எதிர்க்கட்சிகள் மீது தாக்குதல் தொடுக்கும் பாசிச மோடி அரசு!

2014 ஆம் ஆண்டில் பாசிஸ்டு மோடி ஆட்சிக்கு வந்தது முதல் செப்டம்பர் 2022 வரையிலான காலகட்டத்தில், அமலாக்கத்துறையால் 121 அரசியல்வாதிகள் விசாரிக்கப்பட்டுள்ளனர். அதில் 115 பேர், அதாவது 95 சதவிகிதத்தினர், எதிர்க்கட்சித் தலைவர்கள்.

0

டந்த மார்ச் 21 அன்று டெல்லி முதல்வரும் ஆம் ஆத்மி கட்சித் தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டார். கெஜ்ரிவால் வழக்கு விசாரணைக்கு ஒத்துழைக்க மறுப்பதாகக் கூறி அமலாக்கத் துறை அவரைக் கைது செய்தது.

மோடி அரசின் இந்த பாசிச நடவடிக்கையைக் கண்டித்து மார்ச் 26 அன்று மோடியின் இல்லத்தை முற்றுகையிட முயன்ற ஆம் ஆத்மி கட்சியினர் கைது செய்யப்பட்டனர். வருகின்ற மார்ச் 31 அன்று எதிர்க்கட்சிகள் சார்பாக பெரிய அளவிலான பேரணி ஒன்று நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.

2024 நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், அமலாக்கத் துறையால் இவ்வாண்டில் மட்டும் இதுவரை மூன்று எதிர்க்கட்சித் தலைவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஆம் ஆத்மி கட்சி மீது மட்டும் அடக்குமுறை ஏவப்படவில்லை. கெஜ்ரிவால் கைது செய்யப்பட்ட அதே நாளில், காங்கிரஸ் கட்சி 2018- 2019 ஆம் நிதி ஆண்டிற்கான வருமான வரிக் கணக்கைத் தாமதமாக தாக்கல் செய்தது என்று காரணம் கூறி வருமான வரித் துறை அக்கட்சியின் வங்கிக் கணக்கை திடீரென முடக்கியது. அதனைத் தொடர்ந்து, 1993- 1994-ஆம் ஆண்டு முதல் 2020 ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்துக்கான வரி மற்றும் அபராதமாக ₹ 1,823 கோடியை காங்கிரஸ் கட்சி கட்ட வேண்டுமென வருமான வரித்துறை புதிய நோட்டீஸ் ஒன்றை அனுப்பியுள்ளது.


படிக்க: அரவிந்த் கெஜ்ரிவால் கைது – களப்போராட்டங்களுக்குத் தயங்கும் எதிர்க்கட்சிகள்


அதேபோல், மார்ச் 26 அன்று கெஜ்ரிவால் கைது செய்யப்பட்ட அதே டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்ட தெலங்கானா மேலவை உறுப்பினர் கல்வகுந்த்லா கவிதா அவர்களின் நீதிமன்ற காவல் டெல்லி சிறப்பு நீதிமன்றத்தால் நீட்டிக்கப்பட்டது. கெஜ்ரிவாலுக்கு முன்னதாக அமலாக்கத்துறையால் அதே வழக்கில் கைது செய்யப்பட்ட ஆம் ஆத்மி முன்னாள் அமைச்சர் மனீஷ் சிசோடியா, ராஜ்ய சபா எம்.பி சஞ்சய் சிங் ஆகியோரும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மனீஷ் சிசோடியா 13 மாதங்களாகவும், சஞ்சய் சிங் 6 மாதங்களாகவும் சிறையில் உள்ளனர்.

முன்னதாக, கடந்த ஜனவரி மாத இறுதியில் சட்டவிரோத பணப் பரிமாற்றம் மற்றும் நில மோசடி தொடர்பான வழக்கில் ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார்.

எனவே, ”இண்டியா” கூட்டணியைச் சேர்ந்த முக்கிய கட்சிகளின் தலைவர்களான இவர்கள் யாரும் நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அதேபோல், காங்கிரஸ் கட்சியின் வங்கிக் கணக்கு முடக்கப்பட்டுள்ளதால் அக்கட்சியின் தலைவர்கள் மாநிலம் விட்டு மாநிலம் சென்று பிரச்சாரம் செய்வது கூட கடினமானதாகியுள்ளது.


படிக்க: விவசாயிகள் போராட்டமும் எதிர்க்கட்சிகளின் சந்தர்ப்பவாதமும்


2014 ஆம் ஆண்டில் பாசிஸ்டு மோடி ஆட்சிக்கு வந்தது முதல் செப்டம்பர் 2022 வரையிலான காலகட்டத்தில், அமலாக்கத்துறையால் 121 அரசியல்வாதிகள் விசாரிக்கப்பட்டுள்ளனர். அதில் 115 பேர், அதாவது 95 சதவிகிதத்தினர், எதிர்க்கட்சித் தலைவர்கள். மோடியின் ஆணைக்கு இணங்கி ’சுயேட்சை’ அமைப்பான அமலாக்கத்துறை எதிர்க்கட்சிகளை நரவேட்டையாடி வருகிறது.

இவ்வாறு எதிர்க்கட்சிகள் பாசிச மோடி அரசால் தாக்கப்பட்டு வரும் நிலையில் மோடி ஆதரவு ஊடகங்கள் பாசிச கும்பலுக்கு ஒத்து ஊதி வருகின்றன. நீதிமன்றங்களிலும் எதிர்க்கட்சிகளுக்கு உரிய தருணத்தில் தீர்வு கிடைப்பதில்லை.

ஆகவே, எதிர்க்கட்சிகள் தேர்தலில் வெற்றி பெறுவதற்கு மட்டுமல்ல, தங்களின் இருப்பைத் தக்கவைத்துக் கொள்வதற்கும் கூட மக்கள் மன்றத்திற்குச் செல்ல வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது.


பொம்மி

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க