லகின் சில பெரும் பண முதலைகளின் ஆதாயத்திற்காக உலகின் சுற்றுச் சூழல் விலையாகக் கொடுக்கப்பட்டு, எதிர்கால மனித வாழ்வு கேள்விக்கு உள்ளாக்கப்படும் செயலானது; முன் எப்போதையும் விட இப்போது மிகையாக  நடைபெற்று வருகின்றது. இந்த நிலையில்  திரும்பி வர முடியாத / மீளச் சரி செய்ய முடியாத நிலையினை,  உலகு இன்னமும் விரல் விட்டு எண்ணக் கூடிய ஆண்டுகளில் அடைந்து விடும் என அறிஞர்கள் கணிப்பிடுகின்றார்கள்.

மேற் கூறியவை யாவும் சூழல் பற்றிய விழிப்புணர்வு ஒப்பீட்டு ரீதியில் கூடிய வளர்ந்த நாடுகளின் நிலையாகும். வளர்ந்து வரும் இந்தியா போன்ற நாடுகளில் நிலைமை இன்னமும் மோசமாகவேயுள்ளது. இந்த நிலைமை தமிழகத்திலும் தற்போதைய ஆட்சியில் மோசமாகவேயுள்ளது. தமிழகம் எங்கும் பரவலாக மேற்கொள்ளப்பட்டு வரும் மண் அகழ்வுகள், காடழிப்பு, விளை நிலங்கள் விளைச்சலிருந்து விலகுதல் என இப் பட்டியல் நீண்டு செல்லும். இந்த நிலையிலேயே  சிவகங்கை மாவட்டத்திலுள்ள பறம்பு மலைப் (பிரான் மலை) பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் கற் குவாரி நிறுவனம் ஒன்றின் செயற்பாடுகளானவை இன்னல் அளிக்கும் வகையில் அமைந்துள்ளன. ஏற்கனவே சட்டத்திற்குப் புறம்பான மண் அகழ்வுகள் பரவலாக நடைபெற்று வரும் இந்த மாவட்டத்தில், இப்போது இந்த மலை அழிப்புப் பற்றிய செய்திகள் வேறு வந்து கொண்டிருக்கின்றன.

ஏற்கனவே தமிழகத்தின் பெரும் பகுதி பாலை நிலங்களாக மாறி வருவதாக் கூறப்படுகின்றது. தமிழகச் சூழலில் இயற்கையான பாலை நிலங்களில்லை. முறைமையில் திரிந்தே பாலை நிலங்கள் தோன்றுகின்றன. தொல்காப்பியத்தில் கூறப்படாத பாலை சிலப்பதிகார காலத்திலேயே (சங்க மருவிய காலம்) சொல்லப்படுகின்றது.

முல்லையும் குறிஞ்சியும் முறைமையின் திரிந்து
நல்லியல்பு இழந்து நடுங்கு துயர்உறுத்துப்
பாலை என்பதோர் படிவம் கொள்ளும்`

(காடுகாண் காதை, 64-66)

அதாவது காட்டில் ஏற்படும் ஒரு காட்டுத் தீயினால் முல்லை நிலம் திரிந்தோ அல்லது மண் சரிவுகளால் குறிஞ்சி நிலம் திரிந்தோ பாலை நிலமாகும் எனப்படுகின்றது.  இன்று மருத நிலங்களும் (பயிர்ச் செய்கை நிலங்களும்) பாலை ஆவது வேறு விடயம்.  இந்த வகையிலேயே கற் குவாரித் தொழிலிற்காக மலைப் பகுதி பாலை நிலங்களாக்கப் படுவதனையும் பார்க்க வேண்டியுள்ளது.  இது தொடர்பாக ஏற்படும் சூழலியற்  கேடுகள் ஒரு புறமிருக்க, இங்கு தமிழர்களின் தொன்மம் ஒன்று அழிவிற்கு உள்ளாவதும் கவனத்திற் கொள்ளப்பட  வேண்டும்.

படிக்க:
தமிழக ஊர்ப் பெயர் மாற்றம் தொடர்பான அரசாணையும் அதன் பின்வாங்கலும் ஏன் ? | வி.இ.குகநாதன்
அனைத்து சாதி அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர் சங்கத்தலைவர் அரங்கநாதனை  மிரட்டும் பார்ப்பனர்கள் !

பாரியின் பறம்பு மலை :

‘ஈண்டு நின்றோர்க்கும் தோன்றும்….  நெடியோன் குன்று’  {புறம் 114} என்று புறநானூற்றில் பாடப்படும் மலை இந்த பறம்பு மலை தான் என்பது அறிஞர்களின் கருத்து. அதாவது தூரத்தில் நகர்ந்து சென்று, இங்கிருந்து பார்ப்போரிற்கும் தெரியும் ‘நெடியோன் குன்று’ என்பது இப் பாடலின் பொருளாகும். இதற்குச் சான்றாக இடைக் கால கோயில் கல்வெட்டுச் சான்றுகளும் (பாரிசுரம்) காணப்படுகின்றன.

இம்மலைக்குத் தெற்கே ‘கூத்துப் பாரிப் பொட்டல்’ என்றொரு இடமும் உண்டு. பாரி ‘முல்லைக் கொடிக்குத் தேர் கொடுத்த’ கதையினை/ உவமையினை நினைவுபடுத்தும் வகையில் இன்றும்  இப் பகுதி மக்களிடையே பின்வரும் வழக்காறு உண்டு.

‘கொடி தளும்பினால் குடி தளும்பும்’

அதாவது இயற்கையினைப் பேணாமல், கொடி,செடிகள் அழிந்தால் குடிகளும் அழிந்து போகும் என்ற கருத்தினையே மேற்படி சொல்லடை குறிக்கின்றது. ‘பாரிவேட்டை’ என்ற பெயரில் இப் பகுதியில் ஒரு வகையான கூத்தும் நெடுங் காலமாகவே இடம் பெற்று வருகின்றது. ‘வேட்டையில் நடைபெற்றவற்றை மீள் திரும்பி, மீண்டும் செய்து பார்த்தபோதே கூத்துப் பிறந்தது’ என்ற பேரா.கைலாசபதியின் கருத்தினை, இப் பகுதி மக்களின் பாரி வேட்டைக் கூத்தானது மெய்ப்பிக்கின்றது. இத்தகைய தொன்மை வாய்ந்த பறம்பு மலைக்கே இன்று இடர் ஏற்பட்டுள்ளது. இதனை இப்போது ‘பிரான் மலை’ எனவும் அழைக்கின்றார்கள்.

பறம்புமலை > பிறம்பு மலை  >பிரான்மலை.

‘பாரி முல்லைக்குத் தேர் கொடுத்தான்’ என்பதனை இயற்கை மீது அவன் கொண்ட காதலிற்கான ஒரு உவமையாகவே கொள்ள வேண்டும்.

`பூத் தலை அறாஅப் புனை கொடி முல்லை
நாத் தழும்பு இருப்பப் பாடாதுஆயினும்,
கறங்கு மணி நெடுந் தேர் கொள்க!`

{புறநானூறு 200}.

முல்லைச் செடியானது  தான் படரக் கொம்பில்லை என்று நாவால் கேட்கவில்லை என்றாலும், குறிப்பால் அறிந்து தனது தேரினைக் கொடுத்தான் எனப் பாடப்படுகின்றது.  இதனை ஒரு உவமையாகவே கொள்ள வேண்டும். முல்லை என்பது இயற்கையின் ஒரு குறியீடாகவும், தேர் என்பது அரச அதிகாரத்தின் ஒரு குறியீடாகவும் கொள்ளலாம். அதாவது அதிக வளர்ச்சியினூடாக தனது அரச அதிகாரத்தை இறுக்கி, அதற்காக இயற்கையினைக் காவு கொடுக்காமல்; இயற்கையுடன் இயல்பாக வாழ்ந்தவனே பாரி. இயற்கையினைப் பேணுவதற்காக, தனது ‘கறங்கு மணி நெடுந் தேர்’ {ஒலிக்கும் மணி- அக்கால சைரன் Siren – பூட்டப்பட்ட நெடுந்தேர்} என்ற பெரிய அரச அதிகாரத்தினைக் கைவிட்டவன் என்பதனையே புலவர் உவமையாக ‘முல்லைக்குத் தேர் கொடுத்தான்’ எனக் குறிப்பிடுகின்றார்.

படிக்க:
நான் ஆர்.எஸ்.எஸ் மாணவர் அமைப்பிலிருந்து விலகியது ஏன் ? ஜெய் கோலியாவின் அனுபவம்
மின்சார- வேளாண் அவசர திருத்தச் சட்டங்களை திரும்பப் பெறு ! மதுரையில் ஆர்ப்பாட்டம் !!

இவ்வாறு இரண்டாயிரம் ஆண்டுகளிற்கு முன்னரே இயற்கையுடன் இயைந்து வாழ்ந்த ஒரு மன்னனின் நினைவாக உள்ள ஒரு மலையினை இன்று, சுற்றுச் சூழல் பற்றிய விழிப்புணர்வு கூடிய இவ் வேளையில், சிதைப்பதனை எவ்வாறு ஏற்றுக் கொள்ள முடியும்? இதற்காகப் போராட, கந்த சட்டிக் கவசத்திற்காகப் போராடிய யாரும் வரப் போவதில்லை. பாடல் பெற்ற கோயில் இருக்கின்றது என்றோ அல்லது ‘குன்று இருக்குமிடம் எல்லாம் குமரன் இருக்குமிடம்’ என்றோ எந்த மத அமைப்பும் போராடப் போவதில்லை. சூழலியல் ஆர்வலர்கள், சமூகப் பற்றாளர்கள், தமிழ் ஆர்வலர்கள் ஆகியோரிடம் தான் இந்த வரலாற்றுப் பொறுப்பு வந்து சேருகின்றது.

இது தொடர்பாக ஏற்கனவே பார்வையிடச் சென்ற சில தோழர்களை காவல்துறை தடுத்து நிறுத்தியுள்ளது. கொரோனா காலத்தில் கல்லுடைப்பிற்குத் தடை போடாத அரசு, அதனைப் பார்வையிடச் சென்ற தோழர்களை மட்டும் கொரோனாவினைக் காட்டித் தடுத்து நிறுத்துவது சரியானதல்ல. எனவே இது தொடர்பான போராட்டங்கள் தமிழ்நாடு தழுவிய நிலையில் முன்னெடுக்கப்பட வேண்டும்.

வி.இ.  குகநாதன்

disclaimer

2 மறுமொழிகள்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க