இந்தியாவில் தேர்தலில் வென்று சட்டப்பூர்வ வழிமுறையிலேயே நிலவுகின்ற போலி ஜனநாயக கட்டமைப்பை முழுவதுமாக சிதைத்து, இந்திய சமுதாயத்தை இந்துராஷ்டிரத்தை நோக்கி நகர்த்திச் செல்லும் வழிமுறையை ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. பாசிசக் கும்பல் அமல்படுத்திக்கொண்டிருக்கிறது.
இதன் காரணமாக, அடுத்தடுத்து தேர்தல்களில் வெற்றிபெறுவதை முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதும் பா.ஜ.க., சொல்லிக்கொள்ளப்படுகின்ற ‘தேர்தல் ஜனநாயகத்தை’ ஒழித்துக்கட்டுவதன் மூலமாக தேர்தலில் எதிர்க்கட்சிகளின் ஆட்டத்தை செல்லாக்காசாக்கி வருகிறது. தேர்தல் நடக்கும்; எதிர்க்கட்சிகள் போட்டிப் போட முடியும்; மக்கள் வாக்களிப்பர்; ஆனால், பா.ஜ.க. கும்பல்தான் தேர்தலில் வெல்லும் என்ற புதிய நிலையை சட்டப்பூர்வமாகவே உருவாக்கி வருகிறது.
இதற்காக பல்வேறு சட்டப்பூர்வ பாசிச வழிமுறைகளை மேற்கொண்டு வருகிறது. ஊழலை சட்டப்பூர்வமாக்கிய தேர்தல் நிதிப்பத்திரம், வாக்குவங்கியை இந்துத்துவமயமாக்கும் நோக்கில் நடத்தப்பட்ட அசாம் மற்றும் காஷ்மீர் மாநிலங்களின் தொகுதிகள் மறுவரையறை, மக்களை கண்காணிப்பதற்காக வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கும் வகையில் கொண்டுவரப்பட்ட தேர்தல் சட்டங்கள் திருத்தம் 2021, குஜராத் மாநில சட்டமன்ற தேர்தலில் அமல்படுத்தப்பட்ட கட்டாய வாக்குப்பதிவு போன்றவை அதற்கான நடக்கவடிக்கைகள்தான். அதன் உச்சக்கட்ட நடவடிக்கையாக, பாசிஸ்டுகள் தங்கள் நிகழ்ச்சிநிரலில் வைத்திருக்கும் திட்டங்களான ஒரே நாடு ஒரே தேர்தல்”, “தொகுதிகள் மறுவரையறை” போன்றவற்றை நிறைவேற்றிக்கொள்ளும் வகையில், நடந்துமுடிந்த நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில், நாட்டின் தேர்தல் செயல்முறையை மேற்பார்வையிடுவது, வழிநடத்துவது, கட்டுப்படுத்துவது போன்ற பணிகளை மேற்கொள்ளும் அரசியல் சாசன அமைப்பான இந்திய தேர்தல் ஆணையத்தின் கடைசி துளி அதிகாரத்தையும் முழுவதுமாக தன்வயப் படுத்திக்கொள்ளும் வகையில் “தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் பிற தேர்தல் ஆணையர்கள் (நியமனம், சேவை நிபந்தனை மற்றும் பதவிக்காலம்) மசோதா, 2023”-ஐ நிறைவேற்றியுள்ளது பா.ஜ.க கும்பல். எதிர்க்கட்சிகள் அனைவரையும் வெளியேற்றிவிட்டு பாசிச வழிமுறையில் நிறைவேற்றப்பட்ட இம்மசோதாவிற்கு தற்போது குடியரசு தலைவர் திரெளபதி முர்முவும் ஒப்புதல் அளித்துள்ளார்.
சட்டம் இயற்றப்பட்டதன் பின்னணி
இந்திய அரசியலமைப்பு சட்டத்தை பொறுத்தவரை, தேர்தல் ஆணையர்களை நியமிப்பதற்கான வழிமுறை ஏதும் வகுக்கப்படவில்லை. அரசியல் அமைப்பு சட்டத்தின் சரத்து 324(2)-இன் படி, தேர்தல் ஆணையர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான சட்டத்தை நாடாளுமன்றம் உருவாக்க வேண்டும் என்றும் அதுவரை, அப்பணி குடியரசுத் தலைவரால் செய்யப்பட வேண்டும் என்றும் விளக்கப்பட்டுள்ளது.
ஆனால், அரசியல் சாசனம் உருவாக்கப்பட்டு 73 ஆண்டுகளாகியும் இந்தியாவை ஆட்சி செய்த காங்கிரசும் பா.ஜ.க-வும் தேர்தல் ஆணையர்களை நியமிப்பதற்கான வழிமுறையை உருவாக்கும் சட்டத்தை இயற்றவில்லை. அது அக்கட்சிகளுக்கு தேவைப்படவுமில்லை. ஏனெனில், பெரும்பாலும் ஆளும் அரசுகள் கைக்காட்டும் நபர்களே குடியரசுத்தலைவரால் தேர்தல் ஆணையர்களாக நியமிக்கப்பட்டு வருகின்றனர். இந்த போலி ஜனநாயக நடமுறையை கட்சி வேறுபாடின்றி காங்கிரஸ், பா.ஜ.க. ஆகிய இரண்டு கட்சிகளுமே பயன்படுத்தி வந்தன. ஆனால், கடந்த 2014-ஆம் ஆண்டு ஆட்சியதிகாரத்தில் அமர்ந்த ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. பாசிசக் கும்பல் நிலவுகின்ற போலி ஜனநாயக நடமுறைகள், வழிமுறைகளை கூட மதிக்காமல் அதனை ஒழித்துக்கட்டிவிட்டு பாசிசக் கட்டமைப்பை உருவாக்கும் பணியை மேற்கொள்ளத் தொடங்கியது.
படிக்க: தேர்தல் ஆணையர்கள் மசோதா: தேர்வுக் குழுவிலிருந்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி நீக்கம்!
2022-ஆம் ஆண்டு நவம்பர் 19 அன்று, தற்போது தேர்தல் ஆணையராக உள்ள அருண் கோயலின் பெயர் தேர்தல் ஆணையர் பதவிக்கு பரிந்துரை செய்யப்பட்டு அதே நாளில் குடியரசுத் தலைவர் ஒப்புதலும் வழங்கப்பட்டது. இதில் வேடிக்கை என்னவென்றால் அதற்கு முந்தைய நாள்தான் (நவம்பர் 18, 2022) அருண் கோயல், தான் முன்னர் வகித்துவந்த பதவியிலிருந்து விருப்ப ஓய்வை அறிவித்திருந்தார். மோடி அரசின் இந்நடவடிக்கை பலரையும் அதிர்ச்சியடைய வைத்தது.
இதனையடுத்து, தேர்தல் ஆணையர்களை தேர்வு செய்வதற்கு குழு அமைக்க வேண்டும் என்று பிரசாந்த் பூஷண் உள்ளிட்ட வழக்கறிஞர்கள் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இவ்வழக்கை விசாரித்த நீதிபதி கே.எம்.ஜோசப் அடங்கிய ஐந்து நீதிபதிகளைக் கொண்ட உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு, “பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர், உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி ஆகியோர் அடங்கிய தேர்வு குழு (Selection Committee) தலைமைத் தேர்தல் ஆணையர் உள்ளிட்ட தேர்தல் ஆணையர்களை தேர்வு செய்யும்” என்று தீர்ப்பு வழங்கியது.
இந்நிலையில்தான், தற்போது இம்மசோதாவை சட்டமாக்கியுள்ளது பாசிசக் கும்பல், இச்சட்டத்தில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு மாற்றாக பிரதமர் பரிந்துரைக்கும் ஒரு கேபினட் அமைச்சரை உள்ளடக்கிய குழுவே தேர்தல் ஆணையர்களை நியமிக்கும் என்று வரையறுக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் உச்சநீதிமன்ற தீர்ப்பை கழிவறை காகிதமாக மாற்றியுள்ளது பாசிசக் கும்பல்.
பாசிஸ்டுகளின் செல்லப்பிராணியான, தேர்தல் ஆணையம்
பாசிஸ்டுகளால் நிறைவேற்றப்பட்டுள்ள இச்சட்டத்தின் அடிப்படையில், பிரதமர், பிரதமரால் பரிந்துரைக்கப்படுகின்ற மத்திய அமைச்சர் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் ஆகியோரே இனி தேர்தல் ஆணையர்களுக்கான தேர்வு குழுவாக செயல்படுவர். அதாவது, ஆளும் அரசை சார்ந்தவர்கள் பெரும்பான்மையாக இருக்கும் இக்குழுதான் இனி தேர்தல் ஆணையர்களை தேர்ந்தெடுக்கும்.
முதலில், மத்திய சட்டத்துறை அமைச்சர் தலைமை தாங்கும் தேடுதல் குழு (Search Committee) ஐந்து நபர்களின் பெயர்களை மேலே குறிப்பிட்ட தேர்வு குழுவிற்கு பரிந்துரைக்கும். அதில் ஒருவரை தேர்வு குழு தேர்ந்தெடுக்கும். இதில் கேலிக்கூத்து என்னவெனில், தேடுதல் குழுவால் பரிந்துரைக்கப்படுகின்ற ஐந்து நபர்கள் அல்லாமல் வேறு ஒருவரைக் கூட தேர்வு குழுவால் தேர்வு செய்ய முடியும் என்று சட்டத்தில் கூறப்பட்டுள்ளது.
மேலும், முழுமையான தேர்வு குழு இல்லாவிட்டாலும் இக்குழுவின் பரிந்துரைகள் செல்லுபடியாகும் என்றும் வரையறுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், அடிப்படையிலேயே சிறுபான்மையாக உள்ள எதிர்க்கட்சி தலைவரின் பிரதிநிதித்துவமும் இக்குழுவிற்குத் தேவையில்லை என்றாகிவிட்டது.
மொத்தத்தில், பிரதமர் மோடியின் மனம்கவர்ந்த அடியாட்களையும் ஆர்.எஸ்.எஸ். கைக்கூலிகளையும் இனி சட்டப்பூர்வமாகவே தலைமை தேர்தல் ஆணையராகவோ பிற தேர்தல் ஆணையர்களாகவோ நியமிக்க முடியும். குறைந்தபட்ச நேர்மையான அதிகாரிகள் கூட இனி தேர்தல் ஆணையத்திற்குள் தவறுதலாக கூட நுழைய முடியாமல் முழுக்க முழுக்க சங்கிகளுக்கான மடமாக மாற்றப்படும் என்பது தெளிவாகிறது. மொத்தத்தில், இந்திய தேர்தல்களின் ‘வாட்ச் டாக் (Watchdog)’ என்று அழைக்கப்படுகின்ற தேர்தல் ஆணையம் தற்போது பாசிஸ்டுகளின் செல்லப்பிராணியாக மாற்றப்பட்டுள்ளது.
ஏற்கனவே, பாசிஸ்டுகள் தேர்தல் ஆணையத்தை தாங்கள் விரும்பிய வகையில்தான் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் இச்சட்டம் நிறவேற்றப்பட்டிருப்பது எதிர்வரும் 2024 நாடாளுமன்ற தேர்தலில் தேர்தல் ஆணையத்தை பாசிஸ்டுகளின் அடியாள் படையாக மாற்றவே வழிவகுக்கும். ஏனெனில், இந்தியாவின் இரண்டு தேர்தல் ஆணையர்களில் ஒருவரான அனுப் சந்திர பாண்டேவின் பதவிக்காலம் வருகின்ற பிப்ரவரி 2024 உடன் முடிவடைகிறது. தற்போது அவசர அவசரமாக இச்சட்டம் நிறைவேற்றியுள்ளதன் மூலம் அடுத்த தேர்தல் ஆணையர் பதவிக்கு அப்பட்டமான ஒரு ஆர்.எஸ்.எஸ். ஏஜெண்டை தேர்தல் ஆணையராக நியமிக்க முடியும்.
மேலும் புதிய சட்டத்தில், “தற்போதைக்கு நடைமுறையில் உள்ள வேறு எந்தச் சட்டத்திலும் இருந்தாலும், தற்போதைய அல்லது முன்னாள் தேர்தல் ஆணையர்களின் எந்தவொரு செயலுக்கும், காரியத்துக்கும், வார்த்தைக்கும் எந்த நீதிமன்றமும் சிவில் அல்லது கிரிமினல் வழக்குகளைத் தொடரக்கூடாது” என்று கூறப்பட்டுள்ளது. இதன் மூலம் எதிர்வரும் 2024 நாடாளுமன்ற தேர்தலில் தேர்தல் ஆணையத்தின் துணையுடன் அப்பட்டமான தேர்தல் முறைகேடு வேலைகளில் ஈடுபடவுள்ளதை வெளிப்படையாகவே அறிவிக்கின்றனர், பாசிஸ்டுகள்.
இச்சட்டம் அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானதா?
பாசிஸ்டுகளால் கொண்டுவரப்பட்டுள்ள இந்த சட்டத்திற்கு இந்தியாவில் உள்ள பெரும்பான்மையான வழக்குரைஞர்களும் செயல்பாட்டாளர்களும் பாசிச எதிர்ப்பு ஜனநாயக சக்திகளும் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மூத்த வழக்கறிஞரான பிரசாந்த் பூஷண், இந்தச் சட்டம் அரசியலமைப்புக்கு முரணானது என்றும் இச்சட்டம் ஜனநாயகத்தை மீறுகிறது என்ற அடிப்படையில் உச்சநீதிமன்றத்தால் கேள்விக்குள்ளாக்கப்படலாம் என்றும் கூறியுள்ளார்.
இவரை போலவே பலரும், இச்சட்டம் நிர்வாகத்தின் (Executive) அதிகாரங்களை சட்டமியற்றும் அமைப்பில் (Legislature)குவிக்கிறதென்றும், அரசியல் அமைப்பு சட்டத்தின் பகிர்ந்தளிக்கப்பட்ட அதிகாரங்கள் (Separation of Powers) மற்றும் சோதனைகள் மற்றும் சமநிலைக்கு (Checks and Balances) எதிராக உள்ளதென்றும் கூறுகின்றனர். எனவே, மோடி அரசு நீதித்துறையின் அதிகாரத்தில் தலையிடும் நீதிபதிகள் நியமன ஆணையத்தை கொண்டுவந்த போது உச்சநீதிமன்றம் தலையிட்டு அதனை தடுத்து நிறுத்தியதைப்போல் இந்த சட்டத்தையும் தடுத்துநிறுத்த வேண்டும் என்றும் பலரும் பேசி வருகின்றனர்.
ஆனால் உண்மையில், இச்சட்டம் இயற்றப்பட்டது அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானதா என்றால், அப்படியில்லை.
படிக்க: விருப்ப ஓய்வு பெற்ற அருண் கோயலுக்கு அடுத்த நாளே தேர்தல் ஆணையர் பதவி!
அரசியல் அமைப்பு சட்டத்தின் சரத்து 324(2)-இல், “தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் பிற தேர்தல் ஆணையர்களின் நியமனம், நாடாளுமன்றத்தால் உருவாக்கப்பட்ட எந்தவொரு சட்டத்தின் விதிகளுக்கும் உட்பட்டது” என்று தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், கடந்த மார்ச் மாதத்தில் தேர்தல் ஆணையர்களை நியமிக்க தேர்வு குழு அமைத்து வழங்கப்பட்ட உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வின் தீர்ப்பிலும், “இது (தேர்தல் ஆணையர்களை நியமிப்பது) தொடர்பான சட்டம் நாடாளுமன்றத்தால் இயற்றப்படும்வரை இந்த நடைமுறை அமலில் இருக்கும்” என்றே குறிப்பிடப்பட்டுள்ளது. அந்தவகையில், பாசிஸ்டுகளால் கொண்டுவரப்பட்டுள்ள இந்த சட்டம் அரசியல் அமைப்பு சட்டத்திற்கு எதிரானது அல்ல.
மேலும், பா.ஜ.க-வால் கொண்டுவரப்பட்டுள்ள இந்த சட்டம் பாசிசத்தன்மை கொண்டது என்பதனாலேயே இதற்கு முன்னர் இருந்த முறை மிகவும் ஜனநாயகமானது என்றோ முன்னர் தேர்தல் ஆணையம் சுயேட்சையான அமைப்பாக இருந்தது என்றோ புரிந்துகொள்ளக் கூடாது. இதற்கு முன்னர் இருந்த முறையையும் காங்கிரஸ், பா.ஜ.க. இரு கட்சிகளுமே அவர்களுக்குத் தகுந்தாற்போல் வளைத்து பயன்படுத்தி வந்தனர்.
சான்றாக, தற்போது இந்திய தேர்தல் ஆணையத்தின் நடைமுறைப்படி ஒரு தலைமை தேர்தல் ஆணையரும் இரண்டு பிற தேர்தல் ஆணையர்களும் உள்ளனர். ஆனால், ஆரம்பத்தில் ஒரே ஒரு தலைமை தேர்தல் ஆணையர் மட்டுமே இருப்பார்.
1989-ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக, தேர்தல் நேரம் தீர்மானிப்பது, தேர்தலை நடத்துவது போன்றவற்றில் அப்போதைய தலைமை தேர்தல் ஆணையராக இருந்த ஆர்.வி.எஸ்.பெரி சாஸ்திரி காங்கிரஸ் அரசுக்கு வளைந்துகொடுக்கவில்லை என்பதனால் கூடுதலாக இரண்டு தேர்தல் ஆணையர்களை நியமித்தது. இதன் மூலம் பெரும்பான்மை முடிவுக்கு கட்டுப்படும் வகையில் அவரின் அதிகாரத்தை பறித்தது. இதனை, அரசியல் அமைப்பு சட்டத்தின் சரத்து 324(2)-ஐ பயன்படுத்தியே ராஜீவ் காந்தி செய்தார்.
அடுத்துவந்த வி.பி.சிங் ஆட்சியில், தேர்தல் ஆணையம் மீண்டும் ஒரு நபர் அமைப்பாக மாற்றப்பட்டது. ஆனால் அதற்குபிறகான நரசிம்மராவ் ஆட்சியில், பெரி சாஸ்திரி போல தேர்தலில் பல சீர்த்திருத்தங்களை மேற்கொண்ட டி.என்.சேஷன் தலைமை தேர்தல் ஆணையராக பதவி வகித்தபோது அவரின் அதிகாரத்தை பறிக்கும் வகையில் அக்டோபர் 1, 1993-இல் முன்னறிவிப்பு ஏதுமின்றி திடிரென இரண்டு தேர்தல் ஆணையர்களை நியமித்து தேர்தல் ஆணையம் மீண்டும் மூன்று நபர் கொண்ட அமைப்பாக மாற்றப்பட்டது. இந்த நடவடிக்கை தலைமை தேர்தல் ஆணையரின் அதிகாரங்களை நீர்த்துப்போகச் செய்யும் மற்றும் தேர்தல் ஆணையத்தின் அதிகாரங்கள் மற்றும் செயல்பாடுகளை வரையறுக்கின்ற அரசியலமைப்பின் 324-வது பிரிவை குறைமதிப்பிற்கு உட்படுத்தும் என்று உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து தோற்றுப்போனார், டி.என்.சேஷன்.
எனவே, இதற்கு முன்னர் இருந்த வழிமுறையும் ஜனநாயகப்பூர்வமானது அல்ல, அது பாசிஸ்டுகளுக்கு தங்களது கைக்கூலிகளை நியமிப்பதற்கு போதுமானதாகவே இருந்தது என்பதும், நிலவுகின்ற போலி ஜனநாயக கட்டமைப்பும் அரசியல் அமைப்பு சட்டமும்தான் பாசிசம் வளர்ந்து வருவதற்கான விளைநிலமாக உள்ளது என்பதும் தெளிவாகிறது. எதிர்க்கட்சிகள் இச்சட்டத்திற்கு பெரியளவில் எதிர்ப்பு தெரிவிக்காமல் இருப்பதற்கு இதுவும் ஒரு முக்கிய காரணம். ஏனெனில் அவர்கள் இச்சட்டத்தை எதிர்த்து பேசினால், அதை நிறைவேற்றுதற்கான வாய்ப்பை வழங்கிய அரசியல் சாசனம் குறித்தும் பேசியாக வேண்டும். ஒருவேளை அப்படி பேசினார்களேயானல், அனைவருக்குமான ஜனநாயகம் என்ற பெயரில் பாசிஸ்டுகளுக்கும் ஜனநாயகம் வழங்கும் இந்த அரசியல் அமைப்பு சட்டத்தின் உண்மைத்தன்மை அம்பலமாகி, அது எதிர்க்கட்சிகளுக்கும் எதிராக சென்று முடிந்துவிடும்.
எனவே, மோடி அரசின் பாசிச சட்டத்திட்டங்களுக்கு எதிராக குரல்கொடுத்துவரும் பாசிச எதிர்ப்பு ஜனநாயக சக்திகள், மோடி அரசு கொண்டுவரும் தேர்தல் ஆணையர்கள் சட்டத்தைத் திரும்பபெற வேண்டும், உச்சநீதிமன்றம் இந்த விவகாரத்தில் தலையிட வேண்டும், நிர்வாகத்துறை தனது அதிகாரத்தை மீட்டமைத்துக்கொள்ள வேண்டும் என்று கூறுவதை விட்டுவிட்டு, பாசிஸ்டுகளுக்கு ஜனநாயகம் வழங்கும் இந்த போலி ஜனநாயக கட்டமைப்பை தூக்கியெறிந்துவிட்டு மக்களுக்கு உண்மையான ஜனநாயகத்தை வழங்கும் பாசிச எதிர்ப்பு ஜனநாயக குடியரசை கட்டியமைப்பதற்கான போராட்டத்தில் இறங்க வேண்டும்.
துலிபா
(புதிய ஜனநாயகம் – ஜனவரி 2024 இதழ்)
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube