அவரு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிங்க..
இருக்கட்டும் நாங்கள் பாசிஸ்டுகள்…
ஆகஸ்ட் 10 அன்று மோடி அரசு தலைமைத் தேர்தல் ஆணையர் (CEC) மற்றும் தேர்தல் ஆணையர்கள் (EC) ஆகியோரின் நியமனம், சேவைக்கான நிபந்தனைகள் மற்றும் பதவிக்காலம் தொடர்பான புதிய மசோதா {The Chief Election Commissioner and other Election Commissioners (Appointment, Conditions of Service and Term of Office) Bill, 2023} ஒன்றை மாநிலங்களவையில் தாக்கல் செய்தது. எதிர்க்கட்சி எம்.பி.க்களின் எதிர்ப்புக்கு மத்தியில் இந்த மசோதாவை சட்ட அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் தாக்கல் செய்தார்.
இதன்படி பிரதமர், மக்களவை எதிர்கட்சி தலைவர் மற்றும் பிரதமர் பரிந்துரைக்கும் ஒரு மத்திய கேபினெட் அமைச்சர் ஆகியோர் கொண்ட குழு ஒன்று அமைக்கப்படும். இதற்கு பிரதமர் தலைவராக இருப்பார். இக்குழு பரிந்துரைக்கும் நபர்களை குடியரசுத் தலைவர் தேர்தல் ஆணையர்களாக நியமனம் செய்வார்.
முன்னதாக, கடந்த ஆண்டு நவம்பர் 19 அன்று அருண் கோயல்-இன் பெயர் தேர்தல் ஆணையர் பதவிக்கு பரிந்துரை செய்யப்பட்டு அதே நாளில் ஜனாதிபதி ஒப்புதலும் வழங்கப்படுகிறது. இதில் வேடிக்கை என்னவென்றால் அருண் கோயல் அதற்கு முந்தைய நாள் தான், நவம்பர் 18 அன்று தான், தான் முன்னர் வகித்த பதவியிலிருந்து விருப்ப ஓய்வை அறிவிக்கிறார்.
மோடி அரசின் இந்த நடவடிக்கை அனைவருக்கும் அதிர்ச்சி அளித்தது. இதனையடுத்து தான், சி.பி.ஐ (CBI) இயக்குநரை பிரதமர், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர், உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ஆகியோர் அடங்கிய குழு தேர்வுசெய்வதைப்போல் தேர்தல் ஆணையர்களும் தேர்வு செய்யப்பட வேண்டும் என்று பிரசாந்த் பூஷண் உள்ளிட்ட வழக்கறிஞர்கள் உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தனர். உச்ச நீதிமன்ற நீதிபதி கே.எம்.ஜோசப் அடங்கிய ஐந்து நீதிபதிகளைக் கொண்ட அரசியல் சாசன அமர்வு அவ்வழக்கை விசாரித்தது.
படிக்க: விருப்ப ஓய்வு பெற்ற அருண் கோயலுக்கு அடுத்த நாளே தேர்தல் ஆணையர் பதவி!
இவ்வாண்டு மார்ச் மாதம் அவ்வழக்கின் தீர்ப்பு வெளியானது. அதன் அடிப்படையில் தான், தலைமைத் தேர்தல் ஆணையர் உள்ளிட்ட தேர்தல் தேர்தல் ஆணையர்களை தேர்வு செய்ய பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர், உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ஆகியோர் அடங்கிய குழு அமைக்கப்பட்டது. இதில் தலைமை நீதிபதிக்கு மாற்றாக பிரதமர் பரிந்துரைக்கும் ஒரு கேபினட் அமைச்சரை உள்ளடக்கிய குழு ஒன்றை அமைக்கும் வகையில் தற்போது சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டால் தேர்தல் ஆணையர்களை தேர்வு செய்யும் அதிகாரம் மத்திய அரசின் கைகளுக்கே மீண்டும் சென்று சேரும். பிரதமரும், பிரதமரால் பரிந்துரை செய்யப்படும் கேபினட் அமைச்சரும் கொண்ட ஒரு குழுவில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவரால் எவ்வாறு பெரும்பான்மை பெற முடியும். இது ஒன்றும் மோடி அரசு அறிந்திராதது அல்ல. ஜனநாயகத்தை எள்ளி நகையாடும் பாசிச மனோபாவத்தின் வெளிப்பாடு இது.
அது மட்டுமல்ல, நீதிபதிகளின் நியமனமே அரசின் விருப்பப்படி இருக்க வேண்டும் என்று கொலீஜிய முறையை ஒழித்துக் கட்டத் துடிக்கும் பாசிஸ்டுகள், இதுநாள் வரையிலும் இல்லாத வகையில் தேர்தல் ஆணையர்கள் நியமனத்தில் நீதித்துறை தலையிடுவதை எப்படி சகித்துக் கொள்வார்கள். தங்களது அதிகாரம் கேள்விக்கு உள்ளாக்கப்படுவதை பாசிஸ்டுகள் ஒருபோதும் விரும்ப மாட்டார்கள் என்பதன் வெளிப்பாடு தான் இந்த சட்ட மசோதா.
படிக்க: கொலீஜிய பரிந்துரைகளை தணிக்கை செய்யும் பாசிச மோடி அரசு!
இந்தியா ‘சுதந்திரம்’ அடைந்ததாகக் கூறப்படும் காலத்தில் இருந்து, தேர்தல் ஆணையர்களை மத்திய அரசு தானே தேர்வு செய்து வந்துள்ளது என்று சிலர் கேட்கக் கூடும்.
அதற்கான பதில் என்னவென்றால் இதுவரை இருந்துள்ள அரசாங்கங்களையும் மோடி அரசாங்கத்தையும் ஒரே தட்டில் வைத்துப் பார்க்க முடியாது என்பதுதான். கடந்த மார்ச் மாதத்தில், தேர்தல் ஆணையர்களை தேர்வு செய்வதற்காக உச்ச நீதிமன்றத்தால் ஒரு குழு அமைக்கப்பட்டதே பாசிச மோடி அரசின் மீது கொண்ட அச்சத்தினால் தான். தேர்தல் ஆணையராக அருண் கோயலை நியமித்தபோது பின்பற்றப்பட்ட வழிமுறைதான் அந்த அச்சத்தை ஏற்படுத்தியது.
2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கு மோடி அரசு ஆயத்தமாகி வருகிறது. தற்போது தேர்தல் ஆணையர்களில் (EC) ஒருவரான அனுப் சந்திர பாண்டே அடுத்தாண்டு பிப்ரவரி 14 அன்று ஓய்வு பெற உள்ளார். தேர்தலை தங்களுக்கு ஏற்ற வகையில் நடத்த மோடி அரசுக்கு அமலாக்கத் துறை இயக்குனர் சஞ்சய் மிஸ்ராவைப் போன்ற பொருத்தமான அடியாட்கள் தேர்தல் ஆணையர்களாகத் தேவைப்படுகிறார்கள்.
கடந்த மார்ச் மாதம் வழங்கப்பட்ட உச்ச நீதிமன்றத் தீர்ப்பு அதற்கு இடையூறாக இருந்தது. அந்த இடையூறை நாடாளுமன்றத்தைக் கொண்டே, சட்டபூர்வ வழிமுறையைப் பின்பற்றியே, பாசிச மோடி அரசு கடக்க நினைக்கிறது.
பாசிசத்தை சட்டபூர்வ வழிகளில் நிறுவுவதற்கான பாதையைச் செப்பனிடவே தேர்தல் ஆணையர்கள் நியமனத்திற்கான இந்த சட்ட மசோதா.
பொம்மி