யூதர்கள் சொல்கிறோம் காசா மீதான போரை நிறுத்து!

ஐ.நா.வில் கொண்டுவரப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தையும், மனிதாபிமான அடிப்படையிலான உதவிகளையும் காசா பகுதிக்குள் மேற்கொள்வதற்கான ஒப்பந்தத்தையும் தனது வீட்டோ அதிகாரத்தின் மூலம் ரத்துசெய்திருக்கிறது, அமெரிக்கா.

பாலஸ்தீனத்தின் மீது இசுரேல் அரசு தொடுத்திருப்பது சாதாரண போர் நடவடிக்கை அல்ல; ஹமாஸ் இயக்கத்தை அழித்தொழிப்பது என்ற பெயரில் பாலஸ்தீனர்களின் மீது தொடுக்கப்பட்டிருக்கும் இன அழிப்புப் போர். உலக பயங்கரவாதி அமெரிக்காவின் ஆதரவுடன் அதன் மத்திய கிழக்கு பிராந்திய ரவுடியான இசுரேல், எவ்வித சர்வதேச போர்விதிகளையும் பின்பற்றாமல் காசா முனையை முற்றுகையிட்டிருக்கிறது. எலும்புகள் வரை சென்று துளைக்கும் பாஸ்பரஸ் குண்டுகளை ஏவி மக்களையும் குழந்தைகளையும் கொத்துக் கொத்தாக கொன்றுகுவிக்கின்றன, இசுரேல் படைகள். மக்கள் குடியிருப்புகள், மருத்துவமனைகள் என அனைத்தின் மீதும் இலக்கு வைத்து தாக்குதல் நடத்தப்படுகிறது.

அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி, பிரான்ஸ் போன்ற மேற்குலக ஏகாதிபத்திய அரசுகள் ஓரணியில் நின்று பாலஸ்தீன மக்கள் மீதான இந்த இன அழிப்புப் போருக்கு துணை நின்றாலும், அந்நாடுகளின் உழைக்கும் மக்களோ பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக வீதியை நிரப்புகிறார்கள். அமெரிக்க, ஐரோப்பிய நாடுகள் மட்டுமின்றி, உலகெங்கிலும் உள்ள உழைக்கும் மக்கள், ஜனநாயக சக்திகள் பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக ஓரணியில் அணிவகுத்து நிற்கிறார்கள். துருக்கி, ஜோர்டன், லெபனான் போன்ற நாடுகளில் அமெரிக்க, இசுரேல் தூதரகங்கள் தாக்குதலுக்கு ஆளாகியுள்ளன. குறிப்பாக காசாவின் அல் அஹில் அராப் மருத்துவமனையின் மீதான தாக்குதலுக்குப் பிறகு அமெரிக்கா மற்றும் இசுரேலுக்கு எதிரான உலக மக்களின் போராட்டங்கள் வலுத்துவருகின்றன.

இந்தச் சூழ்நிலையில், ஹமாஸின் போர் நடவடிக்கையை யூத மக்களுக்கு எதிரான பயங்கரவாதப் போராகக் காட்டி யூதவெறியூட்டிவருகிறது இசுரேல் அரசு. இசுரேல் நாட்டின் தொலைக்காட்சிகள் அனைத்தும் ஹமாஸ் படைகளால் பிணையக் கைதிகளாகப் பிடித்துச் செல்லப்பட்ட நபர்களின் குடும்பத்தினரை நேரலை செய்துவருகின்றன. அவர்கள் கதறியழுவதைக் காட்டி, தனது பயங்கரவாத போரை நியாயப்படுத்தி வருகிறது, இசுரேல். இசுலாமியர்களுக்கு எதிராக யூதவெறியோடு கூட்டுச் சேர்ந்துள்ள பல்வேறு நாடுகளில் உள்ள ஊடகங்களும் தனது நாட்டு மக்களிடையே இசுரேலின் போர் நடவடிக்கையை நியாயப்படுத்தி வருகிறது. தமிழ்நாட்டில் தினமலர், தினத்தந்தி உள்ளிட்ட சங்கி ஊடகங்கள் இந்தச் சேவையை சிறப்பாகச் செய்துவருகின்றன.

சமூக ஊடகங்களில் ஹமாஸ் அமைப்பினர் யூத குழந்தைகளின் தலையை வெட்டிக் கொல்வதாகவும், பிணையக் கைதிகளை கொன்று எரிப்பதாகவும் காணொளிகள் பரவுகின்றன. இவை அனைத்தும் ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பினரின் பழைய காணொளிகளாகும். ஹமாஸ் அமைப்புக்கு எதிராக இவை போலியாக சித்தரித்துப் பரப்பப்படுகின்றன. நமது நாட்டின் சங்க பரிவார ஐ.டி. விங்-கள் முதல் அமெரிக்கா அதிபர் ஜோ பைடன் வரை இந்த போலிச் செய்திகளை வாந்தியெடுத்து இசுரேலுக்கு முட்டுக் கொடுத்து வருகின்றனர்.


படிக்க: காசா மருத்துவமனை மீதான தாக்குதல்: இஸ்ரேலின் இனப்படுகொலை!


மின்சாரம், குடிநீர், எரிவாயு, உணவுப் பொருட்கள் போன்றவற்றை காசா பிராந்தியத்திற்குள் செல்ல முடியாமல் துண்டித்துவிட்டது, இசுரேல். இதன்மூலம் பாலஸ்தீனர்கள் மீது இராணுவம் மட்டுமல்லாமல் ஒரு உயிரியல் யுத்தத்தையும் தொடுத்துவருகிறது. தெற்கே எகிப்து நாட்டை ஒட்டியிருக்கக் கூடிய ரஃபா எல்லைப் பகுதியை தவிர பாலஸ்தீனர்கள் அகதிகளாக வெளியேறுவதற்கான அனைத்து பகுதிகளையும் இசுரேல் முற்றுகையிட்டுள்ளது. அமெரிக்காவின் மிரட்டலுக்கு இணங்க, ரஃபா எல்லைப் பகுதியை திறந்து பாலஸ்தீனர்களை தனது நாட்டிற்குள் அனுமதிக்க மறுக்கிறது எகிப்து.

இசுரேலின் தாக்குதல்களை எதிர்த்துப் போராடி மடிவது என்ற வாய்ப்பைத் தவிர, பாலஸ்தீன மக்களுக்கு வேறு வாய்ப்புகள் விட்டுவைக்கப்படவில்லை. ஐ.நா.வில் கொண்டுவரப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தையும், மனிதாபிமான அடிப்படையிலான உதவிகளையும் காசா பகுதிக்குள் மேற்கொள்வதற்கான ஒப்பந்தத்தையும் தனது வீட்டோ அதிகாரத்தின் மூலம் ரத்துசெய்திருக்கிறது, அமெரிக்கா. இசுரேலின் மேலாதிக்க தாக்குதலுக்கு உதவ அமெரிக்காவின் போர் கப்பல்கள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. ஆயுத உதவிகள் குவிகின்றன. சுருக்கமாக, ஏகாதிபத்திய போர்வெறியர்களால் சுற்றிவளைக்கப்பட்டிருக்கிறது, காசா.

இவை அனைத்தையும் பார்த்துக் கொண்டு, “ஹமாஸ் நடத்துவது பயங்கரவாதப் போர்; இசுரேல் நடத்துவது பயங்கரவாதத்திற்கு எதிரான போர்” என்ற ஏகாதிபத்தியங்களின் அயோக்கியத்தனமான பிரச்சாரங்களை நம்பிக் கொண்டு உலகெங்கிலும் உள்ள உழைக்கும் மக்கள் அமைதியாயிருக்கவில்லை. குறிப்பாக, எந்த யூதவெறியை தமக்கு கவசமாக கொண்டு இந்தப் போரை இசுரேல் நியாயப்படுத்துகிறதோ, அந்த யூத மக்களே இசுரேலின் அநீதியான போருக்கு எதிராக திரண்டு எழத் தொடங்கியிருக்கிறார்கள்.

அக்டோபர் 16-ஆம் தேதி, அமெரிக்காவில் வாஷிங்டன் நகரில் உள்ள வெள்ளை மாளிகையை முற்றுகையிட்ட நூற்றுக்கணக்கான யூத மக்கள், “யூதர்கள் சொல்கிறோம் காசா மீதான போரை நிறுத்து!” என்று முழங்கியுள்ளார்கள். “காசாவை வாழவிடு!”, “காசா மக்களை கொல்வதை நிறுத்து!” போன்ற முழக்கங்களும் இந்த ஆர்ப்பாட்டத்தில் எழுந்துள்ளன. இது அமெரிக்க ஏகாதிபத்தியவாதிகளுக்கு செருப்படியாக அமைந்துள்ளது. இசுரேலுக்கு தமது நிபந்தனையற்ற ஆதரவை வழங்குவதாகத் தெரிவித்து, நாடாளுமன்ற அவையில் உள்ள பெரும்பான்மையான அமெரிக்க பிரதிநிதிகளும் இப்போருக்கு எண்ணெய் வார்த்துக் கொண்டிருக்கும்போது, அதே வெள்ளை மாளிகையை முற்றுகையிட்டு அமெரிக்க நாடாளுமன்ற அவையை எச்சரிக்கை வகையில் இந்த ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்துள்ளார்கள், செயல்பாட்டாளர்கள்.

ஒவ்வொரு ஆண்டும் அமெரிக்கா, இசுரேலுக்கு 3.8 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள இராணுவ உதவிகளை அளித்துவருவதாகவும், இந்த இராணுவ உதவிகள் இசுரேலால் பாலஸ்தீனர்களின் பகுதிகளை ஆக்கிரமிப்பதற்காகவும், அம்மக்களை படுகொலை செய்வதற்காகவும் பயன்படுத்தப்படுவதாகவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் குற்றஞ்சாட்டுகிறார்கள். இந்த நிதியை உடனடியாக அமெரிக்கா நிறுத்த வேண்டும் என்பது ஆர்ப்பாட்டக்காரர்களின் கோரிக்கைகளில் முதன்மையானதாக இருக்கிறது.

அமெரிக்காவில் மட்டுமின்றி, இசுரேல் நாட்டிலும் காசா மீது தொடுக்கப்பட்டிருக்கும் அநீதியான போர் நிறுத்தப்பட வேண்டும் என்று கோரி பேரணியொன்று நடைபெற்றுள்ளது. அக்டோபர் 18-ஆம் தேதி ஹைஃபா நகரில் போரை எதிர்த்து நடைபெற்ற இந்த பேரணியை போலீசார் தடுத்து நிறுத்தியுள்ளனர். மேலும் ஆறு பேரை போலீசார் கைதுசெய்துள்ளனர்.

“காசாவுடன் போர் வேண்டாம் என்றோ, காசாவுக்கு ஆதரவாகவோ யாரேனும் பேசினால் அவர்களை காசாவுக்கு பேருந்தி ஏற்றி அனுப்பிவிடுகிறேன்” என்று கொக்கரித்துள்ளான், இசுரேல் போலிசுப் படைத் தலைவன் கொபி ஷப்தாய்.

மேலும் பயங்கரவாதத்திற்கு ஆதரவாக (அதாவது பாலஸ்தீனர்களுக்கு ஆதரவாக) கருத்துப் பரப்பியதாக இசுரேலிய அரசால் இதுவரை 63 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

பேரணி நடைபெற்றதாக கூறப்படும் அதே புதன்கிழமை (அக்டோபர் 18) அன்று, இசுரேல் நாடாளுமன்ற உறுப்பினரான ஒஃபெர் காசிஃப் (Ofer Cassif) நாடாளுமன்ற அவையின் நெறிமுறைக் குழுவால் 45 நாட்களுக்கு இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். அரபு-யூத கம்யூனிஸ்டு ஹடாஷ் கட்சியைச் சேர்ந்த இவர் நெதன்யாகு அரசாங்கம் அக்டோபர் 7 அன்று ஹமாஸ் அமைப்பு தொடுத்த தாக்குதலை, “ஹிட்லர் யூதர்களை இனப்படுகொலை செய்வதற்கான இறுதிநாளை குறித்ததைப் போல, பாலஸ்தீனர்களை இனப்படுகொலை செய்வதற்கான வாய்ப்பாக பயன்படுத்திக் கொள்கிறார்” என்று பேசியதுதான் இடைநீக்கத்திற்கான காரணம்.

இவ்வாறு போருக்கு எதிராக கருத்து தெரிவிப்பதையும் மக்களின் எதிர்ப்புகளையும் நசுக்குவதற்காகவே இசுரேலில் போர்க்கால அரசாங்கம் (State of war) அறிவிக்கப்பட்டிருக்கிறது.  “அனைத்து வகைப்பட்ட மக்களும் வந்து எங்களை சோதிப்பதை அனுமதிக்கும் நிலையில் நாங்கள் இல்லை. இசுரேலில் போர்கால அரசாங்கம் அமலில் உள்ளது” என்று தெரிவித்துள்ளான் பேரணிக்கு எதிராக கொந்தளித்த போலிசுப் படைத் தலைவன் ஷப்தாய்.

போருக்கு எதிரான ஒரு சிறு எதிர்ப்பு அல்லது கருத்துக்கள் கூட இசுரேல் அரசின் வயிற்றில் புளியைக் கரைக்கிறது. ஏற்கெனவே, பாசிஸ்டு நெதன்யாகு கொண்டுவந்த நீதித்துறை சீர்த்திருத்தச் சட்டத்தை எதிர்த்து பல மாதங்களாக வீதியை நிரப்பியிருந்தார்கள், இசுரேல் மக்கள். இந்நிலையில் ஹமாஸ் இசுரேல் மீது தொடுத்திருக்கும் போரை தமக்கு சாதமாகப் பயன்படுத்தி யூதவெறியை கிளப்பிவிடலாம்; இதன்மூலம் தனது ஆட்சியை நிலைநிறுத்திக் கொள்வதோடு, காசாவை அழித்தொழிப்பதற்கான தார்மீக ரீதியான ஆதரவையும் பெற்றுவிடலாம் என்று கருதியிருந்தார், நெதன்யாகு. இதுபோன்ற போர் எதிர்ப்புக் கருத்துகள் தனது கனவின் மீது கல்லெறிந்துவிடுமோ என்று இப்போது நெதன்யாகு அஞ்சுகிறார். யூத இனவெறியையே தனது கவசமாக இழுத்துப் போர்த்திக் கொண்டு பாதுகாத்துக் கொள்கிறார்.

இனவெறி, மதவெறி, நிறவெறி, சாதிவெறி போன்றவை பிறிதொரு மக்கள் பிரிவினரை எதிரிகளாகக் காட்டி தன் சொந்த மக்களுக்கு எதிரான ஆளும் வர்க்கங்களின் சுரண்டலை மூடிமறைக்கவே பயன்படுகின்றன. ஆளும் வர்க்கங்கள் மிக வசதியாக பதுங்கிக்கொள்ளும் இந்த ஆமை ஓட்டை உடைத்தெறியும் வகையிலான போராட்டங்களில்தான் உழைக்கும் மக்களின் விடுதலை பொதிந்திருக்கிறது. ஜியார்ஜ் பிளாயிடுக்கு எதிரான அமெரிக்க உழைக்கும் மக்களின் எழுச்சியில் வெள்ளையினத்தவர் மிகப்பெரும்பான்மையினராக கலந்துகொண்டதைப் போல, யூத இனவெறியூட்டி பாலஸ்தீன மக்கள் மீதான இன அழிப்புப் போரை நியாயப்படுத்துவதற்கு எதிரான போராட்டங்களில் யூத உழைக்கும் மக்கள் அதிக அளவில் பங்கெடுக்கும்போது, வல்லரசுகளின் மேலாதிக்க முதுகெலுப்பு நொறுக்கப்படும். அத்தகைய போராட்டங்கள் முகிழ்த்தெழுவதை ஆதரிப்பதும் வளர்த்தெடுப்பதும் உலகெங்கிலும் உள்ள புரட்சிகர-ஜனநாயக சக்திகளின் கடமையாகும்.


வாசு

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க