ந்துத்துவ சக்திகளின் கைகளில் ஆட்சியதிகாரம் சிக்கியுள்ள இன்றைய நிலையில் இந்திய வரலாற்றையே உலுக்கி திருத்த வல்லமை கொண்ட இரண்டு ஆய்வுகள் மிக சமீபத்தில் நடந்தேறியுள்ளன. ஒன்று ராக்கிகர்கி மரபணு ஆய்வு மற்றொன்று கீழடி தொல்லியல் ஆய்வு. ஒன்று சிந்து சமவெளி நாகரிகத்திற்கு பின்னரே சமஸ்கிருதத்தை சுமந்துகொண்டு ஆரியர்கள் துணைக் கண்டத்திற்கு வந்தார்கள் என்பதை உறுதி செய்துள்ளது. மற்றொன்று சிந்து சமவெளி நாகரிகத்தின் வீழ்ச்சியைத் தொடர்ந்து கங்கை சமவெளியில் இரண்டாம் கட்ட நகர குடியேற்றம் நடந்த அதே காலகட்டத்தில் தமிழகத்திலும் அதே போன்றதான குடியேற்றம் நடந்தேறியுள்ளது என்றும் சிந்து சமவெளி குறியீட்டிற்கும் தமிழிக்கும் (தமிழ் பிராமி என்று தற்போது அழைக்கப்படுகிறது) உள்ள உறவை உறுதி செய்யும் பானை கீறல்களையும் கண்டறிந்துள்ளது.

கீழடி அகழாய்வு மையத்தில் கி.மு 580-ம் ஆண்டைச் சேர்ந்த பானை உள்ளிட்ட தொல்பொருள்கள் தமிழக தொல்பொருள் அகழ்வாராய்ச்சி குழுவினால் சமீபத்தில் கண்டெடுக்கப்பட்டிருக்கின்றன. அப்பானைகளில் உள்ள “கிராஃபிட்டி” குறியீடுகள் அல்லது கீறல்கள் சிந்து சமவெளி நாகரிக எழுத்து வடிவங்களின் தொடர்ச்சியை சுட்டிக்காட்டுவதாக அகழாய்வு குழுவின் சமீபத்திய அறிக்கை கூறுகிறது.

mohenjo-daro-Indus-Valley-Civilization

சிந்து சமவெளி எழுத்துக்கள் கி.மு 5,000 முதல் கி.மு 1,500 வரை அம்மக்களால் பயன்படுத்தப்பட்டது. சிந்து சமவெளி நாகரிகம் வீழ்ச்சியடையத் தொடங்கிய காலத்தில்தான் ஸ்டெப்பி புல்வெளியில் இருந்து ஆரியர்கள் இந்திய துணைக்கண்டத்திற்கு வந்ததை மரபணு ஆராய்ச்சி உறுதி செய்துள்ளது.

கீழடி அகழாய்வு அறிக்கைக்கு ஒரு அரசியல் முக்கியத்துவம் உள்ளது. சிந்து சமவெளி நாகரிக மக்கள்தான் தமிழர்களின் மூதாதையர்கள் என்றும் சிந்து சமவெளி மக்கள் பேசியது ஒரு திராவிட மொழி என்றும் நீண்ட நாட்களாகவே திராவிட அரசியல்வாதிகள் கூறி வருகின்றனர். மொழியியல் நோக்கில் ஆய்வாளர்கள் இதை உறுதிப்படுத்தியுள்ளனர். 1964-ல் இரசியாவையும் ஃபின்லாந்தையும் சேர்ந்த ஆய்வாளர்கள் தனித்தனியாக ஆய்வு செய்து சிந்து சமவெளி எழுத்து வடிவம் திராவிட எழுத்துதான் என்பதை நிறுவினர். பின்னர் சிந்து சமவெளி எழுத்து வடிவத்தின் முன்னனி ஆய்வாளரான அஸ்கோ பர்போலா சிந்து சமவெளி எழுத்து வடிவத்தை திராவிட எழுத்து வடிவத்துடன் ஒப்பிட்டு பிரபலமான கருதுகோளை முன்வைத்தார்.

ஆனால் இதை உறுதிப்படுத்த இது மட்டுமே போதாது. ஏனெனில் சிந்து சமவெளி நாகரிகம் ஒரு நகர நாகரிகம். தமிழ் நாகரிகத்திற்கும் அதற்குமான தொடர்ச்சியை உறுதிப்படுத்துவதற்கான தொழில்நுட்ப வசதிகளும் போதுமான தொல்லியல் மற்றும் மரபணு சான்றுகள் அதுவரை கிடைக்காமலிருந்தன. முன்னதாக அரிக்கமேட்டில் 1947-லும், காவேரிப்பூம்பட்டினத்தில் 1965-லும், ஆதிச்சநல்லூரில் 2005-லும் நடந்த மூன்று அகழாய்வுகளில் ஒன்றுக்கூட நகர்புற குடியேற்றத்திற்கான உறுதியான சான்றுகள் எதையும் வழங்கவில்லை.

படிக்க:
கேள்வி பதில் : கீழடி ஆய்வுகள் காட்டுவது என்ன ?
♦ சிந்துச் சமவெளி நாகரிகம் வேத நாகரிகம் அல்ல – மரபணு ஆய்வு முடிவுகள் !

ஆனால் 2015-ம் ஆண்டில் கீழடியில் தொடங்கப்பட்ட அகழ்வாராய்ச்சி சிந்து சமவெளி மற்றும் கங்கை பகுதி நகர்ப்புற குடியேற்றம் போலவே தமிழகத்திலும் நடந்ததற்கான ஏராளமான சான்றுகளை தன்னுள்ளே புதைத்திருக்கிறது.

“மறைந்து போன சிந்து சமவெளி குறியீடுகளுக்கும் பிராமி எழுத்து வடிவங்களுக்கும் இடைப்பட்ட எழுத்து வடிவத்தை கீறல்கள் (கிராஃபிட்டி) என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இந்த கீறல்கள் சிந்து சமவெளி எழுத்து வடிவத்திலிருந்து தோன்றிய பிராமி எழுத்து வடிவங்களுக்கு இணைப்பு சங்கிலியாக இருந்துள்ளது. எனவே இதை வெறும் குறியீடாக கருத முடியாது. சிந்து சமவெளி குறியீடுகளைப் போலவே இவற்றை இன்னும் புரிந்து கொள்ள முடியவில்லை” என்று அந்த அறிக்கை கூறுகிறது.

கீழடி
சிந்து சமவெளி மற்றும் கீழடி எழுத்துக்கள் ஒரு ஒப்பீடு.

முன்னதாக அகழாய்வு செய்யப்பட்ட ஆதிச்சநல்லூர், கொற்கை, ஆலங்குளம், கொடுமணல், கரூர், தேரிருவேலி, உறையூர், மங்குளம், பேரூர் மற்றும் ஏனைய பகுதிகளிலும் இது போன்ற குறியீடுகள் பொறிக்கப்பட்ட பானைகள் கிடைத்துள்ளன. தமிழ்நாட்டைத் தவிர, இந்தியாவின் வேறு சிலப் பகுதிகளிலும், இலங்கையிலும் பனையோட்டு கீறல்கள் கிடைத்துள்ளன. இந்திய துணைக் கண்டத்தில் இதுவரை கிடைத்த பனையோட்டு கீறல்களில் 75 விழுக்காட்டிற்கும் மேல் தமிழ்நாட்டை சேர்ந்தவை என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் பிராமி (அசோக பிராமிக்கு 3 நூற்றாண்டுகள் முந்தையதால் இதை தமிழி என்றே அழைக்கலாம் என்று தமிழறிஞர்கள் முன் வைக்கின்றனர்) எழுத்துக்களால் பொறிக்கப்பட்ட 56 பானைகள் தமிழ்நாட்டு அகழாய்வு நிறுவனத்தால் கண்டறியப்பட்டதாக அந்த ஆய்வறிக்கை கூறுகிறது. இந்த ஆய்வுகளின் முடிவு தமிழ் எழுத்து வரலாற்றை கிமு ஆறாம் நூற்றாண்டு வரை முன் தள்ளியுள்ளதாக அந்த அறிக்கை கூறுகிறது.

கீழடியில் வாழ்ந்த மக்களுக்கு உயர்ந்த எழுத்தறிவு இருந்ததை அது சுட்டுகிறது. “பானைகளின் மேல் பகுதிகளில் கீறல்கள் பொறிக்கப்பட்டுள்ளன. பொதுவாக பானை ஈரமாக இருக்கும் போதோ அல்லது உலர்ந்த பிறகோ அதில் எழுத்துக்கள் பொறிக்கப்படும். கீழடியில் கண்டறியப்பட்ட பானைகளில் காய்ந்த பிறகே எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளன. எனவே பானையை விலைக்கு வாங்கிய பிறகு உரிமையாளர்களால் அவை பொறிக்கப்பட்டுள்ளன. மேலும் பானைகளில் உள்ள வித விதவிதமான எழுத்து பாணிகள் கிமு ஆறாம் நூற்றாண்டு தமிழ் சமூகத்தின் பரவலான எழுத்தறிவை பறைசாற்றுகிறது” என்று அந்த அறிக்கை மேலும் கூறுகிறது.

படிக்க:
சிறப்புக் கட்டுரை : ஆரியர்கள் வந்தேறிகள்தான் – நிரூபிக்கிறது மரபணுவியல் ஆய்வு !
♦ காஷ்மீரிகளின் நம்பிக்கையும் இந்தியாவின் துரோகமும் !

2018-ல் ஆறு மாதங்கள் அகழாய்வு பணிகள் நடைபெற்றதாக தமிழ்நாட்டு தொல்பொருள் ஆய்வுகளின் மைய ஆணையர் டி. உதய்சந்திரன் கூறினார். 2015-ம் ஆண்டிலிருந்து மூன்று முறை அகழாய்வு செய்த பிறகு இந்திய தொல்பொருள் ஆய்வு மையம் ஆய்வுப்பணியை நிறுத்திவிட்டது.

இந்திய வரலாறு என்பதே வேத கால நாகரிகம் என்று நிறுவ மோடி அரசாங்கம் துடித்துக்கொண்டிருந்த நேரத்தில், அதற்கான எந்தச் சான்றும் கிடைக்காத தருணத்தில், வெந்த புண்ணில் வேலை பாய்ச்சியதை போல 2016-ல் கி.மு 2-ம் நூற்றாண்டைச் சேர்ந்த தொல்பொருள்களை இந்திய தொல்பொருள் ஆய்வு மையம் கண்டறிந்திருந்தது. விளைவு தொல்பொருள் ஆய்வாளர் கே. அமர்நாாத் ராமகிருஷ்ணனை இடமாற்றம் செய்தது. பின்னர் இப்பணியை தமிழக தொல்பொருள் ஆய்வு மையம் எடுத்துக்கொண்டு நான்காம் கட்ட ஆய்வினை முடித்து “கீழடி – தமிழ்ப் பண்பாட்டின் வேர்களைத் தேடி” என்ற தலைப்பில் ஆய்வு நூலையும் வெளியிட்டிருக்கிறது.

இது ஒருபுறமிருக்க கி.மு 2000-ம் ஆண்டில் சிந்து சமவெளி நாகரிகத்தின் வீழ்ச்சிக்குப் பிறகு சிந்து சமவெளி மக்கள் கிழக்கு மற்றும் தெற்கு நோக்கி நகர்ந்திருக்கக் கூடும் என்ற கருதுகோளை சமீபத்தில் செல் மற்றும் சயின்ஸ் அறிவியல் சஞ்சிகைகளில் வெளியிடப்பட்ட மரபணு ஆய்வுகள் உறுதிப்படுத்தியிருக்கின்றன.

தொல்பொருள் ஆய்வில் புதிய வெளிச்சத்தை கொடுத்த அதே நேரத்தில் ஆதித்தமிழர்களின் மரபணு ஆய்வுகளுக்கான கருவினை எலும்புக்கூடாக இன்னமும் கீழடி தன்னுள்ளே புதைத்து வைத்திருக்கும் என்பதை வரலாறு பதிலாகச் சொல்லும்.


சுகுமார்

செய்தி ஆதாரம் :
Did the Indus Valley people settle in Tamil Nadu? Keezhadi excavation could provide crucial evidence
Tamil Nadu: Artefacts dated to 580 BCE hint at script continuity from Indus Valley Civilisation 

3 மறுமொழிகள்

  1. சிந்துவெளி நாகரிகம் மறைவுக்கும் கீழடி கண்டு பிடிப்புக்கும் இடையே 1000 ஆண்டுகளுக்கு மேல் கால இடைவெளி உள்ளது. ஹரப்பாவில் இருந்து வெளியேறி வந்தவர்கள் தான் தமிழர் நாகரிகம் உருவாக்கினார்கள் என்ற கருத்தை எப்படி இணைப்பீர்கள்?

    மொழி ஒற்றுமைக்கான காரணம் இரண்டு மொழிகளும் ஒரு பொது பூர்வீகத்தை மேற்காசியாவை கொண்டு இருப்பதால் தான்! வேறு எதுவும் இல்லை.

  2. ஒரு கரித்துண்டு கிமு 580 ஐ சேர்ந்தது என கரிம பகுப்பாய்வு கூறுகிறது. அதற்காக அங்கே இருக்கும் பானை ஓடுகளும் அதே கால கட்டத்தை சேர்ந்தவை என வாதாடக்கூடாது. அவை பிற்காலத்தில் பயன்படுத்தப்பட்ட பானைகளாக கூட இருக்கலாம். கிமு காலகட்டத்திலிருந்து கிபி பனிரெண்டாம் நூற்றாண்டு வரை கீழடியில் மக்கள் வாழ்ந்ததாக குறிப்பு இருக்கிறது என்பது கவனத்துக்கு உரியது. நேர்மையும் தொழிற்நேர்த்தியும் உள்ள ஆய்வாளர்கள் இதை ஆதாரமாக ஒப்புக் கொள்ள மாட்டார்கள். மிக வலுவான ஆதாரங்கள் தேவை. அதற்கு அகழ்வாராய்ச்சியை ஒழுங்காக பன்னாட்டு ஆய்வாளர்களின் பங்கெடுப்புடன் முன்னெடுக்க வேண்டும். இந்திய துணைக் கண்டத்தில் இருக்கும் அனைத்து மக்களுக்கும் (வடகிழக்கு மாநிலங்கள் தவிர) சிந்து சமவெளி மக்கள் தான் மூதாதையர் என கடந்த மாதம் Cell மற்றும் Science ஆகிய ஆய்வு இதழ்களில் வெளிவந்த ஆராய்ச்சிக் கட்டுரைகள் கூறுகின்றன. வட இந்திய உயர் சாதியினர் (குறிப்பாக உடலமைப்பில் அய்ரோப்பிய தன்மை வாய்ந்த பிராமணர், பூமி கர் ஆகியோரின்) மரபணுவில் கூட குறைந்த பட்சம் எழுபது சதவீதம் சிந்து சமவெளியினரின் மரபணு கூறுகள் தான் உள்ளனவாம். இந்திய துணைக் கண்டத்துக்கு குதிரைகள் மேல் வந்த ஆரியரில் பெரும் எண்ணிக்கையினர் ஆண. இவர்கள் சிந்து சமவெளி பெண்களுடன் இனக்கலப்பு நடத்தியதால் (ஒரு ஆரிய ஆணுக்கு முப்பது, நாற்பது சிந்து வெளிப் பெண்கள் என்னும் விகிதத்தில்) உருவானவர்களே அந்தக் கால வட இந்திய மக்கள் கூட்டம் (குறிப்பாக உயர்சாதியினர்). இது ஒரு அசிங்கமான உண்மை. சிந்து வெளி நாகரிகத்தின் அழிவுக்கு பின்னர் இந்திய துணைக் கண்டத்தில் உருவான எந்த நாகரிகத்திலும் அதன் தாக்கமும் கூறுகளும் உண்டு. பழந்தமிழர் நrகரிகமும் விதிவிலக்கு அல்ல. கீழடியில் கண்டுபிடிக்கப்பட்ட குறியீடுகளில் சில சிந்து வெளி குறியீடுகளோடு ஒத்திருப்பதில் ஒரு ஆச்சரியமும் உள்ளது? கீழடியில் வாழ்ந்தவர்கள் சிந்து சமவெளி மக்களின் நேரடி வாரிசுகளா இல்லையா என்பது தான் முக்கியம். அதுதான் கண்டுபிடிக்கப்பட வேண்டியது. இரண்டாயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த ஒரு மனித எலும்புக்கூடாவது சிதைவடையாத மரபணுவுடன் கீழடியில் கண்டெடுக்கப்பட வேண்டும். அந்த மரபணு Genetic Analysis மூலம் ஹரியானா மாநிலம் ராக்கிகரியில் கண்டெடுக்கப்பட்ட மரபணுவோடு ஒப்பிடப்பட வேண்டும். அப்போது தான் உண்மை என்ன என்பது ஓரளவுக்கேனும் தெரிய வரும். இந்த மரபணு ஒப்பீடு தமிழகத்தில் சாதி பிரச்சினைக்கு வழி வகுக்கக் கூடாது. கீழடியில் வாழ்ந்தவர்கள் தேவேந்திரகுல வேளாளர் என இப்போதே இணையத்தில் சண்டை நடக்கிறது. இந்தக் கட்டுரை உண்மையை தேடும் அறிவியல் நோக்கோடு எழுதப்படாமல் அரசியல் நோக்கத்தை மட்டும் முன்னிறுத்தி எழுதப்பட்டுள்ளதால் தகுதியை இழக்கிறது. சிந்து சமவெளியில் காலத்தால் தமிழ் மொழியை விடவும் பழமையான ஒரு வகையான Proto dravidian மொழி அல்லது Elamite மொழி தான் பேச பட்டிருக்க கூடும் என பல அறிஞர்கள் கருதுகிறார்கள். யாரும் அது தமிழ் மொழி என கூறவில்லை. கமிழ் மொழி மற்றும் கலாச்சாரம் ஆகியவற்றை வைத்து பிழைப்போர் பட்டியலில் கடைசியாக சேர்ந்து இருப்பவர் திரு. பக்கோடாஜி அவர்கள். அதை நினைத்தால் நான் கலக்கமாக உள்ளது.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க