கொலீஜிய பரிந்துரைகளை தணிக்கை செய்யும் பாசிச மோடி அரசு!

அரசையும் உளவுத்துறையும் பொறுத்தவரை பா.ஜ.க-வின் மகளிர் அணியான பா.ஜ.க மகிளா மோர்ச்சாவின் தேசிய பொதுச் செயலாளராக இருந்த விக்டோரியா கௌரி அரசியல் சார்பு உடையவர் அல்ல. மோடியை விமர்சனம் செய்த ஜான் சத்யனும் அரசின் கொள்கைகளை கேள்வி எழுப்பிய சுந்தரேசனும் தான் அரசியல் சார்புடையவர்கள்.

0

டந்த ஜனவரி 17-ஆம் தேதி அன்று உச்சநீதிமன்ற கொலீஜியம் வழக்கறிஞர் லெக்‌ஷ்மனா விக்டோரியா கௌரி என்பவரை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்க பரிந்துரை செய்தது. விக்டோரியா கௌரியின் பா.ஜ.க தொடர்பை சுட்டிக்காட்டி தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு வழக்கறிஞர்கள் இந்த பரிந்துரைக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். கிறிஸ்தவ மற்றும் இஸ்லாமிய வெறுப்பு கொண்ட ஒருவரை கொலீஜியம் எவ்வாறு பரிந்துரைத்தது என்று பலரும் கேள்வி எழுப்பியுள்ளனர்.

தற்போது சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக கொலீஜியத்தால் பரிந்துரைக்கப்பட்டுள்ள இந்த விடோரியா கௌரி, செப்டம்பர் 2020 முதல் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் உதவி சொலிசிட்டர் ஜெனரலாக பணியாற்றி வந்தவர். உதவி சொலிசிட்டர் ஜெனரலாக பதவியேற்றதற்கு சுமார் மூன்று மாதங்களுக்கு முன்பாகத்தான் பா.ஜ.க-வின் கட்சி உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் தன்னை விடுவித்துக் கொண்டதாக அவரே கூறியிருக்கிறார்.

2019-ஆம் ஆண்டு ஆகஸ்டில் பா.ஜ.க-வில் இணைந்த விக்டோரியா கௌரி, சுமார் ஒரு வருட காலம் அக்கட்சி உறுப்பினராக இருந்தார். தனது ட்விட்டர் பக்கத்தில் “சௌகிதார் விக்டோரியா கௌரி” என தனது பெயரை வைத்திருந்தார். மேலும் அவர் பா.ஜ.க மகிளா மோர்ச்சாவின் தேசிய பொதுச் செயலாளராகவும் செயல்பட்டுள்ளார். அவரது ட்விட்டர் டைம்லைனில் (timeline) பெரும்பாலும் மோடி மற்றும் அமித் ஷாவின் பதிவுகளின் ரீடுவீட்கள் (retweets) இடம்பெற்றுள்ளன. மாணவப் பருவத்திலேயே அவர் ஆர்.எஸ்.எஸ் சித்தாந்தத்தால் ஈர்க்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

2018-ஆம் ஆண்டில் ஒரு நேர்காணலில் “பச்சை பயங்கரவாதமாக இஸ்லாம் இருப்பதைப் போல, கிறிஸ்தவம் வெள்ளை பயங்கரவாதமாக இருக்கிறது” என்று கௌரி கூறியுள்ளார். மேலும், இந்த இரு சமூகங்களும் “லவ் ஜிஹாதில்” ஈடுபடுவதாகவும் அவர் கூறியிருக்கிறார். முஸ்லீம் ஆண்கள் இந்துப் பெண்களை இஸ்லாத்திற்கு மதம் மாற்றுவதற்காகத் தான் காதலிக்கிறார்கள் என்பது இந்துத்துவா குழுக்களால் பொதுவாகப் பயன்படுத்தப்படும் ஒரு சதிக் கோட்பாடு. மேலும், இந்தியாவின் தேசிய பாதுகாப்பு மற்றும் பொது அமைதிக்கு கிறிஸ்தவம் அச்சுறுத்தல் விடுத்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.


படிக்க: பாசிசத்தைப் பாதுகாக்கும் உச்ச நீதிமன்றம் !


அவரை நீதிபதியாக உயர்த்துவதற்கு ஆட்சேபனை தெரிவித்து 21 சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள், இந்திய குடியரசுத் தலைவர் மற்றும் உச்ச நீதிமன்ற கொலீஜியத்திற்கு பிப்ரவரி 1-அன்று கடிதம் எழுதினர். ஆனால் அதே சமயத்தில், மதுரையை சேர்ந்த 50-ற்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் கௌரிக்கு ஆதரவாக பிப்ரவரி 3-அன்று  குடியரசுத் தலைவருக்கு கடிதம் எழுதிய அவலமும் அரங்கேறியது.

இதற்கிடையில், கௌரியின் நியமனத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால்  உச்சநீதிமன்றம் அம்மனுவை தள்ளுபடி செய்தது. குறிப்பாக நீதிபதி கவாய், “நானே மாணவனாக இருந்தபோது அரசியல் கட்சி தொடர்பில் இருந்திருக்கிறேன். ஆனால், நீதி வழங்கும்போது சார்பு இருக்கக் கூடாது” என்று தனது கருத்தை பதிவு செய்தார். இதைத்தொடர்ந்து பிப்ரவரி 7-அன்று விக்டோரியா கௌரி சென்னை உயர் நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதியாகப் பதவியேற்றுக் கொண்டார்.

முதலில், உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமனம் செய்யப்பட உள்ளவர்களின் பெயர்கள், அந்த உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியால் அந்நீதிமன்றத்தின் இரண்டு மூத்த நீதிபதிகளுடன் கலந்தாலோசித்த பிறகு  பரிந்துரைக்கப்படும். அந்தப் பெயர்கள் மாநில முதல்வர் மற்றும் கவர்னருக்கு அனுப்பி வைக்கப்படும். பின்னர், அந்தப் பெயர்களையும் முதலமைச்சரின் கருத்துக்களையும் மத்திய சட்ட அமைச்சகத்திற்கு ஆளுநர் அனுப்பி வைப்பார். உளவுத்துறையை (Intelligence Bureau) பயன்படுத்தி அவர்களின் பின்னணி சரிபார்க்கப்படும். சட்ட அமைச்சகம் இந்தத் தகவலை இந்தியாவின் தலைமை நீதிபதிக்கு அனுப்பி வைக்கும். அவர் உச்ச நீதிமன்றத்தில் உள்ள இரண்டு மூத்த நீதிபதிகளைக் கலந்தாலோசித்து பரிந்துரையை முடிவு செய்வார். இவ்வாறு தான் கௌரியின் பரிந்துரையும் முடிவு செய்யப்பட்டது.

ஆனால் இவர்களில் யார் கண்களுக்குமே விக்டோரியா கௌரி ஆர்.எஸ்.எஸ்-பாஜக தொடர்பு கொண்டவர் என்பது புலப்படவில்லை போலும்! தற்போது உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ள அவர் அடுத்த 13 ஆண்டுகளுக்கு நீதிபதியாக பதவி வகிப்பார். உச்ச நீதிமன்ற நீதிபதியாக உயர்த்தப்படுவதற்கும் வாய்ப்புகள் உள்ளன.

சில மாதங்களுக்கு முன்பு கொலிஜியத்தால் பரிந்துரை செய்யப்பட்ட வழக்கறிஞர்கள் சவுரப் கிர்பால், ஜான் சத்யன் மற்றும் சோமசேகரன் சுந்தரேசன் ஆகிய மூன்று உயர் நீதிமன்ற நியமனங்களை மத்திய அரசு திருப்பி அனுப்பியது. அதற்கான காரணத்தை ஜனவரி 19, 2023 அன்று கொலிஜியம் வெளியிட்டது.

அதில், சவுரப் கிர்பால் ஒரு ஓரினச்சேர்க்கையாளர் மற்றும் அவரது துணை சுவிஸ் நாட்டைச் சேர்ந்தவர் என்று காரணம் கூறி அவரின் நியமனத்தை அரசு திருப்பி அனுப்பியுள்ளது.

பிப்ரவரி 16, 2022 அன்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாகப் பரிந்துரைக்கப்பட்டார் ஜான் சத்யன். அவர் பிரதமர் நரேந்திர மோடியை விமர்சித்து இரண்டு சமூக ஊடகப் பதிவுகளை வெளியிட்டுள்ளதாக உளவுத்துறை அறிக்கை சமர்ப்பித்துள்ளது. இதனை அடுத்து ஜான் சத்தியனின் நியமனமும் திருப்பி அனுப்பப்பட்டது.

ஒரு பதிவில், சத்யன் மோடியை விமர்சித்து தி குவின்ட்-இல் (The Quint) வெளியான ஒரு கட்டுரையைப் பகிர்ந்துள்ளார். இன்னொரு பதிவு, 2017-ல் நீட் (NEET) தேர்வில் தோல்வியடைந்ததால் தற்கொலை செய்துகொண்ட மாணவி அனிதாவைப் பற்றியது. அந்தப் பதிவில் “அரசியல் துரோகத்தால் செய்யப்பட்ட கொலை” என்று குறிப்பிட்டு இருந்ததாகவும் “தேசத்தின் அவமானம்” (shame of you India) என்ற டேக்-ஐ (tag) கொண்டிருந்ததாகவும் உளவுத்துறை கூறியது.


படிக்க: ஜம்மு காஷ்மீர் உயர்நீதிமன்ற நீதிபதிகள் பற்றாக்குறை | வழக்குகள் தேக்கம் !


பம்பாய் உயர் நீதிமன்றத்திற்கு பரிந்துரைக்கப்பட்ட சுந்தரேசன் அரசின் முக்கியமான கொள்கைகள், முன்முயற்சிகள், நீதிமன்றத்தின் பரிசீலனையில் உள்ள பல விடயங்கள் குறித்து சமூக ஊடகங்களில் கருத்து கூறியிருப்பதால் அவர் ஒருபக்க சார்புடையவர் என்ற அடிப்படையில் அவரின் பரிந்துரையை திருப்பி அனுப்பியுள்ளதாக அரசு கூறியிருக்கிறது.

அரசையும் உளவுத்துறையும் பொறுத்தவரை பா.ஜ.க-வின் மகளிர் அணியான பா.ஜ.க மகிளா மோர்ச்சாவின் தேசிய பொதுச் செயலாளராக இருந்த விக்டோரியா கௌரி அரசியல் சார்பு உடையவர் அல்ல. வழக்கறிஞர்களாக இருந்தபோது, மோடியை விமர்சனம் செய்த ஜான் சத்யனும் அரசின் கொள்கைகளை கேள்வி எழுப்பிய சுந்தரேசனும் தான் அரசியல் சார்புடையவர்களாக பாசிச மோடி அரசின் கண்களுக்குத் தெரிகிறார்கள். எதிர் குரல்களை விரும்பாதது தான் இந்துராஷ்டிர நீதி என்பதற்கு இது ஒரு துலக்கமான சான்று.

பொம்மி

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க