தனியார்மய ஆதிபராசக்தி பெற்றெடுத்த பங்காரு!

ஒடுக்கப்பட்ட மக்களின் ஏக்க பெருமூச்சு மதம் என்பர். அந்த ஏக்கப் பெரு மூச்சினை மிகப்பெரிய அளவில் வியாபாரம் ஆக்கி பல்லாயிரக்கணக்கான கோடிகள் சொத்து சேர்த்தவர்தான் இந்த பங்காரு.

நான் சட்டக் கல்லூரி படித்துக் கொண்டிருக்கும் போது என்னுடன் படித்த மாணவி ஒருவர் வசூல் செய்து கொண்டிருந்தார். என்னவென்று அருகில் நான் சென்று பார்க்கும் போது தான், ஆதிபராசக்தி மன்றத்திற்கு பில் புக்கில் பத்து ரூபாய், இருபது ரூபாய் என்று வசூல் செய்தது தெரிந்தது. இப்படி பல்லாயிரக்கணக்கான பெண்கள் மூலம் பணம் சேர்த்த ஆதிபராசக்தி மன்றம் இன்றைக்கு மிகப்பெரிய கார்ப்பரேட் கம்பெனி.

***

மதத்தில் புரட்சி செய்த மகான் என்று அடைமொழியோடு பங்காரு அடிகளாருக்கு பலரும் கண்ணீர் மழை சொரிந்தபடி அஞ்சலி குறிப்புகள் எழுதிக் கொண்டிருக்கிறார்கள். அப்படி எழுதுபவர்களில் பலரும் ஆன்மீகவாதிகளாக மட்டும் இல்லை; மாறாக கடவுள் மறுப்பாளர்களும்’ கூட அவருக்காக கண்ணீர் விட்டுக் கொண்டிருக்கிறார்கள். எல்லாவற்றுக்கும் முத்தாய்ப்பாக பங்காரு அடிகளார் மேற்கொண்ட கடவுள் வியாபாரத்துக்காகவும் கார்ப்பரேட் கல்வி நிறுவனங்களின் கொள்ளைக்காகவும் தனது ரவுடி தனத்தின் மூலம் மேல்மருவத்தூர் மற்றும் மேல்மருவத்தூர் சுற்றியுள்ள பகுதியில் நிலங்களை வளைத்து போட்டதற்காகவும் மிகச் சிறந்த அரசியல் தரகராக இருந்ததற்காகவும் இறுதி வரை பாஜகவின் நம்பகமான கூட்டாளியாக இருந்ததற்காகவும் தமிழ்நாடு அரசு உள்ளூர் விடுமுறையை அறிவித்ததுடன் பங்காரு அடிகளாரருக்கு அரசு சார்பில் மரியாதை செலுத்தப்படும் என்று அறிவித்திருக்கிறது.

செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூர் பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணி என்ற இயற்பெயரைக் கொண்ட பங்காரு அடிகளார் பள்ளி ஆசிரியராக இருந்தார். ஒடுக்கப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்கள் கோயிலுக்கு செல்லும் உரிமை மறுக்கப்பட்டிருந்த காலத்தில் இவர் நவீன கடவுளாக தன்னை உருவாக்கினார். எல்லா சாமியார்களும் நான் கடவுளின் பிறவி என்று சொல்லுகின்ற காலத்தில், நான்தான் அம்மா நான்தான் பராசக்தி என்று எல்லோருக்கும் ஷாக் கொடுத்தார்.

எல்லோரும் கருவறையில் சென்று கடவுளை வழிபடுவதற்கான உரிமையை கொடுத்தார். குறிப்பாக பெண்கள் மாதவிடாய் காலத்திலும் கருவறையில் சென்று கடவுளை வழிபடலாம் என்ற ஒரு புதிய திட்டத்தை அறிவித்தார். இதன் காரணமாக பெண்கள் சாரை சாரையாக இவரது கோயிலுக்கு வந்தனர். முதலாளித்துவம் பெண்களுக்கு உரிமையை ஏன் கொடுத்தது? தனது கட்டற்ற சுரண்டலுக்காகத்தான். அப்படி பெண்களுக்கு வழிபடும் உரிமையை ஒருபுறம் கொடுத்து இன்னொரு புறம் அவர்களிடமிருந்து பணத்தை கத்தை கத்தையாக பிடுங்கினார் பங்காரு.


படிக்க : பங்காரு அம்மாவின் சொத்தைப் பல் மோசடி!


தமிழ்நாடு முழுவதும் பல இடங்களில் ஆதிபராசக்தி மன்றங்களை உருவாக்கி, அதன் மூலம் பல நூற்றுக்கணக்கான கோடி மதிப்பிலான நிலங்களை அபகரித்தார். தமிழ்நாடு முழுவதும் சுமார் 7000 மன்றங்கள் இருப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன என்றால் அவற்றின் கட்டுப்பாட்டில் இருக்கக்கூடிய நிலங்களின் மதிப்பு அளவிட முடியாததாகும். சுமார் பத்து நாடுகளில் இவரது ஆதிபராசக்தி மன்றங்கள் இருக்கின்றன. அதன் மூலமாக எவ்வளவு பணம் வருகிறது? புழங்குகிறது என்பதெல்லாம் அறியாத ஒன்றாகும்.

தமிழ்ப்படம் ஒன்றில் கவுண்டமணி சாமியாராக வருவார். தொடக்கத்தில் சைக்கிளில் வரும் அவர் பிற்காலத்தில் படிப்படியாக வளர்ந்து காரில் வரக்கூடிய அளவுக்கு மாறி இருப்பார். அப்படி தன்னுடைய வளர்ச்சியை உருவாக்கிக் கொண்டவர் தான் பங்காரு அடிகளார். அதன் காரணமாக அனைத்து அரசியல்வாதிகளின் கருப்பு பணத்தை வெள்ளை பணமாக மாற்றக் கூடிய ஆற்றலையும் பெற்றிருந்தார்.

பங்காரு அடிகளார்
பங்காரு அடிகளார்

மேல்மருவத்தூரை நெருங்குவதற்கு சில கிலோ மீட்டர் முன்பிருந்தே கடைகள் அனைத்தும் பங்காரு அடிகளாரின் பெயரிலேயே இருக்கும். அங்கு இருக்கக்கூடிய நிலங்கள் அனைத்துமே பங்காரு அடிகளாரின் கட்டுப்பாட்டிலேயே விற்பனையும் செய்யப்படும். குறுநில மன்னனைபோல வாழ்ந்து வந்த பங்காரு அடிகளார், அவரை எதிர்த்து கேள்வி கேட்ட பலரையும் இல்லாமலும் செய்திருக்கிறார். பற்று இல்லாத வாழ்க்கை வேண்டும் என்று சொன்ன பங்காருவுக்கு குடும்பம் குழந்தைகளும் உண்டு, சேர்த்த சொத்துகளோ பல்லாயிரம் கோடி. பல ஆண்டுகளுக்கு முன்பு தன்னுடைய மகனான செந்தில்குமாரை அடுத்த பட்டத்து இளவரசனாக அறிவித்துவிட்டுப் போனார். தன்னுடைய இறுதி காலத்தை அறிந்த பங்காரு, இருக்கும்போதே கோயிலுக்கு அருகிலே தன்னுடைய கல்லறையை கட்டி வைத்து, எப்படி இனி பணம் பறிக்க வேண்டும் என்ற வித்தையை தன்னுடைய வாரிசுகளுக்கு தெளிவாக கற்றுக் கொடுத்துவிட்டு சென்றிருக்கிறார்.

கடவுளை வைத்து மேற்கொள்ளப்படும் பழைய முறையிலான வியாபாரம், ஒரு கட்டத்தில் போர் அடித்துப்போக, அடுத்து கல்வியை வைத்து தன்னுடைய கடவுள் வியாபாரத்தை மேலும் பெருக்கினார். 90-களுக்கு பிறகு உருவான தனியார்மயம் – தாராளமயம் – உலகமயத்தை கனகச்சிதமாக பிடித்துக் கொண்டு கடவுள், கல்வி, ரியல் எஸ்டேட் என அனைத்து துறைகளிலும் கோலோச்சினார். தனது வியாபாரம் அனைத்துக்கும் ஆதிபராசக்தியே மூலதனம்.

கணக்கில் அடங்காத பள்ளிகள், கல்லூரிகள், மருத்துவமனைகள், கடைகள் எனத் தொடங்கியதில் கோடிக்கணக்கான ரூபாய் பணம் கொட்டியது. அதற்காக ஏழை எளிய மக்களின் நிலத்தை கடவுள் பெயரைச் சொல்லியும் மிரட்டியும் பறித்தார். சுய உதவி குழுக்களுக்கு முன்னோடியாக அன்றைக்கே பெண்களுக்கு குழுவை உருவாக்கி அதன் மூலம் தனக்கான அரசியல் லாபத்தை பெற்றார். ஒவ்வொரு தேர்தலின்போதும் முக்கியமான அரசியல் கட்சியின் வேட்பாளர்கள் பலரும் அவர் ஆசிக்காக காத்திருந்தார்கள்.

ஒரு கட்டத்தில், அவரது அறக்கட்டளை மூலமாக, மேல்மருவத்தூர் பகுதியில் ஏராளமான கல்வி நிலையங்கள், மருத்துவமனைகள், கடைகள் தொடங்கப்பட்டன. 2019-இல் இந்திய அரசு அவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கியது.


படிக்க : சாமியார் கம்பேனி பிரைவேட் லிமிடெட்!


மேல்மருவத்தூர் கோயில் இருந்த பகுதியின் ஊராட்சி மன்ற தலைவராக அவரது மனைவியே தொடர்ச்சியாக நீடித்து வந்தார். இடையில் சில ஆண்டுகள் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு ஒதுக்கப்பட்டிருந்த போதும் தங்களுக்கான நபர்களையே வேட்பாளராக நிறுத்தி வெற்றி பெறச் செய்தார்.

மழை வருவதற்காக யாகம் செய்கிறோம் என்ற பெயரில் தமிழ்நாடு முழுவதும் பல இடங்களில் அரசு நிர்வாகத்தோடு கூட்டுச் சேர்ந்து மூடநம்பிக்கைகளை வளர்த்தார். அவருடைய மன்றத்தினர் எப்போது யாகம் செய்தாலும் அடுத்த சில வாரங்களில் மழை பெய்து விடும் ஏனென்றால், மழைக்காலத் தொடக்கத்தில் மட்டுமே அவரது யாகம் ஏற்பாடு செய்யப்படும்.

வட மாவட்டங்களில் மார்க்சிய லெனினிய குழுக்கள், கம்யூனிஸ்ட் கட்சிகள் தீவிரமாக வேலை செய்து வந்த காலத்தில் அப்பகுதியில் உள்ள மக்களிடத்தில் சிவப்பு உடைக்கு பதிலாக செவ்வாடை, சங்கத்திற்கு பதிலாக ஆதிபராசக்தி மன்றம், உரிமைகளுக்கான போராட்டம் என்பதற்கு பதிலாக மன்றங்களில் பூஜை, புரட்சி ஓங்குக என்பதற்கு பதிலாக ஓம் சக்தி ஆதிபராசக்தியே என்று சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பலரையும் உச்சரிக்க வைத்து அவர்களின் பகுத்தறிவு மற்றும் விஞ்ஞான, வர்க்க உணர்வை மழுங்கடித்தார்.

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி மகிமை தொடர்பாக சில திரைப்படங்களும் வந்திருக்கின்றன. பகுத்தறிவு மறுப்பு, அறிவியல் மறுப்பு, மருத்துவ அறிவு மறுப்பு ஆகிவற்றை அத்திரைப்படங்கள் பிரச்சாரம் செய்தன. இப்படிப்பட்ட இப்படிப்பட்ட ’சமூக சேவை’யை செய்ததால்தான் என்னவோ மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாடு அரசு அவருக்கு அரசு மரியாதை செய்கிறது.

பங்காருவின் கல்வி நிறுவனங்களில் – கல்லூரிகள், பள்ளிகள் ஆகிவற்றில் – மிக அதிகமான அளவு நன்கொடை, சேர்க்கை கட்டணம், உணவுக் கட்டணம், விடுதி கட்டணம் ஆகியவை பெறப்பட்டன. இதை எதிர்த்து கேள்வி கேட்கும் மாணவர்களை செவ்வாடை பக்தர்கள் – ஸ்பெஷலாக – தனியே கவனிப்பார்கள்.

2010-ஆம் ஆண்டு இவரது கல்வி நிறுவனங்களில் நடைபெற்ற வருமான வரி சோதனையின்போது பங்காரு அடிகளாரின் வீட்டை சோதனை செய்த அதிகாரிகள் – அவரது படுக்கை அறை உள்பட – அவரின் வீட்டில் இருந்து மட்டும் சுமார் ஒன்பது கோடி ரூபாய் பணத்தை மீட்டனர். அவரது கல்வி நிறுவனத்தில் நடத்தப்பட்ட சோதனையிலும் கணக்கு காட்டப்படாத கோடிக்கணக்கான ரூபாய் பணம் மீட்கப்பட்டது.

அதேபோல, அவரது அறக்கட்டளையின் கீழ் செயல்பட்ட மருத்துவக் கல்லூரியில் பல்வேறு முறைகேடுகள் மற்றும் இந்திய மருத்துவக் கவுன்சில் விதிமுறைகளை மீறியதாக மத்திய புலனாய்வுத் துறை ஜூலை 2010-இல் வழக்கு ஒன்றையும் பதிவு  செய்தது. தனது பல் மருத்துவ கல்லூரிக்கு அங்கீகாரம் பெறுவதற்காக ஐம்பது லட்ச ரூபாய் லஞ்சம் கொடுத்து வசமாக சிக்கினார் பங்காரு. வழக்கம்போல அந்த பல் மருத்துவக் கல்லூரியின் தாளாளரான பங்காருவின் மனைவி தப்பித்துக்கொள்ள மற்ற நிர்வாகிகள் மூன்று பேர் சிறையில் அடைக்கப்பட்டனர்.

நீர்நிலைகளை ஆக்கிரமித்து மேல்மருவத்தூரில் உள்ள ஆதிபராசக்தி மண்டபம் கட்டப்பட்டிருக்கிறது என்பதை உயர் நீதிமன்றம்  நிரூபித்து எச்சரிக்கை விடுத்தது.

தான் செய்த தில்லுமுல்லுகள் ஒவ்வொரு முறை அம்பலப்படும்போதும் “ஓம் சக்தி ஆதிபராசக்தி” என்ற முழக்கமே அவரை காப்பாற்றியது. ஒடுக்கப்பட்ட மக்களின் ஏக்க பெருமூச்சு மதம் என்பர். அந்த ஏக்கப் பெரு மூச்சினை மிகப்பெரிய அளவில் வியாபாரம் ஆக்கி பல்லாயிரக்கணக்கான கோடிகள் சொத்து சேர்த்தவர்தான் இந்த பங்காரு.

தன்னுடைய அதிகாரத்தை தக்கவைப்பதற்காகவும் தன்னுடைய தில்லு முல்லு முறைகேடுகளில் இருந்து தப்பிப்பதற்காகவும் அனைத்து அரசியல் கட்சிகளோடும் கூட்டணி வைத்துக் கொண்டார். அவருடைய செல்வாக்கு வேண்டும் என்பதற்காக -ஆதரவு வேண்டும் என்பதற்காக- அவருடைய மண்டபத்துக்கு போகாத சாதிய – இனவாத – சந்தர்ப்பவாத தேர்தல் கட்சியே இல்லை என்று கூறலாம். தன்னால் தீர்மானிக்கப்படும் நபருக்கு மட்டுமே மேல்மருவத்தூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளின் ஓட்டுகள்(வாக்குகள்) விழும் என்ற நிலைமையை தனது ரவுடித்தனத்தின் மூலம் உருவாக்கி இருந்தார். இந்தப் பின்னணியில்தான் தி.மு.க முதல் பல்வேறு சோ கால்டு (so called) சுயமரியாதைக் கட்சிகளும் அஞ்சலி செலுத்துவதைக் காண முடியும்.


படிக்க : யாருக்கு மூடு ஜாஸ்தி ? – இந்து ஆன்மீக சொற்பொழிவு !


மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி மன்றத்தை ஒரு மடமாக கூட சங்கராச்சாரி மதிக்கவில்லை. எனினும் சங்கராச்சாரி கைதின்போது ஓடோடிச் சென்று அவருக்கு ஆதரவு தெரிவித்தார் பங்காரு. பங்காருவை தங்கள் வலையில் விழ வைக்க வேண்டும் என்பதற்காக 2019-ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருது கொடுத்தது பாசிச பாஜக அரசு. அதை மிகுந்த பெருமையோடு வாங்கிக் கொண்டார் பங்காரு.

தீண்டாமை இல்லை என்று கூறிய பங்காரு, கல்லா கட்ட வேண்டும் என்பதற்காக பெண்களை கருவறையில் அனுமதித்த பங்காரு சங்கராச்சாரிக்கு ஆதரவு கொடுத்ததன் மூலம் பாசிச கட்சிகளோடு ஐக்கியமாகிக் கொண்டார் என்பதுதான் உண்மை. இந்த பின்னணியில்தான் பங்காரு இறந்ததற்கு மோடி, எச்.ராஜா முதல் அனைவரும் மாங்கு மாங்கு என்று அஞ்சலி செலுத்திக் கொண்டிருப்பதை புரிந்து கொள்ள முடியும்.

பங்காரு இப்போது இறந்து விட்டாலும் கூட அவருடைய மகனும் அடுத்த பட்டத்து அரசருமான கோ.பா.செந்தில் இருக்கிறார். அவரை வழி நடத்துவதற்கு ஆர்.எஸ்.எஸ் இருக்கிறது. ஏற்கனவே பாரதிய ஜனதா கட்சியின் கொள்கைகளோடு ஒத்து போகக் கூடிய ஒரு கட்சியை உருவாக்கி அதற்கு தலைவராகவும் இருக்கக்கூடிய செந்தில்குமார் விரைவில் எம்.எல்.ஏ. கூட ஆகலாம். செந்தில்குமாருக்கு எந்த பாதிப்பு வந்தாலும் காப்பாற்றக்கூடிய ஒரே முழக்கம் ஓம் சக்தி ஆதிபராசக்தி.

ஏசி சண்முகம், ஜெகத்ரட்சகன், ஜேப்பியார், பச்சமுத்து என யாரும் கண்டறியாத புதிய வழியை கண்டறிந்து தன்னையும் தன் சொத்துகளையும் காப்பாற்றிக் கொண்ட பங்காருவின் பெயரை யாரும் எளிதில் மறக்க முடியாது. இப்படிப்பட்ட நபருக்கு அரசு மரியாதை செய்யும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சந்தர்ப்பவாதத்தையும் யாரும் மறுக்க முடியாது.

‘ஓம் சக்தி ஆதிபராசக்தி’


தோழர் மருது

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTubeவிவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க