப்பட்டது.

1.75 லட்சம் கோடி ரூபாய் முறைகேடு நடந்ததாக கருதப்பட்ட 2ஜி அலைக்கற்றை விவகாரம் காங்கிரஸ் ஆட்சியைக் கவிழ்ப்பதற்கு பா.ஜ.க.வுக்கு மிகப்பெரிய ஆயுதமாக பயன்படுத்தப்பட்டது. ஆனால், அதைவிட ஐந்து மடங்கு ஊழலை அம்பலப்படுத்திய தற்போதைய சி.ஏ.ஜி. அறிக்கை எந்த ஊடகங்களிலும் நீடித்த விவாதப் பொருளாக இல்லை. சந்திரயான்-3 விண்கலம் பற்றிய செய்திகள் ஊடகங்களில் நிரம்பி வழிந்ததன் மூலம் சி.ஏ.ஜி. அறிக்கை கண்டுகொள்ளப்படவில்லை. இதை ஊடகங்கள் திட்டமிட்டே செய்தன.

மோடி அலையை எழுப்ப மேலும் பல முயற்சிகள்!

சந்திரயானுக்கு முன்பாக, பைடனின் அழைப்பின் பேரில், மோடி மேற்கொண்ட அமெரிக்கப் பயணம் குறித்தும் சங்கிகளால் பெருமிதமாகப் பேசப்பட்டது. அதற்கடுத்து, இந்த ஆண்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பு வளர்ச்சியில் (ஜி.டி.பி), அமெரிக்கா, சீனா, ரஷ்யா போன்ற நாடுகளைப் பின்னுக்குத் தள்ளி இந்தியா முதலிடம் பிடித்தது என்ற செய்தி வெளியானது (கொரோனா பெருந்தொற்று, ரஷ்ய-உக்ரைன் போர் ஆகியவற்றால் மேற்கண்ட நாடுகளின் பொருளாதாரம் சரிந்திருப்பதே, இந்தியாவின் உற்பத்தி மதிப்பு ஒப்பீட்டளவில் ‘முன்னேறி’ இருப்பதற்கு காரணம் என்பது தனிக்கதை). இதுவும் மோடி ஆட்சியில் இந்தியா அடைந்துவரும் ‘வளர்ச்சி’க்கு அடையாளமாக பிரச்சாரம் செய்யப்படுகிறது.

இதுவரை எந்த நாட்டு ஆளுங்கட்சியும் செய்யாதவகையில், ஜி20 மாநாட்டிற்கு இந்தியா தலைமையேற்ற நிகழ்வை நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு மிகப்பெரிய கவர்ச்சி விளம்பரமாக மாற்றியுள்ளது மோடி அரசு. ”பாரத் மண்டபம்” என்ற பெயரில் மாநாட்டு அரங்கு, மண்டபத்தின் முகப்பில் நடராஜர் சிலை, விருந்தினர்களுக்கு தங்கத் தட்டில் உணவு என ஒவ்வொரு சிறு நிகழ்வும் ஊதுகுழல் ஊடகங்களிலும் ‘நடுநிலை’ ஊடகங்களிலும் மெய்சிலிர்க்க விவாதிக்கப்பட்டன. ஆனால், மாநாட்டின் ஏற்பாட்டுக்காக, டெல்லியின் குடிசைப் பகுதிகளை திரைகட்டி மறைத்து, அங்கு வாழும் மக்களை சிறை வைத்ததை ஊதுகுழல் ஊடகங்கள் முற்றிலுமாக இருட்டடிப்பு செய்தன.

இப்போதே 2024-ஆம் ஆண்டு தேர்தலுக்கான கருத்துக்கணிப்புகள் வெளியாகத் தொடங்கியுள்ளன. மோடி தான் மீண்டும் அறுதிப் பெரும்பான்மை பெற்று வெற்றிபெறுவார்; எதிர்க்கட்சிகள் மிகப் பரிதாபமாக தோல்வியுறுவார்கள் என்று கருத்துருவாக்கும் வகையில், திட்டமிட்டே கருத்துக்கணிப்பை வெளியிட்டுள்ளன, பா.ஜ.க.வின் கைக்கூலி ஊடகங்களான இந்தியா டிவி – சி.என்.எஸ். கூட்டணி.

இதுபோன்ற போலியான ஊடகக் கருத்துக்கணிப்புகளின் மூலம் மோடியின் பிம்பம் ஊதிப் பெருக்கப்படுகிறது. மறுபக்கம், மணிப்பூரில் தொடர்ந்துகொண்டிருக்கும் இனவெறிக் கலவரங்கள் மூடிமறைக்கப்படுகிறது.

எதிர்க்கட்சிகளை சிதறடிக்கும் உத்தி!

தனக்கு எதிராக திரண்டுள்ள எதிர்க்கட்சிகளின் அணிவரிசையில் எப்படியாவது விரிசலை ஏற்படுத்திவிட வேண்டும் என்று முயற்சிக்கிறது பா.ஜ.க. அதற்காக எல்லா கேடுகெட்ட வழிமுறைகளையும் கையாளுகிறது. தாங்கள் தீர்மானிக்கும் நிகழ்ச்சிநிரலுக்கு உள்ளேயே எதிர்க்கட்சிகளை சுற்றவிடுவதும், திட்டமிட்ட வகையில் தனக்கு எதிரான பிரச்சாரங்களைக் கட்டமைக்கவிடாமல் பார்த்துக் கொள்வதிலும் கவனமாக உள்ளது.

கடந்த ஜுலை 17, 18 ஆகிய தேதிகளில் எதிர்க்கட்சிகளின் இரண்டாவது ஒற்றுமைக் கூட்டம் பெங்களூரில் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தின் விளைவாக, எதிர்க்கட்சிகளின் மேல் கவனம் குவிவதைத் தடுப்பதற்காக, திடீரென்று அதே தேதியில் (ஜூலை 18) தனது கூட்டணிக் கட்சிகளின் கூட்டத்தை டெல்லியில் ஏற்பாடு செய்து நடத்தியது பா.ஜ.க.

அடுத்தது, எதிர்க்கட்சிகளின் மூன்றாவது கூட்டம், ஆகஸ்ட் 31, செப்டம்பர் 01 ஆகிய தேதிகளில் மும்பையில் நடைபெற்றது. இக்கூட்டம், பா.ஜ.க.விற்கு எதிராக குறைந்தபட்ச செயல்திட்டம் வகுப்பதற்கான கூட்டமாக அறிவிக்கப்பட்டது.

இதற்காகவே காத்திருந்ததுபோல, ஆகஸ்ட் 31-ஆம் தேதி, நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி, செப்டம்பர் 18 முதல் 22 வரை நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தொடர் நடைபெறும் என்று அறிவித்தார்.

எவ்வித முன்னறிவிப்புமின்றி, திடீரென அறிவிக்கப்பட்ட இந்த ஐந்து நாள் கூட்டத்தொடரில் என்ன விவாதிக்கப்படப் போகிறது என்பதற்கான நிகழ்ச்சிநிரல்கூட முன்பே வெளியிடப்படவில்லை; கூட்டத்தொடர் நெருங்கியபோதுதான் வெளியிடப்பட்டது. ஆகையால், ஒரே நாடு ஒரே தேர்தல், பொது சிவில் சட்டம், நாடாளுமன்ற இருக்கைகளில் பெண்களுக்கான இட ஒதுக்கீடு ஆகியவை குறித்து சட்டம் கொண்டுவர வாய்ப்புள்ளதாக ஊடகங்களில் செய்திகள் கிசுகிசுக்கப்பட்டன.

அடுத்தநாள், ஒரே நாடு ஒரே தேர்தலை அமலுக்கு கொண்டுவருவதைப் பற்றி பரிசீலிப்பதற்காக முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் அவசர அவசரமாக ஒரு குழு அமைக்கப்பட்டது. அனைத்து எதிர்க்கட்சிகளும், ஒரே நாடு ஒரே தேர்தல் முறையை எதிர்த்தும், பொது சிவில் சட்டத்தை எதிர்த்தும் பேசத்தொடங்கிவிட்டன.

இச்சம்பவங்களுக்கு சில நாட்கள் முன்புதான் சீனா தனது புதிய வரைபடத்தில், அருணாச்சலப் பிரதேசத்தை சேர்த்து வெளியிட்டிருந்தது. ஏற்கெனவே, சீனா, அருணாச்சலப் பிரதேசத்தில் ஊடுருவி கட்டுமானப்பணிகளை மேற்கொண்டுவருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில், வரைபட விவகாரத்தில் ’56 இன்ச்’ மோடி வாய்திறக்காமல் இருப்பது குறித்து எதிர்க்கட்சிகளால் கேள்வி எழுப்பப்பட்டன. ஒரே நாடு ஒரே தேர்தல் விவாதப் பொருளான பின்பு, மோடியின் பராக்கிரமத்தை கேள்விக்குள்ளாக்கும் சீன வரைபடம் கவனம் பெறவில்லை.

இன்னொருபக்கம், அதானி குடும்பத்திற்கு நெருக்கமான இரண்டுபேர் மொரீசியஸ் நாடு வழியாக அதானி நிறுவனங்களின் பங்குகளில் ரகசியமாக பல மில்லியன் டாலர் முதலீடு செய்துள்ளதாகவும், அதன் மூலம் அதானி குழும நிறுவனங்களின் பங்கு மதிப்புகள் மோசடியாக உயர்த்தப்பட்டதாகவும் அம்பலப்படுத்தி “ஒழுங்கமைக்கப்பட்ட குற்றம் மற்றும் ஊழல் அறிக்கை திட்டம்” (OCCRP) என்ற சர்வதேச புலனாய்வு பத்திரிக்கையாளர்களின் வலைப்பின்னல் ஒரு அறிக்கையை வெளியிட்டது.

ஹிண்டன்பர்க் அறிக்கைக்குப் பிறகு மீண்டும் ஒருமுறை “மோதானி” என்ற பெயர் எதிர்க்கட்சிகளால் உச்சரிக்கப்பட்டது. ஆனால், சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தொடர் அறிவிப்பின் மூலமாக இவை எல்லாம் அமுக்கப்பட்டுவிட்டன.


படிக்க: தனியார்மய ஆதிபராசக்தி பெற்றெடுத்த பங்காரு!


உண்மையில், ஒரே நாடு ஒரே தேர்தல் முறையைக் கொண்டுவருவது பற்றி மோடி அரசு கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போதும் பேசியது. ஆனால், ஒரே நாடு ஒரே தேர்தலைக் கொண்டுவர, அரசியலமைப்புச் சட்டத்தின் சில பிரிவுகளை திருத்த வேண்டும்; இந்த திருத்த மசோதாக்களை மக்களவையிலும் மாநிலங்களவையிலும் மூன்றுக்கு இரண்டு என்ற பெரும்பான்மையின் அடிப்படையில் நிறைவேற்ற வேண்டும். அப்போதுதான் ஒரே நாடு ஒரே தேர்தலை நடைமுறைப்படுத்த முடியும். மக்களவையில் பா.ஜ.க.விற்கு பெரும்பான்மை இருந்தாலும், மாநிலங்களவையில் பா.ஜ.க.விற்கு பெரும்பான்மை இல்லை. எதிர்க்கட்சிகள் ஒற்றுமையாக இருந்து, எதிர்த்து வாக்களித்தால் இம்மசோதாவை முறியடித்துவிட முடியும். இவையெல்லாம் தெரிந்தாலும், எதிர்க்கட்சிகளை தனது நிகழ்ச்சி நிரலுக்குள் சுற்றவைப்பதற்காகவே இதுதொடர்பான நடவடிக்கைகளை மேற்கொண்டது பா.ஜ.க.

அதைப்போல், பொது சிவில் சட்டம் பெரும்பான்மை மக்களால் எதிர்க்கப்பட்டாலும், அதைக் கொண்டுவரப்போவதாக செய்தியைக் கிளப்பியதற்கு பின் எதிர்க்கட்சிகளை சிதறடிக்கும் நோக்கத்தைத் தவிர வேறெதுவும் இல்லை. ஏனெனில், ஆம் ஆத்மி, சிவசேனா ஆகிய கட்சிகள் பொது சிவில் சட்டத்தை வெளிப்படையாக ஆதரிக்கின்றன. இதன்மூலம் கூட்டணிக்குள் குழப்பத்தை ஏற்படுத்துவதே பா.ஜ.க.வின் திட்டமாக இருந்தது.

000

ஒரே நாடு ஒரே தேர்தலைப் போல, இந்தியாவின் பெயரை “பாரத்” என மாற்றுவதற்கான சட்டமும் நாடாளுமன்றத்தில் இயற்றப்படலாம் என்ற கிசுகிசுவை காவிக் கும்பல் ஊடகங்கள் மூலம் கிளப்பிவிட்டது. ஜி20 மாநாட்டில், மோடி பேசிய ஒலிபெருக்கி அமைப்புக்குக் கீழிருந்த பெயர் பலகையில் “இந்தியா” என்பதற்கு பதில், “பாரத்” என்று பொறிக்கப்பட்டிருந்தது. குடியரசுத் தலைவர் வெளியிட்ட விருந்துக்கான அழைப்பிதழிலும், “பாரதத்தின் குடியரசுத் தலைவர்” (President of Bharath) என்று எழுதப்பட்டிருந்தது.

பாரத் என்ற பெயருக்கு மக்களிடையே கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில், உதயநிதி சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்று பேசியதை முதன்மைப்படுத்தி தாக்கத்தொடங்கினர் சங்கிகள். “பாரத் எதிர் இந்தியா என்ற விவாதத்திலிருந்து விலகியிருங்கள், சனாதன தர்மத்தின் மீதான தாக்குதலை எதிர்கொள்ளுங்கள்” என்று தனது அமைச்சர்களுக்கு மோடி நேரடியாக கட்டளையிட்டார்.

உ.பி.யை சேர்ந்த பரமஹன்ஸ ஆச்சார்யா என்ற ஒரு ரவுடி சாமியார், சனாதன தர்மத்தைப் பற்றி பேசிய உதயநிதியின் தலையை வெட்டினால், 10 கோடி பரிசு என்று அறிவித்தார். வழக்கம்போல, தமிழ்நாட்டில் காவிக் கும்பலின் எத்தனிப்பு எடுபடவில்லை. “என் தலையை சீவுவதற்கு எதற்கு 10 கோடி ரூபாய், 10 ரூபாய் சீப்பு போதுமே” என்று நக்கலடித்தார் உதயநிதி. ஆனால், வட மாநிலங்களிலும், இந்தியா கூட்டணிக்குள்ளும் காவிக் கும்பலின் பிரச்சாரம் சலசலப்பை ஏற்படுத்தியது.

அடுத்தடுத்த கண்ணிவெடிகள்!

சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தொடரை அறிவிப்பதற்கு முந்தைய நாளான ஆகஸ்டு 30-ஆம் தேதி, சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை 200 ரூபாய் குறைத்தது மோடி அரசு. உஜ்வாலா திட்ட பயனாளிகளுக்கு இந்த விலை 400 ரூபாய் வரை குறையும் என்று கூறப்படுகிறது. ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம் போன்ற மாநிலங்களில், தான் வெற்றிபெற்றால் சிலிண்டருக்கு 500 ரூபாய் வரை மானியம் வழங்குவதாக காங்கிரஸ் கட்சி தனது தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது. இப்போது காங்கிரசை முந்திக் கொண்டு, ஏழை-நடுத்தர மக்களின் வாக்குகளை வேட்டையாடுவதற்காக, திட்டமிட்டே தேர்தல் நெருங்கும் வேளையில் இச்சலுகைகளை அறிவித்துள்ளது பா.ஜ.க.

ஓணம் மற்றும் ரக்ஷாபந்தன் நாட்களுக்கான பரிசாக இச்சலுகையை அறிவித்துள்ளதாகக் கூறி, இந்நடவடிக்கையை ஒருசேர இந்துத்துவப் பிரச்சாரமாகவும் மாற்றியுள்ளது.

சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தொடர்தான் இப்போது முடிந்திருக்கிறது. ஐந்து மாநிலத் தேர்தல் நெருங்கும் நவம்பர்-டிசம்பர் மாதங்களில் நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத்தொடர் நடைபெற உள்ளது. அதில், அடுத்த சுற்று சலுகைகளை பா.ஜ.க. அறிவிக்கலாம்.

டிசம்பர் முடிந்து ஜனவரி தொடங்கினால், அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழா நடைபெறும். ஜனவரி 14 அன்று ராமர் கோயில் திறப்பு விழா நடைபெறும் என்று மோடி அரசு முன்பே அறிவித்திருந்தது.

“தேர்தல் நெருங்கும்போது, புல்வாமா சர்ஜிகல் ஸ்டிரைக் போல, இன்னொரு தீவிரவாதத் தாக்குதல்களைக் கூட மோடி கும்பல் உருவாக்கலாம்” என்று எச்சரிக்கிறார், காஷ்மீரின் முன்னாள் ஆளுநர் சத்யபால் மாலிக்.

இப்படியாக, 2024 தேர்தல் நெருங்கும்வரை, ஒவ்வொரு நாளும் மோடி அலையை மேலெழுப்பும் பிரச்சாரங்கள் திட்டமிட்டு அரங்கேற்றப்படக் காத்திருக்கின்றன. ஊதுகுழல் ஊடகங்களோ பாசிஸ்டுகளுக்கு கரசேவை செய்வதில் மிக நேர்த்தியாக செயலாற்றுகின்றன. நாம் கால் வைத்திருக்கும் ஒவ்வொரு அடியிலும் சிலந்தி வலைகள் பின்னி வைக்கப்பட்டிருக்கின்றன.

சிலந்திவலைகளை அறுத்தெறிவோம்!

எதிர்க்கட்சிகளோ, தமது சொந்தத் திட்டத்தின் கீழ் மக்களைத் திரட்டுவதற்குப் பதிலாக, மோடி-அமித்ஷா கும்பல் அடுத்தடுத்து முன்நகர்த்தும் திட்டங்கள், நடவடிக்கைகள், செய்கைகளுக்கு பதில் சொல்வது, அவற்றை அம்பலப்படுத்துவது என்பதிலேயே நாட்களைக் கடத்துகின்றன.

மேலே விவரித்துவரும் இதே காலகட்டத்தில் ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. கும்பலை அம்பலப்படுத்துவதற்கு எவ்வளவோ வாய்ப்பிருந்தும் அதை எதிர்க்கட்சிகள் பயன்படுத்திக் கொள்ளவில்லை. குறிப்பாக, இன்றுவரை அமைதி திரும்பாமல் இனவெறிக் கலவரங்களால் பற்றி எரிந்துகொண்டிருக்கிறது மணிப்பூர்; அம்மாநிலத்தின் செய்திகள் வெளியே வராமல் தடுக்கப்படுகின்றன. ஆனால், நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவந்ததைத் தவிர மணிப்பூர் பிரச்சினையை எதிர்க்கட்சிகள் மறந்துவிட்டன. பாசிசக் கும்பலின் அடுத்தடுத்த திசைதிருப்பல்கள் மட்டுமல்ல, எதிர்க்கட்சிகளின் பா.ஜ.க. எதிர்ப்பு வரம்பும்தான் அதற்கு முக்கியக் காரணம்.

மணிப்பூர் கலவரத்தீ, சி.ஏ.ஜி. அறிக்கை, ஓ.சி.சி.ஆர்.பி. அறிக்கை என அடுத்தடுத்து ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. கும்பலை அம்பலப்படுத்துவதற்கும், அக்கும்பலுக்கு எதிராக மக்களை அணிதிரட்டுவதற்குமான வாய்ப்புகள் உருவாகின்றன. இந்த ஒன்பதரை ஆண்டுகாலத்தில் நீட், புதிய கல்விக் கொள்கை, ஜி.எஸ்.டி, மறைமுகமாக அமல்படுத்தப்படும் புதிய வேளாண் சட்டங்கள், தொழிலாளர் நல திருத்தச் சட்டம் போன்று மக்கள் மீது ஏவப்பட்ட, ஏவப்பட்டுக் கொண்டிருக்கிற பாசிச சட்டங்கள் பல இருக்கின்றன.

இவற்றையெல்லாம், மக்களிடம் பிரச்சாரம் செய்து ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க கும்பலுக்கு எதிரான அலையை தட்டி எழுப்ப வேண்டுமென்றால், நமக்கு சொந்தத் திட்டம் இருக்க வேண்டும்; இரண்டாவதாக, தேர்தல் நலனுக்கு அப்பாற்பட்டும் போராடத் தயாராக இருக்க வேண்டும். இவை இரண்டையும் ஒருசேரப்பெற்றிருக்கும் புரட்சிகர-ஜனநாயக சக்திகளால் மட்டுமே பாசிஸ்டுகளின் சிலந்திவலைகளை அறுத்தெறிய முடியும்.


செவ்வந்தி

(புதிய ஜனநாயகம் – அக்டோபர் 2023 இதழ்)

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க