ந்தியாவின் பெரும்பான்மை ஊடகங்கள் மோடியின் கைப்பாவையாகிவிட்ட நிலையில், அதுபோதாதென்று நமோ டிவிஎன்ற பெயரில் மோடியின் புகழ்பாடும் 24 மணி நேர சேனல் மக்களவை தேர்தலுக்காக துவக்கப்பட்டது. அனைத்து டிடிஎச்களிலும் இலவச சேனலாக ஒளிபரப்பான இந்த சேனலை தொடங்கியது யார், இந்தச் சேனலுக்கு அனுமதி கொடுத்தது யார் என சேனல் ஒளிப்பரப்பை தொடங்கிய நாளிலிருந்து இணைய ஊடகங்களில் விவாதமானது.

இந்த நிலையில், இந்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சகம் அளித்துள்ள ஒரு ஆர்டிஐ பதிலில் இந்தச் சேனல் பாஜகவால் இயக்கப்படுகிறது எனவும் இது விளம்பர சேனலாக இயக்கப்படுவதால் அமைச்சகத்தின் அனுமதி தேவையில்லை எனவும் சொல்லப்பட்டுள்ளது.

நரேந்திர மோடி என்பதன் சுருக்கமாக நமோஎன்ற பெயரில் மோடியின் படத்தை இலட்சிணையாகக் கொண்ட இந்த டிவி, கடந்த மார்ச் 26-ம் தேதி தனது ஒளிபரப்பைத் தொடங்கியது. இலவசமாகக் கிடைக்கும் சேனல்களையும்கூட நாம் விரும்பி, தேர்வு செய்தால்தான் பார்க்க முடியும் என்ற நிலையில், நமோ டிவியை வலுக்கட்டாயமாக அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் அளித்தது டிடிஎச் நிறுவனங்கள்.

மோடி அரசின் திட்டங்கள் பற்றிய விளம்பரங்கள், மோடியின் பேச்சுக்கள், நிதி அமைச்சரின் பேட்டிகள், ‘இந்துத்துவ தேசியவாதத்துக்கு ஒத்துப்போகும் பாலிவுட் படங்கள் என இந்த டிவியில் 24 மணி நேர ஒளிபரப்பு இருக்கிறது. மக்களவை தேர்தல் நடந்துகொண்டிருக்கும் வேளையில் டிவி தொடங்கப்பட்ட காலம் குறித்தும், அந்த சேனலின் உரிமையாளர் யார் என்பது குறித்தும், சட்டப்பூர்வமாக அனுமதியுடன் தொடங்கப்பட்ட சேனலா என்பது குறித்தும் சமூக ஊடகங்களில் தொடர் விவாதம் நடந்தது.

பூம்என்ற ஊடகம் இதுகுறித்து தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் இந்த சேனலின் உரிமையாளர் மற்றும் சேனல் துவங்க பெற்ற அனுமதி குறித்து மத்திய தகவல் ஒளிபரப்பு அமைச்சகத்திடம் கேட்டது. அதற்கு மத்திய அரசின் தலைமைச் செயலர் பி. நாகராஜன் மற்றும் தலைமை தகவல் தொடர்பு அலுவலர் ஆகியோர் விளக்கம் அளித்திருக்கிறார்கள்.

படிக்க:
♦ நாடாளுமன்றத் தேர்தலில் களமிறங்கும் வாட்சப் வதந்திகள்
♦ தேர்தல் ஆணையமே … நடையைக் கட்டு !

அந்த விளக்கத்தில், “நமோ டிவி பதிவு செய்யப்பட்ட சேனல் அல்ல. பல்வேறு டிடிஎச் சேவை நிறுவனங்களால் அவர்களுடைய சந்தாதாரர்களுக்கு வழங்கப்படும் விளம்பரச் சேனலாகும். பாஜக இந்த சேவை தளத்தை பணம் கொடுத்து டிடிஎச் நிறுவனங்களிடம் பெற்றிருக்கிறதுஎன தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், டிடிஎச் தளங்களில் இத்தகைய விளம்பர சேனலை இயக்க, தகவல் ஒளிபரப்பு அமைச்சகத்தின் அனுமதி பெறத் தேவையில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், தேர்தல் சமயத்தில் இத்தகைய சேனலை இயக்க அரசியல் கட்சிகளுக்கு அனுமதி உண்டா என்ற கேள்விக்கு பதிலளிக்க அமைச்சகம் மறுத்துள்ளதோடு, இந்தக் கேள்விக்கான பதிலை தேர்தல் ஆணையம்தான் சொல்ல வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.

முன்னதாக, நமோ டிவியின் உரிமையாளர் மற்றும் அது இயங்குவதற்கான அனுமதி குறித்து பூம் உள்ளிட்ட பல ஊடகங்கள் விவரம் பெற அமைச்சகத்தை அணுகின. ஆனால் அமைச்சகம் அப்போது எந்தவித பதிலையும் அளிக்கவில்லை. கிட்டத்தட்ட தேர்தல் முடியவிருக்கும் நிலையில், நமோ டிவி குறித்த தகவலைச் சொல்லியிருக்கிறது அமைச்சகம்.

நமோ டிவியின் தொடக்கத்தில் அந்தச் சேனலை வழங்கிய டாடா ஸ்கை உள்ளிட்ட டிடிஎச் நிறுவனங்கள், சேனல் குறித்து வெவ்வேறு விளக்கங்களை அளித்தன. ஒவ்வொரு டிடிஎச் நிறுவனமும் தாங்களாகவே இலவச விளம்பர சேனல்களை நடத்துகின்றன. ஒரு கட்சியின் சேனலை ஒளிப்பரப்புவது அந்த வகையில் சேருமா என்பதற்கு இந்த நிறுவனங்களும் பதில் அளிக்கவில்லை. அமைச்சகத்தின் பதிலும் முரண்பாடாகவே உள்ளது.

மோடியிடம் அரசியல் அல்லாத பேட்டிஎடுத்த நடிகர் அக்ஷய் குமார் நடித்த பேட் மேன் மற்றும் டாய்லெட் ஆகிய இரண்டு படங்களை ஒளிபரப்புவதற்கு மட்டும் தேர்தல் ஆணையத்திடம் பாஜக அனுமதி கோரியது. மற்றபடி, மோடியின் தேர்தல் பிரச்சாரங்கள், மோடி அரசின் திட்டங்கள் பற்றிய விளம்பரங்களை ஒளிப்பரப்ப தேர்தல் ஆணையத்திடம் எந்தவித அனுமதியும் கோரப்படவில்லை.

தேர்தல் நடத்தை விதிகளை ஒரு பொருட்டாகவே கருதாத மோடி, அரசின் அனைத்துத் துறைகளையும் தனது தேர்தல் வெற்றிக்காக பயன்படுத்திக்கொண்டிருக்கிறார். இது எப்படி நேர்மையான முறையில் நடக்கும் தேர்தலாக இருக்க முடியும்?

கலைமதி

செய்தி ஆதாரம்: ஸ்க்ரால்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க