அரவிந்த் கெஜ்ரிவால் கைது – களப்போராட்டங்களுக்குத் தயங்கும் எதிர்க்கட்சிகள்

எதிர்க்கட்சிகள் பிஜேபி-யை தேர்தலில் வீழ்த்த வேண்டுமானாலும் தங்களது இருப்பைத் தக்கவைத்துக் கொள்ள வேண்டுமானாலும், அவர்கள் மக்கள் கோரிக்கைகளை வலியுறுத்தியும் பாசிஸ்ட்டுகளின் அடக்குமுறைக்கெதிராகவும் மக்கள் போராட்டங்களைக் கட்டியமைக்க வேண்டும்.

நாடு முழுவதும் மோடி – அமித்ஷா கும்பலின் பிம்பம் சரிந்து வரும் நிலையில், தோல்விமுகத்தில் இருக்கும் பாசிசக் கும்பல் “எதைத் தின்றால் பித்தம் தெளியும்” என்ற நிலையில் அமலாக்கத்துறை, வருமான வரித்துறை, தேர்தல் ஆணையம் உள்ளிட்ட துறைகளை வைத்து எதிர்க்கட்சிகளை முடக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது.

இந்தியா கூட்டணியில் டெல்லி, பஞ்சாப் உள்ளிட்ட பகுதிகளில் தாக்கம் செலுத்தும் நபராக அரவிந்த் கெஜ்ரிவால் இருக்கிறார். அவரை ஒடுக்கிவிட்டால் வடக்கில் தனக்கு எதிரான பிரச்சாரத்தை குறைத்துவிடலாம் எனக் கணக்கு போட்டு, அமலாக்கத்துறையை வைத்து கெஜ்ரிவாலைக் கைது செய்துள்ளது பிஜேபி அரசு.

இந்தக் கைது, ஆம் ஆத்மிக்கு ஆதரவான அனுதாப அலையை ஏற்படுத்தி, பிஜேபிக்கு மேலும் சரிவையே ஏற்படுத்தும் என பத்திரிகையாளர்கள் பலரும் தமது கருத்துகளை முன்வைத்து வருகின்றனர். ஆனால் பிஜேபி-க்கு ஏற்படும் இச்சரிவைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு, பாஜக-வை தேர்தலில் தோற்கடிக்கும் வகையிலான நடவடிக்கைகளை மேற்கொள்ளக் கூட எதிர்க்கட்சிகள் தயங்குகின்றனர்.


படிக்க: ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல்கள்: பாசிஸ்டுகளின் தோல்வி முகமும்! எதிர்க்கட்சிகளின் கேடுகெட்ட சந்தர்ப்பவாதமும்!


எதிர்க்கட்சிகள் ஏன் பயப்படுகின்றன?

ஆர்எஸ்எஸ் – பிஜேபி; அம்பானி – அதானி பாசிசக் கும்பலுக்கும் இதர ஆளும் வர்க்க தரகு முதலாளிகளுக்குமான வெளிப்படையான மோதலாக இந்தத் தேர்தல் அமைந்திருக்கிறது என்றால் அது மிகையாகாது. அம்பானி – அதானியின் நலனையே நாட்டின் நலனாக முன்னிறுத்தி மூர்க்கமாக வேலைசெய்து வருகிறது பிஜேபி. இது தொடருமானால் இதர ஆளும் வர்க்க முதலாளிகளின் நிலை மோசமாகும். அதனால், இந்தத் தேர்தல் மூலம் ஆர்எஸ்எஸ் – பிஜேபி; அம்பானி – அதானி பாசிசக் கும்பலைக் கட்டுப்படுத்தி, அதன் தீவிரத்தை மட்டுப்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

ஆனால் பெயரளவிலான ஜனநாயகம், அரசியலமைப்புச் சட்டம் அனைத்தையும் குப்பையில் வீசியெறிந்துவிட்ட பிஜேபி, தேர்தல் ஆணையம், நீதிமன்றங்கள், அமலாக்கத்துறை, வருமான வரித்துறை, NIA உள்ளிட்ட நிறுவனங்களை வைத்து எதிர்க்கட்சித் தலைவர்களை தொடர்ச்சியாகக் கைது செய்து வருகிறது.

தமிழ்நாட்டில் செந்தில்பாலாஜி, ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன், தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி தலைவர் சந்திரசேகர் ராவின் மகள் கவிதா, டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் என கைது நடவடிக்கைகள் தொடர்கின்றன. மணீஷ் சிசோடியா உள்ளிட்ட ஆம் ஆத்மி கட்சியின் மூன்று தலைவர்கள் ஏற்கனவே கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம், களத்தில் தனக்கு எதிராளிகளே இல்லாமல் செய்து இந்தத் தேர்தலில் வென்று தனது  இந்துராஷ்டிரக் கனவை நிறைவேற்றத் துடிக்கிறது பிஜேபி.

ராகுல்காந்தி, மஹுவா மொய்த்ரா உள்ளிட்டோர் எம்.பி பதவியில் இருந்து தகுதிநீக்கம் செய்யப்பட்ட போதும், நாடாளுமன்ற வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு 140-க்கும் மேற்பட்ட எதிர்க்கட்சி எம்.பிக்கள் இடைநீக்கம் செய்யப்பட்ட போதும், வீரியமான போராட்டங்கள் எதையும் எதிர்க்கட்சிகள் முன்னெடுக்கவில்லை.


படிக்க: 146 எம்.பி-க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதை எதிர்க்கட்சிகள் எப்படிக் கையாண்டன?


கெஜ்ரிவால் கைது செய்யப்படுவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு, காங்கிரஸ் கட்சியின் அனைத்து வங்கிக் கணக்குகளும் முடக்கப்பட்டுள்ளதாகவும், அதன் அடிப்படை நிறுவனப் பணிகளைச் செய்யக்கூட பணமின்றி காங்கிரஸ் கட்சி திணறுவதாகவும் அக்கட்சியின் தலைவர்கள் அறிக்கை வெளியிட்டனர். ஆனால் இதை எதிர்த்து காங்கிஸ்காரர்கள் கூட எங்கும் களப்போராட்டத்தில் ஈடுபடவில்லை.

அதுமட்டுமின்றி விவசாயிகள் போராட்டம், CAA எதிர்ப்பு போராட்டம், வடமாநிலங்களில் வேலையில்லா இளைஞர்கள் போராட்டம், இளைஞர்களின் நாடாளுமன்றப் புகைக்குப்பி வீச்சு, லாரி ஓட்டுநர்கள் போராட்டம் என பிஜேபி-க்கு எதிரான எந்தவொரு மக்கள் போராட்டத்திலும் எதிர்க்கட்சிகள் சொல்லிக் கொள்ளும் வகையில் பங்கெடுக்கவில்லை. தங்கள் மீதான பாசிச பாஜக-வின் அடக்குமுறைகளை எதிர்த்தோ அல்லது மக்கள் பிரச்சினைகளுக்காகவோ மக்கள் போராட்டங்களைக் கட்டியமைத்தால் அது தங்களுக்கும் தாங்கள் சார்ந்திருக்கும் ஆளும் கார்ப்பரேட் வர்க்கப் பிரிவுகளுக்குமே நாளை அச்சுறுத்தலாக ஆகக்கூடும் என்பதால் எதிர்க்கட்சிகள் அடக்கி வாசிக்கின்றன.  போராட்டங்களைக் கட்டியமைக்கத் தயங்குகின்றன. இதனால், பிஜேபி-யோடு பல நேரங்களில் சமரசம் செய்துகொள்கின்றன.

ஜெர்மனி – அமெரிக்க ஆளும் வர்க்கங்கள் எதிர்ப்பு!

ராகுல்காந்தி கைது செய்யப்பட்ட போதும், இப்போது அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்ட போதும், ஜெர்மனி மற்றும் அமெரிக்க அரசுகள் இவர்கள் மீதான விசாரணையை உற்றுக் கவனித்து வருவதாகக் கூறியுள்ளன.

ஆளும் வர்க்கத்தின் இப்பிரிவினர், அம்பானி – அதானி மட்டும் இந்தியா முழுவதையும் கூறுபோட்டுக் கொள்வதை தடுத்த நிறுத்த முயன்று வருகின்றனர். எனினும், தமது நலன்களை உத்தரவாதம் செய்துகொள்ளும் அளவுக்கான எதிர்ப்பாக மட்டுமே இது இருந்து வருவதையும், உடனுக்குடன் சமரசம் ஆகிவிடுவதையும் நாம் கவனிக்க வேண்டியுள்ளது. இவர்களுக்குள் சமரசமும் முரண்பாடும் மாறி மாறி உருவாகிக் கொண்டிருக்கின்றன என்பதற்கான உதாரணம் தான், ஹிண்டன்பர்க் முதல் இன்றைய அர்விந்த் கெஜ்ரிவால் கைதுக்கு கண்டனம் வரையிலான நடவடிக்கைகள் எல்லாம்.


படிக்க: எதிர்க்கட்சிகளே, பாசிச சர்வாதிகாரம் ஒழிக!” என மக்களோடு சேர்ந்து முழங்க வேண்டிய தருணம் இது!


எதிர்க்கட்சிகளே களத்திற்கு வாருங்கள்!

CAA எதிர்ப்புப் போராட்டம், விவசாயிகள் போராட்டம் உள்ளிட்ட எழுச்சிமிகு போராட்டங்களால் தோல்வி முகத்திற்குத் தள்ளப்பட்ட பாசிச பிஜேபி, எதிர்த்து வீழ்த்த ஆளில்லாத காரணத்தால் மட்டுமே தனது இறுதி ஆட்டத்தை மூர்க்கமாக ஆடிக் கொண்டிருக்கிறது. ஆனால், ஓட்டப் பந்தயத்தில் நோஞ்சானை வீழ்த்துவதற்குக் கூட தெம்பற்ற நோஞ்சான்களாக எதிர்க்கட்சிகள் இருக்கின்றன. எதிர்க்கட்சிகளின் இந்த செயலின்மைக்குப் பின்னால் அவர்களின் வர்க்க நலன் ஒளிந்திருக்கிறது.

எதிர்க்கட்சிகள் பிஜேபி-யை தேர்தலில் வீழ்த்த வேண்டுமானாலும் தங்களது இருப்பைத் தக்கவைத்துக் கொள்ள வேண்டுமானாலும், அவர்கள் மக்கள் கோரிக்கைகளை வலியுறுத்தியும் பாசிஸ்ட்டுகளின் அடக்குமுறைக்கெதிராகவும் மக்கள் போராட்டங்களைக் கட்டியமைக்க வேண்டும். மக்கள் போராட்டங்கள் மட்டுமே பிஜேபி-க்கு கடிவாளம் போட்டு வருகின்றன என்ற உண்மையை எதிர்க்கட்சிகள் உணராவிட்டால், அதற்குரிய விலையைக் கொடுத்தே ஆக வேண்டும்.


முகிலன்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTubeவிவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க