புல்வாமா தாக்குதலுக்குப் பிறகு மோடியும் பாஜகவினரும் இராணுவத்தை தேர்தல் துருப்புச் சீட்டாக பயன்படுத்தி பிரச்சாரம் செய்து வருகின்றனர். நேரடியாக இராணுவ வீரர்களின் சவங்களைக் காட்டி ஓட்டுப் பிச்சை கேட்பதுமுதல், இராணுவ வீரர் வேடம் கட்டி தெருவில் இறங்குவது வரை அத்தனை வழிகளிலும் இராணுவத்தைக் காட்டி ஓட்டுக் கேட்பதை அக்கட்சி செய்து வருகிறது.  இத்தகைய செயல்கள் சமூக ஊடகங்களில் கடும் கண்டனத்துக்கு உள்ளாகிவருகின்றன. பாஜக-வின் தேசபக்தி முகம் அபிநந்தன் விவகாரத்துக்குப் பின், கிழிந்து தொங்கிக் கொண்டிருக்கும் நிலையில், முகநூலில் பாஜகவை விமர்சித்த காரணத்தால் கல்லூரி பேராசிரியர் ஒருவரை ஏபிவிபி குண்டர்கள் மண்டியிடச் செய்து, மன்னிப்பு கேட்க வைத்துள்ளனர்.

கர்நாடகத்தில் உள்ள வச்சனா பிதாமகா டாக்டர். பி.ஜி. ஹலகோட்டி பொறியியல் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றுகிறார் சந்தீப் வதார்.  இவர் தனது முகநூல் பக்கத்தில் பாஜக, போர்ச்சூழலை உருவாக்கி வருவது குறித்து விமர்சித்தும், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இரண்டு நாடுகளுக்கிடையேயான போர்ச்சூழலை தவிர்த்தது குறித்து பாராட்டியும் பதிவு எழுதியிருந்தார்.

மண்டியிட்டு மன்னிப்பு கேட்க வைக்கப்பட்ட பேராசிரியர் சந்தீப்

கடந்த வாரங்களில் இந்தியா- பாகிஸ்தானிடையே உருவாகிவரும் பதட்டத்தில் பாஜகவுக்கும் வலதுசாரி அமைப்பினருக்குமே பெரும் பங்கு உள்ளதாக சந்தீப் எழுதியிருந்தார்.

“இவர்களில்(இம்ரான் – மோடி) யார் அறிவுள்ளவராக தெரிகிறார்? காவிகளே, இந்த பதட்டம் உருவாகுமானால், அதனால் ஏற்படும் லட்சக்கணக்கான மக்களின் வாழ்க்கை சீர்குலைய நீங்கள் மட்டும்தான் காரணமாக இருப்பீர்கள். பாஜகவுக்கு கொஞ்சம்கூட வெட்கமில்லை…” என தனது முகநூலில் எழுதியிருந்தார் சந்தீப்.

சமூக ஊடகங்களில் உள்ள காவி ட்ரோல்களின் மிரட்டல் காரணமாக  இது தொடர்பாக எழுதப்பட்ட இரண்டு பதிவுகளையும் அவர் நீக்கிவிட்டார். எனினும் பாஜகவும் அதன் மாணவர் அமைப்பான ஏபிவிபியும் சந்தீப்பை விடவில்லை.

படிக்க:
♦ டி. எம். கிருஷ்ணா இசை நிகழ்ச்சி : மிரட்டிய இந்துத்துவா ! முறியடித்த டில்லி !
♦ காஷ்மீரி மருத்துவரை பாகிஸ்தானுக்கு போகச் சொல்லும் காவிகள் !

அவர் பணியாற்றிய கல்லூரிக்குத் தொடர்பு கொண்டு அவரை பணி நீக்கம் செய்ய வேண்டும் என அழுத்தம் தர ஆரம்பித்துள்ளனர். இந்தக் கல்லூரி காங்கிரஸ் தலைவரும் மாநில உள்துறை அமைச்சருமான எம்.பி. பட்டேலுக்கு சொந்தமானது. ஆனாலும், பாஜக குண்டர்களுக்குப் பணிந்த கல்லூரி நிர்வாகம், கல்லூரி திறக்கப்படும்போது சந்தீப் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளது. கல்லூரியின் முதல்வர் வி.பி. ஹுக்கி, சந்தீப்பை பணி இடைநீக்கம் செய்யப்போவதாக தெரிவிக்கிறார்.

இந்நிலையில், சனிக்கிழமை கல்லூரி வளாகத்துக்குள் புகுந்த ஏபிவிபி குண்டர்படை, போராட்டம் என்ற பெயரில் பேராசிரியரிடம் மன்னிப்புக் கேட்கும்படி வற்புறுத்தியிருக்கிறது. அவரை தேச துரோகி எனவும் அழைத்திருக்கிறது.

சமூக ஊடகங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில், ஏபிவிபி-பாஜக குண்டர்கள் சந்தீப்பை மிரட்டி, மண்டியிட்டு மன்னிப்புக் கேட்க வைக்கின்றனர். சந்தீப் மண்டியிட்டு, கைகளை கூப்பி, “நான் இனிமேல் இதைச் செய்ய மாட்டேன். என்னுடைய முகநூல் பதிவுக்காக என்னை மன்னித்துவிடுங்கள்” என கேட்கிறார். அவரை மண்டியிடும்படி, அருகில் நிற்கும் நபர் அழுத்தம் கொடுப்பதையும் வீடியோ பதிவு செய்திருக்கிறது.

தென்னிந்தியாவில் காவிகளின் நுழைவாயிலாகிவிட்ட கர்நாடகத்தில் ஏபிவிபி குண்டர்களால் கல்வி நிறுவனங்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. சாதாரணமான விமர்சனத்தைக் கூட பொறுத்துக்கொள்ள முடியாத சர்வாதிகாரிகளைப் போல காவி குண்டர் படை செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. தொடர்ந்து நடந்துகொண்டிருக்கும் இத்தகைய செயல்களை தடுக்க திராணியற்றதாக காங்கிரஸ்-மஜத கூட்டணி அரசு இருக்கிறது. அதுமட்டுமல்ல, காவிகளின் வெறியாட்டங்களுக்கு பணிந்தும் போகியிருக்கிறது கர்நாடக அரசு.

கலைமதி
நன்றி : தி வயர்
கலைமதி

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க