ரூ. 4355 கோடி : பஞ்சாப் – மகராஸ்டிரா கூட்டுறவு வங்கி மோசடி !

வாராக்கடனை கணக்கில் காட்டாமல் மறைத்தது மட்டுமல்லாமல், திவால் நோட்டீசு கொடுத்த அந்நிறுவனத்திற்கு மீண்டும் ரூ.96 கோடி கடனளித்ததுதான் சம்பவத்தின் உச்சகட்டமே !

0

பாரத ஸ்டேட் வங்கி உள்ளிட்ட பொதுத்துறை வங்கிகளை விஜய் மல்லையா மொட்டையடித்துச் சென்ற பின்னரும் பொதுத்துறை வங்கிகளை கார்ப்பரேட் கொள்ளையர்கள் மொட்டையடித்துச் செல்லும் நிகழ்ச்சிப் போக்கு மெகுல் சோக்சி, நீரவ் மோடி என இந்தியாவில் தொடர்ந்து நடந்துகொண்டுதான் இருக்கிறது. அந்த வரிசையில் தற்போது இணைந்திருப்பது பஞ்சாப் – மகாராஸ்டிரா கூட்டுறவு வங்கி மோசடி.

வங்கி நிர்வாக இயக்குனர் ஜாய் தாமஸ்

பி.எம்.சி (Punjab Maharashtra Co-operative bank) வங்கி என்று அழைக்கப்படும் பஞ்சாப் மகாராஸ்டிரா கூட்டுறவு வங்கி, இந்தியாவின் முதல் பத்து பெரிய கூட்டுறவு வங்கிகளில் ஒன்றாகும். இதன் தலைவராக வார்யம் சிங் என்பவரும், நிர்வாக இயக்குனராக ஜாய் தாமஸ் என்பவரும் செயல்பட்டு வந்தனர்.

இந்த வங்கி கடந்த 7 ஆண்டுகளாக எச்.டி.ஐ.எல் என்ற தனியார் நிறுவனத்திற்கு கடன் கொடுத்து வந்திருக்கிறது. அந்நிறுவனத்திற்குக் கடன் அளித்தது பிரச்சினை அல்ல. அளித்த கடனில் வாராக் கடனாக இருந்த கடன் கணக்கை ஒவ்வொரு ஆண்டும் ரிசர்வ் வங்கிக்கு கொடுக்கும் ஆண்டறிக்கையில் இருந்து மறைத்திருக்கிறது பி.எம்.சி வங்கி தலைமை நிர்வாகம்.

ஏனெனில் வாராக்கடன் பட்டியலில் வந்துவிட்டால் எச்.டி.ஐ.எல் நிறுவனத்திற்கு மேலும் கடன் அளிக்க முடியாது என்பதாலேயே இத்தகைய மோசடியைச் செய்திருக்கிறது. அப்படி மொத்தமாக மறைக்கப்பட்ட வாராக்கடன் தொகை ரூ. 4355 கோடி.

இதுவே பரவாயில்லை என்று சொல்லும் அளவிற்கு மற்றுமொரு காரியத்தைச் செய்திருக்கிறது பி.எம்.சி வங்கித் தலைமை நிர்வாகம். எச்.டி.ஐ.எல் நிறுவனம் திவால் நோட்டீஸ் கொடுத்த பின்னரும், அந்நிறுவனத்திற்கு ரூ.96 கோடி கடன் வழங்கியிருக்கிறது. திவாலானவனிடம் பழைய கடனை வசூலிக்காமல், புதிய கடன் கொடுக்கும் ‘மன தைரியம்’ இந்திய வங்கியாளர்களுக்கு மட்டுமே உண்டு.

படிக்க:
♦ உச்சநீதி மன்றம் : வங்கி மோசடியாளர்களின் காவலாளி !
♦ அமித்ஷாவின் கூட்டுறவு வங்கி மோசடி செய்தியை மறைத்த ஊடகங்கள் !

கடந்த மாதம் ரிசர்வ் வங்கி இதனைக் ‘கண்டுபிடித்த’ பின்னர், இது குறித்து விளக்கமளிக்க பி.எம்.சி வங்கியின் தலைவருக்கும் நிர்வாக இயக்குனருக்கும் நோட்டீஸ் அனுப்பியது. இந்தப் பரபரப்பு தொடங்கியதும் பி.எம்.சி வங்கி வாடிக்கையாளர்கள் வங்கி வாசலில் படையெடுக்கத் தொடங்கினர். போட்ட பணமெல்லாம் அப்படியே போய்விட்டால் என்ன செய்வது ? பணத்தை எடுக்க கூட்டம் அலைமோதியதைத் தொடர்ந்து, இவ்விவகாரம் பெரிய அளவில் பேசப்பட்டது.

பணத்தைப் போட்டுவிட்டு வீதியில் காத்திருக்கும் மக்கள்

ரிசர்வ் வங்கி மொத்த பணமும் வெளியில் எடுக்கப்படுவதைத் தவிர்க்க ஒரு வாடிக்கையாளர் அதிகபட்சம் ரூ. 1000 தான் எடுக்க முடியும் எனக் கட்டுப்பாடு விதித்தது. இதற்கு கடும் அதிருப்தி வாடிக்கையாளர்களிடம் இருந்து வரவே கடந்த மாத இறுதியில் பண எடுக்கும் வரம்பை ரூ.10,000-ஆக உயர்த்தியது.

படிக்க:
♦ விவசாயிகளிடம் ரூ. 15,000 கோடி ஜி.எஸ்.டி பிடுங்கிய மோடி அரசு !
♦ சிந்து சமவெளி நாகரிகத்தின் தொடர்ச்சிதான் கீழடி நாகரிகம் !

இந்த மோசடி தொடர்பாக, பி.எம்.சி வங்கித் தலைவர் வர்யம் சிங், நிர்வாக இயக்குமர் ஜாய் தாமஸ், மற்றும் ஒரு மூத்த அதிகாரி ஆகியோர் மீதும், எச்.டி.ஐ.எல் நிறுவனத்தின் நிறுவனர்களான சரங் வதாவன் மற்றும் ராகேஷ் குமார் ஆகியோர் மீது போலீசு வழக்குப் பதிவு செய்துள்ளது.

இந்நிலையில் கைது செய்யப்பட்ட இவ்வங்கியின் நிர்வாக இயக்குனர் ஜாய் தாமஸ், எச்.டி.ஐ.எல் நிறுவனத்துக்கு கொடுக்கப்பட்ட கடனைத் தாம் ஆண்டறிக்கையில் இருந்து மறைத்ததையும், திவாலான பின்னும் அந்நிறுவனத்துக்கு கடன் அளித்ததையும் ஒத்துக் கொண்டார்.

எச்.டி.ஐ.எல் நிறுவனத்திடம் ‘கோப்பை’ வாங்கும் வர்யம் சிங்

மேலும், இந்த வங்கியின் தலைவர் வர்யம் சிங்குக்கும் மோசடி செய்த  எச்.டி.ஐ.எல் நிறுவனத்திற்கும் இடையிலான தொடர்பு சமீபத்தில்தான் வெளிவந்திருக்கிறது. கடந்த டிசம்பர் 2017 நிலவரப்படி எச்.டி.ஐ.எல் நிறுவனத்தின் 2% பங்குகளை வர்யம் சிங் வாங்கி வைத்திருந்தார். இந்த வங்கியின் தலைவராக பதவியமர்வதற்கு முன்னர், கடந்த 2005-ம் ஆண்டில் இருந்து 2015-ம் ஆண்டு வரை HDIL நிறுவனத்தின் தலைமைக் குழுவில் அங்கம் வகித்தவர்தான் இந்த வர்யம் சிங். அங்கிருந்து பதவி விலகிதான் பி.எம்.சி வங்கியின் தலைவராக பணியாற்றத் தொடங்கினார். வர்யம் சிங்கை தலைவர் பதவியில் இருந்து நீக்குமாறு கடந்த 2018-ம் ஆண்டு மாநில கூட்டுறவு வங்கிக் கட்டுப்பாட்டு அதிகாரிக்கு பரிந்துரை செய்தது ரிசர்வ் வங்கி. ஆனாலும் அதனை மீறி பதவியில் நீடித்திருக்கிறார் எனில், வர்யம் சிங்கின் செல்வாக்கை நாம் புரிந்து கொள்ள முடியும்.

HDIL நிறுவனத்தை நடத்திவரும் வாதவன் குடும்பத்தினர் நடத்தும் பல்வேறு நிறுவனங்களிலும் இவர் பங்குதாரராக இருந்திருக்கிறார். மேலும், அந்நிறுவனத்தின் செயல்பாடற்ற இயக்குனராகவும் (Non Executive Director) இருந்திருக்கிறார்.

ஒரு அரசு கூட்டுறவு வங்கியில் தலைமைப் பதவியில் இருக்கும் போது, மற்றொரு நிறுவனத்தில் பங்குதாரராகவோ அல்லது நேரடி – மறைமுக உரிமையாளர்களாகவோ இருந்தால் அந்த நிறுவனத்துக்கு கடன் வழங்கக் கூடாது என்ற அடிப்படையைக் கூட கண்காணிக்காமல் 7 ஆண்டுகளைக் கடத்தியிருக்கிறது ரிசர்வ் வங்கி.

பொதுத்துறை வங்கிகளும், கூட்டுறவு வங்கிகளும் நமது சேமிப்பைத் திருடி தனியார் மோசடி கும்பல்களுக்கு நம் கண் முன்னேயே அள்ளிக் கொடுக்கின்றன. நமது வங்கிக் கணக்கில் கைவைக்காதது வரை நமக்குப் பிரச்சினை இல்லை என்று நினைப்பது, “கூரைதானே பற்றியெறிகிறது.. நாம் தரையில்தானே படுத்திருக்கிறோம்” என எண்ணுவதற்குச் சமம் !

அப்படித்தான் வீற்றிருக்கப் போகிறோமா ?


நந்தன்
செய்தி ஆதாரம்: தி வயர்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க