மகாராஷ்டிரா தேர்தல் தேதி: எஜமானின் உத்தரவுக்காக காத்திருக்கும் தேர்தல் ஆணையம்!

மொத்தத்தில் தோல்வி பயம் தலைக்கேறியுள்ள பாசிசக் கும்பல் பண-அதிகார பலத்தின் மூலம் தேர்தலை சந்திக்கவே திட்டமிடுகிறது. அப்போதும் கூட எளிதில் தேர்தலில் வெல்ல முடியாத அளவிற்கு பாசிசக் கும்பலின் தோல்வி முகம் தீவிரமாக உள்ளது

க்டோபர் மாதத்துடன் மகாராஷ்டிர சட்டமன்ற ஆட்சிகாலம் நிறைவடையும் நிலையில் தேர்தலுக்கான தேதியை அறிவிக்காமல் இந்திய தேர்தல் ஆணையம் தள்ளிவைத்துள்ளது. இதற்கு என்ன காரணம்?

ஆகஸ்ட் 16 அன்று ஜம்மு&காஷ்மீர் மற்றும் ஹரியானா மாநில சட்டமன்றத் தேர்தலுக்கான தேதியை அறிவித்த இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், ஜம்மு காஷ்மீருக்கு பாதுகாப்பு படைகளை அனுப்ப வேண்டியிருப்பதால் ஒரே நேரத்தில் மகாராஷ்டிரா தேர்தலையும் நடத்த முடியாது என்று தெரிவித்தார். மேலும், பருவமழை காரணமாக மகாராஷ்டிரா வாக்காளர் பட்டியலை புதுப்பிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும் பித்ரு பக்ஷா, தீபாவளி மற்றும் கணேஷ் சதுர்த்தி உள்ளிட்ட கலாச்சார-மத நிகழ்வுகள் வரவுள்ளதாலும் தேர்தல் ஒத்திவைக்கப்படுகிறது என மொன்னையான காரணங்களை அடுக்கினார்.

படிக்க : அசாம்: பெங்காலி முஸ்லீம்களைக் குறிவைக்கும் காவிக் குண்டர்கள்

இதற்கு கண்டனம் தெரிவித்த சிவசேனா (உத்தவ்) கட்சியின் தலைவரான ஆதித்யா தாக்கரே, மகாராஷ்டிராவில் தேர்தலை நடத்த அவர்களின் முதலாளி இன்னும் அனுமதி வழங்கவில்லை என்று நினைக்கிறேன் என்றார். மேலும், “பா.ஜ.க-வின் இந்த சட்டவிரோத மற்றும் அரசியலமைப்பிற்கு விரோதமான ஆட்சி தொடர்வதற்கு தார்மீக உரிமை இல்லை. மாநிலம் அவர்களை ஒருமுறை நிராகரித்துவிட்டது, மீண்டும் நிராகரிக்கும். நமது மாநிலத்தை கொள்ளையடிக்க அவர்களின்  ஒப்பந்தக்காரர்களை அனுமதிக்க தேர்தல் ஆணையம் அவர்களுக்கு மூச்சு விடுவதற்கான அவகாசமளிப்பது போல் தெரிகிறது” என்றும் தெரிவித்தார்.

கடந்த 2019-ஆம் மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு உத்தவ் தாக்கரே தலைமையில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் ஆகிய கட்சிகள் இணைந்து கூட்டணி அமைத்து ஆட்சியமைத்தன. ஆனால், பாசிச பா.ஜ.க. ஏக்நாத் ஷிண்டே மூலம் குதிரை பேரம் நடத்தி சிவசேனா கட்சியை உடைத்து ஆட்சியைக் கைப்பற்றியது. இந்நிலையில், ஏக்நாத் ஷிண்டே மூலம் பொம்மை ஆட்சி நடத்திவந்த பா.ஜ.க-விற்கு 2024 நாடாளுமன்றத் தேர்தலில் மகாரஷ்டிராவில் பெரும் பின்னடைவை சந்தித்தது. ஆட்சியைக் கைப்பற்றுவதற்கு பா.ஜ.க செய்த அடியறுப்பு வேலை தற்போது, பா.ஜ.க-விற்கே பெரிய நெருக்கடியாக மாறியுள்ளது. மேலும், இனியும் மோடி அலை மற்றும் இந்துத்துவத்தை வைத்து மட்டுமே தேர்தலில் வெல்ல முடியாது என்பதை உணர்ந்துள்ள  பாசிசக் கும்பல் பல்வேறு கவர்ச்சிவாதத் திட்டங்களை தேர்தல் நடைபெறக்கூடிய மகாராஷ்டிரா, ஹரியானா மாநிலங்களில் அறிவித்து வருகிறது.

நடந்துமுடிந்த, நாடாளுமன்றத் தேர்தலில் மத்தியப்பிரதேசத்தில் பெண்கள் வாக்குகளை கவர முக்கிய காரணியாக இருந்த குடும்பப் பெண்களுக்கு மாதம் ரூ.1,500 உதவித்தொகை, இளைஞர்களுக்கு வேலைப் பயிற்சி மற்றும் உதவித்தொகை போன்ற கவர்ச்சிவாதத் திட்டங்களை ஆகஸ்ட் மாதம் முதலாக மகாராஷ்டிராவிலும் பா.ஜ.க. அமல்படுத்தி வருகிறது. ஆனால், இத்திட்டங்கள் மூலம் மக்கள் வாக்குகளை அறுவடைய செய்ய குறிப்பிட்ட காலம் எடுக்கும் என்பதே மகாராஷ்டிர தேர்தலை தள்ளிவைக்கப்படுவதற்கு முக்கிய காரணம். சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க-விற்கு வாக்களிக்கவில்லை என்றால் ரூ.1,500 பணத்தை திரும்பப் பெற்றுவிடுவோம் பெண்களை பா.ஜ.க. எம்.எல்.ஏ. ரவி ராணா மிரட்டியதே இதற்கு சான்று.

மேலும், தேர்தல் தள்ளிவைக்கபடுவதற்கு ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. முரண்பாடும் முக்கிய காரணம் என்கின்றனர் பத்திரிகையாளர்கள். நாடாளுமன்றத் தேர்தலில் பல மாநிலங்களில் ஆர்.எஸ்.எஸ். அடிமட்டத்தில் வேலை செய்யாதது பா.ஜ.க-விற்கு இழப்பை ஏற்படுத்தியது. எனவே, இத்தேர்தலில் ஆர்.எஸ்.எஸ். வேலை செய்ய வேண்டுமெனில்,  ஆர்.எஸ்.எஸ். முன்வைக்கும் கோரிக்கைகளை பா.ஜ.க ஏற்க வேண்டும் என ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. கும்பலுக்குள் பேரம் நடந்து வருவதாகவும் இதுகுறித்து செப்டம்பர் மாதம் பாலக்காட்டில் நடைபெறவுள்ள ரகசியக் கூட்டத்தில் முடிவெடுக்க இருப்பதாகவும் அதன் பிறகே மகாராஷ்டிரா தேர்தல் குறித்த அறிவிப்புகள் வெளியாகும் என்றும் தெரிவிக்கின்றனர்.

படிக்க : வ.உ.சிதம்பரனாரும் மன்னிப்புக் கடித மாமேதை சாவர்க்கர் வாரிசுகளும் | மீள்பதிவு

மேலும், மகாராஷ்டிராவில் ஏக்நாத் ஷிண்டே, அஜித் பவார், தேவேந்திர பட்னாவிச் இடையில் அதிகாரப் போட்டியும் உட்கட்சி பூசலும் தீவிரமாக உள்ளதால் முதலமைச்சர் வேட்பாளரை அறிவிக்காமல் மோடியை முன்னிறுத்தியே மகாராஷ்டிர பா.ஜ.க. தேர்தலை சந்திக்க உள்ளதால் ஒரே நேரத்தில் பல மாநிலத் தேர்தல்களை சந்திக்க பா.ஜ.க. கும்பலால் சமாளிக்க முடியாது. எனவேதான், நாடாளுமன்றத் தேர்தலின்போது செய்ததை போலவே தேர்தல் ஆணையத்தின் மூலம் தங்களுக்கு சாதகமான தேதிகளில் தேர்தலை நடத்துகிறது.

இதனைதான் “தேவையான அனைத்து ஏற்பாடுகளும் திறம்பட முடிக்கப்படுவதை உறுதிசெய்த பின்னர் தேர்தல் நடத்தப்படும்” என்று ராஜீவ் குமார் குறிப்பிடுகிறார். மொத்தத்தில் தோல்வி பயம் தலைக்கேறியுள்ள பாசிசக் கும்பல் பண-அதிகார பலத்தின் மூலம் தேர்தலை சந்திக்கவே திட்டமிடுகிறது. அப்போதும் கூட எளிதில் தேர்தலில் வெல்ல முடியாத அளவிற்கு பாசிசக் கும்பலின் தோல்வி முகம் தீவிரமாக உள்ளது. இதன் காரணமாகவே அடுத்தது ஹரியானா தேர்தலையும் தள்ளிவைக்குமாறு தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதியுள்ளது, பா.ஜ.க. கும்பல்.

சோஃபியா

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க