கேள்வி: //கீழடி அகழ்வாய்வுகள் காட்டுவது என்ன? கீழடி சான்றுகள் மூலம், ஆற்றங்கரையில் தங்கி வாழ்ந்த, விவசாயம் சார்ந்த சமூகமாக நகர நாகரீகம் கண்ட சமூகமாக வளர்ந்து உள்ளதை காட்டுகிறது.

மற்றும் அணிகலன்கள், விளையாட்டுப் பொருட்கள் (குறிப்பாக: பகடைக் காய்கள், தாயக்கட்டைகள்) கிடைத்தமையை வைத்து உற்பத்தி சார்ந்த உழைப்பில் இருந்து சிலர் விலகி வாழ்ந்தனர் என புரிந்து கொள்கிறேன்.

எனில், 2300-2600 ஆண்டுகளுக்கு முன் கீழடியில் வாழ்ந்த சமூகத்தின் உற்பத்தி முறை என்ன?

1) முற்றிய நிலையில் உள்ள புராதன பொதுவுடமை சமூக உற்பத்தியா? அங்கே அப்போது தாய்வழிச் சமூகம் தான் நீடித்ததா?

2) அடிமை உற்பத்தி முறையா? அல்லது வேறு ஏதாவதா?

மேலும்..

மத அடையாளங்கள் ஏதும் இதுவரை கிடைக்கவில்லை என்பது பற்றி ஒருபக்கம் மகிழ்ச்சி தான் என்ற போதிலும், இருபத்தைந்து நூற்றாண்டுகளுக்கு முந்தைய மனிதர்கள் அதிலும், எழுதத் தெரிந்த, விளையாடத் தெரிந்த மனிதர்கள் முற்றிலுமாக அறிவியல் அறிவு பெற்று இருப்பார்கள் என நம்ப முடியவில்லை.

இதுவரை ஆய்ந்த இடங்கள் குடியிருப்புகள் மற்றும் தொழிற்கூடங்களாக இருக்க வாய்ப்பு உள்ளது என கூறுகிறார்கள்.

எனில், மக்கள் கூடும் பொது இடங்களில் (மந்தை போன்று) கடவுள் வழிபாடு அல்லது மத அடையாளங்கள் கிடைக்கக் கூடும் எனவும் கருதுகிறேன்.

தொகுப்பாக நீங்கள் விளக்கினால், புரிந்துகொள்ள ஏதுவாக இருக்கும்.

நன்றி.//

– இரணியன்

ன்புள்ள இரணியன்,

கீழடியில் நடந்த நான்காம் கட்ட ஆய்வு குறித்த அறிக்கை தமிழக தொல்லியல் துறையால் வெளியிடப்பட்டிருக்கிறது. கீழடி குறித்த ஆய்வு முழுமை பெற பதினைந்து ஆண்டுகள் தேவைப்படும் என்கிறார் அமர்நாத் ராமகிருஷ்ணன். இந்த ஆய்விற்கு மத்திய அரசு காட்டும் பாராமுகம் ஒருபுறமிருக்க தமிழக தொல்லியல் துறை அளித்த அறிக்கை தமிழகத்தின் ஏடறிந்த வரலாற்றுக் காலத்தை கி.மு ஆறாம் நூற்றாண்டிற்கு முன் தள்ளியிருக்கிறது. கீழடி ஆய்விடங்களில் ஆழ் இடுக்கில் எடுக்கப்படும் கார்பன் வகை மாதிரிகளின் ஆய்வு இந்தக் காலத்தை இன்னும் துல்லியமாகக் தரும்.

சங்க இலக்கியத்தின் படி குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் மற்றும் பாலை ஆகிய திணை வகைகளின் மக்கள் வாழ்க்கையை அறிவோம். முதலில் மலையில் வேடவர் வாழ்க்கை, பின்பு காடு சார்ந்த இடங்களில் கால்நடை வளர்ப்போர் வாழ்க்கை, அதன் பிறகு நிலம் சார்ந்த வேளாண்மை வாழ்க்கை என்று பரிணாம வளர்ச்சியில் மனித சமூகம் சென்றதற்கு இத்திணை வகைகள் ஒரு சான்று. இருப்பினும் ஒரே நேரத்தில் இந்த நான்கு திணைகளிலும் மக்கள் வாழ்க்கை முன்னேறியதும் இருக்கிறது. அவர்களுக்கிடையில் பண்ட மாற்று நடந்ததையும் இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன. அதனால்தான் சங்ககால இலக்கியங்கள் இந்நான்கு திணை வாழ்க்கை பற்றியும் எடுத்துக் கூறுகிறது.

கீழடி ஆய்வறிக்கையை வைத்துப் பார்த்தோமானால் அங்கே வேளாண்மையும், கால்நடை வளர்ப்பும் வைகை நதிக்கரையில் இருந்திருப்பது தெளிவு. தொல்லியல் பொருட்களை வைத்துப் பார்த்தால் அது ஒரு நகர நாகரீகத்திற்கான அடிப்படைகளையும் கொண்டிருக்கிறது. எதிர்கால ஆய்வுகள் இதை துல்லியமாக உறுதிப்படுத்த வாய்ப்பிருக்கிறது.

சங்க காலத்தில் மூவேந்தர் அல்லாத சிற்றரசர்கள், இனக்குழுத் தலைவர்கள் குறித்த பாடல்களை சங்க கால இலக்கியம் கூறுகிறது. அதன்படி புராதான பொதுவுடைமை இனக்குழு சமுதாயம் வளர்ச்சி அடைந்து சமூகம் வர்க்கங்களாய் பிரிந்து குழுக்களுக்கு தலைவன் அல்லது அரசன் தோன்றும் காலமாக பார்க்கலாம்.

கீழடியில் அணிகலன்களும், தாயக்கட்டைகளும் கிடைத்திருப்பதால் அங்கே சிறு அளவிலான உபரி உற்பத்தி இருக்கவும், இனக்குழு வாழ்க்கை முதிர்ச்சியடைந்து அடுத்த கட்ட சமூக மாற்ற நகர்விற்கு மக்கள் செல்லும் காலமாகவும் பார்க்கலாம். சங்ககால இலக்கியங்களின் படி ஐந்திணைகளுக்கும் கடவுள் உண்டு. கீழடியில் கடவுள் குறியீடுகள் கிடைக்கவில்லை என்பதால் அம்மக்கள் ‘பகுத்தறிவுடன்’ வாழ்ந்தார்கள் என்பது அபத்தம். கண்டிப்பாக இயற்கை வழிபாடும், திணைக்கேற்ற கடவுளர்களும் இருப்பார்கள். குறிப்பாக அங்கே மூத்தார் வழிபாடு இருந்திருக்கலாம் என்று ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் கூறுகிறார். எனினும் கங்கைச் சமவெளியில் தோன்றிய பிற்கால வேத நாகரீகம் போன்று கடவுள், புராணம், மந்திரங்களை முதன்மைப்படுத்திய சனாதன தர்மம் போன்று இங்கில்லை என்று வேண்டுமானால் சொல்லலாம்.

கீழடியின் காலத்தில் தாய்வழிச்சமூகம் முதிர்ச்சியடைந்து தந்தை வழிச் சமூகமாக மாறும் காலகட்டமாக இருக்கலாம். அணிகலன்கள், தாயக்கட்டைகளை வைத்துப் பார்க்கும் போது அங்கே சிறு அளவிலான உபரி உற்பத்தி இருப்பதையும், அதை வைத்து சமூகம் எளிய வர்க்கங்களாக பிரிவதையும் அவதானிக்கலாம். ஒரு நதிக்கரை நாகரீகத்தின் வளர்ச்சி அனைத்தையும் கீழடி தொல்லியல் ஆய்வு எடுத்துக் காட்டுகிறது. மேலும் வணிகம் சார்ந்த பொருட்களும் கீழடியில் கிடைத்திருக்கிறது. சமூகம் வர்க்கரீதியாக பிரிய ஆரம்பித்திருப்பதற்கு இதுவும் ஒரு சான்று. வணிக சமூகத்தில் வர்க்கரீதியாக தோன்றும் பிரச்சினைகளுக்கான நீதி உபதேசங்களையும் சங்க கால இலக்கியம் முன்வைக்கிறது.

எது எப்படி இருந்தாலும் பார்ப்பனியத்தின் வேதநாகரிகத்தை மறுத்து பண்டைய தமிழ் திராவிட நாகரிகம் முன்னோக்கிச் செல்வதை பாஜக அரசு ஒரு போதும் விரும்பாது. கீழடியில் இதற்கு மேல் ஆய்வுகள் நடத்தப்படுவதற்கே நாம் போராட வேண்டும்.

 

அதைக் கீழடியில் ஆய்வுப் பணியில் ஈடுபட்டு பணியிடமாற்றத்துக்கு ஆளான அமர்நாத் ராமகிருஷ்ணனின் வார்த்தைகளிலேயே புரிந்து கொள்வோம்.

கீழடி அகழ்வாய்வை இழுத்து மூட மோடி அரசால் இடமாற்றும் செய்யப்பட்ட அமர்நாத் ராமகிருஷ்ணன் பணியிட மாறுதல் பெற்ற சமயத்தில் நக்கீரன் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் இவ்வாறு குறிப்பிடுகிறார் :

“இதுவரை அகழாய்வு பணியில் உள்ள அதிகாரியை பணி நிறைவுபெறாமல் மாற்றுவது என்பது நடைமுறையில் இல்லை. வேண்டுமென்றே என்னை மாற்றியிருக்கிறார்கள். என் தலைமையில் இதுவரை கண்டுபிடித்த ஆவணங்களின் பட்டியலை அனுப்பியிருந்தேன். அப்போது மத்திய அரசிடம் இருந்து ஏன் சாமி சிலைகள் ஏதும் கண்டெடுக்கபடவில்லை என்ற கேட்டனர். அதற்கு நாம் சரியான பதிலை கொடுத்திருந்தோம் “திராவிட நாகரீகம் 2,500 வருடங்களுக்கு முன்னானது  இப்போது உள்ள கடவுள் வணக்கம் அப்போது இல்லை. தமிழர்களிடம்  முன்னோர்கள் வழிபாடு காணப்பட்டதால் தற்போதைய சாமி சிலைகள் இல்லை என்று பதில் அளித்திருந்தேன்” அதன் பின்பு இரண்டு நாட்களில் எனக்கு இடமாறுதல் தபால் வந்தது”.

 ♦ கீழடி : மண்ணிட்டு மூடப் பார்க்கிறது பார்ப்பன பாஜக அரசு

தமிழின் தொன்மையைத் தனது கடும் உழைப்பால், ஆய்வுத் திறத்தால் உலக அரங்குக்கு எடுத்துச்சென்றவர் ஐராவதம் மகாதேவன். 38 ஆண்டு காலம் உழைத்து அவர் உருவாக்கிய பழந்தமிழ்க் கல்வெட்டுகள் குறித்த ஆய்வு நூல் (Early Tamil Epigraphy, Harward University press and CreA, 2003) இந்திய வரலாறு என்றாலே, அது வட இந்திய வரலாறுதான் என்றிருந்த நிலையை மாற்றுவதற்கு உதவியது. தமிழ் பிராமி என அவரால் அழைக்கப்படும் பழந்தமிழ் எழுத்துகளையும் ஆரம்ப கால வட்டெழுத்துகளையும் புரிந்துகொள்ள முழுமையானதொரு வழிகாட்டியாக அது விளங்குகிறது.

ஐராவதம் மகாதேவன் கவனம் செலுத்திய இன்னொரு துறை சிந்துவெளி எழுத்துகள் குறித்தனவாகும். சிந்துவெளி நாகரிகத்தை ஆரியக் கலப்பில்லாத அதற்கு முற்பட்ட நாகரிகம் என நிறுவினார் ஐராவதம் மகாதேவன். “சிந்துவெளி நாகரிகம் ஒரு நகர நாகரிகம். ஆனால், ஆரியர்களுடைய நாகரிகமோ கிராமப்புறத்தைச் சார்ந்த மேய்ச்சல் நிலத்தோடு தொடர்புடைய நாகரிகமாகும். சிந்துவெளியில் கிடைத்த குறியீடுகள், முத்திரைகளில் பல்வேறுவிதமான விலங்குகளின் உருவங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. ஆனால், அவை எதிலும் குதிரையின் உருவம் காணப்படவில்லை. குதிரை என்பது ஆரியர்களின் வருகைக்குப் பிறகே இந்தியாவில் அறிமுகமானது” என்று எடுத்துக்காட்டினார் ஐராவதம் மகாதேவன்.

♦ தமிழின் தொன்மைக்கு சான்றளித்த ஐராவதம் மகாதேவன் !

திருவனந்தபுரத்தில் நடந்த இந்திய வரலாற்றுப் பேராயத்தின் மாநாட்டில் தலைமை வகித்துப் பேசிய வரலாற்று அறிஞர் ரொமிலாதாப்பர் கீழடியானது தமிழகத்தில் கிடைத்துள்ள மிக முக்கியமான கண்டுபிடிப்பாகும். இதன் மூலம் தமிழக வரலாற்றை மாற்றி அமைக்க வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம், அதற்கான ஆய்வு மேலும் தொடர வேண்டும் என்று கூறியிருக்கிறார்.

இந்து – இந்தி – இந்தியா என்ற தங்களது அரசியல் நோக்கத்திற்கேற்ப வரலாற்றைக் கட்டமைக்க விரும்பும் பார்ப்பன இந்து மதவெறிக்கும்பல், புராண கட்டுக்கதைகளை உண்மை என நிரூபிக்கும் ஆதாரங்களைத் தேடுவதையே இந்தியத் தொல்லியல்துறையின் முழுநேரப் பணியாக மாற்றியிருக்கின்றனர். இப்படிப்பட்டவர்கள் அறிவியல் பூர்வமாக கீழடியில் நடத்தப்படும் ஆய்வை அனுமதிப்பார்களா?

அதனால்தான் இல்லாத சரஸ்வதி நதியை கண்டறிய பல கோடி, இராமாயண அருங்காட்சியகத்திற்கு ரூ.151 கோடி ஒதுக்கிவிட்டு, கீழடியில் கண்டறிந்த பொருட்களின் காலப் பகுப்பாய்விற்கு ஒரு இலட்சத்தை மட்டுமே ஒதுக்கியுள்ளது.

கார்பன்-14 பகுப்பாய்வுக்கு இராஜஸ்தான் காளிபங்கன் அகழாய்வில் 28 பொருட்களையும், குஜராத்தின் தொலவிராவிலிருந்து 20 பொருட்களின் மாதிரியையும் ஆய்வுக்கு அனுப்பியவர்கள், கீழடியில் கண்டறியப்பட்ட 5,300-க்கும் மேற்பட்ட பொருட்களில் குறைந்தது 10 மாதிரிகளையாவது ஆய்வுக்கு அனுப்ப வேண்டும் என்ற கோரிக்கையை மறுத்து, இரண்டிற்கு மட்டுமே அனுமதியளித்துள்ளது மத்திய தொல்லியல் துறை.

இந்தியாவில் நடந்துள்ள பல அகழாய்வுகள், பல ஆண்டுகள் பல கட்டங்களாக தொடர ஊக்குவித்த மத்திய அரசு, கீழடி அகழாய்வை இரண்டே ஆண்டுகளில் முடிவு கட்ட முயற்சித்தது. இதற்கெதிராக எழுந்த எதிர்ப்பால் மூன்றாம் கட்ட அகழாய்வுக்கு அனுமதி என அறிவித்து விட்டு, கீழடி அகழாய்வில் முக்கியப் பங்கு வகித்த, அர்ப்பணிப்புடன் செயல்பட்ட மதுரையைச் சேர்ந்த கண்காணிப்பாளர் அமர்நாத் இராமகிருஷ்ணா தலைமையில் செயல்பட்ட குழுவை கூண்டோடு அசாமுக்கும், வேறு இடங்களுக்கும் தூக்கியடித்துவிட்டது. துணை கண்காணிப்பாளர் தகுதியில் உள்ள ஒருவரை இங்கு நியமித்துள்ளது. இந்த மாறுதல் வேண்டாம் என்கிற மத்திய நிர்வாகத் தீர்ப்பாயத்தின் பரிந்துரையையும் குப்பையில் வீசிவிட்டனர்.

♦ கீழடி : புதைக்கப்படும் பழந்தமிழர் நாகரீகம் ! மதுரை அரங்கக் கூட்டம்

புனேவின் டெக்கான் கல்லூரியின் துணை வேந்தரான டாக்டர் வசந்த் ஷிண்டே ஒரு அகழ்வாராய்ச்சியாளர். இவரும் இவரது அணியினரும் ஹரியானாவின் ராகிகரி என்ற இடத்தில் அகழ்வாராய்ச்சியை 2015-ல் மேற்கொண்டனர். அந்த ஆய்வின் முடிவுகள் பெரும் தயக்கத்திற்குப் பிறகு இப்போது வெளியாகியிருக்கின்றன. இந்த முடிவை இந்துத்துவவாதிகள் எப்படி எதிர்கொள்வார்களோ என்பதுதான் தயக்கத்திற்குக் காரணம்.

ராகிகடியில் இந்த அணி அகழ்வாராய்ச்சியை மேற்கொண்டபோது, 4,500 ஆண்டுகள் பழமையான எலும்புக்கூடு ஒன்று கிடைத்தது. அந்த எலும்புக்கூட்டின் மண்டை ஓட்டில் உள்ள Petrous bone என்ற காதுகளைப் பாதுகாக்கும் பகுதியை பிரித்தெடுத்து, அதிலிருந்து அந்த எலும்புக்கூட்டின் மரபணு ஆராயப்பட்டது. அந்த ஆராய்ச்சியின் முடிவுகள் சில கேள்விகளுக்குப் பதில் அளித்திருக்கின்றன.

கேள்வி: ஹரப்பா நாகரீகத்தைச் சேர்ந்தவர்கள்தான் சமஸ்கிருத மொழியையும் வேதகால இந்து மதத்தையும் உருவாக்கினார்களா ?

பதில்: இல்லை.

கேள்வி: அவர்களது மரபணு, ஆரியர் – திராவிடர் என்ற பிரிவில் யாரோடு பொருந்துகிறது ?

பதில்: திராவிடர்கள்.

கேள்வி: தற்போதைய காலத்தில் இவை தென்னிந்தியர்களுடன் அதிகம் பொருந்துகின்றனவா, அல்லது வட இந்தியர்களுடனா?

பதில்: தென்னிந்தியர்கள்.

எல்லாமே மிகச் சிக்கலான கேள்விகள், பதில்கள். இந்த ஆய்வின் முடிவுகள் விரைவில் Science இதழில் பதிப்பிக்கப்படவிருக்கின்றன.

2015-லேயே ஆய்வு முடிந்துவிட்டது என்றாலும் விவகாரம் அரசியல் ரீதியாக உணர்ச்சிகளைத் தூண்டக்கூடியது என்பதால் ஷிண்டே முடிவுகளைப் பதிப்பிக்கத் தயங்கினார். ஹரப்பா தொடர்பான எந்த ஆய்வு முடிவானாலும் தற்போதை மத்திய அரசின் இந்துத்துவக் கருத்தை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். அதாவது, வேத காலமும் அப்போதைய இந்து மதமும்தான் இந்திய நாகரீகத்தின் துவக்கம் என்பதைத்தான் தற்போதைய அரசு வலியுறுத்த விரும்புகிறது.

♦ சிந்துவெளி நாகரீகம் திராவிட நாகரீகமே

இவற்றையெல்லாம் வைத்துப் பார்க்கும் போது தென்னிந்தியாவில் மட்டுமல்ல, சிந்து நதிக்கரையில் துவங்கி வைகை நதிக்கரை வரை பார்ப்பனியத்திற்கு முன்பான, அதற்கு மாற்றான ஒரு நாகரீகம் இருப்பது தெள்ளத் தெளிவு. இந்த ஒரே காரணத்திற்காகத்தான் கீழடி ஆய்வை மத்திய அரசு புறக்கணிக்கிறது.

எனவே கீழடியின் வரலாற்றை மீட்கும் போரை நாம் இந்துத்துவவாதிகளுடன் நடத்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.

நன்றி!

♦ ♦ ♦

வினவு கேள்வி பதில் பகுதியில் நீங்களும் கேட்கலாம்:
கேள்விகளை பதிவு செய்யுங்கள்

சந்தா செலுத்துங்கள்

இணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்

1 மறுமொழி

  1. எமது பல கேள்விகளுக்கு பதிலையே காணாேம் …கேள்விகள் ஏற்புடையது இல்லையா …? இல்லை பதில் கூறுகிற அளவுக்கு தகுதி இல்லையா ..? இது பாேல பல தாேழர்கள் எண்ணுவது உண்மை தானே …?

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க