ரலாற்றின் மேல் ஆர்.எஸ்.எஸ் சங்கிகளுக்கு இருக்கும் வன்மம் அனைவரும் அறிந்த ஒன்று தான். வேத நாகரீகம்தான் இந்தியாவின் தொன்மையான நாகரீகம் என்றும், ஆரியர்களே இந்தியாவின் பூர்வகுடிகள் என்றும், சமஸ்கிருதமே இந்திய (ஏன் உலகத்திற்கே) மொழிகள் அனைத்துக்கும் தாய் என்றும் ஆர்.எஸ்.எஸ் புனையப் பார்க்கும் ‘வரலாற்றை’ உண்மையான வரலாற்று ஆய்வுகளும், அகழாய்வுகளும் மறுத்துள்ளன. மட்டுமின்றி சமீபத்தில் வெளியான டி.என்.ஏ ஆய்வு முடிவுகளும் ஆரியர்களை வந்தேறிகள் என உறுதிபடுத்தி சங்கிகளின் மூஞ்சியில் கரியைப் பூசி விட்டது.

சிவகங்கை மாவட்டம், கீழடியில் அகழ்வாராய்ச்சி நடத்தப்பட்ட பகுதி. மூவாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய தமிழர் நாகரிகம் பூதமாக வெளிவந்து, ஆரிய-பார்ப்பன திரிபுகளுக்கு ஆப்பறைந்தது

பண்டைய வரலாறு மட்டுமின்றி, காலனிய இந்தியாவில் நடந்த சுதந்திரப் போராட்டங்களிலும் சங்கிகள் வெள்ளையர்களின் எடுபிடிகளாகவே இருந்தனர் என வரலாறு தெளிவாக உரைக்கின்றது. எனவேதான் சாத்தியமான இடங்களில் வரலாற்றைத் திருத்தி எழுதுவது, இல்லாவிட்டால் சுதந்திரப் போராட்ட வீரர்களை அப்படியே ‘ஹைஜாக்’ செய்து விடுவது என்கிற முயற்சியில் ஈடுபடுகின்றனர். பகத்சிங்குக்கும் அம்பேத்கருக்கும் கூட காக்கி டவுசர் மாட்டி விட சங்கிகள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியும் படுகேவலமாக தோல்வியடைகின்றன.

படிக்க:
♦ இந்துத்துவாவின் அறிவியல் வயிற்றெரிச்சல் – ஆய்வுக் கட்டுரை – அவசியம் படிக்க !
கீழடி அகழாய்வு : பழந்தமிழர் நாகரிகத்தின் கருவூலம் !

அந்த வகையில் சங்கிகளை மிகச் சரியான இலக்கில் குறிபார்த்து அடித்த ஒரு அடியாக ’கீழடி’ இருக்கின்றது. எனவே தான் ஆரம்பம் முதலே கீழடி அகழ்வாய்வை மண்ணில் புதைக்க முயன்று வந்தது மத்திய பா.ஜ.க அரசு. மக்கள் எதிர்ப்பின் விளைவாக இடையில் சற்றே பின்வாங்கிய பா.ஜ.க அரசு இப்போது கீழடி அகழாய்வின் மேல் மொத்தமாக மண்ணள்ளிக் கொட்டியுள்ளது. கீழடியின் மீது பா.ஜ.கவுக்கு ஏன் இத்தனை ஆத்திரம்? அதைக் கீழடியில் ஆய்வுப் பணியில் ஈடுபட்டு பணியிடமாற்றத்துக்கு ஆளான அமர்நாத் ராமகிருஷ்ணனின் வார்த்தைகளிலேயே புரிந்து கொள்வோம்.

கீழடி அகழ்வாய்வை இழுத்து மூட மோடி அரசால் இடமாற்றும் செய்யப்பட்ட அமர்நாத் ராமகிருஷ்ணன்

அமர்நாத் பணியிட மாறுதல் பெற்ற சமயத்தில் நக்கீரன் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் இவ்வாறு குறிப்பிடுகிறார் : ”இதுவரை அகழாய்வு பணியில் உள்ள அதிகாரியை பணி நிறைவுபெறாமல் மாற்றுவது என்பது நடைமுறையில் இல்லை. வேண்டுமென்றே என்னை மாற்றியிருக்கிறார்கள். என் தலைமையில் இதுவரை கண்டுபிடித்த ஆவணங்களின் பட்டியலை அனுப்பியிருந்தேன். அப்போது மத்திய அரசிடம் இருந்து ஏன் சாமி சிலைகள் ஏதும் கண்டெடுக்கபடவில்லை என்ற கேட்டனர். அதற்கு நாம் சரியான பதிலை கொடுத்திருந்தோம் ”திராவிட நாகரீகம் 2,500 வருடங்களுக்கு முன்னானது  இப்போது உள்ள கடவுள் வணக்கம் அப்போது இல்லை. தமிழர்களிடம்  முன்னோர்கள் வழிபாடு காணப்பட்டதால் தற்போதைய சாமி சிலைகள் இல்லை என்று பதில் அளித்திருந்தேன்” அதன் பின்பு இரண்டு நாட்களில் எனக்கு இடமாறுதல் தபால் வந்தது”.

விசயம் மிக எளிமையானது. திராவிட நாகரீகம் வேத நாகரீகத்தை விடத் தொன்மையானது; இதில் மூத்தோர் வணக்கம் இருந்ததே ஒழிய ஆரியக் கடவுள்களுக்கு இடமில்லை; தமிழகத்தில் திராவிட நாகரீகமே செழித்தோங்கியிருந்தது. இதைக் கீழடி அம்பலப்படுத்துகின்றது என்பதே பா.ஜ.கவுக்கு அகழாய்வைத் தடுக்க போதிய காரணங்களை வழங்கிவிடுகின்றது. 2014-ல் இருந்து 2016 வரையிலான காலகட்டத்தில் அமர்நாத் ராமகிருஷ்ணன் தலைமையில் நடந்த அகழ்வாய்வு குறித்த ஆய்வறிக்கையை அவர் தயாரித்து வந்த நிலையில், தற்போது அந்த அறிக்கையைத் தயாரிக்க தடை போட்டிருப்பதுடன் ஸ்ரீலெட்சுமி என்கிற வேறு ஒரு அதிகாரி அந்த அறிக்கையை எழுதுவார் என மத்திய அரசு முடிவெடுத்துள்ளது.

படிக்க:
♦ கீழடி : புதைக்கப்படும் தொல் தமிழர் நாகரிகம் – மதுரை கருத்தரங்கம்
♦ தமிழகத் தொல்லியல் ஆய்வுகள் – கீழடி வரை : நூல் அறிமுகம்

கீழடி அகழ்வாய்வை மொத்தமாக ஊத்தி மூடுவதற்கு பல்வேறு தரப்பில் இருந்து வந்த எதிர்ப்பை அடுத்து கடந்த ஏப்ரல் 18-ல் நான்காம் கட்ட ஆய்வு ஒன்றை தமிழக தொல்லியல் துறை இயக்குனர் சிவா தலைமையில் துவங்கினர். இம்முறையும் யானை தந்தம், தங்க காதணி, அச்சுக்கள், பொம்மைகள், பானை ஓடுகள், உறைகிணறு உள்ளிட்ட ஆயிரக்கணக்கான பழம் பொருட்கள் கிடைத்துள்ளன. எனினும், நான்காம் கட்ட ஆய்வையும் அவசர அவசரமாக முடித்துக் கொண்டு தோண்டப்பட்ட குழிகளில் மண்ணைப் போட்டு மூட முடிவெடுத்துள்ளனர்.

கீழடி ஆய்வின் முக்கியத்துவம் என்ன?

கீழடி நாகரீகம் கி.மு. இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்தது என அகழ்வாய்வில் கிடைக்கப் பெற்ற பொருட்களின் கரிமவேதியல் ஆய்வு தெரிவிக்கிறது

முதலாவதாக, கீழடிதான் தமிழகத்தில் முதன் முறையாக கண்டறியப்பட்ட சங்க கால நகரம். ஏறத்தாழ சிந்து சமவெளி நாகரீகத்தில் கண்டறியப்பட்டதைப் போலவே, வீடுகள் கிணறுகள், தொழிற்கூடங்கள், வடிகால்கள் என மிக விரிவான ஒரு நகரத்தின் கட்டுமானத்துடன் காணப்படுகின்றது. கரிமவேதியல் ஆய்வின் படி இதன் காலம் கி.மு இரண்டாம் நூற்றாண்டு என்பதும் தெரியவந்துள்ளது.

அடுத்ததாக, இந்துத்துவ கும்பல் நிறுவ முயலும் “வேத நாகரீகமே இந்தியாவின் பூர்வீக நாகரீகம்” என்பதை கீழடி முற்றாக மறுக்கிறது. இதே காலகட்டத்தில் (2014) குஜராத் மாநிலம் வாத்நகர், அரியானாவில் பிஞ்ன்சூர் மற்றும் பீகாரில் உள்ள உரைன் ஆகிய இடங்களிலும் அகழாய்வுகளைத் துவங்கியிருந்தது மத்திய தொல்பொருள் ஆராய்ச்சி மையம். அந்த இடங்களை விட அதிக தொல்லியல் ஆதாரங்கள் வெளியாகிய கீழடியை மூடி மறைக்கிறது. அதே போல் வேத காலத்தில் இருந்ததாக நம்பப்படும் சரஸ்வதி நதி என்கிற கட்டுக்கதையை நிரூபிக்க மத்திய தொல்பொருள் துறை பல கோடிகளை வாரியிறைத்த கூத்தும் நடந்துள்ளது.

எனவேதான் இதுவரை தொல்பொருள் துறையில் ஆய்வு மேற்கொண்ட அதிகாரியே ஆய்வறிக்கையை எழுத வேண்டும் என்று பின்பற்றப்பட்டு வந்த விதிமுறையையும் மரபையும் மீறி அமர்நாத் ராமகிருஷ்ணன் அறிக்கை எழுத தடை விதிக்கப்பட்டு ஆய்வுக்கு எந்த தொடர்பும் இல்லாத வேறு ஒரு அதிகாரியைக் கொண்டு அறிக்கை எழுத உத்தரவிட்டுள்ளனர். சங்கிகளின் இந்த சதித்திட்டத்தை தமிழக மக்கள் எதிர்ப்பது மிக அவசியம்.

மேலும் படிக்க:
மண்ணள்ளி மூடப்படுகிறது கீழடி…நினைத்ததை முடித்தார்களா? நிர்மலாவும், முகேஷும்..??

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க