கடந்த ஆகஸ்ட் 5 அன்று மத்திய அரசு ஜம்மு காஷ்மீரை மொத்தமாக முடக்கியது முதல் இதுவரை சுமார் 250 ஆட்கொணர்வு மனுக்கள் பெறப்பட்டிருக்கின்றன. ஜம்மு காஷ்மீர் உயர்நீதிமன்றத்தில் போதுமான நீதிபதிகள் இல்லாத காரணத்தால் வழக்குகள் கிடப்பில் போடப்பட்டிருக்கின்றன.
மொத்தம் 17 நீதிபதிகள் இருக்க வேண்டிய ஜம்மு – காஷ்மீர் உயர்நீதிமன்றத்தில் தற்போது வெறும் 9 நீதிபதிகளே உள்ளனர். காலியான நீதிபதிகளுக்கான இடத்தில் நிரப்ப 7 நீதிபதிகளின் பெயர்களை ஜம்மு காஷ்மீர் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கீதா மிட்டல் இந்த ஆண்டில் இரண்டு வெவ்வேறு தருணங்களில் பரிந்துரை செய்திருக்கிறார். ஆனால் உச்சநீதிமன்ற கொலீஜியம் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இருக்கும் 9 நீதிபதிகளிலும் 2 நீதிபதிகள் மட்டுமே ஆட்கொணர்வு மனுவை விசாரிக்க நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்குப் பின்னர் எந்த நீதிபதியுமே அங்கு நியமிக்கப்படவில்லை. அச்சமயத்தில் இரண்டு நீதிபதிகள் புதியதாக நியமிக்கப்பட்டனர். அவர்களோடு மூன்றாவதாக கூடுதல் அட்வகேட் ஜெனரல் வாசிம் சாதிக் நக்ரல் கொலீஜியத்தால் நீதிபதியாக பரிந்துரைக்கப்பட்டார். ஆனால் அவரது பெயரை மறுபரிசீலனை செய்யுமாறு மத்திய அரசு பதில் அனுப்பியது. கடந்த 2019 ஜனவரியில் வாசிம் சாதிக் நக்ரலின் பெயர் பரிந்துரைக்கப்பட்டதை மீண்டும் பரிசீலிக்கக் கோரியது உச்சநீதிமன்றம். ஆனால் இன்றுவரையில் அவர் நியமிக்கப்படவில்லை.
அதே போல கடைசியாக பிற மாநில உயர்நீதிமன்றங்களில் பணி புரியும் நீதிபதிகள் இரண்டு பேர் கடந்த ஆண்டு ஜம்மு காஷ்மீருக்கு பணிமாற்றம் செய்யப்பட்டனர். ஆனால், அதன் பிறகும் இன்றளவும் புதியதாக பணிமாற்றம் பெற்று வேறு யாரும் வரவில்லை.
நீதிபதிகளின் எண்ணிக்கை குறைவாக இருப்பதையொட்டி, காலையில் இரு நீதிபதிகள் கொண்ட ஒரு அமர்வும், ஒரு நீதிபதி கொண்ட இரண்டு அமர்வுகளும் அமைக்கப்பட்டிருக்கின்றன. மதியத்திற்கு மேல், ஒரு நீதிபதி கொண்ட நான்கு அமர்வுகள் அமைக்கப்படுகின்றன.
படிக்க:
♦ ரூ. 4355 கோடி : பஞ்சாப் – மகராஸ்டிரா கூட்டுறவு வங்கி மோசடி !
♦ காஷ்மீரின் சிறப்புரிமை ரத்து : இந்து ராஷ்டிரத்துக்கான முன்னோட்டம் !
மோடி அரசின் ஆகஸ்ட் 5 – தாக்குதலுக்குப் பிறகு காஷ்மீர் பள்ளத்தாக்கில் நூற்றுக்கணக்கானோர் பொதுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டிருக்கின்றனர். மேலும் சிறையில் இடப் பற்றாக்குறை காரணமாக பலரும் வெளி மாநில சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். சுமார் 4000 பேர் வரை போலீசு கொட்டடியில் சிறைவைக்கப்பட்டுள்ளதாக ஸ்க்ரோல் இணையதளம் தெரிவிக்கிறது.
தொலைத் தொடர்பு முடக்கம் மற்றும் பரந்துபட்ட தடுப்புக் காவல் அகியவற்றுக்கு மத்தியில் நீதிமன்றங்கள்தான் தனிநபர்கள் உதவிபெறத் தக்க கடைசிப் புகலிடமாக இருந்தது.
கடந்த ஆகஸ்ட் 5 முதல் ஆகஸ்ட் 26 வரையில் வெறும் 288 வழக்குகளே விசாரிக்கப்பட்டன. அதிலும் தற்போதைய முடக்கம் காரணமாக, 256 வழக்குகளில் மனுதாரர்கள் வரவில்லை. 235 வழக்குகளில் எதிராளிகள் வரவில்லை. இதுதான் காஷ்மீரின் இன்றைய நிலைமை.
இது போன்று, நீதிபதிகளை நியமிக்காமல் நீதித்துறையை முடக்குவது, காஷ்மீர் மக்களை தொடர்ச்சியாக கைது சிறை அச்சத்தின் மூலம் முடக்கி வைத்து அடிபணியச் செய்துவிட முடியும் என நினைத்துக் கொண்டிருக்கிறது மோடி அரசு. காஷ்மீரை அழுத்த அழுத்த அது கொந்தளித்துக் கொண்டிருக்கிறது என்பதுதான் கள யதார்த்தம் ! அந்த வெடிப்பிலிருந்து மோடியோ அமித்ஷாவோ என்றும் தப்ப முடியாது !
நந்தன்
நன்றி : தி வயர்