நான் ABVP – யிலிருந்து விலகியது ஏன் ? – ஏ.பி.வி.பி. முன்னாள் மாவட்ட செயலாளர் ஜெய் கோலியாவின் அனுபவம்.

சில சமயங்களில் இளமையின் ஆரம்ப நாட்களில் கிடைக்கப்பெறும் அரசியல் அனுபவத்திற்கு இரண்டு பக்கங்கள் உண்டு. ஒன்று, அதனுடன் வரக்கூடிய போராட்டங்களை உள்ளடக்கியிருந்தாலும், அதில் ஈடுபட ஈடுபட நீங்கள் பெருமைப்படத் தக்கதாக உங்களை நல்வழியில் இட்டுச்செல்லும். மற்றொன்று, முக்கிய நோக்கத்துடன், பெருமளவில் தன்னிலையிழக்கச் செய்யும் வகையிலான பாதை.

துரதிஷ்டவசமாக, இரண்டாவது பாதைதான் எனது வாழ்க்கையில் பொருந்தியது. ஆனால் எனது மனசாட்சியோ எந்தவொரு பொருளாயத பலனையும் எதிர்பாராமல், உண்மையின் பாதையில் செல்ல என்னை நெட்டி தள்ளியது.

2014 ஆம் ஆண்டு காவி அலை நரேந்திர மோடியை ஆட்சியில் அமர்த்தியது. இந்த புதிய ஆட்சி, ஆற்றல்மிக்க பல இளைஞர்களின் முழு ஆதரவையும் பெற்றது. ஏனென்றால், பாஜக கொடுத்த வாக்குறுதிகளான, கடந்த காலங்களில் நடந்து வந்த ஊழல், கறுப்புப் பணம் மற்றும் வறுமை பிரச்சினைகளை ஒழித்துக்கட்ட புதிய ஆட்சி ஏதாவது செய்யுமென பல இளைஞர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்தனர்.

அப்படி எதிர்பார்த்திருந்தவர்களுள் நானும் ஒருவன். எனது தேசத்திற்காக ஏதாவது செய்ய வேண்டுமென என்னை ஈடுபடுத்திக் கொண்டேன். இந்த அதிகாரத்துவத்தையும் அரசியல் கட்டமைப்பையும் மாற்றியமைக்க என்னால் முடிந்ததை சிறப்பாகச் செய்ய விரும்பினேன்.

அப்போதுதான் நான் ராஷ்டிரிய சுயம்சேவக் சங்கம் (ஆர்.எஸ்.எஸ்) மற்றும் பாஜக.வின் வலதுசாரி மாணவர் அமைப்பான அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் (ஏபிவிபி) உடன் தொடர்பு கொண்டேன்.

படிக்க:
மாரிதாஸும், லார்டு லபக்கு தாஸ்களும்.. !
பாபர் மசூதி இடிக்கப்பட்ட வழக்கு விசாரணை : நடப்பது என்ன ?

ஏபிவிபி-யில் இணைந்து பணியாற்றத் தொடங்கியபோது எனக்கு வயது 18 – பி.எஸ்சி முதலாமாண்டு மாணவன். அப்போது ஆர்.எஸ்.எஸ்-ன் உள்ளூர் தலைவர்களையும், உறுப்பினர்களையும் தினசரி சந்திப்பேன். அமைப்பு வேலையில் என்னை மும்முரமாக ஈடுபடுத்திக் கொண்டேன். குறுகிய காலத்திலேயே, நான் தெற்கு மும்பை மாவட்டத் துணை செயலாளராக நியமிக்கப்பட்டேன். அதன்பிறகு, மாவட்டச் செயலாளர். பின், மாநில செயற்குழு உறுப்பினர். இதனிடையே, அந்த அமைப்பில் தொடர்புடைய பலருடன் நான் நல்ல நட்பு கொண்டிருந்தேன்.

அந்த நேரத்தில், டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் சங்கத் தேர்தல் – 2019 வந்தது. நான் எனது இரண்டு சகாக்களுடன் மும்பையில் இருந்து டெல்லிக்குப் புறப்பட்டேன். முதன்முதலில் இங்குதான் வெவ்வேறு சித்தாந்தங்களுடன் நேருக்கு நேர் மோதுவதற்கான வாய்ப்பு கிடைத்தது. அதே நேரத்தில், நான் சார்ந்த அமைப்பின் மறைவான காரியங்களையும் நன்கு புரிந்து கொள்வதற்குமான இடமாகவும் அமைந்தது.

தேர்தல்கள் எவ்வாறு நடைபெறுகின்றன என்பதை நேருணர்ந்து கொள்வதற்காகவே, அமைப்பின் பிரதிநிதியாக ஜே.என்.யூ.வில் நான் தங்கியிருந்தேன். அங்கு சுமார் இரண்டு வார காலம் இருந்தேன். இந்த காலகட்டம்தான் நான் முடிவெடுக்கவிருந்த சமயத்தில் சற்றேறக்குறைய என்னை ஆதிக்கம் செய்தது.

அங்குதான் (ஜே.என்.யூ) இடதுசாரி சித்தாந்தங்களை நான் நன்கு கற்றுக் கொண்டேன். பல ஆண்டுகளாக எனது அமைப்பு செய்து வந்த தவறான நடவடிக்கைகளையும் அறிந்தேன். ஜே.என்.யூ மாணவர்கள் சிலரை சந்திக்கும் வாய்ப்பு பெற்றேன். அச்சந்திப்புகள் கண் திறப்பவையாக இருந்தன.

ஆனால், தேர்தல் முடிந்து ஜே.என்.யூ.வை விட்டு வெளியேறியதும் அந்தக் ‘கட்டத்தை’ நான் கருத்தில் கொள்ளவில்லை. மீண்டும் மும்பையில், அமைப்பு வேலைகளில் என்னை பரபரப்பாக்கிக் கொண்டேன்.

குடியுரிமைத் திருத்தச் சட்டமானது இந்திய முஸ்லீம்களுக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது என்று மீண்டும் மீண்டும் கூறப்பட்டாலும், சிஏஏ அமல்படுத்தப்பட்ட பின்னர், நிலைமை பழைய மாதிரி நீடிக்கவில்லை.

படிக்க:
பாஜக-வுக்கு எதிராக கருத்திட்ட பேராசிரியரை மண்டியிடச் செய்த ஏபிவிபி குண்டர்கள் !
பேசுங்கள் பேசுங்கள் வாய்திறந்து…. ம.க.இ.க.வின் புதிய பாடல் !

டிசம்பர் 19-ம் தேதி எனது தலைமையின்கீழ் சிஏஏ ஆதரவு பேரணி நடந்தது. ஆனாலும், எனது இதயத்தின் ஏதோ ஒரு மூலையில், விசயங்கள் ஒழுங்காக நடக்கவில்லை என்பதை மட்டும் உணர்ந்தேன்.

உங்கள் வாழ்க்கையில் உங்களது சொந்த மனசாட்சியே உங்களை வெறுக்கத் துவங்கும் நேரம் வரும். அந்த நேரம் எனக்கும் வந்தது.

முஸ்லீம் சகோதரத்துவத்துக்கு எதிரான மனிதத் தன்மையற்ற நடவடிக்கைகளும், சங் பரிவாரத்தின் மற்றொரு பிரச்சாரப் பிரிவாக செயல்படுவதைத் தாண்டி ஒரு முறையான மாணவர் குரலை உருவாக்குவதில் அமைப்பின் (ABVP) இயலாமையும் எனக்குள் மனமாற்றத்தை நிகழ்த்தியது.

பல நாட்கள் இரவு பகலாகத் தூக்கமின்றி எனது முடிவைப் பற்றி சிந்தித்த பிறகு, புத்தாண்டின் துவக்கத்தில், முறையான கடிதம் கூட கொடுக்காமல் அமைப்பிலிருந்து வெளியேறினேன்.  அந்த அமைப்பில் எதுவுமே முறையாக இல்லாத நிலையில் கடிதம் மட்டும் எதற்கு?

நான் ஏபிவிபி-யில் இருந்திருந்தால், அவர்கள் சொன்னதைப் போல அமைப்பின்  தரப்பட்டியலில் உயர்ந்து, “பிரகாசமான எதிர்காலத்தைப்” பெற்றிருக்கலாம். ஆனால் குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராக மும்பை வீதிகளில் நின்று குரல் கொடுப்பதில்தான் எனது உண்மையான மகிழ்ச்சியைக் கண்டு கொண்டேன். நமது முஸ்லீம் சகோதரர்களுடன் சேர்ந்து முழக்கமிட்டும், புரட்சிகரப் பாடல்களையும் கவிதைகளையும் பாடியும் அவர்களுக்கு ஆதரவாக நிற்கிறேன்.

என்னை பொறுத்தவரையில், எனக்குள் ஒரு தலைகீழ் மாற்றம் (புரட்சி) உண்டாகிவிட்டது. வலதிலிருந்து இடது நோக்கிப் பயணிப்பது என்பது சில இலக்கியங்களைப்  படிப்பதன் மூலம் மட்டுமே நடந்துவிடுவது இல்லை. ஒவ்வொரு இந்தியனுக்கான ஒற்றுமையுணர்வு நிறைந்திருக்கும் வீதிகளில் தான் அது அன்போடு சாத்தியமாகிறது.

ஏபிவிபியில் புதியவனாக உள்நுழைந்த என் வாழ்க்கையின் காலப்பகுதி இவ்வாறாக முடிவுக்கு வந்தது. புத்துணர்வு கொண்ட ஓர் இளைஞனாக இந்தப் பெரிய – பரந்த உலகில் நுழைகிறேன்.

இப்போது ஒரு பொறுப்புள்ள குடிமகனாக எனது பயணம் துவங்குகிறது.


தமிழாக்கம் :
– ஷர்மி
மூலக்கட்டுரை : த வயர்.

3 மறுமொழிகள்

  1. மிகுந்த ஆச்சரியமாகவும் பேரளவு மகிழ்ச்சியாகவும் மிகப்பெரிய தன்னம்பிக்கையாகவும் இருக்கிறது…உங்களின் எழுத்துக்களில் தெறிக்கும் அரசியல் புரிதலை ப் படிக்கும் பொழுது…மண்டைக்குள் நிரப்பப்பட்ட காவி “கசடு”களை களைந்துவிட்டு மக்கள் விடுதலைக்காக வீதி வந்திருக்கும் எங்களருமைத்தோழன்…ஜெய்கோலியா அவர்களே….வாருங்கள் சேர்ந்து உழைப்போம்… வெற்றி என்றாலும் வெற்றிக்கு முன்னோட்டமாக தோல்வி என்றாலும்…வாழ்த்துக்கள் “ஜெய்”கோலியா….

  2. நணபரே.மனிதநேயமறிந்து செயல் பட உங்களை நீங்களே ஆயத்தப்படுத்தியதைக் கண்டு வாழ்த்துகிறேன். நீங்கள் எடுத்த முடிவு மிகவும் சரியானது.வாழ்க உங்களது பயணம். வாழ்த்துக்கள்.

  3. மனிதம் நோக்கிய பயணம் சிறப்பானதாகவும் பயனுள்ளதாகவும் அமைய வாழ்த்துக்கள்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க