விருப்ப ஓய்வு பெற்ற அருண் கோயலுக்கு அடுத்த நாளே தேர்தல் ஆணையர் பதவி!

அருண் கோயல் நவம்பர் 18 அன்று விருப்ப ஓய்வை அறிவிக்கிறார். நவம்பர் 19 அன்றே அவரது பெயர் தேர்தல் ஆணையர் பதவிக்கு பரிந்துரை செய்யப்பட்டு ஜனாதிபதி ஒப்புதலும் அளிக்கப்படுகிறது!

0

வம்பர் 21 அன்று அருண் கோயல் (Arun Goel) தேர்தல் ஆணையராக தில்லியில் பதவி ஏற்றுக்கொண்டார். பஞ்சாப் கேடரின் 1985-பேட்ச்-ஐ சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரியான அவர், 2020 ஆம் ஆண்டிலிருந்து மத்திய கனரக தொழில்துறை செயலாளராக செயல்பட்டு வந்தார். இவர் தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் மற்றும் தேர்தல் ஆணையர் அனுப் சந்திரா பாண்டே ஆகியோருடன் இணைந்து தேர்தல் ஆணைய குழுவில் செயல்படுவார். வருகின்ற பிப்ரவரி 2025-க்கு பின், அதாவது தற்போதைய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமாரின் ஓய்வுக்கு பிறகு, இந்திய தலைமை தேர்தல் ஆணையராக பதவி உயர்வு பெறுவார்.

வரவிருக்கும் டிசம்பர் 31 ஆம் தேதி ஓய்வு பெறவிருந்த அருண் கோயல், நவம்பர் 18 அன்று திடீரென விருப்ப ஓய்வை அறிவிக்கிறார். அடுத்த நாளே, அதாவது நவம்பர் 19 அன்றே, அவரது பெயர் சட்டத்துறை அமைச்சகத்தால் பரிந்துரை செய்யப்பட்டு பிரதமரால் தெரிவு செய்யப்படுகிறது; ஜனாதிபதி திரௌபதி முர்முவும் அன்றைய நாளிலேயே அவரது நியமனத்திற்கு ஒப்புதல் அளிக்கிறார்.

பொதுவாக, தேர்தல் ஆணையர் பதவிக்குத் தகுதியானவர்கள் நால்வரின் பெயரைத் தேர்ந்தெடுத்து சட்டத்துறை அமைச்சகம் பிரதமரிடம் வழங்கும். அதில் ஒருவரைத் தேர்ந்தெடுத்து பிரதமர் ஜனாதிபதிக்கு அனுப்பி வைப்பார். ஜனாதிபதி ஒப்புதல் அளித்த பின்பு அவர் தேர்தல் ஆணையராக பதவி ஏற்றுக்கொள்வார். இதுதான் தேர்தல் ஆணையர் நியமிக்கப்படும் நடைமுறை.

தற்போது அருண் கோயல் நியமனத்திலும் இந்த நடைமுறை பின்பற்றப்பட்டிருக்கிறது. ஆனால் 24 மணி நேரத்திற்கு உள்ளாகவே சட்டத்துறை அமைச்சகத்தின் பரிந்துரையை பரிசீலித்து பிரதமர் மோடி அருண் கோயலின் பெயரைத் தேர்ந்தெடுத்து ஜனாதிபதிக்கு அனுப்பி இருக்கிறார். ஜனாதிபதியும் மின்னல் வேகத்தில் அவரது நியமனத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளார். என்னே ஒரு கேலிக்கூத்து! இதை உச்ச நீதிமன்றமே கடுமையாக விமர்சித்துள்ளது.


படிக்க: தேர்தல் ஆணையமே … நடையைக் கட்டு !


தேர்தல் ஆணையர்கள் நியமனத்திற்கு சுயேட்சையாகவும் சுதந்திரமாகவும் இயங்கக்கூடிய ஒரு அமைப்பை உருவாக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞர்கள் பிரசாந்த் பூஷன், கோபால் சங்கர் நாராயணன் ஆகியோர் வழக்கு தொடர்ந்துள்ளனர். இவ்வழக்கை விசாரித்து வந்த நீதிபதி கே.எம்.ஜோசப் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு தற்போது அருண் கோயல் நியமனம் குறித்து மத்திய அரசு சார்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் வெங்கட்ரமணியிடம் பல்வேறு கேள்விகளை முன் வைத்தது.

“மே 15 இல் இருந்து நவம்பர் 18‌ வரை தேர்தல் ஆணையர் பதவி காலியாகத்தான் இருந்துள்ளது. அன்று முதல் இன்று வரை மத்திய அரசு என்ன செய்தது என்பதை அறிக்கையாக தர முடியுமா?” என்று உச்ச நீதிமன்றம் வினவியது. கூடுதலாக மத்திய அரசின் ஆவணங்களை ஆராய்ந்த பின்பு “நால்வரின் பெயர்கள் எந்த அடிப்படையில் பரிந்துரைக்கப்பட்டது? அதிலிருந்து ஒருவர் எவ்வாறு தேர்வு செய்யப்பட்டார்?” என்று கேள்வி எழுப்பியது.

மேலும், “தேர்தல் ஆணையர் மற்றும் தலைமை தேர்தல் ஆணையரின் பதவிக்காலம் தனித்தனியாக ஆறு ஆண்டுகள் என்று சட்டம் கூறுகிறது. பதவிக்காலம் முடிவதற்குள் 65 வயதை எட்டி விட்டால் அவர்கள் ஓய்வு பெற வேண்டும். ஆனால் நீங்கள் என்ன செய்கிறீர்கள்? தேர்தல் ஆணையரையே தலைமை தேர்தல் ஆணையராக பதவி உயர்த்துகிறீர்கள். இதன் மூலம், தேர்தல் ஆணையர் மற்றும் தலைமை தேர்தல் ஆணையர் ஆகிய இருவருமே ஆறாண்டு காலம் பதவியில் இருக்காத வண்ணம் பார்த்துக் கொள்கிறீர்கள்” என்றும் மத்திய அரசை கே.எம்.ஜோசப் சாடினார்.

தமக்கு விருப்பமானவர்களை தேர்ந்தெடுப்பது மூலம் தேர்தல் ஆணையத்தை தமது கைப்பாவையாக அரசு பயன்படுத்திக் கொள்கிறது என்பதையே உச்ச நீதிமன்றம் சுட்டிக்காட்டி இருக்கிறது. குறுகிய காலம் மட்டுமே பதவியில் வைத்துக் கொள்வதன் மூலம் அவர்களை எளிதாக அரசால் கட்டுப்படுத்திக் கொள்ள முடியும். அரசை பகைத்துக் கொள்ள அவர்கள் விரும்ப மாட்டார்கள்.


படிக்க: ” நமோ டிவி ” ஒரு விளம்பர சேனலாம் ! வாய் திறக்காத தேர்தல் ஆணையம் !


தேர்தல் ஆணையம் என்பது சுயேட்சையான அமைப்பு தானா?

பாஜக ஆட்சியில் மட்டுமல்ல, எப்போதுமே தேர்தல் ஆணையம் என்பது சுயேட்சையான அமைப்பாக இருந்தது இல்லை. ஆரம்ப கட்டத்தில், இந்திய தேர்தல் ஆணையத்தில் ஒரே ஒரு தேர்தல் ஆணையர், அதாவது தலைமை தேர்தல் ஆணையர், மட்டுமே இருந்தார். ஒன்பதாவது நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக, தலைமை தேர்தல் ஆணையர் பெரி சாஸ்திரியின் (RVS Peri Sastri) அதிகாரத்தில் தலையிடுவதற்காக அப்போதைய ராஜீவ் காந்தி தலைமையிலான காங்கிரஸ் அரசாங்கம், அக்டோபர் 16, 1989 அன்று கூடுதலாக இரண்டு தேர்தல் ஆணையர்களை நியமித்தது. இதனால் பெரும்பான்மையினரின் முடிவுக்கு கட்டுப்பட வேண்டிய நிலை ஏற்படுத்தப்பட்டு அப்போதைய தலைமை தேர்தல் ஆணையரின் அதிகாரம் கட்டுப்படுத்தப்பட்டது. அரசியலமைப்பின் சரத்து 324(2)-ஐ பயன்படுத்தி இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

ஜனவரி 2, 1990 இல் வி.பி.சிங் அரசாங்கம் விதிகளைத் திருத்தி தேர்தல் ஆணையத்தை மீண்டும் ஒரு நபர் அமைப்பாக மாற்றியது. பின்னர், அக்டோபர் 1, 1993-இல் நரசிம்மராவ் அரசாங்கம் மீண்டும் தேர்தல் ஆணையத்தை மூன்று நபர் கொண்ட அமைப்பாக மாற்றியது. அன்றிலிருந்து இன்று வரை இந்திய தேர்தல் ஆணையம் மூன்று நபர் கொண்ட அமைப்பாக இருந்து வருகிறது.

தேர்தல் ஆணையர்களைத் தமது கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்வதன் மூலம் தேர்தல் களத்தை ஆளுங்கட்சிகள் தமக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்வது என்பது வழக்கமாக நடைபெற்று கொண்டு வருகிறது. தேர்தல் ஆணையம் சுயேட்சையாக இருந்ததும் இல்லை; சுயேட்சையான நபர்களை மத்திய அரசாங்கம் விரும்பியதும் இல்லை.

ஆனால் தற்போதைய பாஜக அரசாங்கம், பாசிஸ்டுகளுக்கே உரிய பாணியில், வெளிப்படையாகவே அராஜகமான முறையில் தமது கையாட்களை எவ்வித தயக்கமுமின்றி தேர்தல் ஆணையம் உட்பட அனைத்து அமைப்புகளிலும் நியமித்து வருகிறது. விருப்ப ஓய்வு அறிவித்த 24 மணி நேரத்திற்குள் அருண் கோயல் தேர்தல் ஆணையராக தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது இதற்கு ஒரு துலக்கமான சான்றாகும்.

பொம்மி

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க